Saturday, December 29, 2007

அடங்காத அதிர்வுகள்

சிறிலங்காவின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய ~எல்லாளன் படை நடவடிக்கை|யின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சிங்கள தேசம் மீள முடியாதவாறு திணறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது படைவீட்டுக்குள்ளேயே நுழைந்து அதன் முற்றத்தில் நின்ற வானூர்திகளைக் கரும்புலி வீரர்கள் எரித்தழித்த போது சிறிலங்கா அரசு துடித்தபோதும் அங்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் தெரியாமலேயே மூடி மறைத்துவிடலாம் எனச் பெரும் பிரயத்தனத்தைச் செய்தபோதும் அது முடியாமற் போயிற்று.

ஆரம்பத்தில் தாக்கியழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நான்கென்றும் பின்னர் ஐந்தென்றும் உண்மையை விழுங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா அரசின் பொய்யுரையை உடைத்தெறிந்து சர்வதேச ஊடகங்களும், கொழும்பு ஊடகங்களும் உண்மை இழப்பைக் கட்டவிழ்த்துவிட்ட போது சிறிலங்கா அரசு வாய்மூடி மௌனித்தது.

புலிகள் அறிவித்த வானூர்திகளின் அழிவு எண்ணிக்கையையும் கடந்து சிறிலங்கா அரசு அறிவித்த விபரங்களையும் தாண்டி கரும்புலி வீரர்கள் அழித்த வானூர்திகளின் எண்ணிக்கை வானில் பறந்து கொண்டிருந்தன.

புலிகள் இயக்கத்தின் சிறப்பு மிகு விசேட கரும்புலிகள் அணியின் தாக்குதல் உக்கிரம் எத்தகையதாக இருக்குமென்பதைச் சிங்கள தேசம் கண்முன்னே கண்டு மனம் புழுங்கி தமக்குள்ளே தாமே வியர்க்க வேண்டிய அளவுக்கு ~எல்லாளன் படை நடவடிக்கை| யில் ஈடுபட்ட கரும்புலி வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

குறைந்தளவிலான வீரர்களை ஈடுபடுத்தி எதிரிக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் தேசியத் தலைவர் அவர்களின் இராணுவ ஆற்றலை மீண்டுமொருமுறை சர்வதேசத்தின் முன் பறைசாற்றுகின்ற படை நடவடிக்கையாக ~எல்லாளன் படை நடவடிக்கை| அமைந்திருந்தது.

தாக்குதல் நிறைவுற்று சில வாரங்களில் இந்தத் தாக்குதலில் கரும்புலி வீரர்கள் ஏற்படுத்திய அழிவின் பெறுமதியும் அதன் படைத்துறைச் சரிவும் குறித்த தகவல்களுமே வெளியாகி இருந்தன.

இதன் காரணமாக ~எல்லாளன் படை நடவடிக்கை| யின் நேரடி அழிவுகள் குறித்த தகவல்களே ஊடகங்கள் மத்தியிலும் படை விமர்சகர்கள் மத்தியிலும் முதன்மை பெற்று நின்றது.

ஆனால் இப்போது அந்த படை நடவடிக்கை ஏற்படுத்திய நேரடியற்ற அதிர்ச்சிகளும், அதிர்வுகளும், அழிவுகளும் குறித்த தகவல்கள் வெளி வரத் தொடங்கியிருக்கின்றன.

மெல்ல மெல்ல கொழும்பு ஊடகங்கள் மூலமாகப் படைத்தரப்பின் இத்தகவல்கள் வெளிவருகின்றன.

முதலில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மிக நீண்டதூரத் தொலைவிலிருந்ததும் மிகவும் பாதுகாப்புமிக்கதுமான அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மையப்பகுதிக்குள் புலிகளால் எவ்வாறு ஊடுருவ முடிந்தது என்ற வியப்பும், மலைப்பும், அச்சமும் தென்னிலங்கையிலேயே காணப்பட்டது.

பின்னர் அநுராதபுரம் வான்படைத் தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய தாக்குதலைக் கானொளிப்படமாகப் புலிகள் வெளியிட்டபோது எவ்வாறு தாக்குதலை நிகழ்த்தியது மட்டுமல்லாது தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீளவும் தமது தளம் திரும்ப முடிந்தது என்ற அதிர்ச்சியில் சிங்கள தேசம் தனது மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தது.

ஆனால் இப்போது சிங்களத் தரப்பின் குழப்பங்களுக்குள் பெரும் குழப்பமாக கவணம் திரும்பியிருப்பதோ பின்வரும் விடயங்களாகும்.

அதாவது எல்லாளன் படை நடவடிக்கையின் போது கரும்புலி வீரர்கள் பயன்படுத்திய அதிநவீன இராணுவ உபகரணங்கள் குறித்த குழம்பம் ஒன்று.

இரண்டாவது படை நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலி வீரர்கள் படைத்தரப்பினரிடமிருந்து கைப்பற்றிய படையினரின் கனரக ஆயுதங்களைக் கொண்டு மீண்டும் படையினரையும் படைத்தளத்தையும் தாக்கும் வகையில் அந்த அதிநவீன ஆயுதங்களை கரும்புலி வீரர்கள் எவ்வாறு கையாளுவதற்குரியப் பயிற்சியைப் பெற்றிருந்தனர் என்பது குறித்தும் சிங்களப் படைத்தரப்பும் குழம்பிப்போய்க் கிடக்கிறதாம்.

குறிப்பாக அநுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தைப் புலிகள் வானூர்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அங்கு படையினரால் நிறுவப்பட்டிருந்த டு-70 - 40 மில்லிமீற்றர் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கியைக் கையாளும் திறனை எவ்வாறு பெற்றிருந்தனர் என்பது சிங்களப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறதாம்.

அநுராதபுரம் வானூர்திக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அண்மையாக நிறுவப்பட்டிருந்த இந்த விமான எதிர்ப்புப் பீரங்கியைக் கரும்புலி கப்டன் ஈழப்பிரியாவே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழப்பமானது சிறிலங்காப் படையினரிடையே புலிகள் இயக்கத்தின் அதிநவீன ஆயுதங்களைக் கையாளும் ஆற்றல் குறித்தும் பரீட்சையம் குறித்தும் சிந்திக்கத் தூண்டியிருப்பதன் மூலம் நவீன இராணுவ படைக்கலன் குறித்த புலிகளின் மேம்பட்ட வளர்ச்சியை அச்சத்தோடு நோக்கவேண்டியுள்ளது.

இதைவிட கரும்புலி வீரர்கள் பயன்படுத்திப் பின்னர் அவர்கள் வீரச்சாவடைந்த வேளை அவர்களிடமிருந்து விடுபட்ட படைக்கலங்களில் சில வளர்ச்சியடைந்த நாடுகளின் இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களாக இருப்பதாகவும் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளிடையே மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்ற ஆயுதங்களாகவும் காணப்படுவதாகச் சிங்களப் படை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆயுதங்களைப் புலிகள் எங்கிருந்து எவ்வாறு பெற்றனர் என்பதும் இத்தகைய ஆயுதத் தளவாடங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் புலிகள் இயக்கத்தின் படைக்கலன் ஆற்றல் குறித்த அச்சமும் சிங்களப் படைத்தரப்பையும், சிறிலங்கா அரசையும் குழப்பி வருகிறது.

இவ்விடயமானது இனிவரும் காலங்களில் படையினருக்கு எதிராகப் புலிகள் மேற்கொள்ளப்போகும் தாக்குதல்களில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாமெனக் கருதப்படுகிறது.

புலிகள் இயக்கத்தின் இந்த ஆற்றலானது சிறிலங்கா அரசிற்கு எதிராக தொடரும் நீண்ட போரை எதிர்கொள்ளத்தக்க வகையில் புலிகள் இயக்கம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.

அத்தோடு சமானியர்களைக் கொண்டு ஒரு சரித்திரத்தை எழுதும் ஆற்றலைத் தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் மத்தியில் எவ்வாறு உருவாக்கினார் என்பதை விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் மாத்திரமே சிங்களப் படை மேலாளர்களின் இந்தக் குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

-வேழினி-

0 Comments: