Friday, December 28, 2007

தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது

விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது.

மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டுப் போகின்றனர். சிலர் தமது சொந்த நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு பேசுவோராக உள்ளனர்.

நன்மை தீமைகளைப்பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. என்ன நடக்கிறது என்ற கவனமும் இல்லை. இவர்களது சொந்த இலாபம் மட்டுமே இவர்கள் குறிக்கோளாகிறது.

கருத்துக் கூறவும் அதைக் கேட்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. என்றாலும், அது அமைதி வழியில் கலவரத்தை உண்டுபண்ணாத வகையில் அரசுக்குத் துரோகமிழைக்காத வகையில் இருத்தல் வேண்டும். இவ்வாறுதான் மனித உரிமைகள் சட்டம் கூறுகிறது. இன்று வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி மட்டுமல்ல தமிழீழம் என வரையறுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் தமிழர்களுக்கே உரிமையுண்டு. எனினும் இப்பகுதிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ள தமிழர்களைத் தனக்கிணைவானவர்களாக மாற்றப் பல சலுகைகளைச் செய்வான். இதில் மிக முக்கியமானது தடை செய்யப்பட்ட பொருட்களை ஏதோ சலுகையாக வழங்குவதும் கண்டும் காணாதது போல் விடுவதுமாகும்.

உண்மையில் சகல மக்களுக்கும் சகல பொருட்களையும் கொள்வனவு செய்ய உரிமை உண்டு. அவற்றைத் தமிழ் மக்களுக்கு மட்டும் தடைசெய்தது அரசாங்கம் தானே.

பின் ஏன் ஏதோ இரக்கப்பட்டோ அன்பாகவோ ஒரு சிலருக்கு அவற்றைத் தரவேண்டும். அவர்களிடமிருந்து எங்கள் விடுதலைப் போராட்டத்தை உடைக்கக்கூடிய தகவல்களைப் பெறுவதற்காகத்தானன்றி வேறென்ன?

அண்மையில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் பெருமையாகக் கூறிய ஒரு கதை இது.

'நெடுக நிற்கிற ஆமிய இண்டைக்குக் காணேல்ல, அவனெண்டா என்ன சாமானெண்டாலும் கிண்டமாட்டான். கொண்டு போங்கோ எண்டு சொல்லிப்போடு வான்" இதற்கு மற்றப் பெண் 'சாமான் கூடக் கொண்டுவர சில ஆமி தூக்கிக்கொண்டு வந்து பொயின்ரடியில விடு வினம்" என்றாள்.

எப்படி..? இப்படி அன்பும் ஆதரவும் உள்ள படைதானே பள்ளிப் பிள்ளைகளையும், பொதுமக்களையும் கும்பல் கும்பலாகக் கொன்றொழிக்கிறது. இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக விரட்டியடிக்கிறது. விரட்டி விட்டு தமிழர் நிலங்களில் சிங்களவரைக் குடியேற்றுகிறது.

அவர்கள் யார்? தமிழர்கள் மட்டுந்தானா? உங்கள் தாய் பிள்ளை உறவுகள் இல்லையா? உரிமைகளைத் தாமாகவே தடுத்து வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு பொருட்களை உங்களுக்கு மட்டும் தருகிறான். நீங்கள் யார்? உங்கள் மீது அவர் களுக்கென்ன அக்கறை. நீங்கள் அவனுக் கென்ன அக்கா தங்கை உறவா? அண்ணன் தம்பியா?

உங்களுடைய இனத்தை அழிக்க உங்களையே கருவியாக்கி உங்களை ஒரு கோடாரிக்காம்பாக மாற்றுகிறான். இதனால் உங்களுக்கு அவனிடம் நற்பெயர் என்று நினைத்தாலும் ஏமாற்றமே. நீங்கள் செய்யும் பணிக்கு உங்களை எள்ளி நகையாடிக் கேவலமானவராகவே அவன் எண்ணுவான்.

இப்படித்தான் வரலாற்றில் தன்னினத்தையே காட்டிக்கொடுத்த எவரையும் தனது கைவேலை முடிந்த பிறகு எதிரி பராமரித்ததில்லை.

கண்டியரசனை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த எஹலப்பொல என்றவன், அந்த அரசனுடைய மந்திரியாக இருந்தவன். கண்டியரசனைக் காட்டித்தந்தால், கண்டியின் பிரதானியாக நியமிப்பதாக வாக்குறுதியளித்த வெள்ளையர், அவர்களுடைய கையில் கண்டி வந்ததும், முதற் செய்த வேலை எஹலப் பொலவைக் கொன்றதுதான். காரணம் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்தவன் எம்மை விட்டுவைப்பானா என்ற அச்சம்தான்.

காக்கை வன்னியனுக்கும் இதே கதிதான் கிடைத்தது. இதைப்போன்றே கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கும் நடந்தது.

தன்னினத்தைக் காட்டிக்கொடுக்க முன்வருபவரை எதிரி ஒருபோதும் நேசிக்க மாட்டான். நாய்களைவிடக் கேவலமாகவே நினைப்பான்.

இன்று எமது மக்களைத் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத் திறந்தவெளிச் சிறையில் வைத்திருப்பதையும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவோர், அடைக்கப்பட்ட சிறையுள் அடைக்கலம் புகுவதையும் பார்த்தால், அவர்களுக்கு வேடிக்கையான விடயம். ஆனால் அந்தத் தமிழர்களுடைய இந்தநிலை ஏனைய தமிழர்களின் மான உணர்வைக் குத்திக் கிழிக்காது போனால் நாம் ஒரு பண்பாட்டு வளர்ச்சி கண்ட இனமாக எம்மைக் கூறிக்கொள்ள முடியாது.

மேலும் நாளாந்தம் தெருநாய்களைப் பிடிப்பது போன்று தமிழர்கள் பிடிக்கப்படுவதும், வீதிகளில் சுடப்படுவதும் நடைபெறுகிறது. இவையனைத்தும் சிங்களப் படைகளே முன்நின்று நடத்துகின்றன என்பதை உலகறியும். நீங்களும் அறிவீர்கள். இன்னும் உங்களது அந்த அன்புக்குரிய இராணுவத்தினன், உங்கள் மீது காட்டுவது பரிவு, பாசம், அன்பு அல்லது அவனது பண்பு என நீங்கள் கருதி அவர்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசும்போது அவன் உங்களை ஒரு துரோகியாகவே மதிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. எங்கே? நீங்கள் முடிந்தால் அவர்களது செயல்களைப் பற்றி அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியுள் நின்று பேசிப்பாருங்கள் எப்படி? எங்கட உரிமையைப் பறிக்கிறியள், உயிர்களைக் கொல்லுறியள், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றீர்களே.." என்று பேசிப்பாருங்கள் உண்மைதானே. என்ன நடக்கும் இவை பற்றிப் பேசிய, எழுதிய ஊடகவியலாளர்களுக்கும், அரசியலாளர்களுக்கும் என்ன நடந்தது?

மாறாக எமது பரப்பில் போராளிகளின் செயற்பாடுகளின் சரி பிழை என்பவற்றை நெற்றிக்கு நேரே பேசுகிறீர்கள். மறைவாகவும்... போராடிக் களைத்துத் தோழனின் வித்துடல் தாங்கி வந்தால் உங்கள் வெப்பியாரத்தை அவன் மீது கொட்டி ஏசுவீர் அடிப்பீர்? மறுநாளே பந்தி வைத்து அவனுக்கு அவளுக்கு உணவளிப்பீர். கூடிப்பேசுவீர்? வெட்டுவேன் என்று நீங்கள் கிளர்ந்தெழுந்தாலும் உம்மைக் கட்டியணைத்து ஆறுதல் படுத்துவான்(ள்) போராளி ஏன்?

இவ்வளவுக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் தங்களை அர்ப்பணித்து வந்தவர்கள், உங்கள் பிள்ளைகள் இந்த மண்ணின் பிள்ளைகள், அவர்களது வெற்றி உங்கள் வெற்றி. இந்த மண்ணின் வெற்றி அவர்களுக்கும், இந்தப் போராட்டத்துக்குமான இழிவான காட்டிக் கொடுப்புகளால் பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? நீங்களும் உங்கள் உறவுகளும் உங்கள் மண்ணும் தான். எனவே உங்கள் வெற்றிக்கு நீங்கள் உழைப்பதை உறுதி செய்யுங்கள்.

-மாயா-

2 Comments:

நிலாமதி said...

சிறந்த ஒரு நல்ல பதிவு .......நன்றாக அலசி ஆராயப்பட்டுள்ளது பதிவுக்கு நன்றி ....

Anonymous said...

diureLend [url=http://wiki.openqa.org/display/~buy-cipro-without-no-prescription-online]Buy Cipro without no prescription online[/url] [url=http://manatee-boating.org/members/Order-cheap-Cipro-online.aspx]Order cheap Cipro online[/url]