Sunday, December 23, 2007

"குற்றவாளி அரசிடம் நீதி கேட்கும் அவலம்"

சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா சனாதிபதி ஆணையக விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆணைக்குழு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியார்களின் படுகொலை, மற்றும் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டமை உட்பட படையினரின் குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டது.

இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையில் வேறெங்கும் இவர்களே நடத்திய படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாத நிலையில் குற்றம் சாட்டப்படும் அரசாங்கத்திடமே நீதி கேட்டும் போராடும் ஒரு செயற்பாட்டின் அங்கமாகவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

அந்நியர் ஆட்சியிலிருந்து இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தமிழ் மக்கள் மீது புரியப்படும் இன அழிப்புக்கு குற்றவாளிகளான சிங்கள அரசாங்கத்திடம் நீதிகேட்டுப் போராட வேண்டிய நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர்.

தனித் தனியாகவும் கூட்டாகவும் தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்த படுகொலைகள் எண்ணிலடங்காதவை. இந்தப் படுகொலைகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களிடமே நீதி கேட்க வேண்டும் என்பது இன்னமும் கூட சர்வதேசத்தின் கருத்தாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் தமது தாயகத்திலேயே வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டபோது அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் அமைதி வழியில் நடத்திய போராட்டங்களின் போது சிறிலங்காப் படையினர் புரிந்த வன்முறைகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களிடமே நீதி கேட்க வேண்டியிருந்தது.

அதாவது அம்புகள் செய்த குற்றத்திற்கு எய்தவனிடம் சென்று முறையிட வேண்டிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தனர்.

ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது போராட்டத்தின் வளர்ச்சி மூலம் தண்டனை வழங்கக் கூடியவர்களாகப் பதிலடி வழங்கக் கூடியவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட வன்முறைகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளக்கூடியவர்களாக மாறினர்.

இவ்வேளையிலும் கூட சர்வதேச நாடுகள் சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்த மனித உரிமை மீறல்களுக்குச் சிங்கள ஆட்சியாளர்கள் நீதி வழங்குவர் என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றது.

சிங்களப் படைகள் புரியும் படுகொலைகள் ஏதோ அவர்களின் சொந்த விருப்பத்திற்கும் முடிவுக்கும் ஏற்ப மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அது இறைமையுள்ள அரசு என்ற வகையில் குற்றம் புரிந்தோருக்குத் தண்டனை வழங்கும் என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏதாவது பாரிய மனித உரிமை சம்பவங்கள் இடம்பெறும்போது சிங்கள ஆட்சியாளர்களை விசாரணை நடத்துமாறு கோருவது மட்டுமே சர்வதேசத்தின் நடைமுறையாக இருந்து வருகின்றது.

கடந்த மாதத்தில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்களிலும் பார்க்க புள்ளிவிபர அடிப்படையில் இந்த மாதம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் ஒரு சில குறைவாயின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கைவிட்டு திருப்திப்பட்டும் கொள்கிறது.

ஆனால் ஆட்சியாளர்கள் நடத்தும் 'விசாரணைகளின்" முடிவுகள் எப்படி அமையும் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். சாட்சிகளை மிரட்டுவது விசாரணைகளை இழுத்தடிப்பது நீதிபதியை மாற்றுவது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்புக் கருதியென்று சிங்கள மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களுக்கு விசாரணைகளை மாற்றுவது இறுதியில் அச்சம் காரணமாக சாட்சிகள் சமுகமளிக்காதபோது அதனையே காரணம் காட்டி குற்றம் சாட்டப்பட்டோரை விடுவிப்பதென்பதே சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படும் முறையாகும்.

அது போதாதென்று குற்றம் சாட்டப்படுவோர் தேசப்பற்றாளர்களாகி அவர்களுக்குப் பட்டமும் பதவி உயர்வும் கூட வழங்கப்பட்டு விடுகின்றது. மிக உயர் பதவி வகிப்போர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமல்ல சர்வதேச நாடுகளின் தூதுவர்களாகவும் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இப்போது சர்வதேச மனிதநேயப் பணியாளர்களின் படுகொலை தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதையடுத்து சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் ஓர் விசாரணைக் குழுவும் இதனை அவதானிக்கவென சர்வதேச வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டது. அதன் விசாரணைகள் எவ்வாறு அமைகின்றன என்பதை இப்போது சனாதிபதி மகிந்தவால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவே அதிருப்தி கொண்டுள்ளது.

இந்த விசாரணைகளும் முறையாக நடைபெற்று நீதி கிட்டும் என எவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். ஏனெனில் குற்றவாளிகள் தமக்கெதிராகவே தீர்ப்பு வழங்கமாட்டார்கள்.

சிங்கள ஆட்சியாளர்களால் சிங்களப் படைகள் நன்றாக இனவெறி ஊட்டப்பட்டு தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ளன. தமது குற்றங்களுக்கு எதுவித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது. அதற்கு ஆட்சித்தலைமையே பொறுப்பு என்பதும் சிங்களப் படைகளுக்கு நம்பிக்கையூட்டப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் சிங்களப் படைகள் தமது படுகொலை நடவடிக்கைகளை நிறுத்தப் போவதுமில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராகச் செயற்படப் போவதுமில்லை செயற்படவும் முடியாது.

சிறிலங்கா இறைமையுள்ள ஓர் நாடு. அங்கு சட்டபூர்வமான சனநாயக ஆட்சி நடக்கிறது என்பதன் அடிப்படையில் இப்பிரச்சினையை அணுகும் எவரும் நேர்மையான நீதியான தீர்ப் பொன்றை பெற்றுக்கொள்ளவே முடியாது.

இந்நிலையில் இந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் நேர, பண விரயமேயாகும்.

-வேலவன்-

0 Comments: