Sunday, December 30, 2007

புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தா?

-தாரகா-
சமீப காலமாக விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்னும் கருத்து மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்தியா, தனது மேலாதிக்க நலன்களுக்காக ஈழத்தின் விடுதலை போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒருவிதமான தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதை நாமறிவோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த தலையிடாக் கொள்கை என்பது நேரடி அர்த்தத்திலேயே தவிர மறைமுக அர்த்தத்திலல்ல. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பிரித்தாளும் நோக்கிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது செய்தே வந்திருக்கிறது. ஈழத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை தங்களது மேலாதிக்க நலன்களை முன்னெடுப்பது ஒருபோதுமே சாத்தியமல்ல என்று இந்திய பார்ப்பனிய கொள்கை வகுப்பு சக்திகள் மிகவும் உறுதியாக நம்புவதன் வெளிப்பாடுதான் இது எனலாம். இந்த பின்புலத்தில்தான் சில மாதங்களாக தமிழக பார்ப்பனிய ஊடகங்களும், புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளால் குறிப்பாக விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் ஆபத்து இருப்பதாக கதையளந்து வருகின்றன.

சமீப காலமாக தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான கரிசனை அதிகரித்து வரும் நிலையிலேயே தமிழக பார்ப்பனிய சக்திகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. கருத்தியல் தளத்தில் எப்போதுமே சிங்கள இனவாதிகளுடன் கைகோர்த்து செல்லும் தமிழக பார்ப்பனிய சக்திகள் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றன. தற்போதைய மகிந்த கூட்டும் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க முடியுமென்பதில் உறுதி பூண்டிருக்கும் நிலையில் அதற்கு முண்டு கொடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசை திருப்பிவிட பார்ப்பனிய சக்திகள் முயன்றுவருகின்றன. சிங்களத்திற்கும் தமிழக பார்ப்பனியத்திற்கும் இடையிலான உறவு நெருக்கத்தை மேலும் நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு தமிழக பார்ப்பனிய சக்திகளின் தலைமைப் பீடமாக செயற்படும். ்இந்துீ பத்திரிகையின் ஆசிரியர் ராமிற்கு, சிங்களம் தனது தேசத்தின் உயர் விருதான `சிங்கள ரத்தினா' விருது வழங்கி கௌரவித்திருப்பதை நான் சொல்லுவதுடன் இணைத்துப் பாருங்கள் அதன் தார்ப்பரியம் உங்களுக்கு விளங்கும்.

இந்திய கொள்கை வகுப்பில் பெருமளவில் செல்வாக்கைக் கொண்டிருக்கும் தமிழக பார்ப்பனிய சக்திகள் இந்திய மத்திய அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை கொதி நிலையில் வைத்திருக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையிலான முரண்பாடுகளை தணிப்பதற்கான, குறிப்பாக இந்தியாவை இலங்கை விவகாரத்தில் நடுநிலைப்படுத்தக் கூடிய தளமாக தமிழகம் இருப்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த சக்திகள் தமிழக ஆதரவுத் தளம் மேலும் வலுவடைவதை தடுக்கும் வகையிலேயே தற்போது திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இந்த பின்புலத்தில்தான் சமீப காலமாக பார்ப்பனியர்களால் வழிநடத்தப்படும் இந்திய வெளியக உளவுத்துறையான `றோ' விடுதலைப் புலிகளால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காக அலுமினியக் குண்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் பல கட்டுக் கதைகளை பரப்பி வருகிறது. இதன் மூலம் இந்திய மத்திய அரசிற்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதனூடாக தமிழக அரசின் மீதான மத்திய அரசின் பிடிகளை இறுக்குவதும், இந்தியாவை ஷ்ரீலங்கா அரசிற்கு முழுமையான அளவில் ஆதரவாக செயற்படத் தூண்டுவதுதான் பார்ப்பனிய சக்திகளின் உள்நோக்கம். விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான சில நாட்களிலேயே `இந்து ராம்' புலிகள் ஷ்ரீ லங்கா அரசை தமது போராற்றலால் தோற்கடித்து விட்டனர் என்று தனது அவசரமான அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார்.

உண்மையில் இங்கு ராமின் உள்நோக்கம் ஷ்ரீலங்கா அரசை இராணுவ ரீதியாக பலப்படுத்த வேண்டுமென்பதுதான். கடந்த 2000 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய விடுதலைப்படை பற்றியும் இலங்கையின் வடகிழக்கை உள்ளடக்கிய அகண்ட தமிழ்நாடு பற்றிய இணையத்தளமொன்று இருப்பதாகவும் இந்து பத்திரிகை கதையொன்றை கிளப்பியிருந்தது. இறுதி மாவீரர் தின உரை குறித்த அபிப்பிராயத்திலும் இந்து பத்திரிகை பிரபாகரன் இருக்கும் வரை இலங்கையில் சமாதானம் வரப்போவதில்லை என்ற கருத்துப்பட தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதியிருந்தது. விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழித்து விட வேண்டுமென்ற அவாவின் வெளிப்பாடுகள்தான் இவை. இதே இந்து ஏடு 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவால் கொல்லப்பட்டதான கட்டுக்கதையொன்றை வெளியிட்டு மகிழ்ந்தது. பின்னர் 2005 இல் கடல்கோள் அனர்த்தத்தால் பிரபாகரன் இறந்துவிட்டதான செய்தியை வெளியிட்டது.

இன்னொரு பார்ப்பனிய புத்திஜீவியும் உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியுமான பி.இராமன் இன்னுமொரு படி மேல் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாதி அவருடைய மரணத்திற்கு கூட எவரும் கண்ணீர் வடிக்கக் கூடாது. உண்மையிலேயே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழருக்கு தேவை பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. இதேபோன்றே இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் தற்போது இந்திய உளவுத்துறையை இயக்கும் மறைமுகக் கரமாகவும் தொழிற்படும் பார்ப்பனியரான எம்.கே.நாராயணன் கடந்த 2007 இல் மூனிச்சில் பாதுகாப்பு கொள்கைகளுக்கான மகாநாட்டில் விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்பனையின் மூலம் தமக்கான நிதியை திரட்டிவருவதாக கூறியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம்.

தமிழக பார்ப்பனியம் மிகக் கேவலமான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் புலிகள் அமைப்பையும் சித்திரித்து வருகின்றது என்பதற்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவ்வாறு மிகவும் இழிவான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை கேவலப்படுத்திவரும் மேற்படி பார்ப்பனிய சக்திகள் தான் தற்போது விடுதலைப் புலிகளின் விமானங்களாலும் கடற்புலிகள் அமைப்பினாலும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஒரு பூச்சாண்டியை கிளப்பிவிட்டிருக்கின்றன.

சிங்களம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்கில் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் தனது இராணுவ ஆற்றலை பெருக்கிக் கொண்டது. அதற்கு அமையவே விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டத்தை பாகாக்கும் நோக்கில் தமது போரிடும் ஆற்றலை பெருக்கிக் கொண்டனர். புலிகள் கெரில்லா அணியாக, மரபுவழிப்படையாக சிங்களத்தின் இராணுவ வியூகங்களை முறியடித்து முன்னேறிய சந்தர்ப்பத்தில் ஷ்ரீலங்கா அரசு தரைவழியில் ஏற்பட்ட தோல்விகளை விமானப்படை மற்றும் கடற்படையின் தாக்குதல்களால் ஈடு செய்ய முயன்றது. இந்த பின்புலத்திலேயே தமிழர் தேசம் தனக்கான கடற்படை விமானப்படை என்று முன்னேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனவே இங்கு விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை என்பது சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களையும், தமிழர் போராட்டத்தையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையைக் கொண்டதேயன்றி பிராந்திய நலன்களுடன் முரண்பாடுகளை வளர்ப்பதற்கான திட்டத்தைக் கொண்டது அல்ல. இது மிகவும் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய உண்மையாகும். ஆனால் இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கமோ இந்த அடிப்படையான உண்மையை மறைத்து, விடுதலைப் புலிகளின் விமானப்படை, கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதான பொய்களை பரப்பி வருகின்றது. விடுதலைப் புலிகளையும் தமிழர் போராட்டத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்ற உள்ளடக்கத்தை தவிர வேறு எந்த உள்ளடக்கங்களும் இவ்வான பார்ப்பனிய பிரசாரங்களில் இல்லை. இந்திய கொள்கை வகுப்பை கட்டுப்படுத்தும் இவ்வாறான பார்ப்பனிய சக்திகள் புலிகளின் இராணுவ கட்டமைப்புக்கள் குறித்து அபிப்பிராயங்களை வெளியிடும் முன்னர் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் இராணுவ மற்றும் தந்திரோபாயங்கள் சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் சில முடிவுகளை வெளியிடுகின்றன.

2004 இல் இலங்கை அரசியலில் மீளவும் யுத்தம் தீவிரப்படுவதற்கான சாத்தியங்கள் துலாம்பரமாகியதும் இந்திய உளவுத்துறையான ்றோீவிற்கு ஆய்வுகளை செய்யும் சூரியநாராயணன் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்துவில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னமே அமெரிக்காவின் அரசியல் கற்கைகளுக்கான வூட்ரோ வில்சன் நிலையம் மற்றும் தந்திரோபாயங்களுக்கான கற்கை நிலையமும் இணைந்து வெளியிட்டிருந்த ஆய்வில் விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படையின் 50 வீதமான கரையோர பாதுகாப்பு ஆற்றலை அழித்து விட்டதான கருத்தொன்றை வெளியிட்டிருந்தது. இதனை சூரியநாராயணன் தனது ஆய்வுக்கான ஆதாரமாகக் கொண்டிருந்தார். இவ்வாறான ஆய்வுகளின் நீட்சி சமீபத்தில் அமெரிக்க தூதர் இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்கென நவீனபடகுகள் வழங்கியது வரை நீண்டு செல்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

தனது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்காக இலங்கை அரசியலில் எந்த சக்திகளையும் அனுமதிக்குமளவிற்கு இந்திய கொள்கை வகுப்பை புதுடில்லி பார்ப்பனிய சக்திகள் நெகிழ்த்தும். ஒன்றின் நலனின் மற்றையதின் நலன் என்ற அடிப்படையில் இந்த சக்திகள் தொழிற்பட்டு வருகின்றன.

நாம் இந்த இடத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து தெளிவாக இருப்பது அவசியம். இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பு பார்ப்பனிய சக்திகளின் வசம் இருக்கும் வரை இந்தியா ஒருபோதும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. இதில் தடுமாற்றத்திற்கோ மீள் பரிசீலனைக்கோ இடமிருக்குமென்று நான் நினைக்கவில்லை. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சிங்கள ஆளும் வர்க்கம் கூட தனது கையறு நிலையால் இறங்கி வரலாம். ஆனால் அப்போதும் அதனை குழப்பும் சக்தியாக இந்தியா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் பலாலியை நோக்கி முன்னேறிய போது இந்தியா, அதில் குறுக்கிட்டு புலிகளை அச்சுறுத்த முற்பட்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அனுசரணையாக தொழிற்பட்டது.

தனது பங்கிற்கு தானும் ஆயுதங்கள் வழங்கி சிங்களத்தை வலுப்படுத்தியது. இது இவ்வாறிருக்க மிகவும் சாதாரணமான விடயமான, தென்னிந்தியாவை பேச்சுவார்த்தைக்கான தளமாகவும் மனிதாபிமான தேவைகளுக்கான களமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான புலிகளின் கோரிக்கையையும் இந்தியா நிராகரித்தது. இவ்வாறான சம்பவங்கள் எல்லாம் இந்தியா தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்து எத்தகைய மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றது என்பதற்கான சான்றுகள். மீண்டும் மீண்டும் இந்திய பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் என்று கூறிவருவதற்குப் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரலும் இதுதான்.

தமது மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பிரபாகரன் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவரிடம் ஏலவே தோல்வியடைந்த பார்ப்பனிய சக்திகள் தமது கடந்த கால அனுபவத்திலிருந்து பிரபாகரன் என்ற மனிதரின் திடகாத்திரமான ஆளுமை குறித்து அச்சப்படுகின்றன. இதுதான் பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அவாப்படுவதன் உள்ளடக்கம். எனவே இந்த இடத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தியா நமது நலன்களை பாதிக்காதவாறான முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை நாம் முன்வைப்பது நமது கடமையாக இருக்கலாம். ஆனால் இந்தியா தனது நலன்களில் நின்று எடுக்கும் முடிவுகள் நமது தேசிய நலன்களுடன் எவ்வாறான முரண்பாடுகளை கொண்டிருக்கின்றன என்ற தெளிவு நமக்கு அவசியம். இதுவெறுமனே தந்திரோபாயங்கள் சார்ந்தது மட்டுமன்றி மக்கள் மத்தியில் பிழையான நம்பிக்கைகள் வளர்வதற்கான சூழலையும் தோற்றுவித்துவிடும்.

-தாரகா-

0 Comments: