Thursday, January 3, 2008

தென்னிலங்கை மக்களை யுத்த மோகத்தில் ஆழ்த்தி மயக்கி வைத்திருப்பதே அரசின் நோக்கம்

நவசமசமாஜக்கட்சியின் 30 ஆவது ஆண்டு பூர்த்திவிழா கடந்த 30 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது வ.திருநாவுக்கரசு ஆற்றிய உரை:

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது போலவே தொழிலாளி வர்க்கம் இன, மத, பேதம் துறந்து ஒன்றுபட்டால் அதன் சக்தி எவ்வளவு பிரமாண்டமானது என்பதற்கு நல்லதொரு சிறிய உதாரணமாக அன்றைய ரூபவாஹினி கூட்டுத்தாபன சம்பவம் விளங்குகிறது. அது மேர்வின் சில்வாவுக்கு மட்டுமல்லாமல் அடக்கி ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் ஒரு பாடமாகும்.

தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டங்கள் தென்னிலங்கையில் ஆளும் வர்க்கத்தினரால் பேரினவாதத்தின் போர்வையில் அடக்கி ஒடுக்கப்படும். தொழிலாளர் விவசாயிகள் மீனவர்கள் போன்ற சாதாரண மக்கள் பிரிவினரின் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டுமென நவசம சமாஜக்கட்சி (ந.ச.ச.க) நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளதை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது நன்கு பொருத்தமானதாகும்.

ந.ச.ச.க. எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை சற்று நோக்குவோம். 1950 கள் வரை இடதுசாரி இயக்கம் குறிப்பாக ல.ச.ச.க. இந்த நாட்டில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினை ஏற்படுத்தி வந்தது. அதன் உச்சக்கட்டமாகவே 1953 ஹர்த்தால் போராட்டம் அமைந்திருந்தது. அதில் தமிழரசுக் கட்சியும் பங்குபற்றியிருந்தமை நினைவுகூரப்பட வேண்டியதாகும். அன்று டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மந்திரி சபை,பாதுகாப்புக்காக அச்சம் கொண்டு கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் தஞ்சம் புகுந்து மந்திரி சபைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்தளவு புரட்சிகரமானதாய் அப்போராட்டம் அமைந்திருந்தது.

அடுத்து 1956 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் பண்டாரநாயக்க `சிங்களம் மட்டும்' சட்டத்தினை நிறைவேற்ற முற்பட்ட போது தமிழ்மொழிக்கும் அரச கரும அந்தஸ்து வழங்கா விட்டால் அது நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த வழிசமைக்குமென இடதுசாரிகளே அதனை வன்மையாக எதிர்த்தனர். மிக துரதிர்ஷ்ட அதே இடதுசாரிகள் 1960 களில் குத்துக்கரணம் அடித்து 1964 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கத் தலைப்பட்டதோடு இடதுசாரி இயக்கத்திற்கு களங்கம் கற்பித்து விட்டனர். அது மட்டுமல்லாமல் இனவாதத்துக்கு துணைபோகும் பாணியில் `டட்லிகே வடே மசால வடே' எனக் கோஷமிட்டு ஊர்வலத்தில் பங்குபற்றும் நிலைக்கும் தம்மைத் தாமே இட்டுச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் அந்த பின்னடைவு கண்டு வாழாவிருந்து விடக்கூடாதென குறிப்பாக சில இளைய தலைமுறை தலைவர்கள் அயராது உழைத்ததன் பயனாகவே 1977 இல் நவசமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது.

நவசமசமாஜக் கட்சி கடந்த 30 வருடங்களாக விலை போகாமல் செயற்பட்டு வந்துள்ளது.நாட்டை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அதாவது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக ஸ்தாபனம் விதிக்கும் உத்தரவுகளின் பேரிலான ஏழை எளிய மக்கள் விரோதமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வந்துள்ளது. அது போலவே புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர் தாயகக் கோட்பாட்டினையேற்று சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி மற்றும் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென நவசமசமாஜக்கட்சி ஆரம்பத்தில் முன்வைத்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டதற்கு அமைய அயராது போராடி வந்துள்ளது.

மேலும், ஆரம்பம் முதல் அதாவது 1978 பெப்ரவரியில் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த சர்வாதிகார அரசியலமைப்பினை எதிர்த்து கறுப்புக் கொடிப் போராட்டத்தினை முதலாவதாக நவசமசமாஜக் கட்சி நடத்தியது. அடுத்து 1979 இல் தமிழ் இன விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்காக 14.07.1979 இல் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தை நோக்கி ஜனநாயகம் மரணித்து விட்டது என்பதை சித்திரிக்கும் முகமாக சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றினை நடாத்தியது. பலத்த பொலிஸ் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்து இவ்வாறாக தனது 30 வருட கால வரலாறு பூராகவும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய, சுயாட்சி உரிமைக்காக அயராது அர்ப்பணிப்புடன் குரல் கொடுத்து வந்துள்ளது. எனவே, இனிமேலாவது தமிழ் பேசும் மக்கள் நவசமசமாஜக் கட்சியின் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் அறைகூவல் விடுக்க விரும்புகிறேன்.

ஐ.தே.கட்சி அரசாங்கங்கள் என்றாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் என்றாலும் சரி, நாட்டின் சமாதானம் மற்றும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காண வேண்டுமென திடசங்கற்பத்துடன் தொலைநோக்குடன் செயற்பட்டது கிடையாது. மாறாக விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காக அல்லது முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காக என்று காரணம் கற்பித்து தமிழ் மக்கள் மீது பல்வேறு மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகளையும் தாங்கொணா அவலங்களையும் எல்லா அரசாங்கங்களும் சுமத்தி வந்துள்ளன. இன்றைய நிலைமை மேன்மேலும் மோசமடைந்துள்ளதையே காணமுடிகிறது. இதன் காரணமாக பெருவாரியான பணம் யுத்தத்திற்கு இறைக்கப்படுவதால் பணவீக்கமும் விலைவாசிகளும் கட்டுக்கடங்காமால் சென்று கொண்டிருக்கின்றன. இன்று பணவீக்கம் 19.6 சதவீதமென அரசாங்கம் அமத்தி வாசிக்கின்றதாயினும் உண்மையில் அது 24 சதவீதத்தை எட்டியுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். பரந்துபட்ட பொதுமக்கள் உயர்ந்த வண்ணம் உள்ள வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமலே அல்லலுறுகின்றனர். ஆனால், ஆட்சியாளரோ யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொண்டிருக்கின்றோம். பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வன்னியைக் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. கிழக்கைப் பிடித்தது போல் வடக்கையும் பிடித்து விடுவோம் என்றெல்லாம் பிரசார / உளவியல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கின்றது.

மாத்தறையில் ஜனாதிபதி உரை

2004 டிசம்பர் 26 ஆழிப்பேரலை அல்லது சுனாமி காரணமாக சேதமடைந்த மாநாம பாலத்தை புனர்நிர்மாணம் செய்து சென்ற வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அல்லது சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது பிரதமர் பதவி வகித்திருந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. இத்தனை நீண்ட நெடுங்காலமாக எமது அரசியல் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஏராளமான உரைகள் முதலியன மூலம் கற்றுக் கொள்ளத்தவறிய பாடத்தினை ஒரு சில நிமிடங்களில் சுனாமி அனர்த்தம் புகட்டியுள்ளது. அதாவது இந்த சுனாமி இன, மத, குல, பால் பேதம் பார்க்காமலே எல்லோரையும் சமமாக நடத்தியுள்ளது. அது தான் நாம் மறக்கமுடியாத பாடமாகும். இவ்வாறு தான் அன்று பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷ உரையாற்றியிருந்தார். ஆனால், ஆழிப்பேரலை ஓய்ந்த கையோடு அது புகட்டிய பாடமும் ஓடி மறைந்து விட்டதே!

இந்த அனர்த்தம் காரணமாக உண்மையில் சாதாரண பொதுமக்கள் இன, மத, பேதமின்றி பரஸ்பரம் உதவிக்கரம் நீட்டி ஒருவரையொருவர் வாஞ்சையோடு காப்பாற்றினர். ஏன் படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் இருசாராருக்கும் இடையில் கூட அத்தகைய மனிதாபிமான உதவிகள் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அறியப்பட்டது. அந்த நிலையில் விடுதலைப்புலிகளின் பங்களிப்புடன் நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்புவதற்கு உதவக்கூடிய சில நடவடிக்கைகள் உத்தேசிக்கப்பட்டிருந்தன. அதாவது விடுதலைப்புலிகளின் முக்கியமான பங்களிப்புடன் ககூணிட்ண் என அழைக்கப்பட்டதாகிய சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முப்பொறி முறையினை ஏற்படுத்தவென எடுத்த முயற்சி அன்றைய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் நீதித்துறையை நாடி முறியடித்தனர்.

ஜனாதிபதி தனது அன்றைய மாத்தறை உரையில் மேலும் கூறிவைத்ததைப் பார்ப்போம். "சகல இனங்களும் இன, மத, மொழி பேதங்களை மறந்து ஒரு தாய் பிள்ளைகள் போல் கைகோர்ப்பதை எனது அரசியல் வரலாற்றில் முதன் முறையாக கண்டு கொண்டிருக்கிறேன்...எம்மால் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடியும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களில் கடந்த 2 வருடங்களை விடவும் தற்போது பாரிய அளவிலான வெற்றிகளைப் பெற்று வருகிறோம். அரசியல் தீர்வே தேவையென சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் யுத்தத்தின் மூலமான வெற்றிகளே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்... யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை புலிகளுக்கு உணர்த்த வேண்டும்" இது தான் மாத்தறையில் மகிந்த ராஜபக்‌ஷ செய்த பிரசங்கத்தின் சாராம்சமாகும்.

சமாதானமான முறையில் 3 தசாப்தங்களாகப் போராடி அது எதுவித பிரயோசனத்தையும் கொண்டு வராத நிலையிலேயே ஆயுதப் போராட்டமும் யுத்தமும் வந்து சேர்ந்தன என்பதை ஆட்சியாளர் அறவே மறந்து விட்டனர். இதை Political amnesia என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட முடியுமென சில மாதங்களுக்கு முன் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். 2 வாரங்களுக்கு முன்பு இராணுவத் தலைமையகத்தில் படைத் தளபதிகள் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகா உரையாற்றும் போது, விடுதலைப்புலிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக ஒழித்துக்கட்டி விட முடியுமெனவும் அதற்கான முழு ஒத்துழைப்பை தளபதிகள் வழங்க வேண்டுமென அறைகூவல் விடுத்திருந்தார்.

அரச தரப்பினரின் இவ்வாறான கூற்றுக்களைப் பார்க்கும் போது அவர்கள் வரலாற்றை பின்நோக்கிப் பார்ப்பதாகவோ பிரச்சினையையும் நிலைமையையும் யதார்த்தபூர்வமாக அணுகவிரும்புவதாகவோ இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு கண்டு நாட்டை விரைந்து சுபிட்சப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமென்று சிந்திப்பதாகவோ நிச்சயமாகத் தெரியவில்லை. மாறாக எத்தகைய தந்திரோபாயத்தையாவது கையாண்டு பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தென்னிலங்கை மக்களை யுத்த மோகத்தில் ஆழ்த்தி மயக்கி வைத்திருப்பதே அரசாங்கத்தின் பிரயத்தனமாகவுள்ளது. எனவே, சமாதானத்துக்காக உழைப்பவர்கள் தேசத்துரோகிகள் என சிந்திக்குமளவுக்கு நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதற்கு ஒப்ப அடக்கியொடுக்கப்படும் வடக்கு தெற்கு மக்கள் கைகோர்த்துச் செயற்படுவது விடுதலைக்கு இன்றியமையானதாகும். இவ்வாறாக மக்களை அணி திரட்டும் பணியில் இன்று (இடதுசாரி முன்னணியின் பதாகையின் கீழ் செயற்பட்டு வரும்) நவசம சமாஜக் கட்சி மீண்டும் திடசங்கற்பம் பூண்டு நிற்கிறது. ஒன்றுபடுவோம் உரிமைகளை வென்றெடுப்போம்.


-வ.திருநாவுக்கரசு-

0 Comments: