Monday, December 31, 2007

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நடக்கின்றது இறுதிக் கிரியைகள்

யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது.
போர் மேகங்கள் சூழ்ந்து, கொ?975;ூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம்.

கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் இந்த செயற்றிறன் அற்ற நிலைமை குறித்து 2006 இறுதியிலேயே சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே பிணக்குக்குரிய தரப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் தலைவர் வே. பிரபாகரன் தெளிவுபடுத்தியிருந்தார்.
""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிட அரசு எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப் படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.''
இப்படி 2006 நவம்பர் 27 ஆம் திகதி தமது மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கூறியிருந்தார்.

அக்கருத்துக்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வெளியிடும் கருத்துக்கள் நிரூபிக்கின்றன.
"" யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறும் காகிதத்திலேயே உள்ளது. யுத்த நிறுத்தம் நடைமுறையில் இல்லை என்பதை நாம் தெளிவாக நோக்க முடியும். இது கேலிக்கூத்தான விடயம்.

""ஆகவே நாம் இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கை இருப்பதாகக் கூறி நாம் ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்?
""அத்துடன் பயங்கரவாத அமைப்பான புலிகளை நாம் தடை செய்யவேண்டும். அதனுடன் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

""யுத்த நிறுத்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்து, புலிகளைத் தடைசெய்த பின்னர், தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்கான புதிய யோசனைகளை ஜனாதிபதி முன்வைக்க முடியும்.''

இவ்வாறு கடந்த வார இறுதியில் கொழும்பு, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான அவர், ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்புவிடயங்களில் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட உயர் பிரமுகராவார். அவரின் மேற்படி கருத்தை அரசின் நிலைப்பாடாகக் கொள்வதில் தவறில்லை.

ஓராண்டுக்கு முன்னர் புலிகளின் தலைவர் தமது மாவீரர் தின உரையில் கூறிய பல முக்கிய விடயங்களை மேற்படி பேட்டிமூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர்.
* யுத்தநிறுத்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தில்தான் உக்கி, உருக்குலைந்து போய்க் கிடக்கின்றது.
* அதற்கு இறுதிக்கிரியை நடத்தி, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக முடிவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிடுகின்றது.
* அதன் பின் முழு அளவில் போர் நடத்தி, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட அரசு எண்ணுகின்றது.
இப்படி பிரபாகரன் அப்போது கோடிகாட்டிய விடயங்களே இப்போது மெல்ல மெல்லக் கொழும்பில் கட்டவிழ்கின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்து, புலிகள் இயக்கம் மீது தடை விதித்து, முழுப்போரைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலமாகப் புலிகளை அடக்கி, ஒடுக்கியபடி இனப்பிரச்சினைக்குத் தமது தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்கலாம் என்று கூறுவது இத்தகைய உள்நோக்கத்தைத்தானே காட்டுகின்றது?
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமது அரசு, கவிழும் சூழ்நிலை நெருங்கி வந்தபோது, தமது சிரேஷ்ட ஆலோசகரும், சகோதரருமான பஸில் ராஜபக்ஷ எம்.பி.மூலம் ஜே.வி.பி. தலைவர்களோடு அவசர அவசரமாக சமரசப் பேரப்பேச்சு நடத்தினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றும்
அப்போது ஜே.வி.பிக்கு சில முக்கிய வாக்குறுதிகளை வழங்கி, தனது அரசை கவிழவிடாமல் அக்கட்சியின் (ஜே.வி.பியின்) எம்.பிக்களை வளைத்துப் போட்டு நிலைமையை அவர் சமாளித்தார் என்றும் கூறப்படுகின்றது.

அப்போது பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளான ஜே.வி.பியைச் சாந்தப்படுத்தி, தம் வழிக்கு வரப்பண்ணுவதற்காக அரசுத் தலைவர் கொடுத்த சில முக்கிய உறுதிமொழிகளில் புலிகளைத் தடைசெய்தல், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிதல் என்பவையும் அடங்கும்.

அந்த வாக்குறுதிகளைச் செயற்படுத்தி, ஜே.வி.பியைச் சமாளித்துத் தனது அரசைத் தொடர்ந்து தக்கவைக்கவே அரசு முற்படுகின்றது. அச் செயற்பாட்டின் ஆரம்ப அத்தியாயங்களே யுத்த நிறுத்த உடன்பாட்டை ரத்துச் செய்து, புலிகள் மீது தடை விதிக்கும் எத்தனங்கள் பற்றிய அரசின் அறிவிப்பாகும்.


Uthayan.com

0 Comments: