Thursday, January 17, 2008

இலங்கைத் தீவில் இனி என்ன நடக்கப்போகிறது ? போரா அல்லது புஸ்வாணமா ?

January 17, 2008
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவிய போர் நிறுத்தத்தில் இருந்து சிறீலங்கா அரசு இன்றுடன் முற்றாக விலகிவிட்டது. அந்த விலகல் நடந்த அடுத்த கணமே சிறீலங்காவில் ஒரு பெரும் போர் வெடிக்கும் என்றும், அது வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் பெரும் போராக அமையப்போகிறது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் போர் நிறுத்தம் முடிந்த 24 மணி நேரம் புஸ்வாணமாகியுள்ளது.

போரை நடாத்துவதற்கு சர்வதேச சமுதாயம் அனுமதிக்கக் கூடிய லிமிட்டட் தாக்குதல் என்ற குறியீடு கொண்ட வரையறுக்கப்பட்ட தாக்குதல்களே நடைபெற்றுள்ளன. இந்த நேரத்தில் நாம் ஒரு டஜன் குரல்களை சகல தரப்புக்களில் இருந்தும் கேட்டுள்ளோம். அவை பின்வருமாறு அமைகின்றன.

01. அடுத்த தளபதிக்கு போரை வைத்து செல்ல மாட்டேன் - சரத் பொன்சேகா
02. புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பேன் - மகிந்தராஜபக்ஷ
03. போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரிக்கு வரி அப்படியே கடைப்பிடிக்கத் தயார் - பா. நடேசன்.
04. பயங்கரவாதத்தை எவ்வகையிலும் இணைந்து ஒழிக்க வேண்டும் - மன்மோகன் சிங்
05. இலங்கைக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் - யசூசி அகாசி
06. போர் ஏற்பட்டால் பொது மக்கள் அழிவு ஏற்படும் இரு தரப்பும் பொறுமை காக்க வேண்டும் - மனித உரிமைகள் கழகம்.
07. சிறீலங்கா அரசின் தீர்வுத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற நாம் தயாரில்லை - மாவை சேனாதிராஜா தமிழர் கூட்டமைப்பு.
08. சிங்கள மக்கள் புலிகளின் வலையில் விழுந்துவிடாமல் பொறுமை காக்க வேண்டும் - ஜே.வி.பி
08. வன்னியில் சிறீலங்கா விமானம் இருபது குண்டுகளை வீசியது - செய்தி
09. தென்னிலங்கையில் பேருந்தின் மீது கிளைமோர் தாக்குதல் 26 பேர் மரணம் - செய்தி
10. பேருந்து மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் - செய்தி
11. இலங்கைக்கான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் - ஜேர்மனி - செய்தி

இந்த குரல்கள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்த்தால் நமக்கு தெரியாமலே பல சம்பவங்கள் நடைபெறறிருக்கலாமென ஊகிக்க முடிகிறது. எனவேதான் இந்தப் பன்னிரண்டு குரல்களும் பதிலாக பன்னிரண்டு பதில்களைத் தேடிப்பார்க்கிறோம் அவை பின்வருமாறு உள்ளன.

01. யசூசி அகாசியிடம் தாக்குதலின் வரையறுக்கப்பட்ட அளவு குறித்து சிறீலங்கா பேசியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் சிறீலங்கா அரசுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.

02. உதவிகள் தொடரும் என்ற கருத்தை அவர் சிறீலங்கா வந்து இறங்கியதும் முன் வைக்கவில்லை. மகிந்தவுடன் பேசிய பின்னர்தான் முன் வைத்தார் என்பதால் அவர் வரவு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்றே எண்ண வேண்டியுள்ளது.

03. சிறீலங்காவின் 60 வது வைரவிழா குடியரசு தினத்திற்கு அழைக்கப்பட்ட மன்மோகன் சிங் வரவில்லை. ஆகவே இலங்கைக்கு உற்சாகமூட்ட அவர் ஏதாவது சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால்தான் பயங்கரவாதத்தை அடக்கப் போவதாக சடங்கு பூர்வமாக சொல்லி சிறீலங்காவை ஆறுதல்படுத்தியுள்ளார். இல்லாவிட்டால் மன்மோகன் சிங் இந்த நேரம் அப்படிக் கூற வேண்டிய தேவை இல்லை.

04. யுத்த நிறுத்தத்தை நாம் முறிக்கவில்லை சிறீலங்கா அரசே முறித்துள்ளது. நாம் நோர்வேயின் சமாதான மத்தியஸ்த்தத்தை வரவேற்கிறோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் வரிக்கு வரி கடைப்பிடிக்கத் தயார் என்று பா. நடேசன் எதற்காகக் கூறினார் ? போரில் வெற்றி ஏற்பட்டால் ஓயாத அலைகள் - 3ல் ஏற்பட்டது போல வெளிநாடுகள் புலிகளின் வெற்றியை தடுக்க இயலாத நிலையை அவர் சிறப்பாக ஏற்படுத்தியிருக்கிறார். ஒருவேளை புலிகள் தோல்வியடைந்தாலும் இந்த வசனங்கள் அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் வெற்றியைக் கொடுக்கக் கூடியவை.

05. புலிகளுக்கே சாதகமான இந்தச் சூழலில் சிறீலங்கா அரசு போருக்கு போய் தோல்வியடைந்தால் சர்வதேச சமுதாயம் அதைக் காப்பாற்ற இயலாத அவல நிலைக்குள் தள்ளப்படும். எனவே சர்வதேச சமுதாயமே சிறீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை புலிகளின் தற்போதைய இராஜதந்திரக் கருத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன.

06. புலிகள் பலமிழந்துவிட்டார்கள், இதோ புறப்படுகிறது துட்டகைமுனு சேனை என்று கூச்சலிட்ட ஜே.வி.பி சிங்கள மக்கள் புலிகளிடம் ஏமார்ந்துவிடாமல் பொறுமை காக்க வேண்டும் என்றுள்ளது. ஆக ஜே.வி.பியும் பெரும் போர் இல்லை என்றே கூறுகிறது. எடுத்த எடுப்பிற்கு அமெரிக்கா, ரஸ்யா, காடு, மலை என்று முழங்கிவிட்டு சிங்கள மக்களை அமைதி காக்கும்படி பவ்வியமாகக் கேட்டுள்ளது. மூடிய அறைக்குள் மறைமுகமாக சில விடயங்களுக்கு ஒப்புக் கொள்வதும், பின் வீறாப்பு வசனங்களை பேச அனுமதி பெறுவதும் சர்வதேச அரசியலில் - டயலாக் - என்று நாகரிகமாகக் கூறப்படுகிறது.

07. போர் இனித்தான் தொடங்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பா. நடேசன் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற போர்களில் இரு தரப்பும் தமது பலங்களை பரீட்சித்து ஆழம் பார்த்துள்ளார்கள். களத்தில் வெற்றி தோல்வியை முன்னரே கூற முடியாத சமநிலை நிலவுகிறது என்பதையே அனைத்து நகர்வுகளும் காட்டுகின்றன. சிறீலங்கா அரசு கூறியது போல புலிகள் பலமிழக்கவில்லை.

08. புதிதாகப் பிறந்துள்ள ஆண்டில் கொசோவா தனிநாடாக பிரகடனம் செய்ய இருக்கிறது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைமையை ஏற்றுள்ள சொலோவேனிய அதிபர் மேலை நாடுகளின் தவறை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1990 ல் யுகோசுலாவியாவில் புகுந்த நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அங்கு நீண்ட காலம் நிலை கொண்டிருந்தாலும் வெறும் பார்வையாளராகவே இருந்துள்ளன. இன்று பால்கன் வட்டகையில் நிலமைகள் இவ்வளவு சீரழிய மேலை நாடுகள் தொடர்ந்து மௌனமாக இருந்ததே காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த உருத்திராட்சப் பூனை வேடம்தான் இலங்கையிலும் போடப்பட்டுள்ளது. அங்கு போரும் வராமல் அமைதியும் வராமல் திரிசங்கு நிலையில் எல்லாமே தொங்குநிலையில் நிற்க வெளிநாடுகளே காரணம் என்பதும் இப்போது உண்மையாகியுள்ளது. யசூசி அகாசியின் வெளிப்படையாக எதுவுமே நடக்காத வரவும், இந்தியா, அமெரிக்கா, மனித உரிமைகள் கழகம் ஆகியவற்றின் செயற்பாடற்ற வெற்று அறிக்கைகளும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

09. ஒரு போர் எப்படியிருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் அதன் முதல் 24 மணி நேரமும் முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்று கூறுவார்கள். கடந்துவிட்ட 24 மணி நேரங்களும் யுத்த நிறுத்தத்திற்கு முன்பிருந்த அளவிலேயே போரின் நகர்வு இருக்கிறது. இரண்டு வாரங்களும், 24 மணி நேரமும் சிறீலங்கா அரசு பெரும் போருக்கு தயாரில்லை என்பதையே எடுத்துரைக்கின்றன.

10. தொலைபேசி வழியாக யாழ். பொதுமக்கள் தரும் தகவல்கள் அப்பகுதிகளில் பாரிய ஆயுதங்களை சிறீலங்கா அரசு பாவிப்பதாகவும், தாம் ஓடுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகின்றன. எனவே ஆயுதப்பாவனையில் கணிசமான வளர்ச்சி ஏற்படப்போவதைக் காணக்கூடியதாக உள்ளது.

11. தினசரி இரண்டு தமிழரைச் சுடும் கைங்கரியங்கள் ஓய்ந்துள்ளதால் அதைவிட முக்கியமான வேறு தளத்திற்கு பிரச்சனை நகர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால் அது வாழ்வா சாவா என்ற நிலையில் பூவா தலையா போட்டுப் பார்க்கும் போராக இருக்கப்போவதில்லை என்றும் தெரிகிறது.

12 அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறீலங்கா அரசு ஏன் விலகியது ? அது ஒரு கவனத் திசை திருப்பல் நாடகமா? அல்லது கைவிட்டுப் போகும் வெளிநாடுகளின் கவனத்தைத் திருப்பும் முயற்சியா ? இல்லை அளவுக்கு அதிகமாகக் கிடைத்துள்ள ஆயுதங்களால் உண்டான ஒரு முட்டு நிலையா ? அல்லாவிடில் புலிகளை ஆழம் பார்க்கும் ஒரு செயலா ? இவையெல்லாவற்றையும் விட போர் என்பது வெறும் புஸ்வாணம் என்பதுதான் உண்மையா ? இதுவே கடந்த 24 மணி நேரம் எழுப்பும் பொதுவான கேள்விகளாகும்.

alaikal.com

0 Comments: