"பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை' ஆகியிருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல்.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளில் பங்குபற்றுவதில்லை. ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் அதன் அமர்வுகளில் இருந்து முற்றாக விலகிக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அமர்வுகளுக்கு அழைக்கப்படவேயில்லை.
இந்த நிலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இப்போதுள்ள பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அரசில் அங்கம் வகிப்பவைதான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "எடுபிடி'களாக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்போரின் கட்சிகளே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிலும் அங்கம் வகிப்பதால் அந்தப் பிரதிநிதிகள் குழுவைத் தனது "போடுதடி' ஆகப் பயன்படுத்த முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரேரிக்கப்பட்ட விடயங்களையே இப்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வேண்டும் அதன் சிபார்சாகப் பிரேரிக்க வேண்டும் என ஒரேயடியாக விரும்புகிறார் ஜனாதிபதி மஹிந்தர்.
அதனால் அத்தகைய முடிவுடன் தீர்மானத்துடன் வரும்படி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி கடும் அழுத்தம் கொடுக்கிறார் அவர்.
ஆனால் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அதற்கு மசிபவர்களாக இல்லை. தேவையானால் இப்போதைக்கு இடைக்கால ஏற்பாடாக 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் கூறப்பட்டவற்றை ஜனாதிபதி தம்பாட்டிலேயே நடைமுறைப்படுத்தலாம். ஆனால் இறுதித் தீர்வுக்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சிபார்சு செய்வது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தைத் தாண்டியதாக அதிலும் மேம்பட்டதாக அமையவேண்டியது கட்டாயம் என்று அவை வலியுறுத்தி விடாப்பிடியாக நிற்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் கடந்த ஞாயிறும், திங்களும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்றுகூடி தனது நீண்ட நேர "மரதன்' அமர்வை நடத்தியது.
புதிய அதிகாரப்பகிர்வுத் திட்டத்துக்கான இறுதி வடிவைத் தீர்மானிப்பதில் இணக்கப்பாடு காணப்படாத நிலையில் அந்த இறுதி வடிவைத் தயாரிப்பதை மேலும் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கடந்த திங்களன்று முன்னிரவில் முடிவு எடுத்தது.
அப்படியிருக்க, அடுத்த நாள் அதாவது நேற்றுக் காலை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் அந்த முடிவை எட்டுவதற்கான கூட்டத்தை நேற்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அவசரமாகக் கூட்டியிருக்கின்றார் என்று தகவல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தனது அரசில், தனக்குக் கீழ் பணியாற்றும், அரசியல் தலைவர்களை வைத்துக்கொண்டு, தனது முடிவை அவர்கள் மீது திணித்து, அதனை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் தீர்மானமாக அறிவிக்க வைப்பதே ஜனாதிபதியின் உள்ளார்ந்த எண்ணமாகும். அந்த அழுத்தத்தின் பெறுபேறாக, நேற்று மாலை நடைபெறும் கூட்டத்தின் பின்னர், 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படியான அதிகாரப் பகிர்வையே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இறுதி சிபார்சாக முன்வைக்கின்றது என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது.
தனியாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும், அக்குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்னிலையில் கூடும்போது சுயாதீனமாக சுதந்திரமாக கருத்துக் கூறுவது வேறு. அதனையே நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அரசில் இருந்து கொண்டு அவருக்குக் கீழ் அமைச்சரவையில் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு அவரது முன்னிலையில் கூறுவது வேறு. அதுவும், சிறுபான்மைக் கட்சிகள் கூறுவது மிகக் கஷ்டமான தர்ம சங்கடமான ஒன்று. அப்படித் தெளிவுடனும், துணிவுடனும் நியாயத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படையாக கூறும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் நம் மத்தியில் இல்லை என்றே கூற வேண்டும்.
எனவே, இவ்விடயத்தில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எச்ச சொச்சமாக இருக்கும் சிறுபான்மையினரின் ஓரிரு கட்சிகளையும் புறக்கணித்து உதாசீனம் செய்து தன்னுடைய நிலைப்பாட்டையே, தென்னிலங்கையின் ஒட்டுமொத்த தீர்வு யோசனைத் திட்டமாகக் காட்டப் போகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது தெளிவு.
ஆனால், பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அரவணைத்துக் கொண்டு, அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில், அதிகாரப் பரவலாக்கல் என்று கூறிக்கொண்டு, மஹிந்தரின் அரசியல் அதிகாரம் இன்று தூக்கிப் போடப்போகும் இந்தப் " பிச்சையை', ஒரு தாராள விடயமாகக் கருதி ஏற்பதற்கு தமிழ் பேசும் மக்கள் வெறுமனே கையேந்தி இருப்பவர்கள் அல்லர். இனத்தின் இருப்புக்காகத் தம்முயிரையே இரந்தளிப்பவர்கள்; உரிமைக்காய் இறப்பவர்கள்.
விட்டெறியும் எலும்புத் துண்டுக்காய்ச் சிங்களத்துடன் ஒட்டியிருந்து வாலாட்டும் சில தரப்புகளுக்கு, இந்தப் பிச்சை அமுதமாக இருக்கலாம். அதற்காக அவர்கள் வாய்களில் எச்சில் ஊறலாம்.
ஆனால் செல்லாக்காசு பெறாத இந்த அதிகாரப் பகிர்வுத் திட்டம் தமிழரைத் திருப்திப்படுத்தாது என்பது திண்ணம்.
Uthayan.com
Tuesday, January 22, 2008
அழுத்தத்துக்கு அடிபணியும் நிலையில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு
Posted by tamil at 10:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment