Monday, December 24, 2007

எங்குமில்லைப் பாதுகாப்பு!

யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்து யாழ். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு பொதுமக்களை சிறிலங்காப்படையினர் கடத்திச்சென்றுள்ளமை நீதிமன்றத்தாலோ அன்றிச்சிறைச்சாலைகளிலோ கூட தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது.

சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தமிழ்க்; கைதிகள் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் ஒன்றும் புதியதொன்றல்லத்தான். சிறைச்சாலை அதிகாரிகளின் வன்முறை, சிறையிலுள்ள சிங்களக் காடையர்களின் வன்முறை, வெளியிலுள்ள காடையர்கள் கடந்த காலத்தில் சிறைக்குள் புகுந்து தாக்குதல் என்ற வகையில் பலதடவை தமிழ்க்கைதிகள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர்.

சிறிலங்காவிலுள்ள பாதுகாப்பான சிறைக்கூடங்கள் எனக் கருதப்படும் வெலிக்கடை- மகசீன் சிறைகளிலும், இத்தகைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேசமயம் தமிழ் இளைஞர்களுக்கு புனர்வாழ்வு எனக்கூறி; தடுத்து வைக்கப்பட்ட பிந்துனுவௌ போன்ற தடுப்பு முகாம்களிலும் இத்தகைய தாக்குதல்களும் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன.

ஆயினும் தற்பொழுது யாழ். சிறைகளிலும் இடம்பெற்றுள்ள விடயமானது முன்னைய விடயங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகும். அதாவது முன்னையவர்கள் போன்று காரணத்துடனோ, அன்றி காரணமின்றியோ கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களும் நீதிமன்றம் கொண்டு செல்லப்படாதவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியமை போன்றதல்ல இது.

தற்பொழுது கடத்தலுக்கு உள்ளாகியுள்ளவர்களின் நிலைமையோ வேறுபட்டதாகும். அதாவது உயிர்த்தஞ்சம் கோரி மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்து நீதிமன்றத்தினால் பாதுகாப்பிற்கென இவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அதாவது அடைக்கலம் தேடிய இடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளனர்.

அதாவது வேறு போக்கிடம் இன்றியே உயிர் அச்சுறுத்தல் காரணமாக- மனித உரிமை ஆணைக்குழுவிடம் சரணடைந்து நீதிமன்றத்தின் பாதுகாப்பைத் தேட அவர்கள் முற்பட்டிருந்தனர். இத்தகையதொரு நிலையில் அவர்கள் கடத்தப்படுவதானது சிறிலங்கா ஆயுதப்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எங்குமே அவர்கள் தஞ்சம் கோர முடியாத நிலை ஒன்றையே தோற்றுவித்துள்ளது.

அதுமட்டுமன்றி மனித உரிமை ஆணைக்குழுவிலோ அன்றி நீதிமன்றத்திலோ சரணடைதல்: பாதுகாப்புத் தேடுதல் என்பது கொலைகாரனின் குகைக்குள் பாதுகாப்புத் தேடுதல் போன்றதொன்றாகவே கொள்ளவேண்டியதும் ஆகியுள்ளது.

ஏனெனில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியவர்களையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்கென அனுமதிகோரும் போது நீதிமன்றம் அதற்கான அனுமதியைக் கேள்வி இன்றியே வழங்கிவிடுதல் கூடும். ஏனெனில் பயங்கரவாதத் தடைச்சட்டமோ எவரையும் காரணமின்றிக் கைது செய்யவும் விசாரிக்கவும் தடுத்து வைக்கவும் அனுமதி அளிக்கின்றது.

இன்றைய நிலையில் அவசரகாலச் சட்டத்துடன் இணைந்ததாகப் பயங்கரவாதத் தடைச்சட்டமானது காரணமின்றிக் கைது செய்யவோ தடுத்துவைக்கவோ மட்டுமன்றிக் சிறைச்சாலையிலிருந்து கடத்திச் செல்லவும் படுகொலை செய்யவும் கூட படைத்தரப்பிற்கு அனுமதியையும் அங்கீகாரத்தையும் அளித்துள்ளது எனில் மிகையாகமாட்டாது.
அவ்வாறு இல்லாதுவிடில் நீதிமன்ற உத்தரவு பெற்று சிறையில் இருந்தவரை விசாரணை எனக்கூறி; சந்திப்பிற்கு அனுமதியைப் பெற்று எவ்வாறு கடத்திச் செல்லமுடியும். இத்தகையதொரு நிலையில் இக்கடத்தலுக்குப் பொறுப்பு ஏற்பது யார்? விசாரணைக்கு அனுமதியளித்தது நீதிபதியா? அன்றி கடத்திச் சென்ற சிறிலங்கா ஆயுதப்படையினரா?

ஆனால் இக்கேள்விகளுக்கு சிறிலங்கா நீதிமன்றமோ அன்றி ஆயுதப்படைத்தரப்போ பதில் அளிக்கப்போவதில்லை. இதன் வெளிப்படையானது சிறிலங்கா நீதிமன்றங்களினால் தமிழ் மக்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் அளிக்க முடியாது என்பதே ஆகும். ஆனால் சிறிலங்கா நீதிமன்றம் மட்டுமல்ல சிறிலங்கா ஆட்சியாளர்கள் ,அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவையுமே தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத்தயாராக இல்லை. அதாவது இலங்கையில் சிங்கள அரசிடம் இருந்து தமிழர்கள் பாதுகாப்பைப் பெறமுடியாது என்பதே யதார்த்த நிலையாகும்.

நன்றி: ஈழநாதம்

0 Comments: