Tuesday, January 15, 2008

இனி பொங்கலா? போரா?

இன்று தைத் திருநாள் முதல் தினம். தைப் பொங்கல்.
இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தைப் புரிந்த தமிழர்கள் அதன் தெளிவாய்த் தேர்ந்து போற்றும் திருநாள் இது.

அவனியின் அசைவியக்கத்திற்கு மூலமும் முதலும் ஆதவன். அவனின்றி அணுவும் அசையாது. சக்தியின் உறைவிடம் அவன்; ஊற்றுக்கண்ணும் அவனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் காரணம் அவன்.

ஆதவனின் அந்த சக்தியை உலகில் பதிக்கும் பணி பச்சைத் தாவரங்களுக்குரியது. சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை தாவரவர்க்கங்கள். உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது விஞ்ஞானம்.
இந்த அறிவியல் அறிவையும் தாண்டி மெஞ்ஞானமும் உணர்ந்திருந்த தமிழன், சக்தி மூலத்தையும், அந்தச் சக்தியை உலகில் பதிக்கும் தாவரங்கள் விளைச்சல் தரும் காலத்தையும் தேர்ந்து அதற்கொரு திருநாள் அமைத்தான். அதுவே பொங்கல்.
சக்தியின் முடிவை விளைச்சலாக தானியத்தில் பதித்து நமக்குத் தருவது உழவு.
சக்தி மூலமான சூரியனையும், உழவுத் தொழில் ஊடாக அவனது பெருங்கருணை நெற்குவியலாகக் கிட்டும் பேறையும் விதந்து மகிழ விளைச்சல் வேளையில் அவன் கொண்டாடுவதே பொங்கல்.

தமிழரின் திருநாள் கொண்டாட்டங்களில் சாதி, மதம், இனம், வழக்காறு தாண்டி சகலரும் ஒன்றிணைந்து மகிழும் திருநாளாகவும் தைப்பொங்கல் மிளிர்கின்றது.
மார்கழி மங்கைக்கு விடை கொடுத்து, தைப்பாவைத் தையல் தனி நடை போடத்தொடங்கும் இந்த நாளில்தான் தமிழர்களின் ஆண்டுக் கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' பிறக்கின்றது.
சூரிய பகவான் தனு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழைவதையே மகர சங்கராந்தி என்கிறோம். அன்றே தை மாதம் பிறக்கிறது. அன்றுதான் சூரிய பகவான் வடக்கு நோக்கி சஞ்சரிக்கத் தொடங்குகின்றார். இதனை "உத்தராயணம்' என்றும் கூறுவர். "உத்தரம்' என்றால் வடக்கு; "அயணம்' என்றால் வழி.

ஈழத்தமிழர்களை வழிநடத்துபவனும் சூரியக் கடவுளே. இலங்கையின் வடக்கு, கிழக்கைப் பாரம்பரிய தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு சூரியக் கடவுளின் இந்த வடக்கு நோக்கிய சஞ்சாரம் என்ன பலனை பயனை இம்முறை தரப் போகின்றது என்பதே சூரிய புத்திரனின் வழிகாட்டலில் இயங்கும் ஈழத்தமிழர்களின் ஏக்கம், எதிர்பார்ப்பு.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' போகித் திருநாளின் உள்ளார்த்தம். அந்தப்போகி நேற்றுப் போயிற்று. இன்று பொங்கல்.

நேற்றுக் கழிந்தது எது? இன்று புகுந்தது எது? இந்தப் பொங்கலுடன் பொங்கப்போவது என்ன? போகி போகப் பொங்கலோடு வருவது போரா? பொங்கப் போவது போரழிவா? இப்படியெல்லாம் மனம் சஞ்சலிக்க தமிழினம் ஏங்கத் தை பிறக்கிறது.
"தை பிறக்க வழி பிறக்கும்' என்பார்கள். யுத்தப் பிரகடன அறிவிப்போடு பிறக்கும் தை, அழிவுக்கு வழிசெய்யப் போகிறதா? அல்லது அமைதிக்கு வழிகாட்டப் போகிறதா? இந்த ஏக்கமே தமிழினத்தை வாட்டி வதைக்கின்றது.

விளைச்சலை விதந்து போற்றும் நிகழ்வு தைப்பொங்கல். இப்பொங்கலில் நமக்கு விளையப்போவது யாது என்பதே மனதைக் குடைந்து சஞ்சலப்படுத்தும் வினா.
பொங்கல் திருநாள் போற்றும் உழவுத் தொழில் குறித்து தமது பொய்யா மொழியில் செந்நாப்போதர் முதற்பாவலர் திருவள்ளுவர்
""உழுவர் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து'' என்கிறார்.

அதாவது, வேறு பிரிவுத் தொழில் செய்வோரையும் (உணவிட்டு) தாங்குவது உழவுத் தொழில். அது உருண்டு ஓடும் உலகம் எனும் தேருக்கு அச்சாணி என்கிறார் அவர்.
சரி. உருண்டு ஓடும் உதயனின் தேர்ச் சக்கரங்கள், தமிழர் தேசத்தின் திசையாகிய வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் இவ்வேளையில் இனி நடக்கப்போவது என்ன? சூரியனின் வெப்பத்தில் தகிக்கப் போவது யாது? அநீதியும், ஆக்கிரமிப்பும், அடிமைப்படுத்தலுமா?
கடந்த ஆறு ஆண்டுகளாக குறைந்தபட்சம் வெறும் எழுத்திலாவது எஞ்சியிருந்த யுத்த நிறுத்த உடன்பாடு, கொழும்பு அரசின் தீர்க்கமான தீர்மானம் காரணமாக நாளை மாட்டுப்பொங்கலோடு குப்பைக் கூடைக்குள் போய்விடும்.

அதனால், "ஈழ யுத்தம் ஐங ' நாளையோடு நடைமுறைக்கு வருகின்றது.
அதனால், இம்முறை பொங்கலில் புதுப்பானையில் புத்தரிசி பொங்குகின்றதோ, இல்லையோ, அதன் பின் நாடெங்கும் போரழிவும், பேரழிவும் பொங்கப் போகின்றன என்ற அச்ச உணர்வு எல்லோர் இதயங்களிலும் குடிகொண்டுள்ளது.
ஆனாலும், இழப்புகளின்றி இலக்குகளை எட்ட முடியாது என்ற நியாயம் மனதை ஆற்றுப்படுத்துகின்றது.
நெல் விதைத்தவன் நெல் அறுப்பது போல, "வினை' விதைப்பவன் வினையையே அறுக்க வேண்டிவரும்.

பொங்கல் விளைச்சல் வேளையில் தமிழர் தேசம் மீது விதைக்கப்போகும் வினையின் விளைச்சல் தினையளவு ஆகுமா, அல்லது பனையளவு பெருகுமா என்பதை விதைப்போர் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நியாயம் செய்ய மறுத்து, நீதி வழங்கப் பிணங்கி, மேலாண்மைச் செருக்கோடு தமிழர் தம் வாழ்வை மேலும் பேரவலத்துக்குள்ளும் போரழிவுக்குள்ளும் ஆழ்த்தும் பேரினவாதச் சீற்றம் பொங்கலோடு மீண்டும் தலைவிரித்துத் தாண்டவமாடப்போகிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராகி திட சங்கற்பம் கொள்வதே பொங்கல் துணிவாகத் தமிழர் மனதில் எழவேண்டிய இன்றைய சிந்தனையாகும்.

Uthayan.com

0 Comments: