Monday, December 24, 2007

ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி வகுத்துள்ள வியூகம் என்ன?

சிறிலங்காவின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்புக்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பரபரப்பை ஏற்படுத்திய போதும் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது முடிவடைந்து விட்டன.

எனினும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவங்களை வைத்து ஜே.வி.பி. பல வீரப்பிரதாபங்களையும் பெருமைகளையும் பேசிவருவதுடன் தன்னை எதிர்காலத்தில் முடிசூடிக் கொள்ளப்போகும் மன்னனாகவும் கற்பனை செய்துகொள்ளத் தொடங்கியுள்ளது.

இது ஒரு மாயத்தோற்றம் தான் என்பது குறித்து ஜே.வி.பி ஓரளவேனும் விளங்கி வைத்திருக்கின்றது எனவும் கொள்ளலாம். எனினும் அதனையே பெருப்பித்துக் காட்டி மக்களை ஏமாற்றி ஆட்சியைப் கைப்பற்றிவிடலாம் என்பது அதனது எண்ணமாகும்.

இந்த வாக்கெடுப்பின்போது ஜே.வி.பி. வாக்களிக்காமல் விட்டமையானது அரசாங்கம் சுலபமாக வெற்றிபெற உதவியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 114 பேர் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையென்பது அரசாங்கம் வெற்றிபெற்று விட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஜே.வி.பி. நிச்சயமாக எதிர்த்தே வாக்களிக்கும் என்பது தெரிந்திருந்தால் இ.தொ. காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்திருக்கும் மலையக மக்கள் முன்னணி எதிர்த்திருக்கும் சு.க.விலிருந்து சிலர் வெளியேறி வந்திருப்பர், ஐ.தே.க. அதிருப்தியாளர் குழுவிலிருந்து பலர் ஐ.தே.க.வுக்கு மீண்டிருப்பர். எனவே அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என ஏனையோர் கருதுவது போலவே ஜே.வி.பியும் கருதினால் (அதேவேளை மகிந்த ஆட்கடத்தல் மூலமும் கூட வாக்கெடுப்பின் நிலையை மாற்றக்கூடியவர்) இங்கு இது ஜே.வி.பியின் வெற்றி என்று கூற என்ன இருக்கிறது?

அதாவது வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது என்பது ஜே.வி.பியின் கையில் மட்டும் தான் தங்கியிருந்தது என்று கூறமுடியாது என்பதையே இது புலப்படுத்துகிறது.

அடுத்ததாக ஜே.வி.பி தனக்கு ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மகிந்த ஆட்சியைத் தோற்கடிக்க முடியாத நிலையில் உள்ளது. ஏனெனில் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால். பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற மகிந்தவின் எச்சரிக்கை நிச்சயமாக ஜே.வி.பிக்கு அச்சுறுத்தலானதே.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள ஜே.வி.பி இன்னமும் தயாராக இல்லை. அவ்வாறு ஒருநிலை ஏற்பட ஜே.வி.பியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயாரில்லை. எனவே மகிந்த அரசு கவிழும் நிலை ஏற்படுமானால் அதனைக் காப்பாற்ற ஜே.வி.பியில் பிளவு ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் கூட ஜே.வி.பியிடம் உள்ளது.

எனவே ஜே.வி.பியின் இந்த முடிவு நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலானது. தமது 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும் (ஒருவர் ஏற்கனவே ஆளும் கட்சிக்குத் தாவிவிட்டார்) காப்பாற்றிக் கொள்வது என்ற நோக்கத்திலானது.

இந்த வரவு - செலவுத்திட்டம் தொடர்பான வாக்களிப்பின் போது ஜே.வி.பி மூன்று விதமாக நடந்து கொண்டுள்ளது. அதாவது இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதனை எதிர்த்து வாக்களித்தது. குழுநிலை விவாதத்தின் போது பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் போது ஆதரவாக வாக்களித்தது. மூன்றாவது வாசிப்பின்போது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது வெளியேறியது.

இவற்றுக்கு நேரத்திற்கு நேரம் பல கொள்கை விளக்கங்களையும் கூறியது.

முதலாவது வாக்கெடுப்புக்கு முன் அது அதற்கு ஆதரவாக வாக்களிக்க அரசுக்கு நான்கு நிபந்தனைகளை முன்வைத்து காலக்கெடுவையும் விதித்தது.

ஆனால் மகிந்த கண்டுகொள்ளவில்லை. அப்போது ஜே.வி.பி அதற்கான ஆட்சேபத்தை நேர்மையான முறையில் காண்பித்திருப்பதானால் வரவு-செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக முன்னரே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அறிவித்தால் சில கட்சிகள் பா.உ.கள் எதிரணிக்கு மாறி வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தால் அது அவ்வாறு செய்யவில்லை.

பின்னர் 3-ஆவது வரவு - செலவுத்திட்ட வாக்களிப்புக்கு முன்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றெல்லாம் கூறியதுடன் அவ்வாறான மாற்றம் ஏற்படாத நிலையில் எதிர்த்து வாக்களிக்காது விடக்காரணம் எதுவும் இல்லை எனக்கூறியது. எனினும் அது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது ஜே.வி.பி.யானது தான் எதிர்த்து வாக்களிக்கப்போவது போலக் காட்டிக்கொள்வதன் மூலம் ஆளும் கட்சியுடன் நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா. மற்றும் தடுமாற்ற சிந்தனை கொண்ட சில பா.உ.களை வெளியேற்றி மகிந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே அதன் நோக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்போது வரவு-செலவுத்திட்டம் நிறைவேறிவிட்டது. மகிந்த அரசாங்கம் காப்பாற்றப்பட்டு விட்டது. தேசத்துரோகம் புரிந்த ஐ.தே.கட்சியின் எண்ணம் நிறைவேறாது செய்யப்பட்டு விட்டதான திருப்தியில் ஜே.வி.பி உள்ளது.

அதன் அடுத்ததிட்டம் பிரதான எதிர்க்கட்சியாகப் பாராளுமன்றத்தில் அமர்வது எனக் கூறப்படுகிறது. இப்போது ஐ.தே.க. 42 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்ட கட்சியாக இருக்கையில், 37 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜே.வி.பி கொண்டிருக்கிறது. இந்த ஐந்தையும் எவ்வாறு சமப்படுத்துவது? என்று ஜே.வி.பி திட்டமிடுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.க தோல்விமேல் தோல்வியைச் சந்தித்து வருகின்ற நிலையில் ஆட்சி விரைவில் கிட்டாது என்ற அதிருப்தியில் ஆறு ஐ.தே.க பா.உகள் ஆளும் கட்சிக்குத் தாவினால் ஜே.வி.பி. யின் கனவு நிறைவேறலாம். ஆனால் மகிந்த பலப்பட்டு விடுவாரே? அதுவும் ஜே.வி.பிக்குச் சங்கடம் தான்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போதைக்குப் பரவாயில்லை என ஜே.வி.பி. நினைக்குமாயின் அதனை வரவேற்கக்கூடும்.

அவ்வாறாயின் ஆட்சியைப் பிடிக்க ஜே.வி.பிதிட்டம் ஏதாவது வைத்திருக்கின்றதா? அதுவும் அதனிடம் கைவசம் உண்டு.

ஜே.வி.பி.யிடம் தேசப்பற்றுக்குறித்த ஓர் அளவுகோல் உண்டு. அதன்படி ஐக்கிய தேசியக்கட்சி ஒரு தேசவிரோதக் கட்சியாகும். அரசை எதிர்ப்பதற்காக தேசவிரோதக் கட்சியான ஐ.தே.க.வை ஆதரிக்க முடியாது என்பதற்காகவே அது மூன்றாம் கட்ட வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகக் கூறுகின்றது.

அதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தவிர ஏனைய நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவே. இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது எதிர்த்து வாக்களித்ததாக அது மேலும் கூறுகிறது.

அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இப்போது அது பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது. இதற்காகவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அது ஆதரித்தது.

அதேவேளை மகிந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க விடுதலைப்புலிகளைத் தடை செய்யவேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கவேண்டும். கண்காணிப்புக்குழுவை வெளியேற்ற வேண்டும். ஐ.நா. வினதோ அல்லது வேறெந்த அமைப்பினதோ, நாட்டினதோ தலையீட்டை நிராகரிக்க வேண்டும். முழு அளவிலான யுத்தத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றது.

அதாவது மகிந்த அரசாங்கம் போரினால் ஏற்படக்கூடிய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பொருளாதாரச்சிக்கல் குறித்துக்கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தவில்லை ஆயுதக் கொள்வனவுக்காக ஜே.வி.பியின் மொழியில் 'அமெரிக்க ஏகாதிபத்தியம்" இந்திய விஸ்தரிப்பாளர்கள்" உட்பட அனைவரிடமும் மகிந்த அரசாங்கம் இடைவிடாது ஓடுவதைக் குறை கூறவில்லை. யுத்தத்தை முழுமையாக நடத்துங்கள் என்றே கூறுகின்றது.

இங்கேதான் அது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகத்தையும் வைத்திருக்கின்றது. 'வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது ஜே.வி.பி.யே" என்று கூறும் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க 'படையினர் பெற்ற வெற்றிகளை இந்த அரசாங்கம் இறுதிவரை கொண்டு செல்லுமென்ற நம்பிக்கை எமக்கில்லை. எனவே அது கைவிடப்போகும் இடத்திலிருந்து அதனை முன்னெடுத்துச் செல்ல ஜே.வி.பி. தயாராக இருக்கிறது. அதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக வேண்டும்" எனக் கூறியிருக்கின்றார்.

மகிந்த ஆட்சி யுத்தத்தில் இறுதிவெற்றி பெறும் என்ற நம்பிக்கை சற்றும் இல்லாத ஜே.வி.பி அந்த ஆட்சியை யுத்தத்திற்குள் மேலும் மேலும் தள்ளி முற்றாக மூழ்கடித்து விட ஏன் முயல்கின்றது? என்பது இதன்மூலம் புலனாகின்றது.

அதாவது மகிந்த ஆட்சி முற்று முழுதான யுத்தத்தில் இறங்கி அதிலே தோல்வியுற வேண்டும். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தான் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்பதே மகிந்த சிந்தனைக்கு எதிரான ஜே.வி.பியின் சோமவன்ச சிந்தனையாகும். ஜே.வி.பி.யினரின் தேசப்பற்றுக்குறித்த அளவுகோல் எவ்வாறானதாக அமைந்திருக்கின்றது? என்பதை இது வெளிபடுத்துகின்றது.

ஜே.வி.பி.க்கு உண்மையிலேயே தேசப்பற்று இருக்குமானால் மகிந்த நடத்தும் யுத்தம் இறுதிவெற்றியைப் பெற்றுத்தராது என நம்பிக்கை கொண்டிருக்கையில் நீங்கள் செய்யும் யுத்தம் தவறானது என்று கூறவேண்டும் அல்லது அவ் ஆட்சியை அகற்றி தமது ஆட்சியை உருவாக்க எத்தனித்திருக்க வேண்டும்.

இறுதிவெற்றி கிட்டாதென நம்பிக்கை கொண்டிருந்தும் மேலும் மகிந்த அரசை யுத்தத்திற்குள் தள்ளி தேசத்தை நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களை தேசப்பக்தர்கள் என சிங்கள மக்கள் எவ்வாறு நம்புவர்?

இவர்கள் திறக்க முயலும் புதியபாதை சிங்கள மக்களையும் தேசத்தையும் புதைகுழியில் தள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் இப்போது மக்கள் தம்மைப் பதவியில் அமர்த்துவர் என்றும் நம்பவில்லை.

ஆனால் ஜே.வி.பி.யினர் அரசியல்காய் நகர்த்தல்கள் என்று நம்பிக்கை கொண்டு இன்று அடிக்கின்ற கூத்துக்கள் இவர்கள் ஆயுதப்போராட்டத்தில் மட்டுமல்ல அரசியல் நடவடிக்கைகளிலும் மட்டமானவர்கள் என்பதை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கும் என்றே நம்பலாம். சிலவேலைகளில் இவர்களின் நடவடிக்கைகள் சிங்கள மக்களுக்கு மாதன முத்தாவைக் கூட ஞாபகமூட்டலாம்.

-வேலவன்-
நன்றி: ஈழநாதம் (22.12.07)

0 Comments: