Saturday, December 8, 2007

ஏன் இந்தக் கவலை?

'கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் சம்பவத்தை எந்தவொரு அமைப்பும் அல்லது நிறுவனமும் கண்டிக்க முன்வரவில்லை" என்று அமைச்சர் பிரியதர்சன யாப்பாவின் கூற்றுக்கள் கவலையின் வெளிப்பாடல்ல. அது ஒரு குற்றச்சாட்டாகும்.

அதாவது, விடுதலைப் புலிகளின் வானொலி நிலையமான புலிகளின் குரல் வானொலி நிலையத்தைச் சிறிலங்கா வான்படை தாக்கி அழித்தமைக்கு யுனஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்பதே அமைச்சரின் இவ் விசனத்திற்குக் காரணமாகும்.

இதனை அமைச்சரின் கூற்றுக்களில் வெளிப்படும் ஒரு விடயமே உறுதி செய்வதாகவுள்ளது. அதாவது, அமைச்சர் நாடுகள் குறித்து எதையும் கூறாது, அமைப்புக்கள், நிறுவனங்கள் கண்டிக்க முன்வரவில்லை எனக் குறிப்பிட்டதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

மனித உரிமை அமைப்புக்கள் எனப்படுபவை மனித உரிமைகள் மீறப்படும் போதும், சனநாயக அமைப்புக்கள் சனநாயக வழி முறைகள் மீறப்படும் போதும் அவற்றைக் கண்டிப்பதென்பது மரபு ரீதியானது. இந்த வகையிலேயே விடுதலைப் புலிகளின் வானொலி நிலையம் தாக்கப்பட்டது குறித்து யுனஸ்கோ தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

ஜெனீவா விதிகளின் படி பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும் பொது ஊடகங்கள் அவை வெளியிடும் கருத்துக்கள் எந்த வகையில் இருந்தாலும் அதன் மீது இராணுவத் தாக்குதல்களை நடாத்துவதற்கு அனுமதியில்லை. ஊடகங்களும், ஊடக வியலாளர்களும் பொதுமக்கள் சார்ந்தவையாகவே கருதப்படுதல் வேண்டும். இதன் அடிப்படையிலேயே யுனஸ்கோவின் கண்டனம் வெளியிடப்பட்டது.

ஆனால், பிரியதர்சன யாப்பாவின் கருத்துக்களோ கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதலைக் கண்டிக்காத இந்நிறுவனங்கள் எவ்வாறு புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான தாக்குதலைக் கண்டிக்க முடியும்? என்பதாகவேயுள்ளது.

ஆனால், கெப்பிற்றிக்கொலாவத் தாக்குதல் குறித்து சர்வதேச நிறுவனங்களோ, அமைப்புக்களோ, இதுவரை கண்டனங்களோ, கவலையையோ வெளிப்படுத்தவில்லை. சிலவேளை இவ் அமைப்புக்கள் தமது கண்டங்களையோ, கவலையையோ தாமதமாக வெளியிடவும் வாய்ப்புண்டு.

ஆனால், தற்பொழுது எழும் கேள்வியானது, இக்கண்டனங்களையும் கவலையையும் சிறிலங்கா அரசு எதற்காக எதிர்பார்த்திருக்கின்றது? இவ் அமைப்புக்களின் கண்டனங்கள், கவலைகள் குறித்து சிறிலங்கா அரசு அளிக்கும் மதிப்புத்தான் என்ன?

ஏனெனில், ஐ.நா. மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசு வெளிப்படுத்தி வந்த உணர்வுகள் வெறுப்பின் பாற்பட்டவையே. இவ் அமைப்புக்களின் செயற்பாடுகளைக்கூடக் கட்டுப்படுத்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, இதுவரையில் அவ் அமைப்புக்கள் அன்றி நிறுவனங்கள் வெளிப்படுத்திய உணர்வுகள், செய்த சிபார்சுகள், விடுத்த கோரிக்கைகள் எவற்றிற்குமே சிறிலங்கா ஆட்சியாளர்கள் செவிசாய்த்ததில்லை. அவற்றை நிராகரித்தும் வந்துள்ளனர். பல தடவை அவற்றைக் கண்டனம் செய்துள்ளனர்.

இறுதியாகப் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு யுனஸ்கோ விடுத்த கண்டனத்தைக்கூட சிறிலங்கா ஆட்சியாளர்கள் கண்டிக்கத் தவறவில்லை. இத் தனைக்கும் அக்கண்டனம் ஐ.நா. விதிகளின்படி விடுக்கப்பட்டதொன்றாகும்.

இத்தகையதொரு நிலையில் - அதாவது, பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம், தனக்காகப் பிறர் பேசவேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்? இலங்கையில் இன்றைய நிகழ்வுகள் சிங்கள ஆட்சியாளர்களின் அராஜகத்தின் எதிர்விளைவு ஆகும். இதைப் புரிந்து கொள்ளாது தமக்காக உலகம் பேசவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு? தம்மீது கண்டனங்கள் தெரிவிக்கப்படும் போது அதனை நிராகரிப்பவர்கள் மற்றவர்கள் கண்டிக்கப்பட வேண்டுமென எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆனால், இவ் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உலகில் வலுவுள்ளோர் பேசினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், ஒடுக்குமுறைக்கு ஆதரவான சக்திகளே உலகில் மலிந்து போயுள்ளன.

நன்றி: ஈழநாதம்

0 Comments: