* ருவாண்டா விவகாரத்தில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தி கவலைப்பட்டதுபோன்று தமிழர் விவகாரத்திலும் கவலைப்பட வேண்டியேற்படும்
-பத்மினி சிதம்பரநாதன் எம்.பி.-
அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் மறைந்த பிரதமர் டட்லி சேனநாயக்காவின் ஞாபகார்த்த உரையின் போது, `புதிய நூற்றாண்டுக்கான புதிய இராஜதந்திரம்' எனும் தலைப்பில் ஆற்றிய நீண்ட உரை பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அவரது கருத்துகள் முழுமைக்கும் தமிழ் மக்கள் உடன்பாடு காணாவிட்டாலும் பல சிந்திக்கத்தக்க புதிய கருத்துகளை இனம் காண முடிந்தது.
உலகம் ஒரு கிராமமாகிவிட்டதை குறிப்பிட்டுள்ள தூதுவர் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கிடையில் நடப்பதில் அக்கறை செலுத்துவதோடு மட்டுமல்ல, அரசுகளுக்குள் நடப்பவற்றிலும் கூடுதல் அக்கறை செலுத்துவதாக மாறியுள்ளது என குறிப்பிடுகின்றார். அதாவது, அரசுக்குள் வாழும் மக்கள் மத்தியில் நடப்பவை சம்பந்தமாகவும் இராஜதந்திர அணுகுமுறை அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் மேற்கிளப்புகின்றது. இலங்கை இனப்பிரச்சினையை உண்மையில் தீர்க்க வேண்டுமாயின் ஒரு அரசு மையப்பட்ட (Statist approach) அணுகுமுறையுடன் மட்டும் தம்மை கட்டுப்படுத்திக்கொள்ளாது தமிழ் மக்கள் - சிங்கள மக்கள் மத்தியில் உண்மையில் நடைபெறும் விடயங்கள் என்ன என்பது பற்றி இந்த நாடுகள் அக்கறை செலுத்த முன்வரவேண்டும்.
அந்த வகையில் குறைந்த அளவிலாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரங்கள் பிரித்தானியாவை பாதிக்கின்றது என்று உணர்ந்து கொள்ளும் தூதுவர் பிரித்தானியாவுக்கு இலங்கைத் தீவில் உள்ள தமிழ் - சிங்கள இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் நேரடி அக்கறையும் விருப்பமும் உள்ளது எனக் கூறுவதை நாம் வரவேற்கின்றோம்.
தூதுவர் குறிப்பிட்ட இன்னொரு முக்கியமான விடயம், உலகம் இன்று ஒன்றோடொன்று தொடர்பு பட்டதாகவும் ஒன்றிலொன்று தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளமை. கடந்த காலங்களில் மேற்குலம் தனிமனித சுதந்திரத்திற்கு அதிகூடிய முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அங்கு ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தனித்தீவாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ஆசிய நாடுகளில் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்ற, ஒருவரில் ஒருவர் அக்கறை செலுத்துகின்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமை எம்மிடம் ஏற்கனவே இருந்த ஒன்று. தற்போது மேற்குலகம் அதனை உணர்ந்து கொள்ள முயல்கின்றது.
உலகம் ஒரு சமூகம். அது சவால்களை பகிர்ந்து, உலக சட்ட ஒழுங்குகளை மதித்து, வாழ்ந்து, கூட்டுச்செயற்பாடு மூலம் உலகின் புதிய சவால்களை வெல்ல முடியும். இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்தல் எனும் பெரும் சவாலிலும் தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களுடன் கரம்கோர்த்தபடி ஒரு சமதையான நிலையில் நின்று செயற்பட விரும்புகின்றனர்.
இன்று ஒரு நாடு இன்னொரு நாட்டில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது எனக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 1994 இல் ருவாண்டாவில் நடந்த இன அழிப்பை சர்வதேசம் கண்டு கொள்ளாது, அது தமது விவகாரம் அல்ல என ஒதுங்கியிருந்து விட்டு இன்று சர்வதேசத்தின் மனச்சாட்சியில் ஒரு கறையாக இன்னும் அது இருக்கின்றது என்று தூதுவர் கவலைப்படுகின்றார்.
நாம் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், இன்று இலங்கை இனவாத அரசு -தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆனால், சர்வதேசம் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசுடன் மட்டும் தொடர்புகளை பேணிவிட்டு அதற்கப்பால் தமது விவகாரம் அல்ல என ஒதுங்கி விடுகிறார்கள். இனப்படுகொலை எனும் போது ருவாண்டா அளவிற்கு உயிர்ப்படுகொலை நடைபெறவில்லை என்று சர்வதேசம் நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாம் பண்பாட்டு ரீதியாக பெருமளவில் அழிக்கப்பட்டதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.
பண்பாடு அழிக்கப்பட்ட ஒரு சமூகம் எதிர்காலத்தில் தானாகவே செயல்பட முடியாத ஒரு சமூகமாக சிதைந்து விடும் என தமிழ் மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பின்னொரு காலத்தில் சர்வதேச சமூகம் ருவாண்டா விவகாரத்தில் கவலைப்பட்டது போல் தமிழ் மக்களது விவகாரத்திலும் கவலைப்படும் வரை பொறுத்திருக்காமல் தமிழ் மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் ஒரு பெரும் சவாலை தற்போது எதிர்கொண்டு வருகின்றார்கள். இதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு.
தமிழ் மக்கள் தமது பாதுகாப்புக் கருதி தமிழீழமாகிய தமது தாயகத்தை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இத்தகைய நீண்டகால முயற்சியின் பின்னராவது தமிழ் மக்களின் முயற்சியின் நியாயத்தன்மை பற்றி பிரித்தானிய தூதுவர் உணர்ந்து கொள்ள முன்வந்திருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் ஒரு விடயம். அரசியல் அபிலாசையான ஈழம் நியாயமற்றது என நான் சொல்லவில்லை என பிரித்தானிய தூதுவர் கூறியிருப்பது பற்றி தமிழ் மக்கள் பெரும் ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்br />?து அனைவரும் அறிந்த விடயம். இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசு இப்பயங்கரவாத நடவடிக்கையை படிப்படியாக முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்கள் ஒரு போதும் இலங்கை அரசை தமது அரசாக ஏற்றுக்கொண்டதில்லை. அரசும் தமிழ் மக்களை தமது மக்களாக கருதி, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டதில்லை. இந்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய கடப்பாடு (Responsibility to protest) என்ற எண்ணக்கரு பற்றி சிந்தித்து வரும் சர்வதேசம் தமிழ் மக்களை பாதுகாப்பது என்ற பொறுப்புணர்வில் தமது பங்கை செலுத்த பின்னடிப்பது ஏன்? சர்வதேச சமூகம் இராணுவ ரீதியாக தலையிட வேண்டும் என்று நாம் கருதவில்லை. ஆனால், அவர்கள் முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சமதையாக கணிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
பல்வேறு தடவைகள் இலங்கைப் படைகள் தமிழ் மக்களை பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் சந்தைகளிலும் தஞ்சம் புகுந்த கோயில்களிலும் குண்டுவீசி அழித்தன. சர்வதேச நாடுகள் அதனை ஏன் தட்டிக்கேட்கவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி வந்தவரை படுகொலை செய்யும் போது குறைந்தது கண்டனத்தையோ கவலையையோ தெரிவிக்காமல் எப்படி பேசாமல் இருக்க முடிந்தது?
தமிழ் மக்கள் மீது நடைபெறும் இன அழிப்புப் பற்றி சர்வதேச சமூகம் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கும் நிலையில், தமிழ் மக்களை அழிக்கும் அரசின் செயலை தடுத்து நிறுத்திய படி தமிழ் மக்களை பாதுகாக்கும் ஒரு பெரும் முயற்சியை விடுதலைப் புலிகள் செய்து வருகின்றனர். இந்த வரலாற்று பெரும் பொறுப்பை தம் தலை மீது சுமந்திருக்கும் விடுதலைப் புலிகள் தம்மை அதிகாரம் கொண்டவர்களாக ஒழுங்கமைக்காமல் பொறுப்பை சுமந்தவர்களாகவே அதாவது, பொறுப்பாளர்களாகவே தம்மை ஒழுங்கமைத்துள்ளார்கள்.
தூதுவர் இறைமை பற்றி குறிப்பிடும் போது, இறைமை என்பது அதிகாரம் அல்ல பொறுப்பு என்று குறிப்பிடுகின்றார். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது இறைமை என்ற பெயரில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. அதேநேரம், விடுதலைப் புலிகள் அரச பயங்கரவாதத்திடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை செயற்படுத்தி வருகின்றார்கள். இச் செயற்பாட்டை அவர்கள் தமிழ் மக்களின் இறைமையை நடைமுறைப்படுத்தல் என்று சர்வதேசத்திற்கு விளங்கப்படுத்த முயல்கின்றார்கள். ஆனால், சர்வதேசம் விடுதலைப் புலிகளுடைய இந்த விளக்கத்தை அக்கறையோடு செவிமடுக்காமலிருப்பதும் இன்றைய அவல நிலை தொடர இடமளிக்கின்றது.
ஆனால், தூதுவரின் உரையில், தமிழ் மக்களது அபிலாசையான ஈழம் நியாயமற்றது என தான் கூறவில்லை என குறிப்பிட்டமை ஒரு முன்னேற்றகரமான விடயம். ஆனால், தமிழ் மக்களது அபிலாசையை ஏற்றுக் கொள்ளும் தூதுவர் அந்த அபிலாசையை அடைவதற்காக தவிர்க்க முடியாதபடி புலிகள் ஆயுதப் போராட்டத்தை கையாள்கின்றபோது புலிகளது முறையை ஏற்க முடியாது எனக் கூறுகின்றார்.
பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய போது அரசை சிங்கள இனத்திடம் ஒப்படைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து தமிழினம் சிங்கள அரசால் படிப்படியாக ஒடுக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் சாத்வீக வழியில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற முயன்றதும் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு அவர்களது எந்தவொரு கோரிக்கையையும் வழங்காது ஏமாற்ற முயன்றதும் இவையெல்லாவற்றையும் விட தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை படிப்படியாக அதிகரித்து ஈற்றில் இராணுவ வன்முறையாக மாற்றியதும் இலங்கை அரசியலில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த கதை.
இன்று இலங்கை அரசின் வழிமுறை முழுமையான அரச பயங்கரவாதமாக வெளிப்பட்டு நிற்கின்றது. சர்வதேச அனுசரணையுடன் செய்யப்பட்ட யுத்தநிறுத்தம் அமுலிலிருக்கத் தக்கதாக வெளிப்படையாகவே சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கு சவால் விட்டபடி தமிழ் மக்கள் மீது யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களது பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் மனித உரிமைகளை மீறுவதும் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகளில் பாரிய குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி அழிவுகளை நடத்துவதுமாக அரச பயங்கரவாதம் வெளிப்பட்டு நிற்கின்றது.
அதன் செயற்பாடுகள் பற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனிதாபிமான அமைப்புகள், சர்வதேச ஊடக அமைப்புகள், ஐ.நா. அமைப்புகள் என பலரும் விமர்சித்துள்ளனர்.
உதாரணமாக, அரசின் அனுமதியோடு பணியாற்றிய மனிதாபிமானப் பணியாளர்கள் கடந்த 19 மாதங்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தேசம் இது.
இதனால் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக, மோசமான இடமாக இலங்கைதான் உள்ளது என ராய்ட்டர் நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
இவ்வாறே ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணம் விளங்குகிறது என அனைத்துலக ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பும் அனைத்துலக ஊடக ஆதரவு அமைப்பும் தெரிவித்துள்ளன.
மேலும், ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆட்கடத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுகள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது எனக் குறிப்பிடுகின்றது.
மேலும், இலங்கை சிறைகளில் எந்தவித விசாரணையும் இன்றி தமிழ் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வந்தபோது இவர்கள் சிலர் மீதுதாக்குதல் நடைபெற்றது. இத்தகைய தாக்குதல்கள் மிக மோசமாக முன்னரும் நடைபெற்றது. உதாரணமாக, 1983 இல் 54 பேர் சிறையில் கொல்லப்பட்டனர். 1999 இல் மலையகத்தில் பிந்துனுவெவவில் 12 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், "இலங்கையில் மனித உரிமை நிலைமை மிகவும் சீர்குலைந்து போயுள்ளது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ளது" எனக் கூறியுள்ளார். இவ்வாறு மிக மோசமான விமர்சனங்களுக்குள்ளான இலங்கை அரசு போர்நிறுத்தத்தை கண்காணிப்பதற்கென தாமும் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திய கண்காணிப்புக் குழுவையே பல முறை அவமானப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்புப்பிரதிநிதி மன்பிரட் நோவாக், "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் மீதான கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். "துன்புறுத்தல்கள் அதிக அளவில் நடைபெறவில்லை என அரசு மறுத்து வருகின்ற போதும் என்னால் அவர்களை நம்ப வைக்க முடியும் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு" எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு குற்றச்செயல்கள் நிறைந்த, மனித உரிமை மீறல்கள் மலிந்த அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தேசமாக, இன அழிப்பை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்ளும் இடமாக இலங்கை விளங்குகின்றது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் தமிழ்த் தரப்பின் தலைமையை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு அரசின் பயங்கரவாதத்தை பயங்கரவாதமாகப் பார்க்காமல் அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் நிதி உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குகின்றது. இந்த வகையில் சர்வதேச நாடுகள் பக்கச்சார்பாகவே நடக்கின்றன என நாம் கருதுகின்றோம். சர்வதேச சமூகம் இலங்கை அரசின் பயங்கரவாத அணுகுமுறையைத் தூண்டுவதற்குப் பதிலாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதன்மூலம்தான் தமிழ் மக்கள் ஜனநாயக வழிமுறையில் செயற்படுவதற்கு இடம் கிடைக்கும். மாறாக அரசின் பயங்கரவாதம் தொடரும் பட்சத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளின் முறைமை மாறவேண்டும் எனக்கருதும் சர்வதேச சமூகம் அதற்கான வழியை, ஊக்குவிப்பை வழங்காமல் அதைத் தடுக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்தது.
தெற்கில் ஒவ்வொரு அரசாங்கமும் மாறிமாறி வருகின்ற போது அவை ஒவ்வொன்றும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்றும் தமிழ் மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு போதித்து வந்தது சர்வதேசம். ஆனால், எந்த சிங்கள அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசையை வழங்க முற்படவில்லை. ஏமாற்றவே முற்பட்டன. இதன் பின்னரும் இப்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு (APRC) ஒரு தீர்வை வைக்கும் என சர்வதேசம் நம்பிக்கை வெளியிடுவது உள்நோக்கம் உடையதா? என தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றார்கள்.
தமிழ்மக்கள் மீது ஒரு அரைகுறைத் தீர்வை திணிக்கும் சதியொன்று அரங்கேறப்போகிறது என தமிழ் மக்கள் சந்தேகிக்கிறார்கள். தமிழ் மிதவாதிகள் ஏற்றுக்கொள்ள வழிசெய்யும் ஒரு தீர்வை அககீஇ வைக்க வேண்டுமென சர்வதேச சமூகம் கூறியிருப்பது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழ் மக்களும் சரி விடுதலைப் புலிகளும் சரி இலங்கைத் தீவில் சுதந்திரம் என்ற உயர்ந்த இலட்சியத்தை வரித்து நிற்கிறார்கள். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தமது வாழ்வை பாதுகாப்பதற்கும் சிருஷ்டிப்பதற்குமான சுதந்திரத்தை நாடி நிற்கின்றார்கள். இச்சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கைத்தீவில் சிங்கள இனத்தோடு சரிநிகர் சமானமாக சக வாழ்வு வாழ்வதற்கு தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.
இது ஒரு தீவிரவாத நிலைப்பாடு அல்ல. தமிழ் மக்களது சுதந்திரம் என்பதில் உறுதியாக நின்று கொண்டு மற்ற இனங்களின் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும் ஒரு நிலைப்பாடாகும். உண்மையில் இது ஒரு மிதவாத நிலைப்பாடு என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டால் இலங்கையின் இன முரண்பாட்டு மாற்றத்தில் காத்திரமான முன்னேற்றம் ஏற்படும்.
எனவே, சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்சினையில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசுமையப்பட்ட அணுகுமுறையிலிருந்து விடுபட வேண்டும். இலங்கை இனமுரண்பாட்டை ஒரு அரசுக்கும் ஒரு கிளர்ச்சியாளர் குழுவுக்கும் இடையே நடைபெறும் மோதலாக பார்ப்பதை விடுத்து, சிங்கள - தமிழ் இன மோதலாக பார்க்க வேண்டும். அத்தோடு இந்த மோதல் சிங்கள - தமிழ் சகவாழ்வை கொண்டுவர முடியாத அளவிற்கு அழிவுகரமான நிலைக்கு அண்மித்துவிட்டது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே, சர்வதேச சமூகம் பயனுறுதிமிக்க சமாதான நடைமுறையொன்றை உருவாக்குவதற்கு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ள இரு தரப்பையும் சமத்துவமாகப் பேணுவதன் மூலம் செயலூக்கமான பங்கு ஒன்றை வழங்க உடனடியாக முன்வரவேண்டும்.
Saturday, December 29, 2007
"பயனுறுதிமிக்க சமாதான உருவாக்கத்துக்கு தேவையான சர்வதேசத்தின் அணுகுமுறை மாற்றம்"
Posted by tamil at 9:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment