Tuesday, December 18, 2007

''சர்வதேசத்தின் அரச சார்பு நிலைப்பாடும் ஏற்படப்போகும் பின்விளைவுகளும்''

முரண்பாடுள்ள இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமாதான பேச்சுவார்த்தை மூலம் நீண்ட காலப் பிரச்சினைக்கு சகல இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வொன்றை கொண்டுவர முயற்சிக்கிறோமென சர்வதேசம் கூறுகிறது.

நம்பிக்கை தரும் வார்த்தைகள் தான் இவை. ஆயினும் உளச் சுத்தமாக கூறப்பட்ட விடயங்களா இவையென்பதில் சந்தேகம் கொள்வதில் தவறில்லை.

தமிழ் மக்களுக்கு அடிப்படைப் பிரச்சினை உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச சமூகம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பதையும் அவர்களுக்கு தொடர்ச்சியான நிலப் பரப்பினை உள்ளடக்கிய தாயகம் உண்டென்பதையும் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

பிரச்சினை என்னவென்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல், பாதிக்கப்படும் தரப்பினரின் பிறப்புரிமையிலமைந்த நியாயப்பாடுகளை உணர்ந்து கொள்ளாமல் ஒன்றுமே தெரியாதவர் போல் மத்தியஸ்தம் செய்ய முடியாது.

புரிந்துணர்வு, சமாதான ஒப்பந்தத்தின் தமிழர் தரப்பாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்ட பின்னர் அவர்களைப் பயங்கரவாதிகளெனக் கூறுவது இவர்களின் மத்தியஸ்தத்தில் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

சிங்களத்தரப்பு கூறுவது போன்றே சர்வதேச வல்லரசுகளும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பயங்கவாத செயற்பாடாகக் கணிக்கின்றன.

ஒடுக்குபவன் முன்வைக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவாறு ஒடுக்கப்படுபவர்களின் நலனுக்காக பெரும்பாடுபடுவதாக கூறுவது கேலிக் கூத்தாகவே அமையும்.

இலங்கையின் இறையாண்மையைக் கூறுபோடும் தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ளமாட்டோமென்கிற முன்நிபந்தனையினை பற்றிப் பிடித்தவாறு அரசியல் தீர்வினைக் காண வேண்டுமென அடம் பிடிக்கிறது சர்வதேச சமூகம்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்கிற மாற்றுவழித் தீர்வினை முன்வைத்தால் இலங்கையினால் தமது அனுசரணை முயற்சி முற்றாக நிராகரிக்கப்படுமென்கிற அச்சம் இவர்களிடம் மேலோங்கியுள்ளது.

தனியரசு உருவாதலே இப்பிரச்சினைக்கான ஒரே தீர்வென தமிழர் தலைமை கூறுகிறது.

வட்டமேசைகளை கூட்டி காலத்தை இழுத் தடித்து தீர்வொன்றும் முன்வைக்காமல் இராணுவப் பாதையில் செல்கிறது சிங்களத்தரப்பு.

ஆகவே, தமது தீர்வினைக் கூறாத சிங்களத்திற்கு சர்வதேச சமூகமானது பொருத்தமான தீர்வொன்றை தாமாகவே முன்வைக்கலாம்.

ஆயினும் சர்வதேசம், ஏதாவது தீர்விற்கான பரிந்துரைகளை வெளிப்படுத்த முன்னர் வடக்கு கிழக்கைப் பிரித்து கிழக்கை ஆக்கிரமித்து, மாவட்ட சபையே தனது கட்சி முன்வைக்கும் தீர்வென ஜனாதிபதி முந்திக்கொண்டு கூறிவிட்டார்.

இரண்டு மாத விருப்பில் தேனிலவு சென்ற தென்னிலங்கை சர்வகட்சிக் கூட்டு, இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக பிரித்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான மாகாண சபைகளை வழங்கலாமென பரிந்துரை செய்யப் போவதாக வதந்திகள் உலா வருகின்றன.

ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பகத்தை இலங்கையில் அமைக்க வேண்டுமென விடாப்பிடியாக நிற்கும் லூயிஸ் ஆர்பரின் கடும் போக்கினை இளகச் செய்வதற்கு "மாகாண சபை' மருந்தினைத் தடவ அரசாங்கம் முயற்சிக்கிறது.

அதேவேளை பருவ மழைக் காலம் முடியும்வரை, இந்திய மாகாண சபை கதைகளும், வான் வழி குண்டு வீச்சும் தொடர்கதையாக நீளும். தீர்வுப்பொதி, உலையிலிருந்து இறக்கப்படுகிறதெனக் கூறியவாறு ஜப்பானிடமிருந்து பணம் பெறப்பட்டுவிட்டது.

அமெரிக்காவிற்கெதிரான சீன அணியில் தானும் ஒரு நிரந்தர உறுப்பினரெனக் கூறி, ஈரானிடமிருந்தும் பண உதவிக்கான வாக்குறுதி பெறப்பட்டு விட்டது.

இனி யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு வெளிநாட்டு நிதியோடு உள்நாட்டு வர்த்தக வங்கிகளிடமிருந்து மேலதிக கடனைப் பெறுவதற்கு மக்களிடம் சேமிப்புத் திட்ட ஊக்குவிப்புக்களை முன்னெடுக்க குழுவொன்று களமிறக்கப்படலாம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பலம், அரசிடம் இருக்க வேண்டுமென்பதற்காக, நிதியையும், ஆயுத தளபாட உதவிகளையும் இந்த சர்வதேச சமூகம் அள்ளி வழங்குகிறது.

பயங்கரவாதத்திற்கெதிரான ஜனாதிபதி மஹிந்தவின் போரில் தோளோடு தோள் சேர் வோமெனக் கூறும்போது சீனாவின் முகம் மங்கலான தோற்றத்தில் றொபட் ஒ பிளேக்கின் மனதில் தென்படுவதை தமிழ் மக்கள் தரிசிக்கின்றார்கள்.

தோள்கள் உரசுவதை அவதானிக்கும் இந்தியா, பதற்றத்தில் கேட்டதை விட அதிகமாகவே நிதியும் ஆயுதங்களும் அரசுக்கு வழங்குகிறது. இவ்விரு வல்லரசுகளின் முண்டு கொடுக்கும் உளவுப் போட்டியை வேடிக்கை பார்க்கும் சீனா, யார் குற்றியும் அரிசி தன்னிடமே வந்து சேருமென இறுமாப்புடன் உள்ளது.

தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்தை நோக்கி மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் விடுத்த வேண்டுகோளை கவனத்திöலடுத்து பரிசீலிக்கக் கூடிய நிலையில் இன்னமும் அச்சமூகம் இல்லையென்றே கூற வேண்டும்.

கிழக்கின் தந்திரோபாயப் பின்னகர்வை விடுதலைப் புலிகளின் படைப் பலவீனமாகக் கருதும் நிலையே இதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதலாம்.

புலிகளின் படைபல மேலாண்மை அதிகரிக்கும்போது பேசித் தீர்க்கக் கூறி அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்தது சர்வதேசம்.

பேரினவாதத்திற்கும் சர்வதேசத்திற்கும் அவ்வகையான சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று தேவைப்பட்டது.

சர்வதேச வலைப்பின்னலிற்குள் விடுதலைப் புலிகளை வீழ்த்தும் நிகழ்ச்சி நிரலும் இவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தினூடாக விடுதலைப் புலிகளைத் தமது சதி வலைக்குள் மாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தமை போன்று 2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் பயன்படுத்த ரணில் அரசாங்கம் முயற்சித்தது.

ஆயினும் பிராந்திய மட்டத்தில் விரித்த வலை, சர்வதேச ரீதியில் விரிவடைந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஒருவகையான உலகப் பார்வையை வழங்கிவிட்டதென்பதே எதிர்மறை விளைவாக அமைகிறது.

அதேவேளை தெற்காசியப் பிராந்தியத்துள் கட்டுண்டு கிடந்த தமிழர் பிரச்சினை, சர்வதேச அளவில் விரிவடைவதை இந்தியா விரும்பவில்லை.

இவ்வகையான சர்வதேசப் பரிமாணம், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மேற்குலகையும் உள்ளே நுழைய அங்கீகாரம் வழங்கியுள்ளதென்கிற விடயம், புதிய சிக்கலிற்குள் இந்தியாவை இழுத்து விட்டுள்ளது.

ஏற்கனவே இலைமறை காய் போல தனது நிரந்தரமான பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருந்த சீனா பாகிஸ்தானுடன் மேற்குலகக் கூட்டணியும் களத்தில் குதித்து விட்டதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறிய இந்தியா, தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து தீவிரமான செயற்பாடுகளில் தற்போது ஈடுபடுகிறது.

இந்நிலையில் சகல வழிகளிலும் இலங்கை அரசிற்கு உதவியளிப்போமென்கிற பாகிஸ்தானின் அண்மைய கூற்று ஏனைய சக்திகளிடையே அரசிற்கு உதவும் செயற்பாடுகளை அதிகரிக்குமா அல்லது விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வினை எடைபோட்டு காய் நகர்த்தல்களை தீர்மானிப்பார்களாவென்பதை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பின்னர் அனுமானிக்கலாம்.

ஆகவே, இரண்டு விதமான தெரிவுகள் தற்போது சர்வதேச சமூகத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பதன் மூலம் பெரும் போர் மூள்வதைத்தவிர்த்து பாரிய அழிவுகளிலிருந்து நாட்டை விடுவிப்பது ஒரு தெரிவாகவும்.

பிராந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி சீனாவின் காலடியில் அரசு தஞ்சமடைவதைத் தடுப்பதற்கு பேரினவாதத்திற்கு தொடர்ந்தும் ஆதரவினை வழங்குவது அடுத்த தெரிவாகவும் அமையும்.

சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய மேற்குலக வல்லரசுகளின் அண்மைய நிலைப்பாடுகள் இரண்டாவது தெரிவினை நோக்கியே நகர்வதாக புரியப்படுகிறது.

கொழும்பில் நடைபெறும் மாநாடுகள், ஒன்று கூடல்கள் ஊடாக இந்திய அமைச்சர் பா. சிதம்பரம் மற்றும் பிரித்தானிய தூதுவர், அமெரிக்க தூதுவர் போன்றவர்கள் தமது அரச ஆதரவு நிலையினை வெளிப்படையாகத் தெரிவிப்பதிலிருந்து மாவீர் தினச் செய்தி இன்னமும் இவர்கள் நிலைப்பாட்டில் மாறுதலை உருவாக்கவில்லையென்றே கூறலாம்.

சிங்களப் பேரினவாதத்தின் இன ஒழிப்பு நடவடிக்கைளின் உச்சத்தை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய இனத்தின் அடுத்த கட்டத் தெரிவானது சுயநிர்ணய உரிமைப் போரினை தீவிரப்படுத்தும் அடுத்த பரிமாணத்தை நோக்கியே நகரப் போகிறது.

தமிழர் தரப்பின் படைப்பல மேலான்மை நிலை நாட்டப்படும் வேளையில் முத்திசையில் பயணிக்கும் சர்வதேச சமூக அணிகளில் பிளவுகளும் முரண் நிலையும் அதிகரிக்கும்.

பகை முரண்நிலை கொண்ட அணிகள், ஒரே அணியில் உள்ளது போன்ற தோற்றப்பாடு புலி எதிர்ப்பினூடாக வெளிப்பட்டாலும் அவை நிரந்தர இணைவான உட்பண்புகளை கொண்டவையல்ல என்பதையும் புரிதல் வேண்டும்.

இவ்வகையான இறுக்கமான போலிக் கூட்டு, உதிர்வடைய வேண்டுமாயின் சீனா பாகிஸ்தான் அச்சில் இலங்கை நிரந்தரமாக தன்னை இணைத்தல் சாத்தியப்பட வேண்டும்.

அவ்வாறு சீனக் கூட்டினை நோக்கி பேரினவாத அரசாங்கம் நகராத வகையில் இந்தியாவும் மேற்குலகும் தமது இராஜதந்திர வியூகங்களை வகுத்து புலி எதிர்ப்பு நிலையை பலமாகப் பற்றிப் பிடிக்கின்றன.

தமிழர் தரப்பு நியாயங்களை எவ்வளவுதான் அழுத்தமாக எடுத்துரைத்தாலும் இந்திய மேற்குலகச் சிந்தனையில் எவ்வித மனமாற்றங்களும் தற்போது உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் துளியளவும் கிடையாதென்பதே உண்மை நிலையாகும்.

ஆகவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை சர்வதேசமானது மறுபடியும் கவனத்தில் கொள்ள வேண்டுமாயின் படைவலு மேலாண்மையில் மாற்றங்கள் ஏற் படுவதிலையே தங்கியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.
சி.இதயச்சந்திரன்

0 Comments: