Sunday, December 9, 2007

வன்னி மீதான இராணுவ முற்றுகையும் தெற்கில் அதிகரிக்கும் நெருக்கடிகளும்

-அருஸ் (வேல்ஸ்)-

கொழும்பில் தங்கியிருந்த தமிழ் மக்களை இலங்கைப் படையினர் ஆயிரக்கணக்கில் கைது செய்ததும், நூற்றுக்கணக்கில் தடுத்து வைத்திருப்பதும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் கூட மதிக்கப்படாத இந்த நடவடிக்கை குறித்து தங்களை ஜனநாயகத்தின் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதனை உலகில் வாழும் தமிழ் இனம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

கண்டனங்கள், கவலைகள் ஒரு போதும் அரசின் இதே போன்ற எதிர்கால நடவடிக்கைகளை தடுக்கப் போவதில்லை. இலங்கை அரசைப் பொறுத்த வரையிலும் தென்னிலங்கையில் அதன் பாதுகாப்புக்கள் மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளதையே இந்த கைதுகள் காட்டுகின்றன. அதாவது பாதுகாப்புக் குறைபாடுகள் அரசாங்கத்தின் கைகளை மீறி சென்றுவிட்டதையே அப்பாவி மக்களின் கூட்டமான கைது எடுத்துக்காட்டியுள்ளது.

கொழும்பின் நிலை இவ்வாறு இருக்கையில், வன்னியில் படையினர் தமது முற்றுகையை மெல்ல மெல்ல இறுக்கி வருகின்றனர். தொடர்ச்சியான வான் தாக்குதல்கள், படை நடவடிக்கைகள், ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் என வன்னி மீதான முற்றுகையை படிப்படியாக அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

ஒருபுறம் பொருளாதாரத்தடைகள், போக்குவரத்துத் தடைகள், வெளி உலகுடனான தொடர்புகளை துண்டித்தல் என வன்னி மக்களை அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அரசு மறுபுறம் அதன் பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் தாக்கி அழித்து வருகின்றது.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயங்கி வந்த படகு கட்டும் தொழிற்சாலை, வர்த்தக நிலையங்கள், விவசாய நிலங்கள், தொலைத்தொடர்பு மையங்கள் என அரச படையினரின் வான்தாக்குதல்கள் விரிவாக்கம் பெற்று வருகின்றன.

அதாவது 1990களின் பிற்பகுதியில் மோசமடைந்த 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையின் காலத்தில் ஏற்பட்ட ஒரு நெருக்கடிக்குள் வன்னிமண் சிக்குண்டுள்ளது. படை நடவடிக்கையை பொறுத்த வரையிலும் சத்தமின்றி மெதுவாக ஒரு வெற்றி உறுதியை ஒத்த நடவடிக்கை நடைபெற்று வருகின்றது என்பதே உண்மை.

படையினரின் பரம்பலை கருதினால் 10 டிவிசன் படையினரும், சிறப்புப் படையினரும், கவசப்படையினரும் வன்னியை சுற்றியே குவிக்கப்பட்டுள்ளனர். மன்னார் களமுனையில் புதிதாக உருவாக்கம் பெற்ற 58 ஆவது படையணியும், 21ஆவது படையணியும் நிறுத்தப்பட்டுள்ளன.

மணலாற்றில் 59 ஆவது படையணி நிறுத்தப்பட்டுள்ளது. வவுனியாவின் எல்லைப் பகுதியில் 56 மற்றும் 57 ஆவது படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்குப் புறமாக பார்த்தால் யாழ். குடாநாட்டின் வாயிலில் 55, 54ஆவது படையணிகளும் உட்பகுதியில் 52, 51 ஆவது படையணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புத் தாக்குதல் படையணியான 53 ஆவது படையணியும் யாழ். குடாநாட்டிலேயே பெருமளவில் நிலைகொண்டுள்ளது. அதாவது இலங்கை இராணுவத்தின் 12 டிவிசன்களில் வடபோர்முனையில் 10 டிவிசன் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்த 10 டிவிசன் படையினரையும், முதலாவது மற்றும் இரண்டாவது சிறப்புப் படை றெஜிமெண்டுகளையும், புதிதாக உருவாக்கம் பெற்ற கவசத்தாக்குதல் படையணிகளையும் பயன்படுத்தி ஒரு தொடர்ச்சியான நெருக்கடிகளை வன்னி மீது பிரயோகிப்பதே இந்த படை பரம்பலின் நோக்கம்.

ஆனால் 'ஜெயசிக்குறு" காலப்பகுதியை கருதினால் யாழ். குடாநாட்டில் 51, 52 ஆவது படையணிகளும், ஆனையிறவில் 54 ஆவது படையணியும் நிலைகொண்டிருக்க, 53, 55 56 ஆவது படையணிகள் வவுனியாவில் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. அதே சமயம் 53 ஆவது 55 ஆவது படையணிகளின் சில பிரிவினரும் 21 ஆவது படையணியும் இணைந்து மன்னார் பெரு நிலப்பரப்பினுள்ளும் முன்நகர்ந்திருந்தது.

ஏறத்தாழ 7 படையணிகள் வன்னி பெரு நிலப்பரப்பின் கழுத்தை நெரிக்க முற்பட்டிருந்தன. தொடர்ச்சியாக 18 மாதங்கள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்த இந்த படை நடவடிக்கையில் 3,500 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 9,700 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை நடவடிக்கைகளை எதிர்த்து முறியடிப்பு சமர்களை நடத்தி வந்த விடுதலைப்புலிகள் 'ஓயாத அலைகள் - 03" என்னும் பெரும் படை நடவடிக்கைக்கும் தம்மை தயார்படுத்தி வந்ததை பின்னர் படைத்தரப்பு உணர்ந்து கொண்டது.

அதாவது படைத்தரப்பு விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு என வகுக்கும் உத்திகளை விடுதலைப்புலிகள் படைத்தரப்பை முறியடிக்க பயன்படுத்தி வருவது வழக்கம். தற்போதைய உத்திகளை கருதினாலும் தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் உத்திகளை முறியடித்து விடலாம் என்பது படைத்தரப்பின் உத்தி.

அதற்காகவே வன்னியைச் சுற்றி இராணுவத்தின் செறிவு அதிகரிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கில் இருந்து அகலக்கால் பதித்து வரும் படைத்தரப்பு, வன்னியின் மன்னார் பெருநிலப்பரப்பில் முன்நகர மேற்கொண்டு வரும் முயற்சிகள் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருவதுடன், இழப்புக்களும் அதிகம்.

ஆனால், படைத்தரப்பின் கவனம் வன்னி மீது குவிந்துள்ள நிலையில் போர்க்களம் அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளதுடன், அம்பாறை, மட்டக்களப்பு என அது மெல்ல மெல்ல தீவிரமாகி வருகின்றது. தற்போது எழுந்துள்ள முக்கியமான பிரச்சினை என்னவெனில் இலங்கைத் தீவின் வடமுனையான யாழ். குடாநாட்டில் இருந்து தென்முனையான அம்பாந்தோட்டை வரையிலும் விரிவடைந்துள்ள போர்க்களங்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசின் படை பலம் போதுமா என்பது தான்.

இந்த வருடத்தில் 27,000 பேர் இராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறிவரும் படைத்தரப்பு தற்போது இராணுவத்தில் 12 வருட சேவையை நிறைவுசெய்த பின்னர் ஓய்வுபெற்றவர்களையும் மீண்டும் சேவைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களாகவே உள்ளன. ஏறத்தாழ 3 டிவிசன் படையினர் புதிதாக சேர்ந்துள்ள நிலையில் ஓய்வுபெற்றவர்களை அழைப்பதன் நோக்கம் என்ன? இங்கு மறைக்கப்பட்டுள்ள விடயம் ஒன்றும் உள்ளது. அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிடப்படவில்லை.

வழமையாக போர்க்களம் உக்கிரமடையும் போதே தப்பி ஓடும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுண்டு. இறந்ததும், காயமடைந்ததுமாக களமுனைகளில் இருந்து அகற்றப்படுவோர், விடுமுறையில் சென்று மீண்டும் திரும்பாதோர் என படைத்தரப்பின் வீழ்ச்சி விகிதம் மிகவும் அதிகமானது என்றே தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் முன்நகரும் படையினருடனான தற்காப்பு சமர், ஆழ ஊடுருவும் அணியினரின் கெரில்லாத் தாக்குதல்கள், சிறப்புப் படை நடவடிக்கைகள் என்ற வட்டத்திற்குள் தமது தாக்குதல் உத்திகளை மட்டுப்படுத்தி வருகின்றனர். அதாவது தமது முன்னனி அணிகளை சேதமடையாது பாதுகாத்து வருகின்றனர்.

இந்த ஆண்டின் ஜூன் மாதம் நடைபெற்ற விளாத்திக்குளம் சமரைத் தவிர அவர்கள் எந்தவொரு வலிந்த சமர்களிலும் ஈடுபடவில்லை. நடைபெற்று வரும் சமர்களில் விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி போன்ற சிறப்புப் படையணிகள் களமிறக்கப்படவும் இல்லை. அதற்கான காரணங்களும் உண்டு படையினரின் வலிந்த உத்திகளில் தமது படையணிகளை சிதைக்க விடுதலைப் புலிகள் விரும்பப்போவதில்லை.

ஒரு சிறந்த படைவீரனை உருவாக்குவதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் செல்லலாம் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. எனவேதான் சாதகமற்ற களமுனைகளில் தமது படையினரை பாதுகாப்பதில் போரிடும் தரப்புக்கள் அதிக அக்கறை காட்டி வருவதுண்டு. அதிலும் சிறப்புப் படையணிகளை உருவாக்குவதற்கு மிகவும் அதிக காலம் எடுக்கும்.

அதாவது படையினரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப தமது சிறப்புப் படையணிகளை விடுதலைப் புலிகள் நகர்த்தப்போவதில்லை. மாறாக அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அவை விரைவில் களமிறங்கலாம் என்பதும் தென்னிலங்கையில் தற்போது பலமான எச்சரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால், படையினரின் உத்திகள் வேறுபட்டவை அதாவது விடுதலைப் புலிகளை வலிந்த சமருக்கு இழுக்கின்றோம் என எண்ணியபடி தமது முன்னணி படையணிகளை அவர்கள் கணிசமான அளவில் இழந்து வருகின்றனர். விடுதலைப் புலிகளும் படையினருக்கு சாதகமற்ற களங்களில் வைத்து அவர்களின் முன்னணி படையணிகளை சிதைப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அதற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், இந்த வருடம் நவம்பர் மாதங்களில் முகமாலையில் நடைபெற்ற சமர்களையும், விளாத்திக்குளம், மன்னார்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் சமர்களையும் குறிப்பிடலாம்.

கடந்த முதலாம் திகதி காலையும் மன்னாரின் வடமுனையில் உக்கிர சமர் வெடித்திருந்தது. அன்று காலை படையினர் மாந்தையை கைப்பற்ற முனைந்திருந்தனர். இந்த நடவடிக்கையில் புதிதாக அமைக்கப்பட்ட 58 ஆவது படையணி ஈடுபட்டதுடன், அதனை அதன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேன்திரா சில்வா வழிநடத்தியிருந்தார்.

58 ஆவது படையணியின் பிரிகேட் கட்டளைத் தளபதிகளான கேணல் சுஜுவ, கேணல் வன்சஜய, கேணல் கெசான் சில்வா ஆகியோரின் களமுனை வழிநடத்தலில் 4,500 இற்கும் மேற்பட்ட படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கடுமையான பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலுடன் பல மணிநேரம் நடைபெற்ற இந்த சமரில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் படையினரின் இழப்புக்கள் மிகவும் அதிகம் என சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள குறிசுட்டகுளம் பகுதியை நோக்கி முன்நகர முயன்ற இராணுவத்தின் 1 ஆவது சிறப்புப் படை றெஜிமென்ட் படையினரும், 58 ஆவது படையணியின் பற்றலியன் துருப்புக்களும் கடும் எதிர்த்தாக்குதல்களை சந்தித்துள்ளன. இந்த மோதல்களில் 10 இற்கும் மேற்பட்ட சிறப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 படையினரின் சடலங்களும், ஆயுததளபாடங்களும் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் 81 மி.மீ, 120 மி.மீ மோட்டார்த்தாக்குதல்களிலும், பொறிவெடிகளிலும் சிக்கியே படையினர் அதிக இழப்புக்களை சந்தித்து வருவதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் நடைபெற்ற சமர்களிலும், மன்னார், வன்னி மற்றும் யாழ் முன்னரங்க களமுனைகளிலும் படையினரின் 53 ஆவது, 57 ஆவது தாக்குதல் படையணிகளும் 1 ஆவது, மற்றும் 3 ஆவது சிறப்புப் படையணிகளும் கடும் இழப்புக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 58 ஆவது படையணியும் இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்தப் புதிய அணிகள் ஏனைய இராணுவப் படையணிகளில் உள்ள மிகவும் சிறந்த சிப்பாய்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதிகம் சிறப்பு அனுபவங்களைக் கொண்ட படையினரை இராணுவம் களமுனைகளில் இழந்து வருவதுடன், அதிக அனுபவம் கொண்ட படையினர் பலர் தப்பி ஓடி வருவதும் படையினரின் பலத்தில் ஏற்பட்டு வரும் கடுமையான சேதங்களாகும்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி 27,000 படையினர் படையில் இணைந்துள்ளதாக வைத்துக் கொண்டாலும் அவர்கள் முழுமையான ஒரு சிறந்த பயிற்சி பெற்ற இராணுவச் சிப்பாயாக மாற்றம் பெறுவதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் செல்லலாம். அதாவது 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் போர்த்தகைமை உடையவர்களாக மாற்றம் பெறலாம். ஆனால் களமுனை அதுவரை பொறுத்திருக்கப் போவதில்லை.

எனவே தான் உலகின் முன்னணி படைபலம் கொண்ட நாடுகள் கூட தமது படையினரை சாதகமற்ற களமுனைகளில் களமிறக்குவதில்லை என்பதுடன் எதிர்த்தரப்பின் தரம் வாய்ந்த படையணிகளை தாக்கி அழிப்பதிலும் குறியாக இருப்பதுண்டு. உதாரணமாக ஈராக்கின் குடியரசுப் படை எனப்படும் சிறப்புப் படையணிகளை தாக்கி அழிப்பதில் அமெரிக்கா முனைப்புக் காட்டி வந்ததை இங்கு குறிப்பிடலாம்.

ஈராக்கின் படை கட்டுமானங்களை சிதைத்த பின்னரே அமெரிக்கா தனது படையணிகளை முனைப்பாக களமிறக்கியிருந்தது. அதாவது போரியலில் இரு உத்திகள் உண்டு, ஒன்று எமது அனுபவம்மிக்க படையணிகளை தக்கவைப்பது, மற்றையது எதிரியின் அனுபவமிக்க படையணிகளை அழித்து விடுவது.

ஆனால் இலங்கையில் அரசியல் இலாபங்களுக்காக புதிதாக திறக்கப்பட்ட பல களமுனைகளை தக்கவைப்பதற்காகவும், பதில் தாக்குதல்களினால் ஏற்படும் அரசியல் சரிவுகளை தவிர்ப்பதற்காகவும் அனுபவம் மிக்க படையினர் அகலக்கால் பதித்து அழிவை சந்தித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் படையணிகளை வலிந்த சமருக்கு இழுத்து அழித்துவ pடும் உத்தியைக் கொண்டு களமிறங்கிய படையினர் தற்போது அதற்கு மறுதலையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர் என்பதுடன் இலங்கை முழுவதையும் போருக்குள்ளும் தள்ளியும் விட்டுள்ளனர் என்பதுமே யதார்த்தமானது.

ஆனால், ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் தீவிர போருக்குள் மூழ்கும் போது படையினர் எதனை தக்கவைக்கப் போகின்றனர் என்பது தான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி?

0 Comments: