இந்திய கடலோர மாநிலங்களில் தங்களின் வலையமைப்பை தொடக்கியுள்ள விடுதலைப் புலிகள் பணத்தாசை காட்டி தங்களுடன் பணியாற்ற படித்த, பட்டதாரி இளைஞர்களை முகவர்களாக நியமிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக புதிய புரளியொன்று கிளப்பி விடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்திலுள்ள தீவிரவாத குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நேரடித் தொடர்புகள் இருப்பதாகவும் அண்மையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு விடுதலைப்புலிகளே பின்னிருந்து செயற்படுவதாகவும் கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆயுதக்கடத்தல்கள், நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதுடன் புலிகளுக்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவருவதாகவும் தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளும் சில ஊடகங்களும் கூப்பாடு போட்டு வந்தன.
ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கு அரசான தி.மு.க.வின் ஆட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற திட்டமிட்ட அரசியல் பின்புல நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தீவிர பிரசாரத்தினால் தமிழக அரசு சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவந்ததுடன் ஈழத்தமிழர் தொடர்பாக சில செயற்பாடுகளை பகிரங்கமாக மேற்கொள்ள முடியாத நிலைவரமும் ஏற்பட்டது.
தி.மு.க.அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தமிழக காங்கிரஸ் கட்சி விடுதலைப் புலிகள் விடயத்தில் தி.மு.க. அரசை நேரடியாக எதிர்த்ததுடன் தமிழக மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தமையே தி.மு.க.அரசுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்தது.
ஆனால் விடுதலைப் புலிகளின் விவகாரம் தமிழகத்தில் கொதிநிலை அடைந்தவேளையில் தமிழகம் வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய இராணுவத்தின் தென்பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் ஆகியோர் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் எதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு சீராகவே உள்ளதெனக் கூறி புலிகள் தொடர்பான பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அத்துடன் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியனவும் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் தற்போது இல்லையெனவும் அவர்கள் தமிழகத்திலிருந்து ஆயுதங்கள், பொருட்களை கடத்துவதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டன.
இதனால் புலிகளை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்திய சில கட்சிகளுக்கும் வயிறு வளர்த்த சில ஊடகங்களுக்கும் அடுத்து என்ன செய்வதென்ற திண்டாட்ட நிலை ஏற்பட்டது. அதனாலேயே மூளையை கசக்கி பிழிந்து தற்போது தமிழக தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பு, படித்த இளைஞர்களை புலிகள் பணத்தாசை காட்டி மடக்குகின்றனர் என்ற கட்டுக்கதைகளை அவிழ்க்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவிய விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரின் உதவியுடன் படித்த வேலையற்ற இளைஞர்களை தமது முகவர்களாக நியமித்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிவருவதாக எவ்வித ஆதாரங்களுமின்றி தகவல்களையும் செய்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
படித்த வேலையற்ற இளைஞர்களை விடுதலைப் புலிகள் விலைக்கு வாங்குவதாக வெளிவரும் தகவல்களில் கூறப்பட்டுள்ளவற்றை பார்ப்போம்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள் கேரளா, கர்நாடம், ஆந்திரா போன்ற கடலோர மாநிலங்களிலும் தமது தளங்களை வலுவாக பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாநிலங்களில் கால்பதித்துள்ள விடுதலைப் புலிகள் இப்பகுதிகளில் தமது முகவர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிமருந்து, ஆயுதங்கள் கடத்துவது, படகு செலுத்துவது, வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுப்பது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதற்கு பல படித்த வேலையற்ற இளைஞர்களை புலிகள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இவ்வாறான படித்த இளைஞர்களுக்கு சொந்தமாக வாகனம் வாங்கிக் கொடுக்கும் புலிகள் இலட்சக்கணக்கில் பணத்தையும் அள்ளி வழங்குகின்றனர். இதனால் புலிகளுக்கு உதவி செய்வதில் படித்த வேலையற்ற இளைஞர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் புலிகளால் புரட்சிகரமான சிந்தனைகள் போதிக்கப்படுவதால் தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் இவ்வாறான இளைஞர்கள் தயாராகி விட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகள் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்புகளை தமிழகத்திலுள்ள தீவிரவாதிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 5 தீவிரவாதிகளை கைது செய்யும் போது அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அந்த ஆயுதங்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஒரிசா மாநிலத்திலுள்ள கோராபுட் என்ற நகரத்தில் மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தவை என்பது தெரியவந்தது. மாவோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் மாவோ தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நக்சலைட், காஷ்மீர் பயங்கரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகளென சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு தற்போது புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்பையும் மீறி விடுதலைப்புலிகள் மிக இலகுவாக தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர். தம்மிடம் நவீன வசதிகள் இல்லாததால் புலிகளை விரட்டிப் பிடிக்க முடியவில்லையென கடற்படையினர் கூறுகின்றனர்.
இலங்கையரசுடன் இறுதி யுத்தத்துக்கு தயாராகி வரும் விடுதலைப் புலிகள் தங்களது படைப்பிரிவில் தமிழக இளைஞர், யுவதிகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர். தமிழக இளைஞர், யுவதிகள் விடுதலைப் புலிகளின் வலைக்குள் வீழ்வதற்குள் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பண ஆசையில் படித்த இளைஞர், யுவதிகள் மற்றும் மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படத் தொடங்கியிருப்பது இந்தியா முக்கியமாக தமிழகத்தின் அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலான விடயம்.
அமெரிக்காவின் சி.பி.ஐ.யினாலேயே பயங்கரமான தீவிரவாத அமைப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதல்ல. இவ்வாறான ஆபத்தான விடுதலைப் புலிகளுக்கே தமிழகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்படுகின்றது.
மேற்கண்டவாறான பிரசாரங்களை தற்போது தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சில ஊடகங்களும் முன்னெடுத்து வருகின்றன. இவை பொய்ப் பிரசாரங்களென அனைவருக்கும் தெரிந்த போதிலும் இது ஏதோவொரு வகையில் தமிழக அரசுக்கு தலையிடியைக் கொடுக்கத் தான் போகின்றது.
இதேவேளை தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியமான உளவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் இலங்கை அமைச்சரும் ஈ.பி.டி.பி.அமைப்பின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தாவையும் ஈ.பி.ஆர்.எல். எப்.பின் முன்னாள் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சருமான வரதராஜப் பெருமாளையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட புலிச்சந்தேக நபரை கைது செய்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இந்த தகவல்களை அவர் கூறிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளிடம் உண்மையை அறிவதென்பது கல்லில் நாருரிப்பதற்கு சமமானது. அவ்வாறான நிலையில் இவ்வாறான ஒரு பயங்கர திட்டத்தை ஒரு சில மணிநேர விசாரணையில் அந்த புலிச்சந்தேக நபர் கூறியிருப்பாரா?
அதைவிட ஏற்கனவே இந்தியாவுடன் கையை சுட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைச்சர் டக்ளஸையும் வரதராஜப் பெருமாளையும் இந்தியாவில் வைத்து படுகொலை செய்வதற்கு திட்டமிடுவார்களா? கொழும்பிலே கூட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்க முடியாத விடுதலைப் புலிகள் எவ்வாறு அதனை இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் சாதிக்க முடியும்? அத்துடன் அமைச்சர் டக்ளஸ் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒருவரா?
வரதராஜப்பெருமாளை இலக்கு வைக்கும் தேவை விடுதலைப் புலிகளுக்கு இல்லை. அவரை இலக்கு வைப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமமானது.
இவ்வாறான நிலையில் எதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் வரதராஜப் பெருமாளையும் இவ்விவகாரத்துக்குள் தமிழக பொலிஸார் குறிப்பாக தமிழக ஊடகங்கள் இழுத்துவிட்டுள்ளன என்பது கேள்விக்குரியதாகவேயுள்ளது.
விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பதால் அவரின் பெயரைப் பயன்படுத்தி ஆதாயமடைய இவர்கள் முயன்றிருக்கலாம். அத்துடன் இலங்கை அமைச்சர்கள், பிரமுகர்களை தமிழகத்தில் வைத்து படுகொலை செய்ய புலிகள் முயற்சி செய்வதாக ஒரு மாயையை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீதான தடையை நீடிக்கவும் திட்டமிட்டிருக்கலாம்.
எது எப்படியோ புலிகளின் பெயரைப் பயன்படுத்தியே தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பொலிஸாரும் இருப்பது தமிழகத்தின் துர்ப்பாக்கிய நிலையாகவே கருதவேண்டியுள்ளது.
-தாயகன்-
Sunday, January 20, 2008
தமிழகத்தில் புலிகள் ஊடுருவலா? பொலிஸார் கிளப்பும் புரளிகள்!
Posted by tamil at 8:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment