Friday, December 14, 2007

மனமாற்றம் வராமல் களமாற்றம் வராது!

ஆட்கள் காணாமல் போகும் வீதத்தில் இலங்கைதான் முன்னணியில் திகழ்கின்றது என்று இலங்கைக்கு உலக சாதனைக் கிரீடம் சூட்டியிருக்கின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் குறுகிய ஒரு வாரகால அமர்விலும் ஆறாவது கூட்டத் தொடரிலும் இலங்கை குறித்து ஒரு பிடி பிடிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தக் கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் சீர்கெட்டு வரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து பல்வேறு விடயங்களை விலாவாரியாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

* இலங்கையில் சுயாதீன மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அதற்கு சர்வதேச ரீதியில் மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், அந்த ஆணைக்குழுவுக்கு ஒழுங்கீனமான முறையில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டமையாலும், நம்பகத்தன்மையற்ற அதன் செயற்பாடுகளும் அந்த ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை தொடர்பான நம்பிக்கையைச் சிதறடித்துவிட்டன.

* உயர்மட்டக் கொலைகள், ஆட்கள் கடத்தப்பட்டுக் காணாமற்போனமை போன்ற முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது அதன் செயற்பாடும், பெறுபேறுகளும் குறித்து உயர்ந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நியமிக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்தும் எதுவுமே நடக்கவில்லை. அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்கள் குழுவும் அந்த ஆணைக்குழு சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்துக் கவலையும் விசனமும் வெளியிட்டிருக்கின்றது.
* இந்த மனித உரிமை விவகாரப் பிரச்சினைகளைக் கவனிப்பதற்குப் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என இலங்கை அரசு கூறினாலும் இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவும், நம்பகத்தன்மையுடைய விதத்தில் பகிரங்கமாகப் பொறுப்புச் சுமத்தவும் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை.

இப்படி நேரடியாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றார் ஆர்பர் அம்மையார்.
இலங்கையில் மனித உரிமை நிலைவரங்களை அண்மைக்காலத்தில் இங்கு வந்து சென்ற பல ஐ.நா.அதிகாரிகள் நேரடியாக அவதானித்து உறுதிசெய்த பின்னர் தங்களின் விஜயங்களின் முடிவில் அம்பலப்படுத்திச் சென்றிருக்கின்றார்கள்.

அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளர் ஸேர் ஜோன் ஹோம்ஸ்
யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைப் பேணும் ஐ.நா. தொடர்பாளரின் விசேட பிரதிநிதி அலன் றொக்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார்
சித்திரவதைகள் விடயம் பற்றிய ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி மான்பிரட் நொவாக் இப்படிப் பலர் வந்து சென்று விட்டார்கள்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் இடம்பெயர்ந்தோரின் விவகாரங்களைக் கையாளும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி கலாநிதி வோல்டர் கலின் இலங்கையில் இச்சமயம் விஜயம் மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது.

அதேபோன்று, வல்வந்தமாக அல்லது இணக்கமின்றி காணாமற் போகச் செய்யப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா.செயற்குழுவின் தலைவரும், பிரதிநிதியுமான சந்தியாகோ கோர்க்கியுராவும் இலங்கைக்கு விஜயம் செய்து விடயங்களை நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பை அளிப்பதற்கு இலங்கை அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகின்றது´.

இப்படி எத்தனை பிரமுகர்கள் எத்தனை சர்வதேசப் பிரதிநிதிகள் ஐ.நாவிலிருந்தோ அல்லது பிற சர்வதேச மட்டங்களிலிருந்தோ இங்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, எத்தனை அறிக்கைகளை வெளியிட்டாலும் ஆட்கடத்தல், காணாமற் போகச் செய்தல், படுகொலைகள், கப்பம் கோரல், ஆட்களைப் பணயம் வைத்து அச்சுறுத்திக் காரியங்களைச் செய்தல் போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்களை அடியோடு நீக்கும் திடசங்கற்பமும், மன உறுதியும், மனமாற்றமும் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைத் தலைமைக்கு ஏற்படாதவரை களநிலைமையில் மாற்றம் ஏதும் நிகழவே மாட்டாது என்பதுதான் யதார்த்தம்; நிதர்சனம்; மெய்மைநிலை.

14.12.2007

uthayan.com

0 Comments: