Sunday, December 2, 2007

மாவீரர் தின உரை முன்னிறுத்தும் செய்தி: இருவழிப் போரில் பிரவேசிக்க வேண்டிய காலம்

சாதாரண மக்களிலிருந்து ராஜதந்திர வட்டாரங்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெற்று சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் அவ்வுரை முன்னிறுத்தியிருக்கும் சில விடயங்கள் குறித்து எனது அவதானத்தை கோடிட்டு காட்டுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தான் அவரது உரை இடம்பெற்றிருக்கிறது. சிங்களம், பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை அரங்கேற்றிவரும் சூழலில் குறிப்பாக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை தனது பெரும் வெற்றியென கொண்டாடிவரும் நிலையில்தான், சமீபகால இராணுவ மற்றும் அரசியல் போக்குகள் குறித்த பல புதிர்களுக்கு விடையளிக்கும் வகையில் பிரபாகரனின் உரை இடம்பெற்றிருக்கின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களாக மிகவும் மதி நுட்பத்துடனும் சூழலை துல்லியமாக எடைபோட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்தி வரும் அவரது உரை பல்வேறு ராஜதந்திர வட்டாரங்களிலும் மிகவும் நுணுகி ஆராயப்படும் ஒன்றாகவும் இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஆற்றப்படும் மாவீரர் தின உரையிலேயே புலிகள் அமைப்பின் முக்கிய முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படுவது வழமை. தனது அரசியலை இராணுவ மொழியில் பேசுவதையே தமது மேதமையென கருதிக் கொள்ளும் மகிந்த அணியினர் மாவீரர் தின உரையில் பிரபாகரனின் பெரியளவிலான யுத்தமொன்றுக்கான அறைகூவலை செய்வார் என்றே எதிர்பார்த்திருந்தது. அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடமும் இருந்தது. ஆனால், அவரது உரை மிகுந்த ராஜதந்திர உள்ளடக்கத்துடன் வெளிப்பட்டுள்ளது. இம்முறை உரை முழுமையாக சர்வதேசத்தை மையப்படுத்தியதாகவே இடம்பெற்றிருக்கிறது. அவ்வாறு இடம்பெறுவதற்கு மிகவும் தெளிவான சில காரணங்கள் உண்டு.

பிரபாகரனின் உரை மூன்று முக்கிய விடயங்களை மையப்படுத்தியிருப்பதாக அமைந்திருக்கின்றது. ஒன்று தென்னிலங்கை அரசியல் சக்திகளை முரண் அரசியல் தீர்வு முறையிலிருந்து முற்றாக நீக்குதல். இரண்டு, சர்வதேசத்திற்கான ஒரு கால அவகாசத்தை வழங்குதல் குறிப்பாக இலங்கை அரசியலில் சமீபகாலமாக வலுவான முறையில் தலையீடு செய்ய முயலும் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளுக்கான கால அவகாசமாக இதனை கொள்ளலாம். மற்றையது பிராந்திய சக்தியான இந்தியாவிற்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருப்பது.

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, புலிகளின் இராணுவ வலுச் சமநிலையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. புலிகளின் இராணுவ வலுச்சமநிலையை ஏற்றுக் கொண்டே நோர்வே தனது மத்தியஸ்த்த பணியை மேற்கொண்டது. இதனையே மேற்கும் ஆதரித்தது. ஆனால் ஷ்ரீலங்கா அரசு சமீப காலமாக மிகவும் திட்டமிட்ட வகையில் யுத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த போது, குறிப்பாக கிழக்கில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை சாதகமாகக் கொண்டு சமாதான பேச்சுவார்த்தையின் ஆணி வேராக இருந்த புலிகளின் இராணுவ வலுச்சமநிலை அந்தஸ்தை சீர்குலைத்த போது சர்வதேச சக்திகள் கையை விரித்தன.

சிங்களம் மேற்கின் மௌனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தனது மேலாதிக்க அரசியலை உச்ச அளவில் முன்னெடுத்தது. மேற்கின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற சுலோகத்தை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி சர்வதேச ஆதரவு பின்புலத்தில் உருவாகிய புரிந்துணர்வுக்கான காலத்தை தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அவகாசமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஸ்ரீலங்கா அரசின் அணுகுமுறைகளை தடுப்பதில் எந்தவிதத்திலும் அக்கறையற்றிருந்த அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் சிங்கள பெரும் தேசியவாத சக்திகளின் யுத்த நிகழ்ச்சி நிரலுக்கான ஆன்ம பலத்தை வழங்குவது போன்று, புலிகள் மீதான தடைகளை மேற்கொண்டதுடன் இராணுவ வலுச்சமநிலை மாற்றத்திற்கான இராணுவ உதவிகளையும் அரசிற்கு தாராளமாக வழங்கின.

இந்த பின்புலத்தில் தான் சமீபகாலமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கடைப்பிடித்துவரும் பக்கச்சார்பான அரசியல் அணுகுமுறைகளை விமர்சிக்கும் வகையிலேயே பிரபாகரன் தனது உரையில் `இந்தியா விட்ட தவறுகளையே சர்வதேசமும் இன்று விட்டு நிற்கிறது' என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார். இதில் இந்தியாவிற்கும் ஒரு தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஒரு எதிர் சக்தியாகவே மதிப்பிட்டுவரும் இந்திய ஆளும் வர்க்கம் இந்திய - இலங்கை ஒப்பந்த அனுபவத்தின் பின்னர் ஒரு விதமான தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்து வந்திருந்தாலும் சமீபகாலமாக சிங்களம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தான், சீனா நோக்கிய உறவு நெருக்கத்தை தடுக்கும் வகையில் ஷ்ரீலங்கா அரசுடன் இராணுவ உதவி மற்றும் உளவு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தியாவை மிகவும் துல்லியமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தவறிழைத்த நாடு என சுட்டியிருப்பதானது இந்தியாவிற்கு தமிழர் தேசம் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருப்பதாக கருதலாம். மீண்டும் சிங்களத்தின் வார்த்தைகளில் ஏமாந்து தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் தவறான அரசியலை இந்தியா தெரிவு செய்யக் கூடாது என்பதுதான் அது.

தமிழர் விடுதலைப் போராட்டம் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் நுழைந்திருக்கும் இன்றைய சூழலில், தமிழர் தேசம் இரு வழிப் போர் முறையினுள் பிரவேசிக்க வேண்டிய தேவைப்பாட்டையே மாவீரர் தின உரை சுட்டி நிற்கிறது. இதுதான் இம்முறை உரையின் முக்கிய அரசியல் உள்ளடக்கம் எனக் கூறலாம். இருவழிப் போர் என்பது, ஒன்று இராணுவ அர்த்தத்தில், ஷ்ரீலங்கா அரசுடனான ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர், இரண்டு அரசியல் அர்த்தத்தில், மேற்குடனான இராஜதந்திர போராட்டம். இந்த இரண்டும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படும் போதே தமிழர் தேசம் அதன் உச்ச இலக்கை நோக்கி நகர முடியும்.

இலங்கையின் இன அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தமது அக்கறையை மேற்கு வெளிப்படுத்தியபோது, அதில் அதன் கேந்திர பொருளாதார நலன்களும் உள்ளடங்கியிருந்தது. எந்தவொரு அந்நிய சக்தியும் தனது நலன்களிலிருந்தே சிந்திக்கும் என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் அவ்வாறான நலன் தலையீடுகளை நமது நலன்களிலிருந்து எவ்வாறு அணுகுவது என்பதில்தான் நமது வெற்றி தங்கியிருக்கிறது.

மேற்கின் மௌனத்தை பயன்படுத்தியே சிங்களம் தனது உச்ச நலன்களை பெருக்கிக் கொள்ள முயல்கின்றது. எனவே, அதே மௌனத்தை தமிழர் தேசமும் பயன்படுத்திக் கொண்டு மேற்கை நடுநிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. நடுநிலைப்படுத்த முடியாவிட்டாலும் தமிழர் தேசத்தின் இராணுவ முன்னெடுப்புக்களின் போது மேற்கை பெருமளவிற்கு அமைதிப்படுத்தும் வகையிலான தந்திரோபாய முன்னெடுப்புக்களை நமது விடுதலை ஆதரவு சக்திகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஏலவே விடுதலைப் புலிகளின் பொறுமை பெருமளவு இலங்கை அரசியலில் தலையீடு செய்த மேற்கு சக்திகளை தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது. அதுதான் மேற்கை அமைதிப்படுத்துவதற்கான நமது ஆயுதம்.

புலிகள் தமது உயிர்த் தியாகங்களால் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை போராட்டத்திற்கு வெளியில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு வழங்கியிருக்கின்றனர். அதனை பயன்படுத்துவதுதான் இப்பொழுது உலகமெலாம் பரந்து வாழும் தமிழர்களின் பணி. மாவீரர் தின உரையில் உலக தமிழ் மக்கள் குறித்து விடுக்கப்பட்டிருக்கும் தேசிய விடுதலை நோக்கிய அழைப்பு அத்தகையதொரு உள்ளடக்கம் கொண்டதே. எந்தவொரு விடுதலைப் போராட்டமும் அதன் சொந்த பலத்திலேயே நிலை கொண்டிருக்கும். வெற்றிபெற்ற உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகள் இதனை நமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

எனினும், தற்போதைய உலக அரசியல், பொருளாதார சூழலில் பிராந்திய, மேற்கு வல்லரசுகள் இராணுவ அர்த்தத்திலும் பொருளாதார அர்த்தத்திலும் தமது நலன்களை பெருக்கிக் கொள்வதில் போட்டி போட்டுக் கொள்ளும் சூழலில், அதற்கான கருவிகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களை பணயம் வைத்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளின் தலையீடுகளை சமாளிக்கும் வகையில் தமிழர் தேசம் தனது போராட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான அரசியல் போக்குகளையும் அதில் பங்கு கொள்ளும் முரண்பட்ட சர்வதேச சக்திகளையும் கருத்தில் கொண்டே புலிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையப் போகின்றன என்பதைத்தான் இந்த மாவீரர் தின உரை சுட்டி நிற்கிறது.

எப்போதுமே அரசியல் போக்குகளை நுணுகி ஆராய்ந்து நீண்ட காலத்தில் நலன் தரத்தக்க முடிவுகளை நோக்கி திட்டமிடும் பிரபாகரனின் அடுத்த கட்ட இராணுவ, அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதை இனி வரும் நாட்கள் நமக்கு சொல்லும்.

[02 - December - 2007] -தாரகா-

0 Comments: