Monday, January 21, 2008

"மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி..."

மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேசப்படும். அது மட்டுமன்றி ஏற்கனவே இங்குள்ள ஊடகங்கள் சில "மலேசியா இன்னொரு இலங்கையாகுமா?" என்று தலையங்கமிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் மலேசிய ஆட்சியாளர்களைக் கண்டித்தும் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் உரையாற்றியுள்ளார். மலேசியப் பிரதமர் இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க இயலாது என்று சொல்வி விட்டார். என்றாலும் கருணாநிதியைப் பொறுத்தவரை மலேசியத் தமிழர் பிரச்சினை நழுவி விடக்கூடாத நல்ல தருணம். இந்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்யப் போவதும் இல்லை என்றும் எதையுஞ்செய்ய மாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியாதா. எனவே தான் அவரால் தைரியமாகப் பேசமுடிகிறது. அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க மலேசியா என்ன இலங்கையா? றோவை அனுப்பி குட்டை குழப்ப அங்கே உள்ள தமிழர்கள் என்ன விடுதலை இயக்கம் நடத்துகிறார்களா? எனவே தான் நாங்கள் நடக்கக் கூடிய விடயங்கள் பற்றிக் கவனிப்பது நல்லது.

மலேசியா முதலில் மலாயாவாக இருந்த போது பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து தமிழர்கள் அங்கிருந்த றப்பர்த் தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கைத் தமிழர்கள் அரசாங்க உத்தியோகந் தேடி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து போய்க் குடியேறினாலும் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு மீண்டு விட்டனர். தமிழர்கள் அங்கே சில பகுதிகளிற் செறிவாக வாழ்ந்தாலும் அங்கு அவர்களுக்கான ஒரு பிரதேசம் இல்லை. அவர்களைப் போல நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள சீனர்கள் அவர்களுக்கு முன்பிருந்தே அங்கே குடியேறத் தொடங்கிவிட்டனர். அவர்களில் பலர் வெள்ளீயச் சுரங்கங்களில் வேலை பார்த்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மலாயாவைப் பிடித்த போது கம்யூனிஸ்ற்றுகளே ஜப்பானுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினர். மலேசிய கம்யூனிஸ்ற் கட்சியில் சீனர் பெருந்தொகையானோரும் மலாய்த் தொழிலாளர்களும் இருந்தனர். போர் முடிந்த பிறகு அதிகாரத்துக்கு மீண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் செய்த முதலாவது வேலை கம்யூனிஸ்றுகளை அழித்து விடுவதாகவே இருந்தது. மிகவும் கொடிய நடைமுறைகள் பிரித்தானியப் படையினரால் பயன்படுத்தப்பட்டன. அதைவிடச் சீனருக்கு எதிரான இனத் துவேஷமும் கிளறிவிடப்பட்டது.

இன்றுவரை மலேசியா போல இன அடிப்படையில் (பூமி புத்ர' கொள்கையின் அடிப்படையில் மலாயருக்குச் சாதகமாகப்) பாகுபாடு காட்டுகிற ஒரு உலக நாடு இல்லை எனலாம். இதன் விளைவாகச் சீனர் தமக்கென்று தனியான இருப்பைத் தேடிக் கொண்டனர். அரசாங்க உத்தியோகம் பல்கலைக்கழகங்களில் அனுமதி போன்றவற்றில் தமக்கு எதிரான பாரபட்சத்தை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டனர். எனினும், வணிகத்துறையில் சீனருடைய வலிமை பெரியது. 1967 ஆம் ஆண்டு சீன விரோத வன்முறை மலாயாவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பற்றி இந்த நாட்டிலோ இந்தியாவிலோ யாருமே கண்டு கொள்ளவில்லை. இங்கே தான் சீனாவின் நிலைப்பாடு கவனத்திற்குரியது.

சீனாவின் விடுதலைக்குப் பின்பு புலம்பெயர்ந்த சீனர் எவருக்கும் சீனக் குடியுரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் வாழுகிற மண்ணில் அவர்கள் சார்பாகக் குறுக்கிடுவதைச் சீனா தனது நடைமுறையாக்கிக் கொள்ளவில்லை. சீனாவுக்கு அப்போது மலேசியாவுடன் சுமுக உறவு இருக்கவில்லை. எனினும், சீனா மலேசியாவை மிரட்டவோ எச்சரிக்கவோ முற்படவில்லை. மலேசிய அரசாங்கத்தைப் பல விடயங்களிலும் விமர்சித்த போதும் மலேசியாவின் உள் அலுவல்களில் தலையிடுவதைச் சீனா தவறாகவே கருதியது.

இதை இந்திய நடத்தையுடன் ஒப்பிட்டால் வேறுபாடு விளங்கும். ஃபிஜியில் இந்தியர்கட்கும் ஃபிஜியப் பழங்குடி வழிவந்தோருக்குமான முரண்பாடுகள் முற்றி அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியா குறுக்கிடக் கூடும் என்றவிதமான கருத்து வெளியானது. இந்திய அரசாங்கம் அதை ஊக்குவிக்கும் முறையில் நடந்து கொண்டது. ஆனாலும், இந்தியாவால் எதுவுஞ் செய்ய இயலாது என்பது போக, இந்தியக் கூறுக்கீடு பற்றிய மிரட்டல் ஃபிஜியில் சமூக உறவுகளை மேலும் மோசமாக்கியதே ஒழிய நன்மை செய்யவில்லை.

வெவ்வேறு நாடுகளில் வர்க்கம், மதம் மொழி, பண்பாடு, சிந்தனை போன்றவற்றால் ஒற்றுமையுடைய மக்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதும் நல்லுறவு பேணுவதும் தவறல்ல. ஆனால், அதைக் காரணமாக்கி ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் இன்னொரு நாட்டின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவது ஏற்க இயலாதது. ஒரு நாட்டுக் குடிமக்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களது பாதுகாப்புப் பற்றி அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஆனால், அவர்கள் இன்னொரு நாட்டின் குடிமக்களாகிய பின்பு அந்தப் பொறுப்பு இல்லை. பொதுவான மனிதாபிமான மனித உரிமை பற்றிய அக்கறைகளை நாடுகளிடையிலான உறவுகளுக்கான பொது விதிமுறைகளை மீறி நடைமுறைப்படுத்த இயலாது.

இலங்கைத் தமிழர் மட்டுமல்ல, இலங்கைக் குடிமக்களாக ஏற்கப்படாத நிலையில் இந்தியா புறக்கணித்த மலையகத் தமிழரும் இன்று எவ்வகையிலும் இந்தியாவின் பிரச்சினையல்ல. இது மலேசியாவுக்கும் பொருந்தும். ஃபிஜி, ட்றினிடாட், கயானா, மொறிஷியஸ், தென்னாபிரிக்கா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட எந்த நாட்டிலும் குடியேறிய இந்தி வம்சாவழிச் சமூகத்திற்கும் அதுவே பொருந்தும். இந்திய மேலாதிக்க நோக்கங்களுக்காகவும் உள்நாட்டு மதவாத இனவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்திய ஆட்சியார்கள் தமது போலியான அக்கறையின் போரியல் அயல் நாடுகளின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவது தவறு. கொதிக்கிற எந்த இரத்தமும் வேறு மண்களில் சிந்தப்படுவது தவறு.

மலேசியத் தமிழரின் அரசியல் சமூகத் தலைமைகள் பெரும்பாலும் மலாயப் பேரினவாதிகளுடன் ஒத்துப் பாடிப் பிழைப்பு நடத்தி டத்தோ, துன் என்கிற மாதிரிப் பட்டங்களும் கௌரவங்களும் பெற்று வாழ்ந்தவர்கள் தான். இப்போது மலேசியத் தமிழருக்கெதிரான அடக்குமுறை வசதி படைத்த வர்க்க நலன்களிலும் கைவைக்கத் தொடங்கி விட்டது. அந்த வர்க்கத்தினர் தான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்வது பற்றியும் இந்தியக் குறுக்கீடு பற்றியும் பேசுகிறார்கள். அரை நூற்றாண்டுக் காலமாகச் சுதந்திர மலேசியாவில் இனப் பாகுபாட்டுக்கு முகங் கொடுத்து வருகிற தொழிலாளர்கள் தங்களது உரிமைகாக்கப் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திலோ இங்கோ தமிழ் நெஞ்சங்கள் துடித்ததில்லை. தமிழ் இரத்தம் கொதித்ததுமில்லை.

மலேசியத் தமிழர்களின் தேசிய இன உரிமைக்கான போராட்டம் அவர்களில் ஏகப் பெரும்பான்மையான தமிழ்த் தொழிலாளரது நலன்களை முன்னிறுத்தியே முன்னெடுக்கப்பட முடியும். வர்க்க அடிப்படையிலான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை நிராகரித்து மலேசியத் தமிழ் மக்கள் போராடி வெல்வது கடினம்.

மலேசியா இலங்கையல்ல. தமிழர் அங்கே ஒடுக்கப்படுவதால் இங்கே தமிழர் போராட்டம் விருத்தி பெற்றது போல அங்கே விருத்தி பெற இயலாது. இங்கே நடந்த தவறுகள் போல அங்கே நிகழவுங் கூடாது. மலேசியத் தமிழருக்கு ஆதரவாகச் செய்யக் கூடியன பல உள்ளன. இந்திய அரசாங்கக் குறுக்கீட்டை வேண்டுவது அவற்றுள் ஒன்றல்ல!

நன்றி: தாயகம் (ஜன. - மார்ச் 2008)

0 Comments: