Sunday, December 16, 2007

மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சேவைகள்

மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சேவைகள் மீதான தாக்குதல்கள் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வியலைத் திட்டமிட்ட ரீதியில் நாளுக்கு நாள் சிதைத்து வந்த சிங்களம் இன்று அவர்களின் உயிர்காக்கும் துறையான மருத்துவத்துறையினையும் முற்றாக முடக்கிவிடத் திட்டமிட்டுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்து வரும் மக்கள் மீது தொடர்ந்து விமானத் தாக்குதல்களை நடத்தி அவர்களைப் படுகொலை செய்தும், படுகாயப்படுத்தியும் வரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் காயமடைந்த மக்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில் அதன் ஆழ ஊடுருவும் அணிகளை ஏவிவிட்டு வழியில் தாக்குதலை நடத்தி நோயாளர்களைக் கொண்டு செல்லும் நோயாளர் காவு வண்டிகளையும் அழித்து வருகின்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் உயிர்காக்கும் பணியான மருத்துவப் பணியை முடக்குவதில் அண்மைக்காலமாக அரசாங்கம் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 'போரில் ஈடு;பட்டுவரும் எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் அடிப்படை உயிர்காக்கும் பணியான மருத்துவத்தேவைகளையோ, சேவைகளையோ தாக்குவதையும், சேதம் விளைவிப்பதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்" என்று சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையையும் மீறி இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

நோயாளர் காவு வண்டிகளுக்குரிய அவசர சைகை காட்டும் விளக்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதற்குரிய ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றைவிட AMBULANCE (அம்பியூலன்ஸ்) என மிகத் தெளிவாக வாகனத்தில் எழுதப்பட்டு அருகில் சிறிலங்கா அரசாங்கத்தின் சின்னம் தெளிவாக மிகத் தொலைவிலிருந்தே அவதானிக்கக்கூடிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளர் காவுவண்டி என மிகத் தெளிவாக இனங்காண முடிந்தபோதும் அதன் மீது தாக்குதல் நடத்துவதென்பது நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளாகவே அமைகின்றன.

அதாவது மருந்துத்தடை உட்பட அவ்வப்போது மருத்துவம் தொடர்பான பல்வேறு நெருக்குவாரங்களை வன்னி மக்கள் மீது திணித்தபோதும் அவற்றையெல்லாம் முறியடித்து மக்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே நேரடியாகத் தாக்குதலை நடத்துவதன் மூலமே இப்பணியை முடக்க முடியும் எனச் சிறிலங்கா அரசாங்கம் எண்ணியுள்ளது. இதற்கமைவாகவே இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2006 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 8 ஆம் திகதி நெடுங்கேணி சுற்றயல் கூறு மருத்துவமனைக்குரிய நோயாளர் காவு வண்டி மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர்த் தாக்குதலை நடத்தியிருந்தன. அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த அம் மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றுவிட்டு நெடுங்கேணிக்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயணித்த நெடுங்கேணி சுற்றயல் கூறு மருத்துவமனையின் மருத்துவர் கதிர்காமத்தம்பி ஜெயபாலினாவும், அவரது மனைவி ஜெ.பொன்னம்மாவும், மருத்துவ தாதியர்களான இராமலிங்கம் ஜனனேஸ்வரி, ஜெகானந்தன் நகுலேஸ்வரி ஆகியோரும் ஓட்டுநரான கா.கோபாலசுந்தரமும் ஸ்தலத்திலேயே பலியாகினர். இதில் அவ்வண்டி முற்றாக அழிவடைந்தது.

இதனையடுத்து அம்மருத்துவமனை நிரந்தர வைத்தியர் இன்றியும் நோயாளர் காவுவண்டி இல்லாமலும் மக்களுக்குரிய சேவையினை வழங்கமுடியாது நெருக்கடிகளுக்குள்ளானது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இது இவ்வாறிருக்க கடந்த 25.11.2007 ஆம் திகதி முழங்காவில் பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அரச படைகளின் எறிகணை வீச்சு மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக பூநகரி, பளை போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து முட்கொம்பன் அரசபுரம் பகுதியில் தற்காலிகமாகக் குடியேறியுள்ள மக்களுக்கு மருத்துவ சேவையினை வழங்குவதற்காக மருந்துப் பொருட்களையும், மருத்துவர்களையும் அரசபுரம் பகுதியில் இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் போது அந்நோயாளர் காவு வண்டி அழிக்கப்பட்டதுடன் அதன் ஓட்டுநரான பாலசிங்கம் தவசீலன் படுகாயங்களுக்குள்ளானார். 27.11.2007 ஆம் திகதி ஐயங்கன்குளம் அ.த.க. பாடசாலையிலிருந்து முதலுதவிப் பயிற்சியினைப் பெறுவதற்காக மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆண்டான்குளம் நோக்கிப் பயணித்த நோயாளர் காவு வண்டி மீதும் சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர்த்தாக்குதலை நடத்தின. இதில் 8 மாணவிகள் இரு மருத்துவத்தாதியர், ஓட்டுநர் எனப் 11 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இவ்வாறான தொடர் தாக்குதல்கள் மூலம் தமிழ் மக்களுக்கான மருத்துவப்பணியை முடக்க முயலும் அரசின் சதித்திட்டம் அம்பலமானது.

இந்நிலையில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலும், தம்மீது தாக்குவதை நிறுத்தக்கோரியும் மருத்துவத்துறையினர் கடந்த 06.12.2007 ஆம் திகதி பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிலங்கா அரசால் விடுக்கப்பட்டுள்ள மருத்துவத்துறைக்கான அச்சுறுத்தலின் கொடூரம் இவர்களின் போராட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தது. அதற்கு சாட்சியங்களாக தாக்குதலுக்கு இலக்காகி அழிவடைந்த நோயாளர் காவு வண்டிகளின் எச்சங்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை இதில் பங்குபற்றிய மருத்துவ உத்தியோகத்தர்களின் மனங்களிலிருந்து வெளிப்பட்ட கருத்துக்களும் அக்கொடூரத்தை முழுமையாக வெளிப்படுத்தின. கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் குடும்பநல மேற்பார்வை மருத்துவமாது திருமதி உமாநிதி கணேசநாதன் கருத்து வெளியிடுகையில்:

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற எவருக்கும் இன்று பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியுள்ளது. ஏனெனில் ஒவ்வொருநாளும் சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றொழிப்பதையே நோக்கமாகக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்தோடு தாக்குதலுக்கு இலக்காகி உயிராபத்திலுள்ள மக்களைப் பாதுகாக்கும் மருத்துவப் பணிக்கும் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கச் செல்லும் வைத்தியர்கள் மீதும் நோயாளர் காவு வண்டிகள் மீதும் கிளைமோர்த்தாக்குதல்களை நடத்தி எமது மருத்துவப்பணியை மேலும் முடக்க முயல்கின்றார்கள். நோயாளர் காவு வண்டியெனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றை விட தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் விமானத்தாக்குதல்களும் நோயாளிகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும், குழந்தைகளையும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றன. இதனால் கர்ப்பிணித்தாய்மார்கள் கருச்சிதைவுக்குள்ளாவதுடன் ஆரோக்கியமற்ற குழந்தையினைப் பெற்றெடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகள் உளவியல் ரீதியான தாக்கமடைந்தவர்களாகப் பிறப்பதையும் அவதானிக்கமுடிகின்றது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்று எந்தவொரு இடமும் இன்று பாதுகாப்பற்றதாகிவிட்டது.

நோயாளர் காவு வண்டிமீது நடத்தப்படும் தாக்குதல்களானது ஒரு சாதாரண விடயமல்ல. வன்னிப் பெருநிலப்பரப்பில் மருத்துவப் பணிக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே அமைகின்றன. சர்வதேசம் இவற்றைத் தெளிவாக உணர்ந்திருந்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க முன்வராதிருக்கின்றது. மக்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட்டபின் தான் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே சர்வதேச சமூகம் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமென நாங்கள் நம்பவில்லை. இவ்வாறான படுகொலை மற்றும் தாக்குதல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இவற்றை நிறுத்தவேண்டும் என்றார்.

இதேவேளை இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மருத்துவர் முருகேசு கோபாலப்பிள்ளை கருத்து வெளியிடுகையில்; எமது நோயாளர் காவுவண்டிகள் மீதான தாக்குதல்களைத் தவறுதலான தாக்குதல் எனக் கூறினால் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. காட்டில் கட்டுத் துப்பாக்கியைக் கட்டிவைத்து விட்டு எந்த மிருகமென்றாலும் கொல்லப்படுமென்று எதிர்பார்த்திருப்பவர்களைப் போலவே இத்தாக்குதல்கள் அமைகின்றன. அதேபோன்று இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்களும் கிளைமோரை வைத்துவிட்டு வருபவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தாக்குகிறார்கள் எனவே இவர்கள் நோயாளர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் என்ற பாகுபாடுபார்ப்பதில்லை. ஏதோ ஒரு தமிழன் இறந்தால் சரி என்ற நிலையிலேயே இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த வருடம் நெடுங்கேணியில் கொல்லப்பட்ட வைத்தியரைப் பொறுத்தவரை அவர் ஒரு அப்பாவிப் பொதுமகன். அவருக்கும் அங்கு கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்புமில்லாதவர்கள் இவ்வாறானவர்கள் மீதே இப்படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல்களானது மக்களுக்கான எமது மருத்துவப்பணியை முழுமையாகப்பாதிப்படையவே செய்யும். இத்தாக்குதல்களில் ஈடுபடுபவர்களும் இவ்வாறான நிலையினை ஏற்படுத்தவே முனைகின்றனர். மக்களுக்கு இவ்வாறான பணிகளை இல்லாது செய்வதன் மூலம் ஒட்டு மொத்தமாக மக்களை அழித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கக்கூடும்.

இன்று நோயாளர்களை ஏற்றிச்சென்று ஓமந்தையில் இறக்கிவிட்டு காத்திருக்க வேண்டியநிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இருப்பினும் முடிந்தளவு நாங்கள் மக்களுக்கான மருத்துவப்பணிகளைச் செய்து வருகின்றோம் என்றார்.

எனவே எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த அரசு தயாராக இல்லை. என்பதையே இவை வெளிப்படுத்துகின்றன.

'எல்லா விதமான நாகரிக எல்லைக்கோட்டையும் மனிதாபிமானத்தின் தொங்கல் நிலையையும் மகிந்த கடந்துவிட்டார் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளமையை நிரூபிக்கும் வகையிலேயே இவ்வாறான தாக்குதல்கள்; அமைந்துள்ளன.

ஏனெனில் எந்தவொரு அநாகரிகமானவர்களும் மருத்துவத்துறையை அழிக்க முற்படமாட்டார்கள். ஆனால் மகிந்த இவ்வாறான செயற்பாடுகளை எந்தவித சலனமும் இன்றிச் செய்து வருகின்றார். இதனூடாகத் தான் பிரதிபலித்து நிற்கும் தனது இனமும் அநாகரிகமானது என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றார். இருப்பினும் மக்களின் உயிர்காக்கும் பணியான மருத்துவப்பணிக்கு தீங்கு விளைவிக்க முனைவதை நிறுத்த முயற்சிக்க வேண்டுமென்பதே தமிழ் மருத்துவ சமூகத்தின் வேண்டுகோளாகவுள்ளது.
-இ.சசிக்குமார்-
நன்றி: ஈழநாதம்

0 Comments: