Friday, December 21, 2007

கொடி கட்டிப் பறக்கிறது இலங்கையில் ஊடக சுதந்திரம்

ஊடகவியலாளர்கள் பணி புரிவதற்கு உலகிலேயே மிக மோசமான நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது எனப் பொதுவாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தாலும் இப் போது சர்வதேசப் புள்ளிவிவரங்களும்கூட அதனை ஊர்ஜி தப்படுத்தியிருக்கின்றன.
ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கும் "ஊடக இலச்சினை பிரச்சார அமைப்பு' என்ற நிறுவனம் மேற் கொண்ட புள்ளி விவர ஆய்வு இவ்விடயத்தை உறுதிப் படுத்தியிருக்கின்றது.
இவ்வாண்டில் உலகில் அதிக எண்ணிக்கையில் ஊடக வியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் மூன்று நிலைகளுக்குள் இலங்கைக்கு இடம் கிடைத் திருக்கின்றது.
உலகில் 2005 இல் 68 ஊடகவியலாளர்களும், 2006 இல் 96 ஊடகவியலாளர்களும், இவ்வாண்டில் இதுவரை 110 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருகின் றார்கள்.
இவ்வாண்டில் படுகொலை செய்யப்பட்ட 110 பத்திரிகையாளர்களில் ஏழுபேர் இலங்கையில் தமது உயிர்களைப் பறிகொடுத்தவர்கள்.

இந்தப் பட்டியலில தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஈராக் முன்னிலை வகிக்கின்றது. அங்கு கடந்த ஆண்டில் 48 ஊடகவியலாளர்களும், இவ்வருடம் ஐம்பது பத்திரிகை யாளர்களும் படுகொலையுண்டிருக்கின்றார்கள்.

இரண்டாவது இடத்தில் உள்ள சோமாலியாவில் கடந்த ஆண்டு ஒருவரும், இவ்வாண்டு எட்டு ஊடகவியலாளர் களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் கடந்த ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை நான்காக இருந்தது. அது இவ் வாண்டில் ஏழாக உயர்ந்திருக்கின்றது.
ஆக, ஈராக், சோமாலியாவின் வரிசையில் வைத்துப் "போற்றத்தக்க' நிலைக்கு இவ்விடயத்தில் இலங்கையின் "பெருமையும் கீர்த்தியும்' உயர்ந்திருக்கின்றன.
இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் ஆக ஊடகவியலா ளர்கள் படுகொலைகள் சம்பந்தப்பட்டவை மட்டும்தான். இவற்றுக்கு அப்பால், ஊடகத்துறை அச்சுறுத்தல் தொடர் பான இலங்கையின் பெறுபேறுகளும் சாதனைகளும் தனியாக "மகத்தானவை'.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மேலதிகமாக அண்மைக்காலத்தில் மூன்று ஊடகவியலா ளர்கள் கடத்தப்பட்டனர். நால்வர் சிறைவைக்கப்பட்டனர். ஐந்து ஒலிபரப்பு அலைவரிசைச் சேவைகளின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டன. ஓர் இணையத்தளத்தை (தமிழ் நெற்) தொடர்பு கொள்வதற்கான வசதி இலங்கை வாசகர்களுக்கு வெட்டப்பட்டது. மூன்று பத்திரிகைகள் மூடப்பட்டன. மூன்று பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப் பட்டன. ஊடகம் தொடர்பான இரு மையங்கள் எரிக்கப்பட் டன. இவை தவிர, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சு றுத்தல்கள், மிரட்டல்கள் எண்ணில் அடங்காதவை. ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் கட்டுப்படுத் தும் சட்டமூலங்களைக் கொண்டுவரும் முஸ்தீபுகள், முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. செய்தித் தணிக்கை அச்சு றுத்தல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் ஊடக சுதந்திரம் பற்றிய "மதிப்புமிக்க' புள்ளிவிவரங்களே இவை.
ஊடகவியலாளர்கள் படுகொலையாகட்டும், அவர்கள் மீதான தாக்குதலாகட்டும், அச்சுறுத்தலாகட்டும் அல்லது வேறு அராஜகங்களாகட்டும் எல்லாமே அவை பற்றிய வெறும் பதிவுகளுடன் கடந்து போய்விடுகின்றன. அதற்கு அப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

வெறும் வெளிப்பகட்டுக்கு விசாரணைகள் இடம்பெறு வது போன்று ஒரு படம் காட்டப்படுவதுடன் எல்லாம் சரி. அடங்கிவிடும்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனில் தொடங்கி கடைசியாகக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மன், நிலக்ஷன் ஆகியோர் வரை எல்லோரது படு கொலை தொடர்பான விடயங்களிலும் இதுதான் கதை.
அண்மைக்காலத்தில் இலங்கையில் படுகொலை யுண்ட 11 ஊடகவியலாளர்களில் பத்துப் பேர் சிறுபான்மை யினரான தமிழர்கள்.
நாட்டில் பேரினவாத மேலாண்மைத் திமிரில் இனவாத ஆட்சி நடத்திவரும் கொழும்பு அரசின் நிர்வாகத்தின் கீழ் இலங்கைத் தீவு எங்கும் தமிழர்கள் தினசரி கடத்தப்படு வதும், காணாமற்போவதும், படுகொலை செய்யப்படுவதும் சாதாரண விடயங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றிய அரைவாசிப் புள்ளிவிவரங்கள் கூட வெளி வருவதில்லை; அம்பலமாவதில்லை
.
இத்தகைய கொடூரங்கள் குறித்து அவ்வப்போது ஊட கங்களில் வெளியாகும் செய்திகள், மற்றும் சில சமயங் களில் அவை பற்றிய பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவுகள், பிரேத பரிசோதனை மரணவிசாரணைப் பதிவுகள் என்பவற்றுடன் விடயங்கள் கிடப்பில் போடப்படுவதே வழமையாகிவிட்டது. நூற்றுக்குத் தொண்ணூற்றியொன் பது சதவீதமான இத்தகைய வன்முறை விவகாரங்களில் குற்றக் கொடூரத்தை மேற்கொண்டவர்கள் கைது செய்யப் படுவதோ, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோ இல்லை. அவற்றைப் புரிவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டிருப்பதாகவே அனைவரும் விளங்கிக்கொண்டு அடங்கிவிட வேண்டும் அமைதி கொள்ள வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புப் போலும்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பெயரில் அரங்கேறும் இந்த அராஜகத்துக்குள் ஊடக அடக்கு முறை யும் ஓர் அங்கமே. அதனையே இலங்கை ஊடகத்துறை மோசமாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.
2007-12-21
uthayan.com

0 Comments: