சிங்கள இனவாத அரசின் தமிழர் விரோத நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக ஊர்வலம் ஒன்று மட்டக்களப்பு நகரில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளது. பிள்ளையான் எடுபிடிக் கும்பலின் ஆதரவுடன் சிறிலங்கா அரச படைகள் நடாத்திய ஊர்வலத்தின் முடிவில் விடுதலைப் புலிகளைக் கண்டித்தும், மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்தும் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்றாக ஊர்வலம் நடாத்தும் ஜனநாயக உரிமையை எவரும் தவறெனக் கூறிவிட முடியாது. ஆனால், சிறிலங்காவைப் பொறுத்தவரை ஜனநாயக உரிமைகள் எப்போதும் ஒரு சாராருக்கு மாத்திரமே இருப்பதைப் போன்று இங்கும் கூட ஊர்வலம் நடாத்தும் உரிமை(?) பிள்ளையான் குழுவிற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தில் பங்குபற்றவென மக்கள் அழைத்த வரப்பட்ட முறைமை பற்றி பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 'எவ்வளவு நீர் இருந்தாலும் நாய் எப்போதும் நக்கியே தண்ணீர் குடிப்பதைப் போன்று", அவரவர் தமக்குத் தெரிந்த வழிமுறைகள் ஊடாகவே தமது ஜனநாயகப் பணிகளை(?) ஆற்றுவர். அந்த வகையில் பிள்ளையான் கும்பலும் தனக்கத் தெரிந்த, பரீச்சயமான வழிமுறைகளுக்கூடாக பொதுமக்களை ஊர்வலத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது.
அது ஒரு புறமிருக்க ஊர்வலத்தின் முடிவில் கையளிக்கப்பட்ட மகஜரின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட சிறிலங்கா அரச படைகளைப் பாராட்டுவதும், மட்டக்களப்புப் பிரதேசத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த விடுதலைப் புலிகளையும் தமது தொகுதி மக்களை எட்டிக்கூடப் பார்க்காத மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டிப்பதுவுமே இந்த மகஜரின் உள்ளடக்கமாகும்.
மேற்கூறிய மூன்று விடயங்களையும் கூறுவதற்கு சாதாரணமாக ஒரு அறிக்கையே போதுமானது. அப்படியிருக்கையில் எதற்காக இந்த ஊர்வலம்? எல்லாமே இறால் போட்டு சுறா பிடிக்கும் தந்திரம்தான்.
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் குடும்பிமலைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகளின் அணிகள் பின்வாங்கியதை அடுத்து இராணுவம் அங்கு பிரவேசித்தது. தொடர்ந்து மட்டக்களப்பு கைப்பற்றப்பட்டமைக்கான வெற்றி விழாவும் கொண்டாடி முடித்தாயிற்று. இந்நிலையில் திடீரென இப்போது எதற்குப் பாராட்டு ஊர்வலம்?
விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து விரட்டியடித்து விட்டோம் என தினசரி மூன்று வேளையும் அரசாங்க அமைச்சர்கள் உச்சரித்து வரும் நிலையில் மட்டக்களப்புப் பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு விடுதலைப் புலிகள் தடையாயிருப்பதாகத் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?
மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதிகளுக்குச் சென்று மக்களைப் பார்வையிட தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு எத்தனை தடவை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பார்கள் என்பது உலகறிந்த விடயம். நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அவர்களை நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தேவாலயத்தினுள் வைத்து சுட்டுப் படுகொலை செய்தது யார்? சே.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது எறிகணை வீசி அவரையும் அவர் குடும்பத்தினரையும் கொல்ல நினைத்தது யார்? வரவு-செலவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் சார்பிலே வாக்களிக்கச் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பனர்களின் குடும்பத்தினரைக் கடத்திச் சென்றவர்கள் யார்?
மேற்குறித்த கேள்விகளுக்கு விடைகாண முற்படும் போது என்ன நோக்கத்திற்காக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது என்பதை ஊகிப்பது கடினமாக இராது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளனர். தங்களைத் தெரிவு செய்த மக்களை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலை. தமக்கு பன்முக வரவு செலவுத் திட்ட நிதி மூலம் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளைக் கண்காணிக்க முடியாத நிலை, நடப்பு விவகாரங்களைக் கண்டறிந்து நிர்வாக அதிகாரிகளைக் கலந்துரையாடி மாவட்ட நிர்வாகத்தைச் சீராகக் கொண்டு நடத்த முடியாத நிலை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒட்டுக் குழுக்களுடனும் அரச படைகளுடனும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் பிரசாரத்தை தடுத்துவிட முடியாத கையறு நிலை.
மறுபுறம், சூழலைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருசிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏற்கனவே சீர்குலைந்து போயுள்ள தமிழ் முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி விடும் அபாயம் அதிகரித்து வருகின்றது.
சிறப்புரிமை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை ஊகிப்பதில் கஸ்டம் இராது.
1983 யூலை இனச்சங்காரத்தின் பின்னர் தமிழர் தாயகத்தில் இருந்த நிலைமையைப் பின்னோக்கிப் பார்க்கையில் ஒரு விடயம் புரியும். இக்காலப் பகுதியில் தமிழர் தாயகத்தில் அரச இயந்திரம் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியது. அந்த வெற்றிடத்தை இயல்பாகவே போராளிக் குழுக்கள் நிரப்பிக் கொண்டன. குறுகிய கால இடைவெளியில் போராளிகளே நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் நிலை உருவானது. ஏனெனில், மக்களுக்கு எப்போதுமே வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலையே இன்று தோன்றியுள்ளது. விடுதலைப் புலிகளின் நிழல் நிர்வாகத்தின் கீழ் இருந்த மட்டக்களப்பு மாவட்டம் இன்று ஒரு நிர்வாக வெற்றிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள அரச நிர்வாகத்தின் செயற்றிறன் இன்மை காரணமாக இந்த வெற்றிடத்தை அதனால் நிரப்ப முடியாதுள்ளது. அதேநேரம் மக்களுக்கோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள். இந்நிலையில் வெற்றிடத்தைப் பிரதியிட கூலிக் கும்பல்கள் முயற்சித்து வருகின்றன. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே அண்மைய ஊர்வலம்.
மட்டக்களப்பு மாவட்டம் இன்றுள்ள நிலையில் மக்களைக் குறை கூறி விட முடியாது. கருணா விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு ஆறாயிரம் போராளிகளுடன் வெளியேறிய போது ஏற்பட்ட ஆபத்தைவிடப் பயங்கரமான ஆபத்து தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைமையை நீடிக்க விடுவது விடுதலைப் போராட்டத்தின் நீண்டநால நலனுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்.
இன்றைய நிலையில் வன்னியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று மட்டக்களப்பின் இன்றைய நிலைமையை மாற்றியமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் முக்கியமானது. இதில் ஏற்படும் தாமதம் மீண்டுவர முடியாத தொலைவிற்கு எமது போராட்டத்தைப் பின்தள்ளி விடும் அபாயம் உள்ளது.
நன்றி: 'நிலவரம்"(14.12.07)
Friday, December 21, 2007
ஜனநாயகமும் மட்டக்களப்பும்
Posted by tamil at 9:04 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment