Wednesday, December 5, 2007

கிழக்கு மகிந்தவின் மகுடமா? முள்ளா?

நவம்பர் 22 ஆம் திகதி அம்பாறை வக்குமுட்டியா சிறப்பு அதிரடிப்படைத் தளத்தின் வெளிக்காவல் நிலைமீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், கிழக்கு பற்றி அவதானிகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் தீர்த்து வைத்துள்ளது.

அங்கே விடுதலைப் புலிகளின் அணிகள் கட்டமைப்போடு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் என்ற யதார்த்தம் ஒரு மாதத்திற்குள் அம்பாறையில் மட்டும் மூன்று தடவை தாக்குதல் நடத்தப்பட்டதினால் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அரச படைகளால் புறக்கணிக்க முடியாத பல படைத்துறைச் செயற்பாடுகளில் புலிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒக்ரோபர் 15 ஆம் திகதி அம்பாந்தோட்டை மொனராகலை எல்லைப்பகுதியில் அமைந்திருந்த சிறிலங்காப் படையினரின் சிறிய முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் பற்றிய கவலைகள் தென்னிலங்கையின் பல மட்டங்களிலும் எழத்தொடங்கின.

தொடர்ச்சியாக அதே மாதம் 25 ஆம் திகதி கடற்படையினர் பயணித்த பஸ் வண்டியின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். அப்படியொரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் அந்த வண்டியின் சில்லுறை வெடித்ததால் ஏற்பட்ட சத்தத்தால் எச்சரிக்கையடைந்த கடற்படையினர் சூடு நடத்திய சம்பவமே அது என்றும் சிறிலங்கா படைத்தரப்பு மறுத்தது. தாக்குதல் செய்தியை வெளியிட்ட காரணத்தால் மகிந்த இழுத்து மூடிய ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்னமும் திறக்கப்படவில்லை.

ஆயினும், இரண்டொரு தினங்களிலேயே, சம்பந்தப்பட்ட வண்டியில் இருந்த சூட்டுத் துவாரங்கள் வெளியில் இருந்து உள்நோக்கிச் சுடப்பட்டதால் உண்டானவை என்ற செய்தியை தென்னிலங்கையின் சிங்களத் தினசரியொன்று வெளியிட்டது.

நவம்பர் 9 ஆம் திகதி இருவேறு சம்பவங்கள் நடந்தன. புலிகள் அம்பாறையின் றூபஸ் பகுதியில் இருக்கும் சிறப்பு அதிரடிப்படை முகாம் மீது குறிச்சூடு, இலகு யந்திரத் துப்பாக்கிச் சூடு மற்றும் 81 மி.மீ மோட்டார் சூடுகளால் தாக்கியிருந்தனர். அதேநேரம் அம்பாந்தோட்டை மொனராகலை எல்லையில் மேலும் ஒரு வெளிக் காவல் நிலை தாக்குதலுக்கு உள்ளானது. இவ்விரண்டு தாக்குதல்களிலும் படைத்துறை வகையில் அரச தரப்பிற்கு ஏற்பட்ட சேதம் மறைக்கப்பட்டாலும், பரப்புரை வகையில் அதற்கு ஏற்பட்ட வீழ்ச்சி பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. தென்னிலங்கையில் முதல் முறையாக போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வு நிகழ்ந்தது.

அவ்விடப்பெயர்வு மற்றும் குழப்பங்கள், அரசு முன்னெடுக்கும் மூலோபாயத்திற்கான தெற்கின் ஆதரவை வலுவிழக்கச் செய்து விடும் என்ற அச்சத்தால், அதை மட்டுப்படுத்துவதற்கும் மூடிமறைப்பதற்கும் அரசாங்கம் அவதிப்பட்டது.

அம்பாந்தோட்டையில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் தடய ஆய்விற்காக மாத்தறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, போரின் வாடை அங்கே திட்டமும் தெளிவுமாக உணரப்பட்டது. மக்கள் பதற்றமடைந்து, கூட்டங்கூட்டமாகச் சேரத்தொடங்கினர். அதைக் கட்டுப்படுத்த முடியாத மாத்தறை மாவட்ட காவற்றுறை மேலதிகாரி கூடியிருந்த மக்களிடம், '....புலிகள் படையினரை மட்டும் தான் தாக்குவார்கள், பொதுமக்களை ஒன்றும் செய்யமாட்டார்கள்....." என்ற நற்சான்று வழங்கவேண்டிய அளவிற்கு தெற்கு உள்ளுர அவலப்பட்டது.

என்ன முயற்சி செய்தும் சில விளைவுகளை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை.

சுமார் 12,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தொழில் இழந்து நிற்பதை எதிர்;க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை கொண்டு வந்தன. தெற்கின் எதிர்காலப் பாதுகாப்பு பற்றிய ஆவேசமான வாக்குவாதங்கள் எழுந்தன. புலிகளை வன்னிக்குள் முடக்கிவிட்டோம், இதோ, ஓங்கிக் குத்திக் கொல்லப்போகிறோம் என்பது போன்ற நாடபாணி வாய்ச்சாலங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தெற்கைக் காப்பாற்றுவதற்கான தீவிர படைய மூலோபாயம் ஒன்றைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு உண்டாயிற்று.

அம்பாந்தோட்டை, மொனராகலை எல்லைப்புறப் பாதுகாப்பிற்காக 'நடவடிக்கைக் கட்டளைப் பணியகம்" ஒன்று நிறுவப்படும், அதன் பொறுப்பில் ஒரு பிரிகேடியர் தர 'நடவடிக்கைக் கட்டளையதிகாரி" நியமிக்கப்படுவார், அக்கட்டளையகத்தின் கீழ் ஒரு பட்டாலியன் வரையான தரைப்படையினரும், 1,500 வரையான ஊர்காவற்படையினரும் மேலதிகமாக காவற்றுறையினரும் நிறுத்தப்படுவார்கள் என்ற பகிரங்க அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. தரைப்படை, காவற்றுறை, ஊர்காவற்படை உள்ளிட்ட தொகை 3,000 வரை வரும் என்றும் காட்டு நடவடிக்கையில் அனுபவம் கொண்ட சிறப்புப்படைக் கொம்பனியொன்று அங்கே நகர்த்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக, அங்கே ஒரு போர்முனை திறக்கப்பட்டதை நடைமுறையளவில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

அதாவது, கிழக்கில் அரசாங்கம் கடந்த ஒன்றரை வருடமாக நிரூபிக்க முயன்ற நிலைப்பாட்டைக் கைவிட்டு, மூலோபாயத்தையும் மீளமைத்திருக்கிறது.

மாவிலாற்று நடவடிக்கையோடு ஆரம்பித்த பழைய மூலோபாயத்தின்படி, பெருமெடுப்பு நடவடிக்கைகளின் மூலம் புலிகள் கிழக்கிலிருந்து அகற்றப்பட்டபின், அங்கே படைச்சிக்கன அடிப்படையில் பெரும்பாலான பகுதிகள் சிறப்பு அதிரடிப்படையின் கையில் கொடுக்கப்படும். ஊர்காவற்படையினர் அதிகரிக்கப்படுவர். அந்நிலையில், அங்கிருக்கும் தரைப்படைத் துருப்புக்களில் பெரும்பாலானவை வன்னிப் பெருநிலப்பகுதியில் இருக்கும் புலிகளின் வலுநிலைகள் மீதான நடவடிக்கைக்குத் திருப்பிவிடப்படும்.

அண்மைக்காலம் வரை அந்த அடிப்படையில்தான் சம்பவங்கள் நகர்ந்தன. நந்தி மித்திர பிரிகேட்டிற்கான ஆளணி கிழக்கில் அதிகரிக்கப்பட்டது. முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதிக்கும் பொறுப்பாகவிருந்த சிறப்பு அதிரடிப்படையினரிடம் மட்டக்களப்புப் பட்டணமும், படையினர் புதிதாக ஆக்கிரமித்த படுவான்கரையும், ஏ-5 சாலையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியும,; ஏ-15 சாலையின் மேலும் ஒரு பகுதியும் கொடுக்கப்பட்டன.

சிறப்பு அதிரடிப்படையினர் பொறுப்பேற்ற இடங்களில் இருந்த பட்டாலியன்களும் நடவடிக்கையில் பங்கேற்ற பட்டாலியன்களில் சிலவும் மன்னார் களமுனைக்கான புதிய டிவிசனுக்கு வழங்கப்பட்டன.

இருந்தாலும், மட்டக்களப்பில் மாவீரர் தினத்திற்கு முந்திய 10 நாட்களில் மூவேறு சம்பவங்களில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வாகரையில் ஒரு தரைப்படையினனும், ஆயித்திய மலையில் ஒரு தரைப்படையினனும் களுதாவளையில் இரு அதிரடிப்படையினரும் வௌ;வேறு நாட்களில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் கிழக்கைப் பலப்படுத்த மகிந்த நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

மட்டக்களப்பு பொலநறுவை மாவட்டங்களை இணைத்து அமர்த்தப்பட்டிருக்கும் 23 ஆவது டிவிசன் கட்டளையகம் முன்பு வெபர் அரங்கத்தின் அருகேயுள்ள வாடி வீட்டில் நிலைகொண்டிருந்தது. 1997 இல் வவுணதீவு முகாம் மீது புலிகள் தாக்குதல் செய்யும்போது இந்தக் கட்டளையகத்தின் மீதும் செல் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அந்த டிவிசன் கட்டளையகம் வெலிக்கந்தைக்கு மாற்றப்பட்டது. இப்போது அந்த டிவிசன் கட்டளையகத்தை மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பதுளை வீதியில் அமைக்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக படைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அம்பாறையின் எல்லையில் ஏற்பட்டுள்ள படைக்குவிப்போடு இதையும் ஒப்பு நோக்கினால், அங்கே நேர்ந்தது போன்ற ஒரு நிலை இங்கே உண்டாகா வண்ணம் ஒரு முன்னேற்பாட்டைச் செய்வதாகவும் இதைக் கருத முடியும்.

இது நிச்சயமான மீள்திட்டமிடல் என்பது வெளிப்படை. இது பழைய சில நிகழ்வுகளை நினைவூட்டக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் நீண்ட நிகழ்ச்சி நிரல்களை தனது நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சமாக மாற்றிவிடுவதை புலிகளின் தலைமை பலமுறை செய்து காட்டியிருக்கிறது. ஆரம்பத்தில் மிடுக்கோடு தோற்றமளிக்கும் சிறிலங்காவின் செயற்திட்டங்கள் காலம் போகப்போகத் தொய்வடைந்து தம்மை அறியாமலே புலிகள் விரும்பும் திசையில் செல்வது முன்னரும் நிகழ்ந்திருக்கிறது.

ஜெயசிகுறுவின் போது சிறிலங்கா படையினர் அகலக்கால் பரப்புவதற்கு புலிகளின் தலைமை எவ்விதம் வழிசெய்து கொடுத்தது என்பது அதற்கான உதாரணங்களில் ஒன்று.
இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் எதிரியை இடைவிடாமல் தேடிக்கொண்டிருப்பதை தன்னுடைய நிகழ்ச்சி நிரலாகவே இந்திய இராணுவம் நினைத்திருந்தது. தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்களின் காலம் கழியவேண்டும் என்பதாகவே புலிகளின் தேவையும் இருந்ததை பிந்திய ஆய்வுகள் வெளிப்படுத்தின.

இவ்விதமாக, கிழக்கிலும் எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே புலிகளின் நிகழ்ச்சி நிரலினுள் படையினர் இறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும், மணிமகுடம் என்று கிழக்கைச் சூடிக்கொண்ட மகிந்த, இப்போது அது முட்கிரீடம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார் என்பதே யதார்த்தம். அதைச் சந்தடியின்றித் தானாகவே இறக்கிவைக்கும் வழிகளை எதிர்காலத்தில் அவர் தேடவேண்டியிருக்கும்.

சேனாதி
நன்றி: வெள்ளிநாதம் (30.11.07)

0 Comments: