Saturday, December 22, 2007

''யப்பானின் தனிமை''

எண்பது வயதை அண்மித்துள்ள யப்பான் இராசதந்திரி யசூசி அகாசி மீண்டும் இலங்கைக்கு வந்து திரும்பியுள்ளார். அவர் முன்பு ஐ.நாவில் உயர்மட்டப் பணியாளராக இருந்தவர். ஐ.நா சேவையிலிருந்து இளைப்பாறியபின் யப்பான் நாட்டில் நிறுவப்பட்டுள்ள பிணக்குகளைத் தடுக்கும் மையத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். இந்த அமைப்பு Japan Centre for Conflict Resolution என்று பெயரிடப்பட்டுள்ளது. கம்போடியா யூகோசுலோவாக்கியா ஆகியவற்றில் நடந்த உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் யசூசி அகாசி ஈடுபட்டார். யூகோசுலோவாக்கியா பல நாடுகளாகப் பிரிவதை அவராலோ, ஐநாவினாலே தடுக்க முடியவில்லை. கம்போடியாவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டபோதும் திட்டமிட்டபடி பல கட்சி சனநாயகத்தை யப்பானும் தோழமை நாடுகளும் நிறுவ எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஐநாவில் பணியாற்றியபோது யசூசி அகாசி ஆயுதக்களைவு மற்றும் மனிதநேயப் பணிகளுக்கான துணைச் செயலாளர் நாயகமாக (Under-Secretary General Fordisar Mament and Humanitarian Affairs) பதவிவகித்தார். இப்பதவி காரணமாக அவர் யூகோசுலோவாக்கியா, கம்போடியா விவகாரங்களில் தலையிட்டார். இப்போது அவருக்கு யப்பான் அரசு இலங்கை அமைதிப் பணிகளுக்கான விசேடதூதுவர் என்ற பதவியை வழங்கியுள்ளது. பதவிக்கேற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர் சமாதானத்திற்காக எந்தவொரு முயற்சியையும் செய்யவில்லை என்பதுதான் அசைக்க முடியாத நிலைப்பாடு. யசூசி அகாசிக்கும் அவருடைய நாட்டின் வெளிவிவகார அமைச்சகத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. யப்பானின் தேசிய பொருளாதார நலனை இந்த அமைச்சகம் எடுக்கும் அதேவேளையில் அகாசி அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதாக நடிக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாக அவரை நம்புவதற்கு ஒருவருமே தயாரில்லை.

எதிரியின் தாக்குதலில் நொந்துபோய்க் கிடப்பவனுக்கு அமைதியின் உயர்வு பற்றிப் பேசியதில் என்ன பயன். அதைத் தாக்குபவனுக்கு அல்லவா சொல்லவேண்டும். மாறாகத் தாக்குதல் நடத்துபவனுக்கு நிதிஉதவியும் ஆயுத உதவியுமல்லவா யப்பான் போன்ற நாடுகள் வழங்குகின்றன. ஓ அகாசி சான் (தமிழில் பெருமதிப்புக்குரிய அகாசி ஐயாவே) உங்கள் அரசுக்கு அமைதி முன்னெடுப்புச் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது? தெற்கு ஆசியாவில் மிகப்பெரியளவில் இராணுவமயப்படுத்தப்பட்டு அதற்கென மிகக் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்யும் நாடு சிறிலங்கா அல்லவா. அதே சிறிலங்காவுக்கு மிகக் கூடுதலான நிதி உதவிகளையும் பிற உதவிகளையும் வழங்கும் நாடு யப்பான் அல்லவா. எப்படி உங்கள் நாட்டால் அமைதி முன்னெடுக்க முடியும். போருக்கும் இன அழிப்புக்கும் துணைபோகும் நாடு என்பதோடு ஊக்குவிக்கும் நாடாகவும் யப்பான் இடம்பெறுவதில் என்ன சந்தேகம்.

மிக அண்மையில் நிதிஉதவி கோரி சிறிலங்கா சனாதிபதி தனது பரிவாரங்களோடு உங்கள் நாட்டிற்கு வந்தாரல்லவா. நீங்கள் என்ன செய்தீர்கள். அவருக்கு அமைதியின் சிறப்புப்பற்றிச் சொல்லாமல் நிபந்தனை ஒன்றும் இல்லாமல் முன்னரிலும்கூடிய ஜென் நிதியைத் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். பாதீட்டில் பெருந்தொகை ஆயுதக் கொள்வனவுக்குச் சிறிலங்கா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தத் தொகையை நாங்கள் ஈடுசெய்கிறோம் என்று யப்பான் அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. அதாவது போரைத் தொடருங்கள், ஈழத் தமிழினத்தை அழியுங்கள், பணத்திற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற மறைமுக ஆதரவை யப்பான் அரசு வழங்கியிருக்கிறது.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கான விசேடதூதுவர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட யசூசி அகாசி சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளார். இதுவொரு பயனற்ற செயல். வெறும் கண்துடைப்பு எனலாம். கிளிநொச்சிக்குப் போவதற்கு அனுமதி கிடைக்காத மனிதன் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடத்துகிறார். இதே மாநாட்டைக் கொழும்பில் நடத்தியிருக்கலாமே. வீழ்ந்துகிடந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் யாழ்-மக்களுக்குச் சர்வமதத் தலைவர்களின் மாநாடு என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறது? மாநாடு நடத்துவதற்கு அகாசியும் அவருடைய சகாக்களும் தெரிவுசெய்த இடம் விமர்சனத்திற்கு உரியது. சிங்களவர்களால் தீயிட்டுக் கொளுத்திய யாழ்நூலகத்தில் கேட்போர்கூடம் என்ற ஓதுக்குப்புறத்தில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை அகாசியும் புத்தபிக்குகளும் இணைந்து நடத்தியிருப்பதோடு தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் அச்சமும் பீதியும் எதிலும் நிச்சயமற்ற தன்மைகொண்ட மக்களாகவும் காணப்படுகிறார்கள் என்று டிசம்பர் 12,13 ஆம் நாட்களில் நடந்த மேற்கூறிய மாநாட்டில் யசூசி அகாசி பேசியிருக்கிறார். இதற்கு யப்பானிய அரசு பெறுப்பேற்க வேண்டும். மூன்று மாதங்களுக்குமுன் கொழும்பு வந்த அகாசி யப்பான் வழங்கும் நிதிஉதவி நிறுத்தப்படாது என்ற உறுதிமொழியைச் சிறிலங்காவுக்கு வழங்கினார். நிதி உதவியைக் கட்டுப்படுத்தினால் போரை மட்டுப்படுத்த முடியும் என்ற யோசனையை அகாசி நிராகரித்தார். அப்பாவி மக்களைக் கண்டிக்க யப்பான் விரும்பவில்லை என்று அவர் விளக்கம் தந்தார். ஆனால் யப்பான் நிதி உதவி ஈழத்தமிழர்களைத் தண்டிக்க உதவுவதை அவரால் மறுக்க முடியாது. யாழ் மக்களுக்காக அகாசி வடிக்கும் கண்ணீர் முதலைக் கண்ணீர் ரகத்தைச் சேர்ந்தது.

2002ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் கியோட்டோ பெருநகர்ப் பல்கலைக்கழகம் றிற்சுமீக்கனில் (Ritsumeikan) யப்பான் நாட்டின் புதிய இராசதந்திர நடைமுறை பற்றிய கொள்கை வகுத்தல் மாநாடு நடைபெற்றது. இதில் யசூசி அகாசி முக்கிய பங்கேற்றார். யப்பானின் வழமையான உதவி வழங்கும் நடைமுறையில் ஒருபாரிய மாற்றம் ஏற்படப்போகிறது. இதை நாங்கள் சிறிலங்காவில் பரிசோதிக்கப் போகிறோம் என்ற கருத்துப்பட அவர் உரையாற்றினார். வெறும் உதவி வழங்கும் நாடாக இராமல் நிதி வழங்கலை அமைதிக்கான கருவியாகப் பயன்படுத்தவுள்ளோம் என்றும் அவர் சொன்னார். இதில் எமக்குப் பல தடங்கல்கள் ஏற்படலாம். ஆனால் நாம் விடாப்பிடியாகப் புதிய நடைமுறையை அமுல்படுத்துவோம் என்றார் அகாசி. யப்பானின் வெளிவிவகார இராசதந்திரம் ஒரு முக்கிய திருப்புமுனையை விரைவில் சந்திக்கப்போகிறது என்று பல்கலைக்கழக முதல்வர் நாகாட்டா தோயோ ஓமி (Nagata Toyo Omi) அகாசியைத் தொடர்ந்து பேசினார்.

இப்போது பார்க்கையில், யப்பான் இராசதந்திரத்தில் ஒருவித உருப்படியான மாற்றமும் நடைபெறவில்லை என்பது நன்கு புலப்படுகிறது. பொருளாதார நலன் நோக்கில் உதவிவழங்கும் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. அது இன்னும் வலுப்பெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 2002இற்கு முன் சிங்கள அரசுக்கு உதவும் நாடு என்ற அடையாளம் யப்பானுக்கு இருந்தது. இந்த அடையாளத்தில் இருந்து விடுபட அகாசியை அமைதித் தூதுவராக நியமித்த முன்னாள் யப்பான் பிரதமர் கொயிசுமி விரும்பினார். நோர்வேயும் யப்பானும் கூட்டாகச் சிறிலங்காவில் அமைதியை முன்னெடுக்க முடியும் என்று அவரும் அகாசியும் நம்பினார்கள். நோர்வே ஒதுங்கியுள்ள நிலையில் யப்பான் மீண்டும் தனது நிபந்தனையற்ற உதவி வழங்கும் இராசதந்திரத்திற்குத் திரும்பியுள்ளது. பழையகுருடி கதவைத் திறவடி என்பதுபோல் சிங்கள நாட்டின் நன்கொடையாளரான யப்பான் முன்னைய நிலைக்குச் சென்றுவிட்டது.

2003 யூன் 09,10 ஆம் நாட்களில் டோக்கியோவின் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை மாநாட்டில் தலைமைப்பதவி வகித்துப் பேருரை ஆற்றிய அகாசி இப்போது சர்வமத மாநாடுகளில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் நிலைக்கு வந்துள்ளார். இது யப்பான் நடத்தும் இலங்கை தொடர்பான கீழ்த்தரமான இராசதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. சிங்களவருக்கு நிதிஉதவி, ஈழத்தமிழருக்குச் சர்வமதப்பிரார்த்தனை இதுதான் அகாசியின் தந்திரம். 125 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட யப்பான் நாட்டினால் உலக அரங்கில் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. அது கடைப்பிடிக்கும் காசோலை இராசதந்திரம் பயனற்றதாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சீனா, கொரியா, தென்கிழக்கு ஆகிய நாடுகளில் யப்பான் நடத்திய கொடுங்கோல் ஆட்சி இன்றும் மறைக்கப்படாமல் இருக்கிறது. யப்பானின் பொருளாதார வலுவுக்குச் சவாலாகத் தென்கொரியவும் சீனாவும் வளர்ந்துவிட்டன.

அமெரிக்காவை இறுகப் பற்றிக்கொண்டு அமெரிக்காவின் சொற்படி நடக்கும் இராசதந்திரம் ஒன்றைத்தான் யப்பானால் செய்யமுடியும். சிறிலங்காவுக்குக் கூடுதல் நிதிவழங்கும் யப்பானின் தீர்மானம் அமெரிக்காவின் உந்துதலால் எடுக்கப்பட்டது என்று தெரியவருகிறது. தனித்துநின்று ஒரு துணிச்சலான கொள்கையை நடைமுறைப்படுத்தும் வலு யப்பானிடம் இல்லை. அந்த வலு எப்போது வரும் என்று சொல்லமுடியாது. அதுவரை யசூசி அகாசி போன்ற யப்பான் தூதுவர்கள் சர்வமதப் பிரார்த்தனைகளை நடத்திக்கொண்டு திரிவார்கள்.

அன்பரசு

0 Comments: