Friday, December 7, 2007

அடியாத மாடு படியாது..!

காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதைப்போலத்தான் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் போர் குறித்த சிந்தனையும் அதன் நிலைப்பாடும் காணப்படுகின்றது.

தமிழர் தாயகத்தில் எத்தனை தொன் குண்டு வெடித்தால் என்ன? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் வன்பறிப்புச் செய்யப்பட்டால் என்ன? எத்தனையாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் என்ன? இது குறித்த கவலையோ, கரிசனையோ தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குக் கிடையாது. போரும் அதன் அழிவும் தமிழர்களுக் கானது என்பதே தென்னிலங்கை சக்திகளின் ஒருமித்த நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இந்தப்போரை அரச படைகள் எனும் பெரும் மனிதப்பட்டாளம் மற்றும் ஆயுத, அதிகார பலம் மூலம் தமிழர் தாயகத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கலாம் என்ற தவறான கற்பிதம் தென்னிலங்கை சக்திகளிடையே காணப்படுகிறது.

ஆனால் இந்த எண்ணங்களுக்கு மாறாகப் போர் தமிழர் தாயகப் பிரதேசங்களைத் தாண்டித் தென்னிலங்கையின் எல்லைகளையும் அதன் மையங்களையும் தொடுகின்றபோது கொழும்பு கலங்கித்தான் போகிறது.

அப்போது மட்டும்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் கரிசனையும் தென்னிலங்கையில் ஏற்படுகிறது.

தென்னிலங்கை மக்களின் இயல்பு வாழ்வும் நாளாந்ந நடவடிக்கைகளும் பாதிப்புறுகின்றபோது ஏற்படுகின்ற உணர்வு ஏனோ தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்றபோது கொழும்புக்கு ஏற்படுவதில்லை.

இந்நிலையில் கிழக்கிலிருந்து புலிகளை அடியோடு துடைத்தழித்து விட்டோம் எனவும் கிழக்கிலிருந்த புலிகள் எல்லாம் வன்னிக்குத் தப்பியோடிவிட்டனர் எனவும் அரசு பிரச்சாரம் செய்து ஓய்வு கொள்வதற்கு முன்னரே புலிகள் அம்பாறையைத்தாண்டி அம்பாந்தோட்டையின் யால சரணாலயத்துள் மூட்டி வருகின்ற போர் நெருப்பு சிங்களவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளைவு கலங்கிப்போன தென்னிலங்கை சக்திகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தென்னிலங்கையின் அச்சத்தை பின்வருமாறு கூறுகிறார்.

அதாவது யால வனத்திற்குள் ஊடுருவிப் புலிகள் தாக்குதலை நடாத்துகின்றனர். எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்புத்தேடி மேல்மாகாணத்திற்கு வரும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார்.

இப்போதும் சிங்களவர்களின் பாதுகாப்புக் குறித்த கரிசனைதான் அங்கு முதன்மை பெறுகின்றதே தவிர இந்தப் பாதுகாப்பற்ற நிலையின் உள்ளார்ந்தம் குறித்த சிந்தனையோ அக்கறையோ காணப்படவில்லை.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை, தமிழர்களின் உரிமையை வழங்காதவரை இந்த இலங்கைத்தீவில் யாருக்குமே பாதுகாப்புக்கிடையாது என்பதையே போரின் விளைவுகள் அப்பட்ட மாகச் சுட்டி நிற்கிறது.

ஆனால் இந்த உண்மையை சிறிலங்கா அரசு புரிந்து கொள்வதாக இல்லை. அத்தோடு இந்த உண்மையை சர்வதேசமும் சிறிலங்காவுக்கு உரிய வகையில் உணர்த்துவதாகவும் இல்லை.

இப்போது யால சரணாலயத்தினுள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கொழும்பிற்குள் புலிகள் ஊடுருவி விட்டனர் எனவும் கூக்குரலிடுவதனாலோ அப்பாவிப் பொதுமக்களை சிறைக்கூடங்களில் அடைப்பதாகக் கூறிக்கொண்டு வதைக்கூடங்களுக்கு அனுப்புவதாலோ தீர்வெதனையும் எட்டிவிட முடியாது.

முதலில் இந்த அச்சம் எங்கிருந்து எதன் விளைவாகத் தோன்று கின்றதென்ற தென்னிலங்கை சக்திகளுக்குத் தெரிந்த காரணத் திற்குத் தீர்வை எட்டமுடியாதவிடத்து போர் அவர்களின் வாசலைத் தட்டுவதையும் அதன் விளைவாக அச்சம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது.

மாறாகப் போரும் அதன் விளைவுகளும் இந்த இலங்கைத்தீவில் எல்லாப்பாகத்திற்கும் பரவுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

எனவே இதனைத் தடுக்கக் கூடிய மன மாற்றமும் அறிவார்ந்த சிந்தனையும் தென்னிலங்கையில் ஏற்பட வேண்டும். ஆனால் அத்தகைய விஞ்ஞான பூர்வமான மாற்றம் சிறிலங்காவில் தோன்று வதாக இல்லை.

அப்படித் தோன்ற வேண்டுமானால் அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால் மட்டும் தான் தோன்றும் போலிருக்கிறது.

நன்றி: ஈழநாதம்

1 Comment:

வெத்து வேட்டு said...

don't we claim that ltte doesn't target civilians...?
then what is this article?
so in the end both side are targetting civilians and claiming they are "ANGELS" and "SAVIORS"....