Saturday, January 12, 2008

"நான்காம் கட்ட ஈழப்போர் Count Down ஆரம்பம்"

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து, 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது சிறிலங்கா அரசு. “சமாதானம்” என்று, வார்த்தை அளவில்தானும் எஞ்சியிருந்த விடயமும் ஒருவாறு முடிவுக்கு வந்து, யுத்தம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 16ம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட 4வது ஈழ யுத்தம் ஆரம்பமாக உள்ளது.
4ம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த திட்டம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டு, யாழ்பாணத்தை தனது கைகளில் வைத்துக்கொண்டு, வன்னி மீது படையெடுப்பது என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம்.

வன்னியில் ஐந்து முனைகளில் படை நகர்வினை மேற்கொண்டு புலிகளை திக்குமுக்காட வைப்பதென்பதுதான் சிறிலங்கா இராணுவத்தின் திட்டம். இதற்காக சில சிறப்பு படையணிகளை சிறிலங்கா இராணுவம் உருவாக்கி அவற்றைக் களமிறக்கியும் உள்ளது. 4ம் கட்ட ஈழப் போருக்கென்று உருவாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் 58வது படையணி (58.Division) மன்னாரில் களமிறக்கப்பட்டுள்ளது. மன்னாரில் தற்பொழுது இரண்டு படை அணிகள் நிலை கொண்டுள்ளன. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 21வது படை அணியுடன், தற்பொழுது இந்தப் புதிய படை அணியும் களமிறக்கப்பட்டுள்ளது. அதாவது, 4ம் கட்ட ஈழப் போரின் பிரதான களமுனையாக மன்னார் பிராந்தியமே இருக்கப் போகின்றதாக, போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மன்னாரில் இருந்து ஏ-32 நெடுஞ்சாலையான மன்னார் - பூநகரி - சங்குப்பிட்டிப் பாதை வழியான படை நகர்வொன்றினை மேற்கொள்ளும் நோக்குடன் இந்தப் படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேபோன்று அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு படை அணியான 59வது படை அணி (59. Division) மணலாற்றில் (வெலி ஓயாவில்) களமிறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணலாற்றில் நிலைகொண்டுள்ள 22வது படை அணியின் இரண்டு பிரிகேட்டுக்களுக்கு (22-3, 22-4) மேலதிகமாக இந்தப் புதிய படை அணி களமிறக்கப்பட்டுள்ளது. வன்னி மீதான படை நகர்வினை மேற்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து, மற்றய களமுனைகளில் புலிகளின் படைக்குவிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

தென் இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு துட்டகெமுனுவாக காண்பிப்பதற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மிகந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியிருந்த மாயைக்கு, சிங்கள தேசம் தன்னை பலியாக்கிவிட்டுள்ளது என்பதுதான் உண்மை
அண்மையில் உருவாக்கப்பட்ட 57வது படைஅணி வவுனியாவில் நிலை கொண்டுள்ளது. வவுனியாவில் ஏற்கனவே 56வது பிரிவு படை அணியின் மூன்று பிரிகேட்டுக்கள் (56-1ம், 56-2ம், 56-3ம் பிரிகேட்டுக்கள்) நிலைகொண்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாகவே இந்த புதிய படை அணி உருவாக்கப்பட்டு, வவுனியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. மன்னார் வழியான படை நகர்வினை மேற்கொண்டு 58வது படை அணி முன்னேறுகின்ற பொழுது, அதற்கு சமாந்திரமாக ஏ-9 நெடுஞ்சாலை வழியான ஒரு படை நகர்வினை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கவனத்தை கணிசமான அளவு இழுத்து வைத்திருப்பதற்கு இந்த படை அணி பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ் குடாவின் கிழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 54ம், 55ம் சிறப்புப் படை அணிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கவசத்தாக்குதல் படையணிகளை, முகமாலை ஊடாகவும், நாகர் கோவில் ஊடாவும் நகர்த்தி வன்னியின் வடக்கில் இரண்டு களமுனைகளைத் திறக்கும் திட்டமும் சிறிலங்கா படைத்துறைத் தலைமையிடம் இருக்கின்றது.

ஆக, சிறிலங்கா இராணுவம் வன்னியில் ஐந்து போர் முனைகளை சமாந்தரமாக திறக்கும் ஏற்பாட்டுடன் தயார் நிலையில் நிற்கின்றது. இதைவிட, கடல் வழியாகவும், விமானங்கள் ஊடாகவும் வன்னியின் சில முக்கிய இடங்களில் திடீர் தரை இறக்கங்களை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கவனத்தை திசை திருப்பவும், புலிகளைத் திக்குமுக்காட வைக்கவும் அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிகள் வெளிநாட்டு போரியல் வல்லுனர்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, முழு அளவிலான யுத்தத்திற்கான ‘கவுன் டவுனை’ (Count down) ஆரம்பித்துள்ள, சிறிலங்கா படைத்துறை, தனது தாக்குதல் ஏற்பாடுகளை பூரணமாக்கியுள்ளது. அதற்கான திட்டங்களையும் கச்சிதமாக வகுத்துள்ளது.

சிறிலங்கா படைத்துறை வகுத்துள்ள போர் வியுகங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு ‘ஜய சிக்குறு’ (வெற்றி நிச்சயம்) என்றுதான் தோன்றுகின்றது.உண்மையிலேயே இது நல்லதொரு போர் திட்டம்தான்.

ஆனால் அவர்கள் சில விடயங்களை மறந்துவிட்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

முதலாவது, அவர்கள் போரிடப் போவது விடுதலைப் புலிகளுடன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

இரண்டாவது, அவர்கள் அமைத்துள்ள போர் களம் வன்னி மண்என்பதையும் அவர்கள் மறந்துவிட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் தனது தானைத் தளபதியுடன் அந்த வன்னி மண்ணில் நிற்கும் பொழுது அவர்களது பலம் எப்படியானதாக இருக்கும் என்பதை, தற்பொழுதும் கனவில் எழும்பி அலறும் இந்தியப் படைகளிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். ஜெயசிக்குறு சண்டைகளைத் தொடர்ந்து சிறிலங்காப் படையில் இருந்து தப்பியோடிய 50 ஆயிரம் சிங்கள இளைஞர்களிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம்.

அல்லது, சிங்கள இராணுவத்திடம் கதை கூறிவிட்டு, பிரித்தானியச் சிறையில் “பாண்” சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கருணாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இதை விட, சிறிலங்கா இராணுவம் மூன்று படைப் பிரிவுகளை உருவாக்குவதற்குப் பின்னணியாக இருந்த காரணம் என்ன என்பதை அறிந்தால், சிங்களத்தின் படை வியூகத்தின் காத்திரத்தை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் ஒரு பாரிய சமரை சிறிலங்காப் படைகள் மீது தொடுத்திருந்தார்கள். திருகோணமலையிலும், யாழ்பாணத்திலும் சமாந்திரமாக இந்தச் சமர் இடம்பெற்றிருந்தது. ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளை இடை நிறுத்தியிருந்தார்கள். அந்த நேரத்தில் சிறிலங்கா படைத்துறைத் தலைமைக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது. அதாவது, இரண்டு முக்கிய பிரதேசங்களை, அதுவம் வெவ்வேறு திசைகளில் உள்ள பிரதேசங்களை ஒரே நேரத்தில் தாக்கிக் கைப்பற்றலாம் என்ற தற்துணிவை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தும் அளவிற்கு அவர்கள் வசம் போதிய பலம் இருக்கின்றது என்ற உண்மை சிறிலங்காப் படைத்துறைத் தலமைக்கு விளங்கியது.

இப்படியான பலத்தைத் தமதாகக் கொண்டுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் வழியாக ஒரு பாரிய படை நகர்வை மேற்கொண்டு புத்தளம்வரைக்கும் வந்துவிட்டால், கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலயத்தையும் தமது எறிகணைத் தாக்குதல் எல்லைக்குள் கொண்டுவந்துவிடுவார்களே என்ற ஒரு அச்சம் சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டது. இதேபோன்று, மணலாற்றின் வழியாக நகர்ந்து திருகோணமலைக்கு குறிவைத்துவிட்டால் என்ன செய்வது என்ற ஒரு அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. வவுனியா வழியான படை நகர்வொன்றை மேற்கொண்டு, அநுராதபுரம் நோக்கி வந்துவிடப்போகின்றார்களே என்ற பீதி அவர்களுக்கு ஏற்பட்டது. தமது பிரதேசத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன்தான் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை அவசர அவசரமாக மூன்று படை அணிகளை உருவாக்கி, ஆபத்துக்குள்ளாகியிருந்த தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அமர்ததத் தலைப்பட்டது. ஆக, இந்த படை அணிகள் தற்காப்பு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட படை அணிகளே என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்தப் படை அணிகளை வழிநடாத்திக்கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த படைத்துறைத் தளபதிகள், இந்த அணிகளை வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு களவெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கடந்த சில மாதங்களாக படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இழப்புக்களைத்தவிர அவர்களால் வேறு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையே அங்கு அவர்களுக்கு இருந்து வருகின்றது.

இத்தனைக்கும், விடுதலைப் புலிகளின் முக்கிய தாக்குதல் படை அணிகளின் பிரசன்னம் இன்றியே, விடுதலைப் புலிகள் இந்தப் படை அணிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதுதான் உண்மை. விடுதலைப் புலிகளின் தாக்குதல் படை அணிகள் களமிறங்குகின்ற பொழுது, சிறிலங்கா இராணுவம் உருவாக்கியுள்ள புதிய படை அணிகளால் நின்றுபிடிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிடும் என்பதையும் சிங்களப் படைத்துறைத் தலைமை நன்கறியும்.

இதற்கு மேலாக, விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ள ஒரு செய்தியும் தென்னிலங்கை ஊடகங்களில் இந்த வாரம் வெளிவந்துள்ளது.

சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் சோவியத் தயாரிப்பான இக்லா (சாம்-16) ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், கம்போடியாவில் இருந்து இத்தகைய ஏவுகணைகளை அவர்கள் கொள்வனவு செய்ததுடன், உக்ரேய்னில் இருந்து அவை அங்கு தருவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

9 எம் 39 இக்லா எனப்படும் இந்த ஏவுகணையை நேட்டோப் படையினர் சாம்-16 என அழைப்பதுண்டு. 1983 ஆம் ஆண்டு சோவியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை தாழ்வாக பறக்கும் வானூர்திகளையும், உலங்குவானூர்திகளையும் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விடுதலைப் புலிகள் அண்மைக்காலத்தில் பெரும் தொகையான ஆயுதங்களையும் தருவித்துள்ளதாகவும் அந்த வார ஏடு தெரிவித்துள்ளது.. பல்கேரியா நாட்டில் இருந்து சாம்-14 மற்றும் டாங்கி எதிர்ப்பு உந்துகணைகள் (லோ), உக்ரேனில் இருந்து 20 தொன் ரிஎன்ரி, 35 தொன் சி-4 ரக வெடிமருந்துகள், சைப்பிரசிலிருந்து ஆர்பிஜிகள், கம்போடியாவில் இருந்து சிறிய ரக ஆயுதங்கள், குரோசியாவில் இருந்து 32,400 மோட்டார் எறிகணைகள் ஆகியனவற்றை புலிகள் வன்னிக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டதாகவும் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளை குறைவாக மதிப்பிடக்கூடாது என்றும், பிரகடனப்படுத்தப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போர் எதிர்வரும் 16 ஆம் நாள் ஆரம்பமாகும் போது உக்கிர தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தளபதியான கேணல் சார்ள்ஸ் என்பரை சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் இந்த வாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் புகுதியில் வைத்து படுகொலை செய்திருந்தார்கள். அவரது வித்துடல் விதைக்கப்பட்ட மறுதினம், சிறிலங்கா அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள் சிறிலங்காவின் தலைநகரில் குறிவைக்கப்பட்டிருந்தார்கள்.

08.01.2008ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பக்களில், சிறிலங்காவின் முக்கிய அமைச்சரும், மகிந்த அரசாங்கத்தின் பிரதம கொரடாவுமான ஜெயராஜ் பெர்ணாண்டோப்புள்ளேயும், சிறிலங்கா விமானப்படைத் தளபதியும்; குறிவைக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஜா-எல வழியாக பயணம் மேற்கொள்ளும் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளேக்கு வைத்த குறியில் அவரைப் போலவே பாதுகாப்புடன், அவருடையதை ஒத்ததான வாகனத்தில் வந்துகொண்டிருந்த மற்றொரு அமைச்சரான சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம்.தசநாயக்க கொல்லப்பட்டிருந்தார்.

அதே தினம் சிறிலங்கா தலைநகர் கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட பகுதியில், "லேக் ஹவுஸ்" பத்திரிகை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள தொலைபேசிக் கூண்டு ஒன்றினுள் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. சிறிலங்காவின் விமானப்படைத்தளபதியைக் குறிவைத்து நடாத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில், விமானப்படைத் தளபதி மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார். இந்தக் குண்டு வெடிப்பதற்கு 3 நிமிடங்களுக்க முன்னதாகவே சிறிலங்கா விமானப்தளபதி இந்த இடத்தைக் கடந்து சென்றதாக சிறிலங்கா பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர் ஒருவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வைத்துக் கொல்லப்பட்ட ஓரிரு தினங்களில், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சிறிலங்கா அரசின் முக்கியஸ்தர்களை குறிவைக்கக்கூடிய அளவிற்கு புலிகளின் வலைப்பின்னல் கச்சிதமாக இருக்கின்றது. சிறிலங்கா அரச மற்றும் இராணுவ முக்கியஸ்தர்களின் நடமாட்டங்களை விடுதலைப் புலிகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

வன்னியில் சிறிலங்காப் படை இராணுவ நடவடிக்கையில் இறங்குகின்ற நேரத்தில் கொழும்பில் பல வேடிக்கைகளை நிகழ்த்தி, படைத்துறையின் கட்டளைப் பீடத்தை நிலைகுலைய வைக்கக்கூடிய அளவிற்கு, தென் இலங்கையில் புலிகளின் வலைப்பின்னல் கச்சிதமாக இருக்கின்றது.

எனவே, 4ம் கட்ட ஈழ யுத்தம் என்பது, சிங்களம் நினைப்பது போன்று இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்றே இராணுவ ஆய்வாளகள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம். இது உண்மையானால் எந்த தைரியத்தில் சிறிலங்கா படைத்துறை புலிகள் மீது போரைப் பிரகடனம் செய்திருக்கின்றது என்ற கேள்வி உங்களிடம் எழலாம்.

விடுதலைப் புலிகளை தாம் வெற்றிகொண்டு வருவதாக சிங்கள வாக்காளர்களுக்கு கூறப்பட்டுவந்த பொய்களுக்கு, சிங்கள ராணுவம் பலியாகிவிட்டுள்ளதன் விளைவுதான் இன்றைய இந்த நிலை. தினமும் 30 அல்லது 40 விடுதலைப் புலிகளை தாம் அழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று சிறிலங்கா இராணுவத் தலைமை ஊடகங்களுக்குக் கூறிவரும் பொய்களையும், கட்டுக்கதைகளையும், சிறிலங்கா அரசாங்கமும் நம்பிவிட்டதன் கொடுமைதான் இந்த யுத்தப் பிரகடனம்.

“விடுதலைப் புலிகள் பலவீனமாகி விட்டார்கள்…”, “விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களும் அழிக்கப்பட்டுவிட்டன….”, “புலிகள்; ஆயுதங்களைப் பெற இனிமேல் வழியெதுவும் கிடையாது…”இ புலிகளின் தலைவர்களின் இருப்பிடங்கள் எமக்குத் தெரியும்”, எனவே அவர்களும் இனிமேல் அழிக்கப்பட்டுவிடுவார்கள்.., “புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்..,;”, கடற்புலிகளின் தளபதி சூசை கொல்லப்பட்டு விட்டார்.., வான் புலிகளின் விமான ஓடுபாதைகளை சிறிலங்கா விமானப்படை குண்டு வீசி அழித்து விட்டன…, கிளிநொச்சி கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கின்றது…” என்றெல்லாம் சிங்கள மக்களுக்கு அரசாங்கம் விட்ட கதைகளை இப்பொழுது அரசாங்கமே நம்ப ஆரம்பித்துவிட்ட கொடுமையின் விளைவுதான், மகிந்த அரசாங்கத்தின் இந்த யுத்த பிரகடனம்.

தென் இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு துட்டகெமுனுவாக காண்பிப்பதற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மிகந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியிருந்த மாயைக்கு, சிங்கள தேசம் தன்னை பலியாக்கிவிட்டுள்ளது என்பதுதான் உண்மை.

முரசத்திற்காக ஆய்வு நிலவன்

1 Comment:

இவன் said...

போரியல் சார்ந்த ஆய்வறிக்கையை பகிர்ந்தமைக்கு நன்றி.

யுத்தத்திற்கு தயாரகும் சிங்கள அரசு அரசியல் ரீதியில் ஒரு சில அவசரகாய்நகர்தலை செய்து விடுதலை புலிகளுக்கு எதுவான வகையில் சர்வதே அரசியல் கதவுகளை திறந்து வைத்திருக்கின்றது. இதனை விடுதலை புலிகளின் அரசியல் துறை, புலம் பெயர்ந்த தமிழர்கள் சரியானவைகையில் பயன்படுத்திக் கொண்டால் "தமிழ் ஈழம்" மிக விரைவில் மலரும்.