தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பிலும் தமிழ் மக்கள் வாழும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் விசாரணைக்காக என்ற போர்வையில் வகைதொகையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்களும் யுவதிகளுமே விசாரணைக்கென்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளிலும் புத்தளத்தில் உடப்பு, முந்தல், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி கைது செய்து அழைத்துச் செல்லப்படுபவர்களை மீட்டெடுப்பதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு பெற்றோர்களும் உறவினர்களும் படையெடுத்தனர். நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் சோதனைகளையும் விசாரணைகளையும் முன்னெடுப்பதை தவறெனக் கூற நாம் முன்வரவில்லை. ஆனால், பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களை இம்சைக்குள்ளாக்கும் போக்கை அனுமதிக்க முடியாதுள்ளது. தமிழர்கள் கைது செய்யப்படும் போது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுச் சான்றிதழ், கடவுச்சீட்டு, பாடசாலை சான்றிதழ்கள் உட்பட போதுமான ஆவணங்களைச் சமர்ப்பித்த போதிலும் கூட அவற்றில் திருப்தி கொள்ளாத விதத்தில் விசாரணையென்ற பெயரில் தடுத்துவைத்தள்ளனர். இந்த தமிழர் கைது இப்போது புதுமையானதல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஏன் முதியவர்கள் கூட கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் தலையிட்டு பெரும் சிரமப்பட்டு இவர்களை விடுவித்தனர்.
இன்றைய கைதுகள் தொடர்பில் கூட பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள் தமது ஏனைய பணிகளை புறந்தள்ளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு என்ற தோரணையில் தமிழ் மக்கள் அநாவசியத் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். படைத்தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் ஏற்படக்கூடிய திடீர் சந்தேகங்களுக்கு எத்தனையோ தமிழ் குடும்பங்கள் ஆண், பெண், குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள், ஊனமுற்றோர் என்ற வேறுபாடின்றி அவர்கள் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக பொலிஸ் நிலையங்களிலும் படைமுகாம்களிலும் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
தமிழன் என்றால் பயங்கரவாதி அல்லது புலி என்ற முத்திரை குத்தப்படக்கூடிய அவலத்தையே இந்த நாட்டில் தமிழினம் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சில மாதங்களாக ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிந்த தெற்கில் வாழும் தமிழர்கள் புதன்கிழமைச் சம்பவங்களையடுத்து மீண்டும் பொலிஸாரால் அள்ளிக் கொண்டு போகப்படும் கெடுபிடிகள் ஆரம்பித்து விட்டன. பாதுகாப்பு என்ற பெயரிலும் விசாரணைக்காக என்ற பெயரிலும் கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இன்று வரை வீடு திரும்பாத சம்பவங்கள் நிறையவே காணப்படுகின்றன. தமிழ் மக்களுப் பாதுகாப்பு, தமிழர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் என்றெல்லாம் கூறும் அரசாங்கம் சோதனை, தேடுதல், விசாரணை என்ற பெயரில் வகைதொகையின்றி தமிழர்களை ஏன் கைது செய்ய வேண்டும் எனக் கேட்கவிரும்புகிறோம்.
போதுமான அத்தாட்சிகள், சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டு பொலிஸ் பதிவுகள் செய்யப்பட்டு வருடக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் பொலிஸார் எதற்காக மீண்டும் மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டும். அப்பாவி மக்களை தொல்லைப்படுத்துவதுதான் பாதுகாப்பு உத்தரவாதம் என்று பொருள்படுகின்றதா? கொழும்பிலும் நுகேகொடையிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த அன்றைய தினமே தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அடுத்தென்ன நடக்கப்போகின்றதோ என்ற பயத்தால் செய்வதறியாது தடுமாறிப்போனார்கள். இது போன்ற அவலங்களை எத்தனை காலத்துக்கு அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதற்கு எராலும் பதில் கூறமுடியாதுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை பொலிஸாரிடமிருந்தோ படையினரிடமிருந்தோ தமிழ் மக்கள் எந்தவிதமான நேர்மையான - மனிதாபிமான- கண்ணியமான அணுகுமுறையையும் எதிர்ப்பார்க்க முடியாது என்று அவர்களுக்கு கூறப்படுகிறதா என்ற கேள்வியைக் கேட்காமலிருக்க எம்மால் முடியவில்லை.
தினக்குரல்
1.12.2007
Saturday, December 1, 2007
தமிழர்கள் கைது விவகாரம்
Posted by tamil at 7:53 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment