Sunday, December 30, 2007

போராண்டு பிறக்கின்றதா?

வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது. வவுனியா , மன்னார் மற்றும் யாழ்.குடாவில் முன்னரங்க நிலைகளில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. தினமும் ஒரு முனையில் நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் மோதல்கள் நடைபெறுகிறது. வன்னிக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டுமென படையினர் பகீரதப் பிரயத்தனத்திலீடுபட்டு வருகின்றபோதும் அது சாத்தியப்படுவதாகத் தென்படவில்லை.
கிழக்கைக் கைப்பற்றியது போல் வடக்கையும் இலகுவாகக் கைப்பற்றிவிடலாமென நினைத்து வடக்கில் அரசு பாரிய படை நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், வடக்கே கடும் சமர் நடைபெற்று வருகையில் கிழக்கே மட்டுமல்ல தெற்கிலும் ஊடுருவியுள்ள புலிகளால் அரசும் படையினரும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

வன்னியில் படையினர் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பித்து பத்துமாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்று வரை எதுவித முன்னேற்றத்தையும் காணவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சிறிது முன்நகர்வுடன் படையினர் தடுமாறுகின்றனர். புதிது புதிதாக படையணிகளை உருவாக்கி விஷேட பயிற்சிகளை வழங்கி பெருமளவு படையினரைக் களமிறக்கிய போதும் விளைவு சாதகமாகவில்லை.

வன்னிக்குள் நுழைய படையினர் மேற்கொள்ளும் தாக்குதலைப் போன்றே யாழ்.குடாநாட்டிலும் முகமாலை, கிளாலி மற்றும் நாகர்கோவில் முன்னரங்குகளிலிருந்து முன்னேற படையினர் இதுவரை மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. களமுனையில் நடைபெறும் போரை விட ஊடகங்களினூடாக அரசு பெரும் பிரசாரப் போரை நடத்துகின்ற போதும் அதன் உண்மை நிலையை தமிழ் மக்கள் மட்டுமன்றி இன்று சிங்கள மக்களும் நன்கறிவர்.

வடபகுதி யுத்த முனையில் தினமும் கொல்லப்படுவதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்த செய்திகள் சிங்கள மக்கள் மத்தியில் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு, மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய படையினர் பின்னர் ஐந்து பத்துப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறினர். பின்னர் அது அதிகரித்து 15, 20 என மாறி இன்று 25,30 புலிகள் கொல்லப்படுவதாகக் கூறுமளவுக்கு வியாபித்துள்ளது.

களமுனையில் எத்தனை படையினர் கொல்லப்படுகிறார்களோ அவர்களது எண்ணிக்கையின் பத்து மடங்கால் அங்கு புலிகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இல்லையேல் கடந்த பத்து மாதங்களில் வன்னியில் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கையென அரசு கூறிய தொகை தற்போது அங்கிருப்பவர்களின் தொகையின் அரைவாசியைக் கடந்திருக்குமெனக் கூறுபவர்கள் பலர்.

வன்னியில் தினமும் நடைபெறும் மோதல்களில் பல படையினர் கொல்லப்படுகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். இந்த மோதல்களில் எதுவித முன்னேற்றமுமின்றி பேரிழப்புகள் ஏற்படுவது படையினரின் உற்சாகத்தை பெருமளவில் குறைத்துள்ளது. இந்த யுத்தம் அவர்களுக்கு பெரும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால், அவர்களைச் சலிப்படைந்து விட்டு விடக் கூடாதென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அதனால்தான் அரசு பெரும் பிரசாரப் போரில் இறங்கியுள்ளது.

வன்னியில் தினமும் படையினர் பெரும் வெற்றிகளைக் குவித்து புலிகள் வசமுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசு முனைகிறது. இந்த யுத்தத்தில் பெரும் வெற்றி கிட்டி வருவது போல் மேற்கொள்ளப்படும் பெரும் பிரசாரங்கள் மூலம் தென்பகுதியில் நிலைமைகளை சமாளித்து விடலாமென அரசு கருதியது.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியது போல் வடக்கையும் விரைவில் கைப்பற்றிவிட முடியும். தமிழ்ச்செல்வனை விமானப் படையினர் இலக்கு வைத்தது போல் பிரபாகரனையும் விமானப் படையினர் விரைவில் இலக்குவைத்து விடுவார்களென்ற மாயையை தெற்கில் தோற்றுவிக்க அரசு முனைகிறது.

யுத்த பட்ஜெட்டை நிறைவேற்றிய அரசுக்கு நிதிவளம் போதாது. பொருளாதார நிலைமை தினமும் மோசமடைந்து வருகிறது. யுத்தத்திற்காக தினமும் கோடிக்கணக்கான ரூபாவைச் செலவிடும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்ல அனைத்துப் பொருட்களதும் விலைகளையும் பெருமளவில் அதிகரிக்க வேண்டியுள்ளது. இல்லையேல் வன்னியில் இடம்பெறும் யுத்தம் தலைநகருக்கு வந்துவிடும்.

நிலைமையைச் சமாளிக்க முடியாது அரசு திணறுகிறது. தினமும் பல கோடி ரூபாக்களைக் கொட்டிக் குவித்து வாங்கிக் குவிக்கும் போர்த் தளபாடங்களால் பலனெதுவும் கிட்டுவது போல் தென்படவில்லை. அமெரிக்கா, ரஷ்யா , இஸ்ரேல் , இந்தியா, பாகிஸ்தான் , உக்ரேன் , செக்குடியரசு, ஈரானென ஆயுத உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிடமிருந்தும் பல பாரிய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்தும் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டு விட்டன, அவர்கள் இனி ஆயுதங்களைக் கொண்டு வரக் கப்பல்களில்லை, ஆயுதங்கள் வரும் மார்க்கங்களும் அடைக்கப்பட்டு விட்டன, ஆயுதங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது, ஆட்களுக்கும் அதுபோல் பற்றாக்குறை நிலவுகிறது, எதுவும் செய்ய முடியாது அவர்கள் திணறுகின்றனர், எவ்வேளையிலும் படையினர் வடக்கைக் கைப்பற்றிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதென்றெல்லாம் அரசும் படைத்தரப்பும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், வட பகுதியில் வவுனியா , மன்னார், மணலாறு, யாழ்.குடா போர்முனையில் தினமும் நடைபெறும் சம்பவங்கள் நேர்மாறாகவேயுள்ளன. வன்னிக்குள் படையினரால் ஒரு அடி கூட வைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. வடக்கில் கடந்த பத்துமாதங்களில் நடைபெற்ற போரின் விளைவு என்னவென்றால் பூச்சியமென்று கூறும் நிலையே ஏற்பட்டுள்ளது. கிழக்கே அகலக் காலை வைத்த படையினரால் வடக்கே ஒரு அடி கூட வைக்க முடியாதுள்ளது.

1997 இல் வவுனியாவிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்கப் புறப்பட்ட ஜெயசிக்குரு படையினர் எதிர்கொண்ட அனர்த்தங்களை தற்போது வவுனியா, , மன்னார் களமுனைகளில் படையினர் எதிர்நோக்குகின்றனர். புலிகள் தங்கள் மீது பாரிய தாக்குதல்கள் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் அவர்களைத் தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்காகவும் வன்னியில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. படையினரால் பாரிய நடவடிக்கைகளை நடத்த முடியாதுள்ளது.

மடுவைக் கைப்பற்றுவதற்காக வவுனியா- மன்னார் வீதியிலிருந்து இந்த வருடம் ஆரம்பம் முதல் படையினர் மேற்கொண்ட எந்தத் தாக்குதல் முயற்சியும் வெற்றி பெறவில்லை. மடுவை நோக்கி நேரடியாக முன்னேற 15 இற்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவையெல்லாம் பெரும் தோல்வியில் முடிவடையவே மடுவை நோக்கிய பெரும் நகர்வு முயற்சிகள் கைவிடப்பட்டடன.

தற்போது வவுனியாவுக்கு மேற்கே மன்னார் கரையோரமாக புலிகளின் பகுதிகளைக் கைப்பற்ற படையினர் பெரும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மன்னார் கரையோரமாக முழங்காவிலுக்குச் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்.குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதே இவர்களது தற்போதைய நோக்கமாகும்.

`ஏ-9' வீதியூடாக வன்னியை குறுக்கறுத்துச் சென்று யாழ்.குடாவுக்கான தரைவழிப் பாதையைத் திறக்க 1997 இல் படையினர் முயற்சிகளை மேற்கொண்டும் இரு வருடங்களின் பின் அது பெரும் தோல்வியில் முடிந்தது. ஆனால், இன்று மன்னாரிலிருந்து கரையோரமாக முழங்காவில் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதற்கு படையினர் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

`ஏ-9' வீதியூடாக வவுனியாவிலிருந்து வன்னிக்குள் நுழைவதும் கிளிநொச்சி வரை சென்று குடாநாட்டுக்கான தரைவழிப்பாதையைத் திறப்பதும் ்ஜெயசிக்குறுீ படை நடவடிக்கையின் நோக்கமாகும். இந்தப் படை நகர்வின் மூலம் வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி வன்னிக்குள்ளேயே புலிகளின் பலத்தை, தொடர்பற்ற இரு பகுதிக்குள் முடக்கி, பின் வசதிக்கேற்ப படை நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளை நசுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மாங்குளம் வரை சென்ற படையினரால் அப்பால் நகர முடியவில்லை. ஓயாத அலைகளாகப் புலிகள் உருண்டபோது, `ஜெயசிக்குரு' படையினர் தடுமாறி விட்டனர். இரு வருடங்களாக மாங்குளம் வரை சென்றவர்களை புலிகள் இரு வாரங்களில் ஓமந்தை வரை கொண்டு வந்தனர். அடுத்தடுத்து பல பிரதேசங்களைக் கைவிட்ட படையினர் பெருமளவு போர்த்தளபாடங்களையெல்லாம் கைவிட்டு வவுனியா வந்து சேர்ந்தனர்.

2000 ஆம் ஆண்டில் யாழ்.குடாநாட்டுக்குள் புகுந்த புலிகள் அப்போது யாழ் நகரைக் கைப்பற்றி விடுவரென்று எதிர்பார்க்கப்பட்டது போல் ஓமந்தை வரை வந்த புலிகள் வவுனியாவைக் கைப்பற்றி விடலாமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்தளவிற்கு `ஜெயசிக்குரு' படையினர் பலத்த அடிவாங்கியிருந்தனர். அந்த நிலைமையே இன்று வன்னியில் உருவாகி வருகிறது.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிய படையினருக்கு வடக்கையும் கைப்பற்றுவது கடினமான விடயமல்ல என்றால் மன்னாரிலிருந்து கரையோரத்தால் யாழ்.குடாநாடு நோக்கி நகர்வதை விடுத்து, வன்னியை `ஏ-9' வீதியால் குறுக்கறுத்து அந்தப் பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்ல படையினர் முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், அது மட்டுமல்ல எதுவும் சாத்தியப்படுவது கடினமென்பதை படையினர் இன்று உணர்ந்திருப்பர்.

மன்னார் கரையோரம் ஊடான படைநகர்வு படையினருக்கு பல வழிகளிலும் பலன் தரக்கூடியதெனக் கருதப்படுவதால் தான், பலத்த இழப்புகளுக்கு மத்தியிலும் இங்கு முன்னேற படையினர் முயல்கின்றனர். இந்தக் கரையோரத்தால் சென்று பூநகரி ஊடாக யாழ். குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதென்பது பல்வேறு பலனையும் தருமென படையினர் கருதுகின்றனர். மன்னார் கரையோரமாகத் தரைவழிப் பாதையைத் திறப்பதன் மூலம் மேற்கு கடலை புலிகள் முற்றாக இழந்து விடுவர்.

இந்தக் கடற்பிரதேசத்தினூடாகவே இந்தியாவிலிருந்து புலிகள் பொருட்களைத் தருவிப்பதாலும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆராய்ச்சி செய்ய வேண்டியிருப்பதாலும் இந்தக் கரையோரத்தை கைப்பற்றி புலிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திவிட படையினர் முயல்கின்றனர். எனினும், வன்னியில் ஒரு அடி நிலத்தைக் கூட இழந்து விடக்கூடாதென்பதில் மிகவும் கவனமாயிருக்கும் புலிகள், இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றும் படையினரின் எண்ணத்தை முழுமையாகச் சிதறடிக்க முனைவர்.

இதேநேரம், மன்னார் கரையோரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மன்னார் தீவுக்கான ஆபத்தையும் தடுத்து விட முடியுமென படையினர் கருதுகின்றனர். அண்மைக்காலமாக தங்கள் நீண்ட தூர ஆட்லறிகளை முன்நகர்த்தியுள்ள புலிகள் மன்னார் தீவின் நுழைவாயிலாயிருக்கும் தள்ளாடி முகாமை ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலம் இலக்கு வைக்கின்றனர். இது படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் புலிகள் மன்னார் தீவை இலக்கு வைக்கலாமென்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சம் காரணமாகவே தெற்கே வங்காலை முதல் சிலாவத்துறை வரையான நீண்ட பிரதேசத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் படையினர் கைப்பற்றியிருந்தனர். மன்னாருக்கு வடக்கே அடம்பனை அண்டிய பகுதிகளிலிருந்து மன்னார் தீவை நோக்கிப் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் போது, மன்னாரின் தென் பகுதியும் புலிகள் வசமிருக்குமானால் அது புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயிருக்குமெனக் கருதியே வங்காலை முதல் சிலாவத்துறை வரையான பகுதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த வாரம் நெடுந்தீவு கடலில் நடைபெற்ற கடற்சமர் கூட மன்னார் கடலில் கடற்புலிகளின் கை ஓங்கியிருப்பதைக் காட்டியுள்ளது. தலைமன்னாரில் கடற்படை முகாமிருந்தும் இந்தக் கடற் சமரில் கடற்புலிகளுக்கு கடற்படையினரால் பலத்த சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படையினர் கூறுகின்ற போதும் தங்கள் தரப்பில் ஐந்து கரும்புலிகளே கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் கரையோரத்திற்கான சமர் மேலும் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கே மழைகாலம் முடிவடைந்து வருவதால் அடுத்த வருட முற்பகுதியில் வன்னியில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிர முனைப்புக்காட்டும். டாங்கிகள், கவச வாகனங்களை நகர்த்தக் கூடியளவுக்கு கள நிலைமை வந்து விட்டால் அவற்றின் உதவியுடன் பாரிய படை நடவடிக்கைகளைத் தொடுக்க படையினர் முயல்வர்.

புதிய போர் விமானங்களை விரைவில் கொள்வனவு செய்யவுள்ள அரசு விமானப் படையினரின் திறனை பல மடங்காக அதிகரிக்கும் முயற்சியில் தீவிர அக்கறை காட்டுகிறது. அடுத்த ஓரிரு வாரத்தில் விமாப் படையினருக்கான விசேட பயிற்சிகளை வழங்குவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரேன் விமானப் படையினர் இலங்கை வரவுள்ளனர். பாகிஸ்தான் விமானப் படையும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்கி வருகிறது.

தரைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொள்ளும் போது வான் வழியால் தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் புலிகளின் தலைவர்களின் நடமாட்டம், ஒன்றுகூடல், திட்டமிடலைத் தடுத்து விடுமென படையினர் கருதுவதால் விமானத் தாக்குதல்களும் தீவிரமடையப் போகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு போராண்டாகவே பிறக்கப் போகிறது.

நெடுந்தீவுக் கடல் மோதல்

யாழ்.குடாவில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கடற்புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறுகின்ற போதும் கடற்புலிகள் அதனை மறுத்துள்ளனர். கடற்படையினரே பலத்த இழப்பைச் சந்தித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

எப்படி இந்தக் கடற்சமர் ஏற்பட்டதென்பது குறித்து இருதரப்பும் சரியான தகவல்களைக் கூறவில்லை. ஆனாலும், இந்தக் கடற்பரப்பில் மிக நீண்ட நேரமோதல் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

ஆயுதக் கடத்தலில் கடற்புலிகள் ஈடுபட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி தாங்கள் தாக்குதல் நடத்தியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் எங்கிருந்து புலிகள் இந்த ஆயுதக் கடத்தலை மேற்கொண்டார்கள் என்று கடற்படையினர் கூறவில்லை. இந்தியாவிலிருந்து ஆயுதக் கடத்தலை மேற்கொண்டார்களென கடற்புலிகள் மேற்கொள்ளும் சாத்தியமில்லை என்பதுடன் இந்தப் பகுதியில் வேறெங்குமிருந்தும் ஆயுதங்களைக் கொண்டு வரும் வாய்ப்பில்லை என்பதால் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது எந்தளவுக்கு உண்மையானதெனத் தெரியவில்லை.

அதேநேரம் எவ்வாறு இந்தக் கடற்சமர் நடைபெற்றதென கடற்புலிகள் கூறவில்லை. இதனால் இந்தக் கடற்சமரானது இந்தக் கடற்பரப்பில் இருதரப்பு பலத்தையும் பரீட்சிக்குமொரு மோதலாகவே இடம்பெற்றுள்ளது.

கடற்சமர் நடைபெற்ற கடற்பரப்பானது நெடுந்தீவுக்கு தெற்கேயும் மன்னார் நகருக்கு வடக்கேயுமுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளால் பயணிக்க முடியும். ஆனால், மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை அண்டிய கடற்பரப்பில் அவற்றால் பயணிக்க முடியாது. அந்தக் கடல் ஆழம் குறைந்ததென்பதால் அதன் நிலைமைக்கேற்ப தற்காப்புடன் இப்பகுதியில் கடற்சமரை மேற்கொள்ளும் வாய்ப்பு கடற்புலிகளுக்குள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே நெடுந்தீவுக்கு வடக்கே கடந்த புதன்கிழமை கடற்சமர் நடைபெற்றுள்ளது. காலை 7.30 மணியளவில் கடற்புலிகளின் படகுகளை கடற்படையின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் அவதானித்த போதும் உடனடியாக அவற்றால் கடற்புலிப் படகுகள் மீது தாக்குதல் தொடுக்க முடியவில்லை. அவ்வேளையில் அந்தக் கடற்பரப்பில் ஒரு டோரா படகே ரோந்தில் ஈடுபட்டிருந்தது.

இதையடுத்து அந்தப் பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரி லெப்.கொமாண்டர் லலித் ஏக்கநாயக்கா கொழும்பில் கடற்படைத் தலைமையகத்திற்கு அறிவிக்கவே, கடற்புலிப் படகுகளை நெருங்க வேண்டாமென அவருக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக பீரங்கிப் படகுகளை அங்கு செல்லுமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

வடக்கு கடற்பரப்பிலும் மேற்கு கடற்பரப்பிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆறுக்கும் மேற்பட்ட டோரா படகுகள் அவ்விடத்திற்குச் சென்ற பின்பே கடற்புலிகளின் படகுகள் மீது கடற்படையினர் நண்பகல் 12.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மோதல் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றுள்ளது. விமானப் படையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். எம்.ஐ- 24 ரக தாக்குதல் ஹெலி கொப்டர்கள் இரண்டும் அங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளன. மோதல் முடிவடைந்து கடற்புலி படகுகள் கரை திரும்பிய பின் கிபிர் விமானங்களும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளன.

கடற்படையினரின் 12 படகுகளுடன் கடற்புலிகளின் 16 படகுகள் மோதியுள்ளன. கடற்புலிகளின் 6 படகுகளைத் தாங்கள் அழித்ததாகவும் டோரா பீரங்கிப் படகொன்று பலத்த சேதமடைந்து பின்னர் கடலில் மூழ்கிவிட்டதாகவும் கடற்படையினர் கூறினர். அதிலிருந்த இருவர் மட்டுமே மீட்கப்பட்டனர். ஏனையோர் காணாமல் போய்விட்டனர்.

எனினும் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று முற்றாக தகர்த்தழிக்கப்பட்டதாகவும் மற்றொரு டோரா திருத்தியமைக்க முடியாதளவிற்கும் மற்றொன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள புலிகள் தங்கள் தரப்பில் ஐந்து கடற் கரும்புலிகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

விதுரன்
thinakkural.com

0 Comments: