Monday, January 28, 2008

கடற்பாதுகாப்பு பொறிமுறையால் ஆபத்தாகும் தென்னாசிய பகுதி

உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார தளம்பல்கள் பல முக்கிய நாடுகளை திண்டாட வைத்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஆசியா, மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சந்தித்த மிகப்பெரும் சரிவுகள் வியாழக்கிழமையே ஓரளவு சீரான நிலையை அடைய ஆரம்பித்துள்ளன. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் மிக மிக அதிகம்.

இந்த இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு தமது செலவீனங்களைக் குறைத்து, மக்கள் மீதான வரிப்பணத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணியுள்ளன. உலகின் செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் அதன் தயவில் தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்யும்.

இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் அதிக பாதுகாப்பு நிதியை ஒதுக்கி போரை தீவிரப்படுத்தி வருகையில் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் விரும்பத்தக்கதாக காணப்படவில்லை. போருக்காக அதிக நிதி வாரி வழங்கப்பட்டு கொண்டிருக்கையில், அதனால் நாட்டின் வருமானத்துறையில் ஏற்பட்டு வரும் தாக்கங்கள் ஆண்டுக்கான போர் செலவீனங்களை விட பல மடங்கு அதிகமாகும்.

முற்றாக முடங்கும் நிலையை அடைந்து வரும் உல்லாசப்பயணத்துறை, வரண்டுபோன முதலீடுகள், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், அதிகரிக்கும் விலை உயர்வுகள் என அரசு கடும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், எதிர்பார்க்காத பல களமுனைகள் புதிதாக திறக்கப்படுவதும் பெரும் நெருக்கடிகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தி வருகின்றது.

மொனராகல மாவட்டத்திலிருந்து அம்பாந்தோட்டை மாவட்டம் வரையிலும் கடந்த வாரம் தோன்றிய அச்சமான நிலமை தற்போது கண்டிக்கும் பரவியுள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள ரந்தெம்பை நீர் மின்நிலையத்தை அண்டிய அடர்ந்த காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகள் நடமாடியதாக சிங்கள மக்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து அந்த பகுதியின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், படையினரும், பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கொரவப்பொத்தானை கிரிகெட்டுவாவ பகுதியில் இருந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதானது, தென்னிலங்கையின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு குழியினுள் 10 சடலங்களும், மற்றைய குழியினுள் 6 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட தகவல்களின் படி 10 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டுள்ள அந்த சடலங்களில் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படைத்துறை வெற்றியை எதிர்பார்த்துள்ள அரசிற்கு இந்த நிகழ்வுகள் எதிர்மறையானவை.

எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஒரு படைத்துறை வெற்றிச் செய்தியை கொடுத்துவிட அரசு கடுமையாக முயற்சி செய்து வருவது யாவரும் அறிந்ததே.

அதன் வெளிப்பாடாகவே மன்னார், மணலாறு, வவுனியா தெற்கு, யாழ். குடாநாட்டின் தென்முனை என தினமும் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. படைத்தரப்பு தமது இழப்புக்கள் தொடர்பாக தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்ற போதும் விடுதலைப் புலிகள் மோதல் தொடர்பான படையினரின் இழப்புக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

மன்னாரின் வட முனையில் படையினர் தமது சிறப்பு மற்றும் கொமோண்டோ படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகையில், விடுதலைப் புலிகள் தமது குறிபார்த்து பதுங்கி சுடும் படையணியை அங்கு நகர்த்தி உள்ளனர். தமக்கு எதுவித சேதங்களும் இன்றி எதிரிக்கு அதிக சேதத்தையும் உளவியல் தாக்கத்தையும் கொடுக்கும் இந்த போரியல் உத்தி கடந்த வாரம் படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பாலைக்குழி களமுனையில் கடந்த செவ்வாய்கிழமை முன்நகர முனைந்த 58 ஆவது படையணியின் கொமோண்டோ றெஜிமென்ட் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பதுங்கி குறிபார்த்து சுடும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 12 கொமோண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதனை படைத்தரப்பு மறுத்துள்ளது.

பொதுவாக பெரும் சமர்க்களங்களில் குறிபார்த்து சுடும் படையணிகளின் பங்கு முக்கியமானது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் தனி ஒரு போராளி 40-க்கும் மேற்பட்ட படையினரை குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது சோவியத்தின் ஸ்ராலின்கிராட் பகுதியை ஆக்கிரமித்திருந்த ஜேர்மனின் சிறப்பு படையணி பற்றாலியன்களை வீழ்த்த சோவியத் இராணுவம் அதிகளவிலான குறிபார்த்துச் சுடும் வீரர்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சோவியத் படையினருக்கு குறிபார்த்து சுடும் பயிற்சியை வழங்கிய ஆசிரியர் களத்தில் தனி ஒருவராக 273 ஜேர்மன் சிறப்பு படையினரை குறிபார்த்து சுட்டு வீழ்த்தியது இன்றும் சோவியத்து மக்களின் நினைவுகளை விட்டு நீங்கவில்லை.

இப்படியாக வடபோர்முனை தினமும் பல நெருக்கடிகளை படையினருக்கு ஏற்படுத்தி வருகையில் தென்னிலங்கையில் தோன்றி வரும் அச்சுறுத்தல்கள் அரசிற்கு கடும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசு தனது முக்கிய கேந்திர மையங்களை பாதுகாப்பதற்காக தீவிரமாக முயன்று வருகின்றது. இலங்கை விமானப்படையினர் வன்னி மீது பெரும் எடுப்பிலான தாக்குதல்களை நடத்தி வருகையில் விமானப்படையினரின் மிகையொலி தாக்குதல் விமானங்களின் தரிப்பிடமான கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீண்டும் வான் அல்லது தரை வழித் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சமும் தொடர்ந்து வருகிறது.

இதனால் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் விமானங்களின் தரிப்பிடங்கள் 5 அடி கொங்கிறீட் சுவர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆறுக்கு மேற்பட்ட வலயங்களாக பாதுகாப்பு நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைகளில் 200 சிறப்பு இராணுவ கொமோண்டோக்களும், 100 விமானப்படை கொமோண்டோக்களும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், குறிபார்த்து சுடும் படையினரையும் அங்கு அரசு நிறுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தரை வழியிலான விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலை தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை தடுக்கும் நோக்குடன் ஒத்திகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை விமானப்படையினர் எவ்வளவு விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதற்கான ஒத்திகைகள் கடந்த வாரம் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்காக வை-12 ரக சிறிய போக்குவரத்து விமானம் ஒன்று விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பறக்கவிடப்பட்டு தரையில் இருந்து விமான எதிர்ப்பு படையினர் தேடுதல் வெளிச்சங்கள் (ளுநயசஉh டiபாவ) மூலம் அதன் பறக்கும் புள்ளியை கண்டறியும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அதாவது இலங்கையின் 60 ஆவது சுதந்திரதின விழாவிற்கு முன்னர் அல்லது அதன் போது அரசு கொடுக்க நினைக்கும் இராணுவ வெற்றியை மறுதலையாக்கி விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டால் அரசிற்கு பெரும் நெருக்கடிகள் தென்னிலங்கையில் தோன்றிவிடலாம் என்ற அச்சம் தற்போது தலைதூக்கியுள்ளது.

எது எப்படியிருப்பினும் போர் இலங்கைத் தீவு முழுவதையும் மெல்ல மெல்ல சூழ்ந்து வருவதே யதார்த்தமானது. ஆனால் அதனை எதிர்கொள்ளத் தேவையான படை மற்றும் பொருளாதார வளங்கள் அரசிடம் உள்ளனவா என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரும் கேள்வி. தென்னிலங்கையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சராசரியாக 5 ஆயிரம் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை அங்கு உருவாகி வருகின்றது.

பொலிஸார், படையினர், கடற்படையினர், விமானப்படையினர், ஊர்காவல் படையினர் என அரசின் எல்லா படை வளங்களும் முழு இலங்கைக்கும் பரவலடைந்துள்ள நிலையில் வடபோர்முனையின் கடல் எல்லையினை பாதுகாப்பதற்காக புதிய பொறிமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அதாவது கடந்த டிசம்பர் மாதம் நெடுந்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற கடற்சமரில் அதிவேக டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டின் மேற்கு கடற்பகுதி விநியோகமும், பாதுகாப்பும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்ற உண்மையை இலங்கைக் கடற்படையினர் உணர்ந்துள்ளனர்.

எனவே அதிவேகத் தாக்குதல் கலங்களினால் பாதுகாக்க முடியாத அந்த கடற்பகுதியை கடற் கண்ணிவெடிகள், கடல் அடி தேடு கருவிகள் (ளுழயெச) கொண்டு பாதுகாப்பதற்கு கடற்படையினர் முயன்றுள்ளனர். அதாவது தமிழகத்திற்கும் மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் கடல் கண்ணிவெடிகள் அதிகளவில் விதைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு தெரிவித்துள்ளனர்.

இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக பாக்குநீரிணையில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உலகில் அதிகம் மிதிவெடிகள் புதைக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதன் கடற்பகுதிகளும் கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பது இலங்கைத்தமிழ் மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மீனவர்களும் பெரும் அழிவுகளை எதிர்கொள்ளவே வழிவகுக்கும்.

கடற்கண்ணிவெடிகளைப் பொறுத்தவரையில் அவற்றில் பல வகைகள் உண்டு எனினும் 50 கிலோ நிறையுடைய மிதக்கும் கடற்கண்ணிவெடிகள் நங்கூரத்தின் அல்லது கடல் அடிப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் இணைப்புக்கள் மூலம் நீர்மட்டத்தில் இருந்து சில அடிகள் கீழே விதைக்கப்பட முடியும்.

நேரடியான தொடுகைகள் (ஊழவெயஉவ ஆiநௌ) மூலம் வெடிக்கும் கடல் கண்ணிவெடிகள் அல்லாது தன்னிச்சையாக (ஐகெடரநnஉந ஆiநௌ) வெடிக்கும் கண்ணிவெடிகளையே கடற்படையினர் விதைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீவகப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தரையிறக்கத்தை தடுக்கும் உத்தியும் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழக மீனவர்களும், இடம்பெயர்ந்து தமிழகம் செல்லும் இலங்கைத் தமிழ் மக்களுமே இந்த கடற்பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதுண்டு.

கண்ணிவெடிகளை விதைக்கும் போது அவை மீள எடுக்கப்படுவதற்கான சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாது விட்டால் அவை நீண்ட காலத்திற்கு இந்த கடற்பிரதேசங்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்த வல்லவை. பெரும்பாலான கண்ணிவெடிகள் 10 வருடங்கள் கூட செயற்றிறன் மிக்கதாக இருக்கக் கூடியவை.

மேலும் நங்கூரம் அல்லது இணைப்பிகள் மூலம் இணைக்கப்படும் கண்ணிவெடிகள் கடல் அலையுடன், அல்லது கடல்விலங்குகளின் தாக்குதல்கள் மூலம் இடம்மாறி செல்லவும் வாய்ப்புக்கள் உள்ளதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 300 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பழ. நெடுமாறன் அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தோன்றியுள்ள நிலை மிகவும் ஆபத்தானதாகவே நோக்கப்படுகின்றது.

தமிழக அரசு சேது சமுத்திர திட்டத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எண்ணி வருகையில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைகள் வர்த்தக கப்பல்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவை.

இலங்கை மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருவதாக உலகின் முன்னணி நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகையில் அதன் கடற்பகுதிகளும் தற்போது ஆபத்தாக மாறி வருவது கப்பல் வர்த்தகத் துறையை கடுமையாக பாதிக்கலாம் என்ற கருத்து தோன்றியுள்ளது.

மொத்தத்தில் தென்னாசியாவின் முனைப்பகுதி மிகவும் ஆபத்தாக நாளுக்கு நாள் மாறி வருவது கவனிக்கத்தக்கது

-அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: