Saturday, January 19, 2008

புரிந்துணர்வு இல்லாத இருதரப்பினருக்கு இடையிலான ஒரு உடன்படிக்கையின் முடிவு

2002 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 ஆம் திகதி பிறந்த புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தம் கடந்த 16 ஆம் திகதி இரவு 7 மணிக்கு உயிர்துறந்துவிட்டது. பிறக்கும் போதே குறைப் பிரசவமாக அமைந்த காரணத்தால் கடந்த ஆறு வருட காலத்தில் அதனால் ஆரோக்கியமானதாக வளர முடியவில்லை. மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த மேற்படி ஒப்பந்தம் இப்போது அரசாங்கத்தால் சாகடிக்கப்பட்டிருக்கிறது. அதன் சவ அடக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கின் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் பணிமனைகள் யாவும் மூடப்பட்டுவிட்டன. அதன் தலைமைப் பொறுப்பாளர்கள் பொறுப்பும் கடமைகளும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். எனவே, செத்துப்போன புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்த்தெழுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தமானது சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் கலந்துரையாடல் மூலம் உள்ளார்ந்த விருப்பங்களின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையின் கீழ் நோர்வே அனுசரணையாளர்களினால் தயாரிக்கப்பட்டு இரு தரப்பினரையும் இணங்க வற்புறுத்தப்பட்டதன் விளைவானதேயாகும். மேலும், இவ் ஒப்பந்தம் ஒரே மேசையில் வைத்து ஒரே நேரத்தில் கையொப்பமிடப்பட்டதும் அல்ல. இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கத் தரப்பில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் நோர்வே அனுசரணையாளர் முன்னிலையில் கையொப்பமிட்டார். அதே ஒப்பந்தம் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தனியாகக் கையொப்பமிடப்பட்டது.

இவ்வாறு தனித்தனியே ஒப்பமிடப்பட்ட மேற்படி புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மீது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பற்றுறுதியோ கடப்பாடுகளோ இருக்கவில்லை என்பதை பின்னைய நாட்களில் இடம்பெற்ற யுத்தநிறுத்த மீறல்கள் நன்கு எடுத்துக் காட்டின. உண்மையில் இப் புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதற்கு அன்றைய அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. காலத்தை இழுத்தடித்துச் சென்று விடுதலைப்புலிகளைப் பல வழிகளிலும் பலவீனப்படுத்தும் முயற்சிகளே செய்யப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிப்புகளைச் செய்து உரியவாறான தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்கு பின்னடிப்புச் செய்துவந்தது. இடைக்கால நிர்வாகம் பற்றிய இழுபறியில் காலம் கரைந்து செல்லவும் இரண்டு வருட இறுதியில் அவ் அரசாங்கம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் இடம்பெறவும் செய்தது.

இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அரசியல் சூழல் சிக்கலாகவே காணப்பட்டமை மற்றொரு அம்சமாகும். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்ற நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்த அதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர். சமாதானத்திற்கான யுத்தம் நடாத்தி வெற்றிபெற முடியாது போன சந்திரிகா குமாரதுங்க அம்மையாராவார். அவரிடம் ஆலோசனையோ ஆதரவோ பெறாமலேயே ரணில் ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். அவரது பக்கத்தில் அமெரிக்க ஐரோப்பிய எசமானர்கள் இருந்தமையால் அவருக்கு துணிவாகக் கையொப்பமிட முடிந்தது. அதனை அவதானித்த சந்திரிகா அம்மையாரும் அமெரிக்க மேற்குலகைப் பகைக்க விரும்பாத காரணத்தால் ஒப்பந்தத்தை எதிர்க்கவோ அல்லது இல்லாதொழிக்கவோ முன்வரவில்லை. அதேவேளை, இவ்வொப்பந்த காலத்தின் முதல் இரண்டு வருட சமாதான காலத்தில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் அந்நிய சக்திகளின் ஆதரவோடு ரணிலினால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை, உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டி தீர்வு பற்றிய பசப்பு வார்த்தைகளும் உச்சரிக்கப்பட்டன.

ஒப்பந்தத்தைச் செய்த ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு சமாதானம் மலர்ந்திருக்கும் என்று கூறப்படுவது கற்பனை நிறைந்த கட்டுக்கதையாகும். மேற்படி ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி தமது உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே ரணில் அரசாங்கம் அன்று கருத்தாக இருந்து வந்தது. அவ்வாறே விடுதலைப்புலிகள் இயக்கமும் தமது நோக்கங்களையும் தேவைகளையும் நோக்கியே செயல்பட்டு வந்தது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இச்சூழலில் ஒப்பந்தம் உருவாகிய ஓரிரு மாதங்களிலேயே இரு தரப்பிலிருந்தும் வடக்கு கிழக்கில் யுத்தநிறுத்த மீறல்கள் இடம்பெற ஆரம்பித்தன. அவற்றை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பதிவுசெய்யவும் பார்வையிடவும் மட்டுமே முடிந்தது. அதன் நீட்சியே ஒப்பந்தத்தின் இறப்பு வரையான பல ஆயிரம் கொலைகளும் ஆட்கடத்தல்களும் கப்பம் பெறுதலுமாக இருந்து வந்துள்ளன. இவற்றின் உச்சகட்ட நிகழ்வுகளை கடந்த இரண்டு வருட மகிந்த சிந்தனை ஆட்சி அதிகாரத்தின் கீழ் வடக்கு கிழக்கும் முழு நாடும் அனுபவித்து வருகின்றது.

உண்மையில் ஒப்பந்தம் நேர்மையுடன் பின்பற்றப்பட்டிருப்பின் அதனால் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் ஒரு சமாதான சூழலை அனுபவித்து ஏற்பட்ட இழப்புகளையும் உருவாகிய காயங்களையும் ஆற்றியிருப்பர். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் ஒரு குறுகிய காலமே கிடைத்தது. ஏ-9 பாதை திறக்கப்பட்டமையும் பொருளாதாரத் தடை நீக்கப்பட்டமையும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்திருந்தன. அதேவேளை, அடையாளம் காட்டாத கொலைகளும் ஆட்கடத்தல்களும் தாக்குதல்களும் நாளாந்தம் அதிகரித்து வந்ததுடன் பரஸ்பரம் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளும் தொடர்ந்தன. இவற்றையெல்லாம் ஒப்பந்தத்தின் கீழான யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பதிவு செய்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருக்க மட்டுமே முடிந்தது.

இதனால், யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது வலுவிழக்கச் செய்யப்பட்டு வந்ததுடன் எந்தவொரு யுத்தநிறுத்த மீறல்களையும் தடுத்து நிறுத்த முடியாத நிலை வளர்ந்து சென்றது.

இச் சூழலிலேயே மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தார். அவரது அணுகுமுறை அரசியல் தீர்வுக்கு ஒற்றையாட்சியையும் மிகக் குறைந்த அளவிலான மாவட்டப் பரவலாக்கத்தையுமே வற்புறுத்தி நிற்பதாக இருந்ததுடன் யுத்தத்தின் மூலம் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதாகவும் அமைந்திருந்தது. இந்நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்து நின்ற அதேவேளை புலிகளின் பல்வேறு நிலைகளிலான தாக்குதல்களும் யுத்தத்தின் மூலம் தீர்வு காணும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் யுத்த முனைப்பிற்கு சாதகமான அம்சங்களாகின. எனவே, இன்றைய அரசாங்கத்தின் கீழ் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தம் என்பது இருக்கக் கூடியதாகவே பிரகடனம் செய்யாத யுத்தம் கிழக்கிலே முன்னெடுக்கப்பட்டது.

வடக்கிலே படுகொலைகளும் , ஆட்கடத்தல்களும், கப்பம், கொள்ளைகளும் தாராளமாக இடம்பெற்றன. இவை யாவும் மனித உரிமை மீறல்களாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளாகவும் இடம்பெற்று வந்துள்ளபோதும் அரசாங்கமோ அல்லது ஏனைய தரப்பினரோ அவற்றுக்குப் பொறுப்புக் கூறவோ , மக்களுக்கு பதில் சொல்லவோ தயாரில்லாத நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

இதில், ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்திற்குரிய தார்மீகக் கடமைகளைக் கூட உதாசீனம் செய்வதையும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதையும் ஜனாதிபதி முதல் அரசாங்கத் தலைவர்கள் அனைவரிடமும் காண முடிகின்றது.

இவ்விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளுடன் முரண்பட்டு நிற்பது மட்டுமன்றி அவ்வப்போது மோதல்களிலும் ஈடுபட்டும் வருகின்றது.

இதற்கு ஜே.வி.பி, ஜாதிக ஹெலஉறுமய என்பன பக்கப் பாட்டுப் பாடுகின்றன. . மனித உரிமை மீறல்களையும் யுத்த முனைப்புகளையும் அங்கீகரித்து அவற்றை நியாயப்படுத்துகின்றன. அதன் மூலம் அவர்கள் தம்முடையதாகக் கொண்டிருக்கும் சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்குரிய உண்மையான அர்த்தங்களை அவமானத்திற்கு உள்ளாக்கிக் கொள்கின்றனர். வெறும் போர்வைகளால் எவரையும் மதிப்பிட்டு விட முடியாது. அத்தகையோரின் சொற்களாலும் செயல்களாலுமே அளவிடல் வேண்டும் என்பதே உண்மையாகும்.

இத்தகைய பேரினவாத யுத்த முனைப்புக் கொண்ட சூழலிலேயே புரிந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தம் சாகடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஐரோப்பிய யப்பானிய நோர்வே ஆகிய சர்வதேச சமூகம் என்பன கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஐ.நா.வும் கண்டித்துள்ளது. அவை யாவும் வெறும் கண்துடைப்புகளே. உள்ளூர அவர்களுக்கு குளிர்ச்சியே ஆகும். அவர்களது அடுத்த கட்ட காய்நகர்த்தல்களுக்கு இவ் ஒப்பந்த முடிவு வழிவிட்டுக் கொடுத்துள்ளது என்றே கூற முடியும்.

ஐ.நா.தலையிட வேண்டும் அல்லது அமெரிக்க மேற்குலகம் வழிவகுக்க வேண்டும் என விரும்புவோருக்கு இந்நிகழ்வு உவப்பானதாகும். அவ்வாறே இவ் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் முதல் வேண்டாவெறுப்புடன் நடந்து கொண்ட இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் குளிர்ச்சி தரக் கூடியதொன்றாகும். நிச்சயம் இந்திய உயர் மட்டத்தினரின் உள்ளார்ந்த விருப்பத்துடனேயே இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்திலிருந்து விலகியது என்ற நம்பிக்கை சில அரசியல் நோக்கர்களால் தெரிவிக்கப்படுகிறது. அதில் உண்மை இருக்கவே செய்கிறது.

ஏனெனில் அண்மைய நாட்களில் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்பட்டவற்றை திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிக் குழு கவனத்திற்கு எடுக்க வேண்டும் என ஜனாதிபதியே பரிந்துரைத்துள்ள பின்னணி இந்தியாவைத் திருப்திபடுத்துவதாக உள்ளது. அத்துடன் இந்தியாவோ அல்லது சார்க் நாடுகளோ அனுசரணையாளர்களாக இருப்பதைத் தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி அண்மைய நேர்காணலில் சுட்டிக் காட்டியுள்ளமையும் கவனத்திற்குரியதாகும்.

எனவே இனிமேல் சாகடிக்கப்பட்ட புரிந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றிப் பேசிப் பயனில்லை. அது செத்த பன்றிபோலாகி விட்டது. அதன் மீது கொதி நீரை ஊற்றினாலும் குளிர் நீரை ஊற்றினாலும் ஒன்றேதான். ஆனால் எதிர்வரப்போகும் அண்மைய காலம் யுத்தப் பயங்கரம் நிறைந்தவையாகவும் அனைத்து மக்களும் கடும் பாதிப்புகளை என்றுமில்லாதளவிற்கு சந்திக்கக் கூடியதாகவும் அமையப் போகின்றன என்பதையே யுத்தநிறுத்த ஒப்பந்த முடிவு முன்னெச்சரிக்கை செய்து நிற்கிறது/

காலகண்டன்
thinakkural.com

0 Comments: