Sunday, December 16, 2007

"ஊடகங்கள் மீதான வன்முறைகள்"

கடந்த 27.11.2007 அன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிர்களை அர்ப்பணித்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூடியிருந்த வேளையில் கிளிநொச்சி வான்பரப்பில் எழுந்த பேரிரைச்சல் அப்பகுதியையே அதிர வைத்தது.

சிறீலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் எங்கு இலக்கு வைக்கப் போகின்றன என்பதை ஊகிக்கும் முன்பாகவே பெரும் வெடியோசை எழுந்து கிளிநொச்சி நகர் அதிர்கிறது. புலிகளின் குரல் வானொலியின் நடுவப்பணியகத்தில் பெரும் கரும்புகை மண்டலம் எழுகிறது. அக்குண்டு வீச்சில் புலிகளின் குரல் பணியாளர்கள் மூவர் கொல்லப்படுகின்றனர். இருவர் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இன்னும் சிலருக்கு சிறுகாயங்கள் ஏற்படுகின்றன. வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள், அயல்களில் வசித்த
வர்கள் ஏழுபேர் கொல்லப்படுகின்றனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் அடைகின்றனர்.

அதேவேளையில், புலிகளின் குரலின் காரியாலயங்கள் செயலகம் என்பன முற்றாகவே நிர்மூலமாக்கப்படுகின்றன. அருகில் உள்ள வர்த்தக நிலையங்களும் வீடுகளும் அழிக்கப்படுகின்றன.
சிறீலங்கா விமானப்படையில் ஒரு பெரும் கொலை வெறியாட்டம் நடத்தி முடிக்கப்படுகிறது. இவ்வளவு அனர்த்தங்கள் இடம்பெற்ற போதும் புலிகளின் குரல் வானொலி எவ்வித பதட்டமுமின்றி ஏற்கனவே வகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதன் மூலம் புலிகளின் குரல் ஒரு விடுதலை அமைப்புக்குரிய ஊடகமாக நெருக்கடிகளுக்குள்ளும் நிமிர்ந்து நிற்கும் ஒரு நிறுவனமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை, மாவீரர் வணக்க நிகழ்ச்சிகள் என்பன எவ்வித தடங்கலுமின்றி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.
எது எப்படியிருந்த போதிலும் இந்த விமானத்தாக்குதல் சிறீலங்கா அரசின் ஒரு அநாகரீக, சனநாயக மரபுகளைப் புறந்தள்ளுகின்ற ஒரு நடவடிக்கையாகும். ஆனால் சிறீலங்கா அரசதரப்பினரோ இக்கொடூரச் செயலுக்காக பெருமிதப்பட்டுக் கொண்டதன் மூலம், சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாத தங்கள் அசிங்கமான போக்கை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதேவேளையில், புலிகளின் குரல் வானொலி மீதான தாக்குதலைக் கடுமையாகக் கண்டனம் செய்த சர்வதேச ஊடக அமைப்பு இது ஒரு போர்க் குற்றம் எனக் குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறே எல்லைகளற்ற ஊடகவிய
லாளர்கள் அமைப்பும் இத்தாக்குதலை கடுமையாக சாடியுள்ளது. ஆனால், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடு
களுக்கான சிறீலங்கா தூதுவர், இது போர்க்குற்றம் என்பதை மறுதலித்ததுடன், புலிகளின் குரல் ஒரு போருக்கான பரப்புரையை மேற்கொள்ளும் ஊடகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அவர் இத் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனம் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளது
ஆனால் சிறீலங்காவிற்கான ஐ.நா துாதுவரின் கருத்தே சிறீலங்கா அரசின் ஒட்டு மொத்தமான நிலைப்பாடு என்பது தொடர்பாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை என்பது தெளிவான விடயமாகும்.
இன்னும் சொல்லப்போனால், சிறீலங்கா அரசு தனது அத்துமீறல்களை அம்பலப்படுத்தும், அநாகரீகமான நடைமுறைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களை அடக்குவது, முடியாவிட்டால் அழிக்க முயல்வது என்பதை ஒரு கொள்கையாக வகுத்து செயற்பட்டு வருகிறது என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு.

இந்த நடைமுறை தமிழ் ஊடகங்கள் என்ற அளவிலேயோ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் என்ற அளவிலேயோ மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நாம் இங்கே அவதானிக்க வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் லக்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர் பரமேஸ்வரி கைது செய்யப்பட்டதுடன் அப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் அதன் சுதந்திர இயக்கத்தை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகரான துமிந்த சில்வாவின் உறவினரால் நடத்தப்பட்டு வந்த ஏ.பி.சி செய்தி நிறுவனம் முற்றாகவே தடைசெய்
யப்பட்டது. இவை மட்டுமின்றி அரசின் ஊழல்களையும் கருணா குழுவுக்கும் அரசாங்கத்திற்குமுள்ள நேரடித் தொடர்புகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி வந்த சண்டே லீடர் ஏரியூட்டப்பட்டு அதன் இயக்கம் சீர்குலைக்கபட்டது. ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள், கைதுகள் என்பன மூலம் ஊடகங்களை அடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நிமலராஜன், சிவராம், ஜீ.நடேசன் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் இக்பால் அத்தாஸ் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என வர்ணிக்கப்பட்டதும் ஊடகவியலாளர் வாமனன் கைது செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

இவற்றிலெல்லாம் எதிர்பார்த்த பலன் கிட்டாமல் போகவே இன்று சிறீலங்கா அரசு நேரடியாகவே ஊடக அழிப்புப் போரில் இறங்கியுள்ளது. அந்த அரசுக்கு எதிரான ஊடகங்களை அடக்குவது முடியாவிட்டால் அடக்குவது என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகவே புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், புலிகளின் குரல் விடயத்தில் அரசின் அந்த நோக்கம் படுதோல்வியடைந்து விட்டதன் சாட்சியமாகப் புலிகளின் குரல் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊடக மையங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பனவற்றின் மீது தாக்குதல்கள் நடத்துவது ஒரு போர்குற்றம் என்பது ஐ.நா சர்வதேச மன்றத்தின் முக்கிய தீர்மானங்களில் ஒன்று. ஆனால், சிறீலங்கா அரசு ஏற்கனவே பாடசாலைகள், ஆலயங்கள் மீது இரக்கமற்ற முறையில் விமானத் தாக்குதல்களையும், எறிகணை வீச்சுக்களை
யும் நடத்தித் தன் கீழ்மையை வெளிப்படுத்தியிருந்தது.

இவ்வாறே கோட்டையில் இராணுவம் முகாமிட்டிருந்த போது யாழ். போதனா மருத்துவமனைக்கு எறிகணை வீசி அங்கு பல உயிர்களைப் பலியெடுத்தது சிறீலங்கா அரசு. அதேவேளையில் அண்மையில் கிளிநொச்சி மருத்துவமனைக்கு வீசப்பட்ட விமானக்குண்டு இலக்கு தவறிய போதும் அதில் சேதங்கள் ஏற்பட்டன. ஏற்கனவே மருத்துவமனைகள் பாடசாலைகளில் தாக்குதல்களை நடத்தித் தன்னை ஒரு போர் குற்றவாளியாக இனம் காட்டிக் கொண்ட சிறீலங்கா அரசு, புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மீண்டும் ஒரு முறை தனது சர்வதேச நியமங்களை உதாசீனம் செய்யும் போக்கை நிரூபித்துள்ளது. இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால், சிறீலங்கா அரசாங்கம் ஜனநாயகக் கோட்பாடுகளை முற்றாக நிராகரித்து பிரகடனப்படுத்தப்படாத ஒரு இராணுவ அரசாக தன்னை இனம் காட்டி வருகிறது.

புலிகளின் குரல் வானொலி தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஒரே வானொலியாக விளங்கி வருகிறது. இது உள்ளூரில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் இணையத்தளம் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தி வருகிறது. அதிலும் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தின் போதும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் உரையை ஒலிபரப்பிவருகிறது.

இவ்வுரையை உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் வெகு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதுண்டு. 27.11.2007 அன்றும் மாவீரர் தின உரை ஒலிபரப்பப்படவிருந்த சந்தர்ப்பத்திற்கு சிறிது நேரம் முன்பாகவே புலிகளின் குரல் வானொலி நிலையம் தாக்கப்பட்டது. அதாவது தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உரையை தமிழ் மக்களோ, சர்வதேச சமூகமோ செவிமடுக்க கூடாது என்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. ஒலிபரப்பு தொடர்ந்து நடந்து தேசியத் தலைவரின் உரையும் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பாகியது.
எனினும் இத்தாக்குதல் மூலம் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளது.

அதாவது தமிழ் மக்களின் குரல் பரிசீலிக்கப்படுவதை மட்டுமன்றி, கேட்கப்படப் போவதைக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பது தான். இப்படியான ஒரு அரசு தமிழ் மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான ஒரு தீர்வை சமாதான வழியில் வழங்குமா? இப்படியான ஒரு அரசுடன் பேச்சுக்களை மேற்கொள்வதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? இது இன்று சர்வதேசத்தின் முன்பாகத் தமிழ் மக்கள் வைக்கும் கேள்வியாகும். இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப்போகிறது?
கொசோவா மக்களின் நியாயபூர்வமான உணர்வை, கிழக்கு தீமோர் மக்களின் விடுதலை வேட்கையைப் புரிந்து கொண்ட சர்வதேசத்தால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளைப் புரிய முடியவில்லை.

பர்மாவினதும் பாக்கிஸ்தானதும் இராணுவ ஆட்சியாளர்கள் மேல் அழுத்தம் பிரயோகிக்கும் சர்வதேசம், சிறீலங்கா ஆட்சியாளர் மீது பாராமுகமாக இருப்பது ஏன்? ஊடகங்களின் மீதான வன்முறைகள் உட்பட ஒரு சர்வாதிகார வலயத்தை உருவாக்குவரும் சிறீலங்கா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைப் புரிந்து அதற்கேற்ப சர்வதேசம் செயற்படும் போது தான் இலங்கைத்தீவில் சர்வதேசம் எதிர்பார்க்கும் ஒரு நிரந்தர அமைதி ஏட்டப்பட முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் வடகிழக்கிலும் தென்னிலங்கையிலும் இரத்த ஆறு ஓடுவதை எவராலும் தடுத்துவிட முடியாது.

நா.யோகேந்திரநாதன்

0 Comments: