Sunday, January 20, 2008

தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள்

இலங்கையின் அமைதி முயற்சிகளை நியாயப்படுத்தவென மேற்குலகின் கைகளில் இருந்த துரும்புச்சீட்டு கடந்த புதன்கிழமையுடன் நழுவி வீழ்ந்துவிட்டது. படை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும், தங்களுக்குள்ளேயே பெரும் குத்து வெட்டுக்களை நடத்தி வரும் அனைத்துக்கட்சிக்குழுவும் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் எனக்கூறி மேற்குலகம் போட்ட நாடகத்தை தவிர்க்க முடியாத காரணத்தால் அரசே சிதறடித்துள்ளது.

போர்நிறுத்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக வெளியேறி விடுவார்கள் என கடந்த இரு வருடங்களாக அரசினாலும், அரசிற்கு ஆதரவு வழங்கிவரும் சர்வதேச நாடுகளினாலும் கருதப்பட்டது. அதற்காகவே பல வலிந்த தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது முன்னெடுக்கப்பட்டதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

விமானத் தாக்குதல்களும் செறிவாக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளை சீண்டும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆனாலும் விடுதலைப் புலிகள் தமது நிதானத்தைக் கைவிடவில்லை. இறுதியில் அரசே தன்னிச்சையாக போர்நிறுத்தத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளை சினமூட்டும் உத்தியைக் கையாண்டவர்கள் ஒன்றை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டனர். அதாவது விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட அமைப்பு, அவர்களுக்கு அரசியல் அழுத்தங்களோ, பதவிப் போட்டிகளோ கிடையாது.

ஆனால் தென்னிலங்கையின் நிலைமை வேறுபட்டது, அரசிற்கு தனது பெரும்பான்மையை தக்கவைப்பதே தற்போது பிரதான தொழிலாக மாறிவிட்டது. மோதலில் ஈடுபடும் இருதரப்பினரினதும் சமவலு நிலையானது, படைச்சமவலு, அரசியல்சமவலு, பொருளாதார சமவலு என பல காரணிகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுவதுண்டு. பொருளாதாரச் சீரழிவினால் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததையும், அரசியல் சீரழிவின் மூலம் பாகிஸ்தானை அண்டைய நாடுகள் வீழ்த்த முனைவதையும் இதற்கான சிறிய உதாரணமாகக் கொள்ளலாம்.

படைவலுச் சமநிலையை பொறுத்தவரையில் தற்போது நடைபெறும் பிரசாரப் போரைக் கொண்டு அறுதியாக தீர்மானித்து விட முடியாது. எனவே 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டில் ஏற்பட்ட படைச் சமவலுவில் எத்தைகைய மாற்றங்கள் எற்பட்டுள்ளன என்பதை கணிப்பதற்கு கால அவகாசம் தேவை. ஆனால் அரசியல் சமவலுவை பொறுத்தவரையில் யார் மேலோங்கி உள்ளார்கள் என்பதை இங்கு கூறத்தேவையில்லை. போர்நிறுத்த உடன்பாட்டின் அவலச்சாவு அதனை இலகுவாக உணர்த்தப் போதுமானது.

நோர்வேயின் அனுசரணையில் ஏற்பட்ட போர்நிறுத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய நன்மைகளை விட தென்னிலங்கையில் ஏற்படுத்திய நன்மைகள் தான் அதிகம். போரின் போது சராசரியான 5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட அரும்பாடுபட்டு வந்த நாடு 8 வீத வளர்ச்சியை நோக்கி முன் நகர்வதற்கு போர்நிறுத்தம் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அக்காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீடுகளும், உல்லாசப்பயணத்துறையும் வேகமாக வளர்ச்சி கண்டிருந்தன.

போர்நிறுத்தத்திற்கு அனுசரணை வழங்குகின்றோம் என உருவான இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசிற்கு நிதிகளை அள்ளி வழங்கியதுடன், தென்னிலங்கையின் அபிவிருத்திக்கும் பெருமளவான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியிருந்தன.

ஆழிப்பேரலை அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பில் இருந்து தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்ட போதும், இலங்கையின் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்திற்கு வழங்கிவந்த நிதிகளில் சர்வதேச சமூகம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்பது அதற்கான சிறிய உதாரணம்.

போர் தவிர்க்கப்பட்டதனால் பெருமளவான சிங்கள இளைஞர்களின் உயிர்களையும், சிங்களம் மற்றும் தமிழ் மக்களின் உயிர்களையும் கூட தாம் காப்பாற்றி இருந்ததாக கண்காணிப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது தென்னிலங்கை அனுபவித்து வந்த நன்மைகள் அதிகம்.

ஆனால் மறுவளமாக அதனைப் பார்த்தால் போர்நிறுத்தம் என்ற பதத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்கான குரலை மழுங்கடிக்கும் முயற்சிகள் தான் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அதற்கு கடந்த 6 வருடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சான்று பகரும். எனினும் அதனை எதிர்கொண்ட விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிகழ்வின் அதிர்ச்சியலைகள் தற்போதும் உலகில் ஓய்ந்த பாடில்லை.

போர்நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறியது இலங்கையில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பெருமளவான நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கூறிவந்த வேளையில், தென்னிலங்கையை மற்றுமொரு தாக்குதல் உலுக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதல்களினால் மூடப்பட்டிருந்த யால சரணாலயம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்திருந்த நிலையில் யாலவிற்கு வடக்குப் புறமாக மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற மூன்று தொடர்த் தாக்குதல்கள் தென்னிலங்கையை உலுக்கியுள்ளன.

மொனராகல மாவட்டத்தின் புத்தல பகுதியின் ஹெலகமவில் உள்ள இரண்டாவது மைல்கல்லிற்கு அண்மையில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து ஒன்று சிக்கியதனால் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 67 பேர் காயமடைந்தனர். வீதியோரத்தில் உள்ள உயர்ந்த நிலப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் புத்தல கதிர்காமம் வீதியில் சென்று கொண்டிருந்த யுனிக்கோன் (தென் ஆபிரிக்கா பவள் கவச வாகனத்தின் பிரதி வடிவம்) கவச வாகனம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். அவர்களில் இருவர் மிகவும் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மொனராகல மாவட்டத்தின் தம்பேயாய கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொமோண்டோ பாணியில் நடைபெற்றுச் செல்லும் இந்த தொடர்த் தாக்குதல்கள் தென்னிலங்கையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடுவதற்குச் சென்ற கொமாண்டோ படையினரும் கடந்த வியாழக்கிழமை அடர்ந்த காட்டுப்பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இதில் ஒரு கொமாண்டோ படைச் சிப்பாய் காயமடைந்ததாகவும், தாக்குதலாளிகள் தப்பிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் அரசியல் வட்டாரங்களில் பல குழப்பங்களை தோற்றுவிப்பதுடன், பொருளாதாரம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் தொடர்த் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த வருடம் யால வனவிலங்கு சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏறத்தாழ 3 ஆயிரம் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தனியான கட்டளைப் பீடமும் அமைக்கப்பட்ட நிலையில், அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் அந்த மாவட்டத்திற்கும் ஒரு தனியான கட்டளைப் பீடத்தை அமைப்பதற்கும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரின் பாதுகாப்புக்கும் வழியை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் கொழும்பில் நடைபெற்ற இரு குண்டு வெடிப்புக்கள் 18 ஆயிரம் படையினரை கொழும்பை நோக்கி நகர்த்த வைத்திருந்தது. பின்னர் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் யாஎல பகுதியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் அமைச்சர் டி.எம். தசநாயக்கா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப்புற சிங்களக் கிராமங்களில் இருந்த ஊர்காவற்படை பற்றாலியன்கள் நீர்கொழும்பு கொழும்பு வீதியை பாதுகாக்க அனுப்பப்பட்டன.

தற்போது மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பெருமளவு படையினர் அனுப்பப்பட்டுள்ளதுடன், ஆயிரம் பேரை ஊர்காவற் படையில் சேர்ப்பதற்கான திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசு எண்ணியுள்ளது. இதன் முதற்கட்டமாக 500 துப்பாக்கிகளை அங்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை தவிர கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 300 இற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளும், ஆயிரக்கணக்கான ஊர்காவற் படையினரும், கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள துணை இராணுவக் குழுவினர் என இலங்கை முழுவதும் போருக்குள் அமிழ்ந்து வருகின்றது.

இலங்கையின் இந்த நிலைமை நாட்டில் பெரும் அச்சநிலையையும், பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது. இந்த வருடத்தின் முதல் வாரத்தில் நடைபெற்ற தாக்குதல்களின் எதிரொலியாக பங்குச்சந்தை 35 பில்லியன் ரூபாவை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஊர்காவற் படையினருக்கு என நாடு முழுவதும் வழங்கப்படும் பெருமளவான ஆயுதங்கள் அரசிற்கு எதிரான சிங்கள மக்களின் கிளர்ச்சிக்கு துணை போகலாம் என்ற கருத்தும் தென்னிலங்கை மக்களின் ஒரு சாராரிடம் வலுப்பெற்று வருகின்றது. ஜே.வி.பியின் ஒரு பிரிவினர் கூட அதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசின் மீதான பிடியை அது மெல்ல மெல்ல இறுக்கி வருவதனையும் தற்போது சிலர் அச்சத்துடன் தான் அவதானித்து வருகின்றனர்.

மன்னார் களமுனைகளில் கடந்த 11 மாதங்களாக மூன்று படையணியைச் சேர்ந்த ஏறத்தாழ 18 ஆயிரம் படையினர் கடுமையான எதிர்த்தாக்குதல்களை எதிர்கொண்டு வருகையில் நாடு முழுவதற்கும் போர் வியாபித்து வருகின்றது என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் இலகுவாக உணர முடியும்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மன்னாருக்கு வடகிழக்காக பரப்பங்கண்டல் பகுதியின் ஊடாக 58 ஆவது படையணியைச் சேர்ந்த 10 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவது சிங்க றெஜிமெனட், 6, 8, 9 ஆவது கெமுனுவோச் மற்றும் கொமோண்டோப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தாம் முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பல ஆயுத தளபாடங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

வயல் வெளிகள் பற்றைக் காடுகள் ஊடாக முன்நகர முனைந்த படையினர் விடுதலைப்புலிகளின் மோட்டார், மற்றும் எறிகணைத் தாக்குதல்களுக்குள் அதிகம் சிக்கி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் இறந்த படையினரை வான்படையின் எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி பல தடவைகள் ஏற்றிச் சென்றதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் படைத்தரப்பு தமது தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களும் பரபரப்பாக கழிந்த நிலையில் எதிர்வரும் வாரங்களும் கடுமையானதாகவே இருக்கப் போகின்றன என்பதைத்தான் களநிலைவரம் எடுத்துக் கூறி நிற்கின்றது.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வெளியேற்றம் கள நிலைமைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அது கடந்த இரு வருடங்களாக காகிதத்தில் மட்டுமே உயிர்வாழ்ந்தது. எந்தப் படை நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தும் வல்லமை அதற்கு கிடையாது. ஆனால் அதன் முறிவு ஏற்படுத்தி வரும் இராஜதந்திர மாற்றங்கள் அதிகமானவை.

-அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: