Monday, December 10, 2007

யார் இந்த தயான் ஜெயதிலக?

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது பழமொழிகள் பொய்த்து விடுவதுண்டு என்றுசொல்ல வருகிறோம்.

பொய்த்தலுக்கு உதாரணமாக ஊடகவியலாளர் மேர்வின் டி சில்வாவையும் அவர் மகன் தயான் ஜெயதிலகவையும் குறிப்பிடலாம். இருவருடைய பெயர்கள் கூட வித்தியாசமாக இருக்கின்றன. தகப்பன் மகன் என்று காட்டுவதற்கு அவற்றில் ஒற்றுமை இல்லை. மேர்வின் டி சில்வா சர்வதேசப் புகழ்பெற்ற ஆங்கில ஊடகவியலாளர். பி.பி.சி ஆங்கில சேவை, சி.என்.என், றொயிற்றர் செய்திச்சேவை, யப்பான் செய்திச்சேவை போன்றவற்றின் கொழும்பு நிருபராக அவர் செயற்பட்டவர். பேராதெனியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றவர். அவருடைய ஆங்கில உரைநடை தனித்துவமானது. குறைந்தளவு சொற்களைப் பயன்படுத்தியவாறு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தனித்துவம் அவருடைய அடையாளமாகக் கருதப்பட்டது.

மேர்வின் டி சில்வா ஒரு காலத்தில் சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்தவர். அவர் பதவி வகித்த காலத்தில் டெயிலி நியூஸ் தேசிய உடமையாக்கப்பட்டுவிட்டது. அரசின் சொற்படி அரசு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் திரித்த செய்திகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியருக்கு இருந்தது. மேர்வின் டி சில்வா வித்தியாசமானவர் போலும், அவர் அரசின் கைப்பிள்ளையாக மாற மறுத்துவிட்டார். இதன் காரணமாகப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வலது கரமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவரைப் பதவி நீக்கம் செய்தார். பதவி இழப்பிற்கு நட்டத்தொகை கோரி மேர்வின் நீதிமன்றம் சென்றார்.

அந்தக் காலத்து நீதிமன்றங்களும் வித்தியாசமானவையாக இருந்தன. மேர்வின் டி சில்வாவுக்குப் பெருந்தொகைப் பணம் நட்டத் தொகையாகக் கிடைத்தது. அதை வைத்து அவர் ~லங்கா கார்டியன்| என்ற செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தார். இறக்கும் வரை மேர்வின் அதன் ஆசிரியராக இருந்தார். இருபது அல்லது இருபத்தைந்து பக்கங்களுக்கு மேல் இல்லாத ~லங்கா கார்டியன்| கற்றோர் சுவைக்கும் கனியாக விளங்கியது. அது தாங்கி வந்த கட்டுரைகள் காய்தல் உவத்தல் இன்றி இயன்றவு நடுநிலை வகித்தன. உதாரணத்திற்கு நவம்பர் 1998 இதழை எடுத்துக்கொள்வோம். இதில் றொமேஷ்பாபு என்ற இந்திய அரசியல் ஆய்வாளரைக்கொண்டு அமைதி காக்கும் பணியில் ஏன் இந்தியப்படை தோல்வி கண்டது என்ற காரசாரமான கட்டுரையை மேர்வின் எழுதுவித்தார். இலங்கை இனப்போருக்கு இரு பிரதான கட்சிகளும் பொறுப்பு என்ற தலைப்பில் ஒஸ்வால்ற் பீர்த் (Oswald Firth) என்பவரும் எழுதியுள்ளார். நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென் மேம்பாட்டுப் பாடங்கள் என்ற கட்டுரையை இதே இதழில் பிரசுரித்திருக்கிறார்.

எமது விடுதலைப் போரைப் பயங்கரவாதமாகக் காட்டுவதற்கு மேர்வின் பிடிவாதமாக மறுத்தார். எமது தேசியத் தலைவர் பற்றி எழுதும் போது மிகவும் மதிப்பு மரியாதையுடன் குறிப்பிடுவது அவருடைய நெடுங்கால வழமை. பல கட்டுரைகளில் அது தமிழர்களுடைய தேசியப்போர் என்றும் அதன் தலைவர் ஒரு சிறந்த இராணுவக் கொமாண்டர் என்றும் மேர்வின் எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது எம்போன்றோருக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் தவறாமல் ஏற்படும். கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ~லங்கா கார்டியன்| பிரதிகளை ஒன்றிணைத்து நூல் வடிவமாகக் கட்டி வைத்திருந்தார்.

மேர்வின் டி சில்வாவின் உடன்பிறப்பான நெவில் டி சில்வாவும் ஒரு ஊடகவியலாளராவர். அவர் இப்போது லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகிறார். இதற்கு முன்பு அவர் ஹொங்கொங்கில் இருந்தவர். நெவில் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டவர். இங்கிலாந்தில் செயற்படும் ஈழத்தமிழர் அமைப்புக்களின் நடவடிக்கைகளை அவதானிப்பதோடு பிரிட்டிஷ் காவல்துறைக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தொல்லை தரும் போக்கையும் கொண்டவர். லண்டனில் இருந்து கருத்துக்கள் (Thoughts From London) என்ற தலைப்பில் கொழும்பு ஞாயிறுப் பத்திரிகை சண்டே ரைம்ஸில் நெவில் ஒரு வாராந்திரக் கட்டுரையை எழுதுகிறார்.

மேர்வின் டி சில்வாவின் மகன் தயான் ஜெயதிலக கூடுதலாகச் சித்தப்பா நெவில் டி சில்வாவின் குணாம்சங்களைக் கொண்டிருப்பவர். தமிழர்களின்; உதவியால் உயிர் வாழும் அவர் இன்று தமிழர்களின் உயிரைப் பறிக்கும் அரசியல் ஆலோசகர் நிலையில் இருக்கிறார். 1973 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணையாத சிங்கள இடதுசாரி மாணவர்கள் சமூகக்கல்வி வட்டம் (Social Studycircle) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இது ஜோசப் ஸ்ராலினுடைய கருத்துக்களைச் சார்ந்த அமைப்பாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் பிரசுரங்கள் தமிழர்களுடைய சுயநிர்ணயக் கோரிக்கையை வெளிப்படையாக ஆதரித்தன. கூட்டம் கூட்டுவதற்காக அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களிலும் இந்த நிலைப்பாட்டைக் காணலாம். அவர்களுடைய மேடைப் பேச்சுக்களிலும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற கருத்து வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.

சமூகக்கல்வி வட்டம் என்ற இந்த இடதுசாரி அரசியல் அமைப்பின் முக்கிய சூத்திரதாரியாக தயான் ஜெயதிலக விளங்கினார். இந்த அமைப்பு பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்.புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தது. வீரகேசரிப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான பீ.முத்துலிங்கம் தயான் ஜெயதிலகவுடன் நெருங்கிப் பழகினார். இருவருக்கும் இடையில் கருத்தொற்றுமை இருந்தது. 1982 இல் விகல்ப கந்தாயம என்ற புதிய அமைப்பை தயான் ஜெயதிலக தொடங்கினார். இந்த அமைப்பு தமிழர்களின் இடதுசாரி இளைஞர் அமைப்புக்களோடு முன்னரிலும் கூடிய நெருக்கத்தைப் பேணியது. தமிழ் சிங்கள இளைஞர்களின் ஒன்றிணைப்பு அமைப்பாக விகல்ப கந்தாயம இடம்பெற்றது.

ஆயுதப் புரட்சியில் நம்பிக்கையுள்ள புரட்சிகர அமைப்பு என்று விகல்ப கந்தாயம தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது. இந்த நோக்கில் அது ஆயுதச் சேகரிப்பில் இறங்கினாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. 1986 இல் அரசுக்கு எதிராகச் சதி செய்யும் அமைப்பு என்று குற்றஞ்சாட்டப்பட்டதோடு தடை செய்யப்பட்ட அமைப்பாகவும் விகல்ப கந்தாயம பிரகடனஞ்செய்யப்பட்டது.

உடனடியாகத் தயான் ஜெயதிலக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். சிங்களப் பொலிசும் இராணுவமும் அவரைக் கைது செய்வதற்காகப் பாரியளவில் தேடுதல் நடத்தின. அவருடைய தலைமறைவு வாழ்க்கைக்குச் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கவும் இயன்ற உதவிகளைச் செய்தார.; 1987 இல் இதோ பிடிபட்டு விட்டார் என்ற நிலை தோன்றியபோது அவருடைய தமிழ் நண்பர்கள் அவரை இந்தியாவுக்குக் கடத்திச் சென்றனர். அவர் தமிழகத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

இந்திய அமைதிகாக்கும் படையின் வருகைக்குப் பின் ஜே.ஆர். அரசு வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் தயான் ஜெயதிலக சிறிலங்கா திரும்பினார். வட-கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபின் அண்ணாமலை வரதராஜப்பெருமாளின் அமைச்சரவையில் ஒரு உறுப்பினராக தயான் ஜெயதிலக இடம்பெற்றார். சிறிது காலத்தின் பின் தனது அமைச்சுப் பதவியை தயான் ஜெயதிலக இராஜினாமாச் செய்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர்-நாயகம் பத்மநாபா முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்ததால் அந்த வாய்ப்பு வரதராஜப்பெருமாளுக்குக் கிடைத்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் என்ற அந்த அமைப்பின் துணைத்தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று பத்மநாபா விரும்பினார். ஆனால் தூதுவர் டிக்சிற் வித்தியாசமான முடிவை எடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்தாலும் தனது தந்தை ஒரு இந்தியக் குடிமகன் என்றும் தனக்கு முதலமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று டிக்சிற்றிடம் வரதராஜப்பெருமாள் முறையிட்டார். அதன்படி அவருக்கு அது கிடைத்தது. டிக்சிற் இதைவிட இன்னும் சில முக்கிய சித்துவேலைகளைச் செய்தார். தயான் ஜெயதிலக இராஜினாமாச் செய்து வெளியேறியபின் அவருடைய இடத்திற்கு ஜோ செனவிரத்தின என்பவரை டிக்சிற் நியமித்தார். இந்த மனிதர் ஒரு சிங்களவருமல்லர் அவருடைய பெயர் ஜோ செனவிரத்தினவும் அல்ல.

உண்மையில் அவர் ஜோர்ஜ் என்ற கிறிஸ்தவ இந்திய மலையாளி இவரைப் போல் டிக்சிற் நியமித்த முஸ்லிம் பிரதிநிதியான அபுயூசுப் என்பவரும் இந்தியர்தான். மிக விரைவில் டிக்சிற்றின் திருகுதாளங்கள் அம்பலமாகின தமிழர்களோ சிங்களவர்களோ அவரை நம்பும் நிலையில் இருக்கவில்லை.

புரட்சிவாதியான விகல்ப கந்தாயம நிறுவனர் தயான் ஜெயதிலக்க அடக்குமுறை அரசின் அங்கமாக மாறிவிட்டார். கொழும்பின் திறந்த பல்கலைக்கழக அரசறிவியல் விரைவுரையாளர் பதவி வகித்தபின் அவர் கியூபாவுக்குச் சென்றார். அந்த நாட்டின் அரசமைப்புப் பற்றிய ஆய்வுரையை எழுதியமைக்காக ஒரு கேள்விப்படாத அமெரிக்கப் பல்கலைக்கழகம் அவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது. சந்திரிகா அரசில் அவர் முக்கிய ஆலோசகராகப் பதவி வகித்தார். சந்திரிகாவின் வீழ்ச்சிக்குப் பின் தயான் ஜெயதிலக்க மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக இடம்பெறுவதோடு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை சபையில் சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவராகவும் பதவி வகிக்கிறார். தயான் ஜெயதிலக்க வெகுதூரம் வந்துவிட்டார். ஒரு காலத்தில் தமிழர் தயவால் உயிர் தப்பிய மனிதன் Un Human Rights Council இன் Permanent Ambassador பதவி வகித்தபடி தமிழர் உரிமை மறுப்புக்குத் துணை போகிறார். அமெரிக்க எதிர்ப்பு வாதம் புரிந்த விகல்ப கந்தாயம தலைவர் இப்போது தமிழர் தம் விடுதலைப்போரை நசுக்குவதற்கு அமெரிக்க உதவிகளைக் கோரியபடி இருக்கிறார்.
-அன்பரசு-
நன்றி: வெள்ளிநாதம் (07.12.07)

0 Comments: