Tuesday, December 11, 2007

முழு அளவு யுத்தத்துக்கான முன்னறிவிப்புகள் வருகின்றன

இக்கட்டான கட்டத்தில் சிக்கியிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எத்திசை நோக்கியதாக அமையப் போகின்றது?
ஓராண்டுக்கு முன் மறைந்த புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தமது கடைசி நூலின் கடைசி அந்தமாக எழுதிய வார்த்தைகள் மேற்படி கேள்விக்கு ஓரளவு பதிலை ஊகிக்கக் கூடிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கின்றன.
""இலங்கைத் தீவில் சமாதானத்துக்கு விரோதமாக இயங்கும் சக்திகள் எவை என்பதைச் சர்வதேச உலகம் இன்று நன்கறியும். இந்தச் சக்திகள் பல முனைகளில் இருந்து, பல வழிகளைக் கையாண்டு, அமைதியைக் குலைக்க முனைகின்றன. சமாதானத்திற்கு விரோதமாக இந்தச் சக்திகள் ஏவிவிடும் வன்முறைப் புயலுக்கும் நிழல் யுத்தத்திற்கும் முகம் கொடுத்து, பொறுமையுடன் அமைதி காத்து வருகிறது விடுதலைப் புலிகள் இயக்கம். இந்தச் சமாதான சூழல் நீடித்து, நிலைத்து, தமிழரின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுமா ? அல்லது போர் வெடித்து, தமிழ் மக்களை அவர்களது சுயநிர்ணயத்தின் இறுதிக் கட்டத்தெரிவாக, தனியரசுப் பாதையில் தள்ளிவிடுமா? தமிழர் தேசத்தின் எதிர்கால அரசியல் வரலாறு எந்தத் திசையில் செல்லும் என்பதைச் சிங்கள தேசத்தின் இனவாத சக்திகளே இறுதியாகத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.''
இப்படி முத்தாய்ப்பு வைத்திருந்தார் அன்டன் பாலசிங்கம்.
இது சில வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட வாசகங்கள். இன்று, "புலிகள் பொறுமையுடன் அமைதி காத்து வருகின்றார்கள்' என்று கூறக்கூடிய நிலைமை இல்லை.
ஆனால், மதியுரைஞர் பாலா கூறியமைபோல தமிழர் தேசத்தின் தலைவிதியை மட்டுமல்ல, இலங்கைத் தீவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சிங்கள தேசத்தின் இனவாத சக்திகளே என்பது தெளிவு.
போரா, சமாதானமா என்ற தெரிவுகளில் போரே முடிவு என்பதை இந்தச் சக்திகள் தீர்மானித்து விட்டன என்பதும் உறுதி.
யுத்த நிறுத்தம் குறித்து இனிப் புலிகளுடன் அரசு பேசாது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம புதுடில்லியில் வைத்து அறிவித்திருப்பதை மேற்படி சக்திகளின் தீர்மானம் பற்றிய வெளிப்படுத்தலாகவே கொள்ள முடிகின்றது.
போர்நிறுத்தம் குறித்து இனிப் புலிகளுடன் பேச அரசு தயார் இல்லை என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட பின்னரும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் தமது பதவிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இந்த மண்ணில் இருந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
இலங்கைப் படைகளின் மிக நீண்டகால இராணுவ நடவடிக்கையான "ஜெயசிக்குறு' வை சிதறடித்து, இயக்கச்சி ஆனையிறவு கூட்டுப்படைத் தளங்களை நிர்மூலமாக்கி, "அக்கினிகீல' படை நடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, இராணுவச் சமவலு நிலையில் விடுதலைப் புலிகள் மேம்பட்டு நின்றபோது புலிகளுக்கு சமாதானக் கரம் நீட்டிய தென்னிலங்கை இன்று, இப்போது மீண்டும் யுத்த சந்நதம் கொண்டு நிற்கின்றது.
கடந்த யுத்தநிறுத்த காலத்தைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்தித் தன்னுடைய படைத்துறையை வலுமிக்க சக்தியாகத் துரிதகதியில் கொழும்பு கட்டி யெழுப்பியது. ஆயுதங்களை வாங்கிக் குவித்து, தரைப் படைகளுக்கு ஆட்சேர்ப்பையும் பயிற்சித்திட்டங்களையும் முன்னெடுத்து, விமானப்படைக்கு நவீன குண்டு வீச்சு விமானங்களையும், கடற்படைக்கு பாரிய யுத்தக் கப்பல்களையும் கொள்வனவு செய்து, தனது போரியல் இயந்திரத்தை பிரமாண்டமான அளவில் விரிவாக்கம் செய்து, நவீன மயப்படுத்திய பின்னர் இப்போது யுத்த சூளுரைகளையும் அறைகூவல்களையும் கொழும்பு அரசு விடுக்கிறது.
படைவலுச் சமநிலை பேணப்பட வேண்டும் என்ற போர்நிறுத்த உடன்பாட்டின் நியமத்தைப் புறக்கணித்துத் தன்னைப் பலப்படுத்தி விட்டதாகக் கருதும் கொழும்பு, அதன் அடிப்படையில் அதை நம்பிக்கையாகக் கொண்டு இனி யுத்த நிறுத்தம் குறித்துப் பேச்சே இல்லை என்று இப்போது தெட்டத் தெளிவாக அறிவித்திருக்கின்றது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
படை வலுச் சமநிலையில் தான் மேம்பட்டு வலிமையாக இருப்பதாக எண்ணும்போது கொழும்பு அரசு அமைதி வழித் தீர்வுக்கு விட்டுக்கொடுக்கும் தாராளத்தோடு இறங்கிவராது என்பதும்
படை வலுச் சமநிலையில் புலிகள் அமைப்பு பலவீனமுற்றிருப்பதாக உலகம் கருதும் சமயங்களில் யுத்த தீவிரத்தை விட்டு இறங்கி, அமைதி வழிப் பேச்சுக்குப் புலிகள் அமைப்பு இணங்காது என்பதும்
இலங்கை இனப்பிரச்சினையைக் கடந்த சில தசாப்தங்களாக உற்று நோக்கிப் பார்த்து வரும் அவதானிகளுக்கு நன்கு தெரியும்.
இத்தகைய பின்னணிகளை உள்வாங்கி, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தால் இலங்கைத் தீவில் பெரிய போரியல் தலைகீழ் மாற்றங்கள் நேரும்வரை அமைதிப் பேச்சு சாத்தியமேயல்ல. "இனி போர்நிறுத்தம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை' என்பது போன்ற யுத்தத்துக்கு கட்டியம் கூறும் முன்னோடி அறிவிப்புகளையும், முழு அளவில் வெடிக்கும் மிக மோசமான யுத்தத்தின் தாக்கங்களையும்தான் இந்த மண்ணில் காணக்கூடியதாக இருக்கும்.
அதுவே, இப்போது கட்டவிழ்கின்றது.

uthayan.com

0 Comments: