Monday, December 24, 2007

அரசின் முழு நோக்கமும் மூலோபாயமும்

சமாதானத்தை அடைவதற்கு இராணுவத் தந்திரோபாயங் கள் நாடப்படுவது குறித்து, இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை தெரிவித்திருக்கிறது.
நாளைய நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர்கள் தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர்.
மனித மாண்புகளும் சம உரிமைகளும் நிச்சயமாக்கப் படாத வரையில் சமய, இன, மொழி ரீதியில் பாரபட்சங்கள் காட் டப்படுகின்ற வரை நாட்டில் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் போன்றவற்றை எட்டவே முடியாது.
சமாதானத்தை அடைவதற்கு, இப்போது நடைபெறும் ஆக்ரோஷமான சண்டைக்குரிய காரணங்கள் முதலில் களை யப்படவேண்டும்.
ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அதற்காக எடுத்த முயற்சிகள் அரசியல் தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் எது வும் நேர்மையானவையாக உண்மையானவையாக இருக்க வில்லை.
இவ்வாறு ஆயர் பேரவை பல யதார்த்தங்களையும் முந்திய அனுபவங்களையும் எடுத்து விளம்பியுள்ளது.

பேச்சுவார்தையின் மூலம் மட்டுமே, அனைத்துத் துறைகளி லும், அனைத்து மக்களுடைய எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி யாக்கக் கூடிய தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

யதார்த்தங்களும் உண்மைகளும் ஓரங்கட்டப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தெற்கில் ஆட்சி பீடத்தில் உள்ள வர்கள் ஏனையோரின் உரிமைகளை தூசாகக் கருதி தமது எதேச்சதிகாரத்தை இனத்திமிரை மேலாண்மைக் கொடூ ரத்தை கட்டவிழ்த்து விடுவதே கடந்த ஐம்பது ஆண்டுக ளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும் என் பதில் தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கு உண்மை யான விரும்பமும், தூர நோக்கும் இருந்திருப்பின், இத்தனை காலத்துக்கு தீர்வு எதுவுமின்றி இனப்பிரச்சினை இழுபட்டி ருக்கமாட்டாது.

தம்மிடம் இனரீதியான பெரும்பான்மைப் பலம் இருக்கிறது; சிறுபான்மையினரான தமிழர்களுக்குரிய உரிமைகளை வழங் காது அடக்குமுறை வாளைக் கொண்டு அவர்களை வெட்டி வீழ்த்தி, தாம் மேலோங்கி நின்று கோலோச்சவேண்டும் என்ற அட்டூழியச் சித்தாந்தமே இனப்பிரச்சினை இத்தனை ஆண்டு களாக நீடித்து, நாட்டில் பேரழிவுகளை உண்டாக்கியமைக்கு மூலகாரணம்.
நாட்டைப் படுபாதாளத்தில் தள்ளி, பொதுவாக அங்கீகரிக் கப்பட்ட உரிமைகளைக் கூட தமிழர்களுக்கு வழங்க மறுத்து இன விவகாரத்தை நாளுக்கு நாள் மேலும் சிக்கலாக்கியதற்கு தெற்கின் சிங்கள அரசியல் தலைவர்களே முழுக்க முழுக்கக் காரணமும் பொறுப்பும். தமிழர்கள் மீது எவரும் சுட்டுவிரலை நீட்ட முடியாது.

தமிழ்மக்கள் உரிமைகளில் பத்துப் பதினைந்து வீதத்தை வழங்குவதற்கு இரண்டொரு தடைவைகள் ஒருசாரார், தவிர்க்க முடியாமல் முன்வந்த வேளைகளில், அடுத்த தரப்பினர் "குத்தி மறித்த' தந்திரம் தெரிந்ததே.

அவை கூட, நான் கொடுப்பது போலக் கொடுகிறேன் நீ தட்டிக்கொட்டிவிடு என்ற ஏற்பாடுகளுடனேயே அவ்வப்போது அரங்கேறின. ஆட்சி அதிகாரப் போட்டியில் இரண்டு கன்னை களாகப் பிரிந்து நின்றாலும், தமிழர்களை குழிக்குள் வீழ்த்துவதில் அவர்களை அடக்கி ஆள்வதில் இரண்டு தரப்பினருமே ஒன்று தான் என்று எடுத்துக்காட்டிய அரசியல் நிகழ்வுகள் பலப் பல.

சிங்கள அரசியல் தலைமைகள் தமக்குரிய அரசியல் உரிமைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய சிறுபுள்ளி அளவு அறிகுறி தானும் இப்போதைய ஆட்சியில் தமிழர்களுக் குத் தென்படவில்லை. சிங்கள இனவாதத் திமிரும் அடக்கு முறை ஆணவமுமே அரசின் ஒவ்வொரு சொல்லிலும் செயலி லும் விரவிக் காணப்படுகின்றன.

அரசியல் தீர்வு என்பது தமிழர்களுக்குக் கிள்ளிப் போடப் படும் பிச்சையாக இருக்கவேண்டும் என்ற மமதைப் போக்கையே அரசு கட்டவிழ்த்துள்ளது. அரசியல் தீர்வு என்ற அற்ப சொற்ப மான சலுகைகளை இராணுவத் தீர்வின் மூலம் திணிப்பதே மஹிந்த அரசின் முழு நோக்கம் என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்ளலாம். அரசின் அன்றாட நடத்தைகளும் செயற் பாடுகளும் அதனையே தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.

அதிகுறைந்தபட்ச உரிமைகளைக் கூடக் கணக்கில் எடுப் பதற்கு அது தயாரில்லை. ஆனாலும் சமாதானம், தீர்வு என்ற சொற்களை வெளிப்பகட்டாக உச்சரித்துக்கொண்டு, செயலள வில் இராணுவத் தீர்வுக்கான சகல கருமங்களையும் வெகு வேக மாக முன்னெடுத்து வருகிறது.
இதனை நன்றாக மணந்து பிடித்தவர்களாக கத்தோலிக்க ஆயர் மன்றத்தினர் தமது கவலையை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவத்தளபதி, இராணுவ உயர் அதிகாரிகள் என்று எல்லோரது வாய்களும் விடுதலைப் புலிகளை அழிப்பது குறித்தும் வடக்கைக் கைப் பற்றுவது குறித்துமே சூளுரைகளும் பிரகடனங்களும் உதிர்க்கின்றன. மனதில் இருப்பதுதான் வாயில் வரும். எனவே அரசாங்கம் முழுக்க முழுக்க இராணுவத் தீர்வையே நாடி ஓடிச் செற்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், ஆசாடபூதிச் சாமிகள் போல அரசியல் தீர்வு ஒன் றைக் கொண்டுவருவதில் தனக்கு விருப்பம் இருப்பதாக வேடம் போட்டுக்கொள்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட்ட வெளி நாடுகள் நம்பக் கூடிய முறையில் அது நாடகம் ஆடுகிறது.

தமிழர்களுக்கு உரிய, அவர்களுக்குச் சேரவேண்டிய, அவர் களது பிரிக்க முடியாத உரிமைகளை உள்ளடக்கிய தீர்வு ஒன் றைக் கொண்டு வரும் எண்ணம் அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை. இராணுவத் தீர்வைச் செயலாக்கி, தமிழர்களைப் பலவீனப் படுத்தி, தனது மேலாண்மையை ஓச்சி சில்லறை உரிமைகளைக் கிள்ளித் தெளிக்கும் மூலோபாயத்தின் நெறிப்படுத்தலிலேயே அரசாங்கம் திட்ட மிட்டுச் செயற்படுகிறது.
இதனைத் தெரிந்தும் தெரியாதவர்களாக, புரிந்தும் புரியாத வர்களாக சர்வதேசங்களும் பொம்மலாட்டம் நடத்தி வருகின்றன.

பூரணமானதோர் சுயாட்சியை தமிழ் பேசும் மக்களின் தாயா கத்தில் உறுதிப்படுத்தும் ஒரு தீர்வைக் கொண்டு வருமாறு இலங்கை அரசிடம் வற்புறுத்தும் திராணியற்றனவாக சர்வதேச நாடுகளும் தங்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி இலங்கை அர சுக்கு ஒத்து ஊதுகின்றன. அவ்வளவே!

uthayan.com

0 Comments: