Thursday, December 27, 2007

ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரணத்திலும் பாகுபாடு

தெற்காசிய நாடுகளை ஊழிக்கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, பெருநாசம் விளைவித்து, பல்லாயிரக் கணக்கானோ ரின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின் மூன் றாவது ஆண்டு நிறைவை நேற்று அனுஷ்டித்தோம்.

இலங்கைத் தீவில் சுமார் நாற்பதாயிரம் பேரின் உயிரைக் காவுகொண்ட இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளிலிருந் தும் நினைவுகளிலிருந்தும் இலங்கை மக்கள் இன்னும் மீளவே யில்லை.
அந்தப் பேரனர்த்தத்தின் நினைவழியா இந்நாள்களில்தான் வெள்ளப் பேரனர்த்தமும் பல்வேறு இடங்களில் தாக்கியிருக்கி ன்றது.

ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழிவும், நாசமும், கோரமும், அவலமும் ஒருபுறம் என்றால் மறுபுறம் அப் பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு, மீள் கட்டமைப்பு என்ற பெயரில் அரங்கேறிய அட்டூழியங்களும் அவலட்சணங்களும் ஏற்படுத் தியிருக்கும் அதிருப்தியும், அவலமும் சொல்லில் அடங்காதவை.

வாழ்வாதார உரிமைகளை வழங்குவதிலாகட்டும் அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகளிலாகட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசத்தைப் புறக்கணித்துப் பாகுபாடு காட்டி, ஒதுக்கும் கொழும்பு அரச நிர்வாகம், ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரண வேலைகளிலும் அந்தக் கைங்கரியத்தைக் கைவிடவேயில்லை என்பதே கவலைக் குரிய விடயமாகும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கும், கிழக்கும்தான். இலங்கையில் சுமார் எழுபத்தியைந்து வீதமான பாதிப்பு தமிழ் பேசும் மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும்தான். ஆனால் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள்கட்ட மைப்புப் பணிகளில் பெரும்பகுதி தென்னிலங்கைச் சிங்களப் பிரதேசங்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன.

வடக்கிலும், கிழக்கிலும் ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட பல்லாயிரம் குடும்பங்கள் இன்னும் மரங்களின் கீழும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், நலன்புரி மையங்கள் என்ற பெயரில் அமைந்த அகதி முகாம் களிலும் தங்கியிருந்து அல்லல்படுகின்றன. தற்போதைய மழை வெள்ளம் அவர்களது வாழ்க்கையை மேலும் பேர வலத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

ஆனால் தென்னிலங்கையிலோ குறிப்பாக இலங்கைத் தீவின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை மற்றும் காலி, களுத்துறை போன்ற மாவட் டங்களிலோ ஆழிப்பேரலை அனர்த்தத்தால் அழிந்து போன வீடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரக்கணக்கில் அதிகமான வீடுகள் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள் கட்டமைப்பு என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கின்றன. தேவைக்கும் அதிக மான வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங் களில் பாதிப்புற்று அழிந்த வீடுகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவிற்காவது புதிய வீடுகள் கட்டப்படவில்லை.
ஆக, மொத்தத்தில் ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டமைப்புப் பணிகளில் கூட நிவாரணச் செயற்பாடுகளில் கூட வடக்கும், கிழக்கும் தென்னிலங்கை அரசால் பாகுபாடு காட்டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களின் சகல வாழ்வியல் அம்சங்களிலும் சிறுபான் மையினருக்கு எதிரான இத்தகைய இனப்பாகுபாட்டுப் புறக்க ணிப்பையும் ஒடுக்குமுறையையும் பேரினவாதிகள் காட்டிவரு கின்றமையினாலேயே ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளையாவது சமச்சீராக முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு சகல தரப்புகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுக்கட் டமைப்பு ஊடாக அப்பணிகளை மேற்கொள்ளச் செய்வதற் கான முயற்சிகள் அப்போது மேற்பொள்ளப்பட்டன. நீண்ட ஆறுமாத கால இழுபறிக்குப்பின் அதற்கான உடன்பாடு எட்டப் பட்டு, ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

ஆனால் நிஜங்களின் யதார்த்தங்களை உள்வாங்கி, அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் திராணி அற்ற வகையில், இரும் புச் சட்டமாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கும் இலங்கையின் நீதித்துறையும், அதன் முன் இந்த விவகாரத்தை இழுத்துச் சென்ற மேலாண்மைவாத பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளும் சேர்ந்து அந்தப் பொதுக்கட்டமைப்பு முயற்சியை ஆழிப்பேரலைக்குள் அமுக்கி அடியோடு அடக்கிவிட்டன.

அதன் விளைவாகவும்
ஆழிப்பேரலை மீள் கட்டுமானத்துக்காகத் தான் வழங்கி வரும் பெருமளவு நிதி உரிய வழிகளில், உரிய நியாயத்துடன் பகிர்ந்தளித்து செலவிடப்படுகின்றதா என்பதை உற்று நோக்கி அவதானிப்பதில் சர்வதேச சமூகம் தவறியதாலும்
இவ்வாறு பிரதேச முரண்பாட்டு நோக்கில் மீள் கட்ட மைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; தொடர்ந் தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்ட மைப்புப் பணிகளில் பெரும் குளறுபடிகளும், ஊழல்களும், மோசடிகளும் இடம்பெற்றிருக்கின்றமை பற்றிய தகவல்களும் கசிந்து வருகின்றன.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்துக்காக வந்த பணம் "ஹெல்பிங் அம்பாந்தோட்டை' திட்டம் என்ற பெயரில் தனியாரின் கணக்குக்கு மாறிய விவகாரம் நீதிமன்றத் தீர்ப்பினால் அமுங்கிப் போனாலும் அதில் உள்ள சூக்குமங்கள் மக்கள் மனங்களில் அடங்கிப்போய் விடவில்லை.
அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சக்திகளின் கைகளில் தான் இன்று நாட்டின் அதிகாரம். அந்த அதிகார ஆட்சியின் கீழ் இடம் பெறும் ஊழல், மோசடி அவலங்கள் குறித்து சந்தி சிரிக்கின்றது.
ஆழிப்பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளில் என்றில்லை, நாட்டின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஊழலும், மோசடியும்,லஞ்சமும் தலைவிரித்தாடுவதால் அது ஆழிப் பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளையும் பற்றிப் பீடித்து ஓர் உலுக்கு உலுக்கி வருகின்றது.
ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோருக்கு வழங்க சுமார் 98 ஆயிரம் வீடுகள் வரை தேவை என்றும் அதில் சுமார் 97 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்றும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்ட புள்ளி விவரம் அப்பட்டமான பொய் என்று "டிரான்ஸ் பரன்ஸி இன்ரநஷனல்' எனப்படும் வெளிப்படையான செயற்பாட்டுக்கான சர்வதேச மையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாவரை மாயமாக மறைந்துவிட்டது அல்லது சுளையாக விழுங்கப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகள் இன, பிரதேச பாகுபாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கும், அப்பணிகளில் பெருமளவு ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றமைக்கும் இவ்விவகாரத்தை ஊன்றிக் கவ னித்துக் கண்காணிக்கும் தனது தலையாய பொறுப்பில் சர்வ தேசம் அசிரத்தையாக விட்டேத்தியாக கடமை தவறி செயற்பட்டமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

Uthayan.com

0 Comments: