Saturday, January 5, 2008

சர்வதேசத்தையே உதாசீனப்படுத்தும் பௌத்த சிங்கள மேலாண்மைவாதம்

பேரழிவுகளில் சிக்கி அவலப்பட்டு, அல்லலுற்றுத் தவிக்கும் இலங்கைத் தீவின் மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நப்பாசையுடன் காத்திருந்தனர். ஆனால் முழு அளவில் போர் வெடிப்பதற்கு வழி திறந்து விடப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்புடனேயே தை மகள் வந்திருக்கிறாள்.

தைப்பொங்கலின் போது புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கும். அடுத்த நாள் ஆவினத்துக்கும் அதே பொங்கல். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இம்முறை அதற்கு அடுத்தநாள் தொடக்கம் வேறு பொங்கலும் காத்திருக்கிறது. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தொடக்கம் இலங்கையில் பொங்கப் போவது போர்ப் பொங்கல். அது தினசரி தொடரப் போகின்றது என்பது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது.
பொங்கலை ஒட்டி வரும் மற்றொரு திருநாள் போகி. "பழையன கழிதலும் புதியன புகுதலும்' போகிப் பண்டிகை உணர்த்தும் சிறப்பு. இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பழைய யுத்தமே மீண்டும் புதிய வடிவெடுத்து, அசுர உருக்கொண்டு, விஸ்வரூபம் எடுத்து, போகியோடு வரப்போகின்றது.

ஆறாண்டு கால யுத்தநிறுத்தம் வெறும் காகிதத்தில் சேடம் இழுத்துக் கொண்டிருக்க, அதை நிரந்தரமாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போடத் தீர்மானித்து விட்டது மஹிந்தரின் அரசு.
""2005 நவம்பரில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப்பீடம் ஏறியவுடனேயே யுத்த நிறுத்த ஒப்பந்தம் குப்பைக் கூடைக்குள் போகும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதற்கு இவ்வளவு காலம் சுமார் இரண்டாண்டுகளுக்கு மேல் அவர் காத்திருந்தமை எதிர்பார்க்க முடியாத ஆச்சரியம்தான்.'' என்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையின் போக்கை நன்கு நாடிபிடித்துப் பார்த்தறிந்துள்ள கொழும்பு இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் இனித்தான் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்கப் போகின்றது என்பது உண்மைதான். ஆனால் அது நடைமுறையில் எப்போதோ செத்துவிட்டது என்பதும் மறுபுறத்தில் உண்மையே.

நடைமுறையில் செயலிழந்து நடைப்பிணமாய்க்கிடந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு நிரந்தரமாகக் கதிமோட்சம் அளிப்பதற்கு பிணக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே பின்நின்றன. யுத்த நிறுத்த உடன்பாட்டை மறு தரப்பு மீறி வருகின்றது என்ற குற்றச்சாட்டைக் கூறிக் காலத்தை இழுத்தடித்தும் வந்தனர் இரு சாராரும்.
யுத்த நிறுத்தத்தை முறிக்கிறோம் என்று அறிவித்து சர்வதேசத்தின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்ட இருதரப்புக்குமே விருப்பமில்லை.

ஆனால் கொழும்பு அரசு இப்போது அதற்குத் தயாராகி விட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயலிழக்க வைத்து, அதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் எழும் எதிர்ப்பலைகளுக்கு முகம் கொடுக்க அது திடசங்கற்பம் கொண்டுவிட்டது போலும்.
உள்ளூர் அரசியல் கள நிலைவரம் அத்தகைய அமிலச் சோதனையைச் செய்ய அரசுத் தலைமையை நெட்டித் தள்ளியிருக்கின்றது என்பதே உண்மையாகும்.
நாடாளுமன்றத்தில் உரிய பெரும்பான்மையுமின்றி
புதிய பொதுத் தேர்தலைச் சந்தித்து, வெற்றியீட்டி, மீண்டும் அரசமைப்போம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் நாடாளுமன்றக் கலைப்புக்குத் திராணியுமின்றி
அரசியல் குழப்பத்தில் சிக்கியிருக்கும் மஹிந்த அரசு, இருக்கின்ற நாடாளுமன்றத்தில் தன் வசம் உள்ள ஆசனங்களை வைத்துக்கொண்டு அரசை ஒருவாறு கொண்டிழுக்கப் படாதபாடு படுகின்றது. இருக்கின்ற நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தன் கையில் தொடர்ந்து தக்கவைப்பதே அதன் ஒரே இலக்கு; நோக்கம்; எத்தனம் எல்லாம்.

அதற்காக நாடாளுமன்றத்தில் கணிசமான ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜே.வி.பியை தன் கைக்குள் போட்டுக்கொள்ள ஏதோவெல்லாம் செய்கிறது அது.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கி, சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான மேலாதிக்க மமதையில் திமிர்கொண்டு நிற்கிறது ஜே.வி.பி. சமாளித்து, அதைத் தன் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக ஜே.வி.பி. இழுத்த இழப்புக்கெல்லாம் அரசு இழுபடுகின்றது. ஜே. வி . பியின் இசைக்கு ஏற்ப அது ஆடுகின்றது.

சர்வதேச சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பகைத்துக் கொண்டால் கூடப் பரவாயில்லை, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றைச் சமாளித்தால் சரி என்பதே மஹிந்தரின் அரசின் தற்போதைய நிலைப்பாடு.

போர்த் தீவிரத்தில் குதிக்கத் தூண்டும் பேரினவாதக் கட்சிகள் ஒருபுறம்
யுத்த வெற்றிகள் குறித்து கற்பனைக் கயிறுகளை அங்கு விடும் படைத்துறை மற்றும் அதிகார வர்க்கம் மறுபுறம்
போர் வெற்றி பற்றிய அறிவிப்புகளில் அவிந்து, அதற்காக அரசுத் தலைமையின் பக்கம் அணி திரள்வது போலக் காட்டிக் கொள்ளும் தென்னிலங்கை வாக்குவங்கி பிறிதொருபுறம்
இப்படி இவற்றுக்கு மத்தியில் சிறைப்பட்டுக்கிடக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேர்மையுடன் பேசித் தீர்க்கும் பக்குவமும், முற்போக்கான சிந்தனைத் தெளிவும், அரசியல் திடசித்தமும் அடியோடு இல்லை என்பதும் தெளிவு.
தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைப்படுத்திப் பலப்படுத்துவதற்கான அதிகாரப் போர்களை சிங்கள ஆளும் வர்க்கங்கள் தமிழரின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே காலங்காலமாக நடத்தி வந்திருக்கின்றன என்பது இலங்கையின் சரித்திரம்.
அந்த வரலாற்று ஓட்டத்தில் தாமும் சற்றும் பிசகாதவர் என்பதை நிரூபிக்கும் வகையிலே அதனை உறுதிப்படுத்தி வருகின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.

சர்வதேச சமூகத்தை எதிர்த்துக்கொண்டும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தூக்கிக் கடாசி, தென்னிலங்கை பௌத்த சிங்களக் குழுமத்தை திருப்திப்படுத்த முயலும் தமது துணிகரம் மூலம் அதனையே மீண்டும் நிரூபிக்கின்றார் அவர்.

Uthayan.com

0 Comments: