Saturday, December 15, 2007

சர்வதேச வலைப் பின்னல் இந்தச் சமயத்தில் யாருக்காக?

சர்வதேச விவகாரங்களை இலங்கை கையாளும் விதம் சந்தி சிரிக்கின்றது.
ஐ.நா. உயரதிகாரிகளை ஒரு மூத்த அமைச்சர் பயங்கரவாதிகள் என்கிறார். அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து அரசின் பிரதம கொறடா அப்படி அறிவிக்கின்றார்.
மற்றைய ஐ.நா. அதிகாரிகள் இலங்கை விவகாரம் புரியாமல் விடயம் தெரியாமல் உளறுகின்றனர் என்று அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு.
ஐ.நா. உதவி அமைப்புகள் பயங்கரவாதிகளான புலிகளுக்கு உதவுகின்றன என்று நாடாளுமன்றில் ஒரே ஏச்சும் திட்டும்.
அந்த வரிசையில் மேற்கு நாட்டுத் தூதுவர்களும் இப்போது இலங்கை அரசிடம் "அர்ச்சனை' வாங்கிக் கட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

மனதில் பட்ட சில உண்மைகளையாவது பகிரங்கமாக ஒப்புக் கொண்டமைக்காக இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் செமத்தியாக வாங்கிக் கட்டும் இக்கட்டில் சிக்கியிருக்கிறார். நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் அவரை ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள்.

இதேசமயம், மோசமடைந்து வரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் நிலைமை குறித்து இவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஒருவார குறுகிய கால கூட்டத் தொடரில் ஆராயப்பட்டிருக்கின்றது. இலங்கை நிலைமை சீர்செய்ய முடியாத கேவல கட்டத்தை அடைந்திருப்பதால், அங்கு மனித உரிமை நிலைமையைக் கண்காணித்துப் பகிரங்கப்படுத்துவதற்கான ஆணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகம் ஒன்று விரைந்து திறக்கப்படுவது அத்தியாவசியமானது என்று அந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வற்புறுத்தியிருக்கின்றார். அந்தக் கணிப்பீட்டை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், தென்கொரியா, சுவீடன், கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் அந்தக் கவுன்ஸிலின் அந்த ஆறாவது கூட்டத்தொடரில் வைத்தே முழு அளவில் ஏற்று ஆமோதித்திருக்கின்றன.

ஆனால் அந்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக ஏற்க மறுத்து அடியோடு நிராகரித்திருக்கின்றார். நிராகரித்தமையோடு அமையாமல் மேற்கு நாடுகள் உட்பட்ட இந்த உலக சமுதாயத்துக்கும் அவர் பெரிய தத்துவ உபதேசமும் செய்திருக்கின்றார்.

""தங்களுடைய நாட்டில் மனித உரிமைகளை நேர்சீராகப் பேணாத இந்த நாடுகள் இங்கு வந்து எங்களுக்கு மனித உரிமைகள் குறித்து உபதேசம் செய்யத் தேவையில்லை. எங்களைச் "சுத்தப்படுத்த' அவர்கள் முயல முன்னர் முதலில் தங்களின் வீட்டை உள்ளகத்தை அவர்கள் "சுத்தப்படுத்திக் கொள்ள' வேண்டும்.'' என்று மேற்கு நாடுகளுக்கு ஓர் அடி கொடுத்திருக்கின்றார் ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதர்.

நல்லது. தலைநகர் கொழும்பிலும், கோட்டை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றத்திலும்தான் இப்படி சர்வதேச சமூகத்தையும், சர்வதேச நிறுவனங்களையும் அரசுப் பிரதிநிதிகள் முறையற்ற விதத்தில் கையாள்கின்றனர் என்று பார்த்தால், சர்வதேச அரங்குகளிலும், ஐ.நா. போன்ற மன்றங்களிலும் கூட இதே கையாள்கைதான்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சக்திமிக்க நாடுகளைக் கொண்டு கொழும்பு அரசு சர்வதேச வலைப்பின்னல் ஒன்றைப் பின்னிய ஒரு காலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்னவோ உண்மைதான். அந்தளவுக்கு கொழும்பின் இராஜதந்திரக் கையாள்கைத் திறமையும் அப்போது இருந்ததும் மெய்தான்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.
கொழும்பு அரசு, தான் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் மூலம் சர்வதேச சமூகத்தைத் தனக்கு எதிராக சர்வதேச வலைப்பின்னல் ஒன்றைப் பின்னுவதற்குத் தூண்டி வருகின்றது போலவே எமக்குப் படுகின்றது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் வெளியிட்டு வரும் அறிக்கைகள், அவற்றில் கொழும்பு அரசைக் கடுமையாகச் சாடும் வகையில் அம்பலமாகிவரும் தகவல்கள், அவற்றையொட்டி ஐ.நாவின் அமைப்புகளும், ஏனைய வலிமையுள்ள நாடுகளும் பிரதிபலித்துவரும் கருத்துகள், அக்கருத்து நிலைப்பாடுகளுக்கு எதிராகக் கொழும்பு அரசின் பிரதிநிதிகள் சீற்றத்துடன் அவ்வப்போது வெளியிட்டுவரும் கொக்கரிப்புகள், கொதிப்புகள் என்பன கொழும்பு நிர்வாகத்துக்கு எதிராக மறைவில் ஒரு சர்வதேச வலைப்பின்னல் இப்போது பின்னப்படுகின்றதோ என்ற சிந்தனையைத்தான் தோற்றுவிக்கின்றன.

இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை இன மக்கள் தமிழ்பேசும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படும் விதத்தில் அரசுக் கட்டமைப்பின் செயற்பாடுகள் அராஜக வழியில் தீவிரமடைந்து வருவதைக் கட்டுப்படுத்தித் தடுக்க வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் சர்வதேச சமூகத்துக்கு உண்டு. ஆகவே, அதற்கான தடுப்பு வலைப் பின்னலை சர்வதேசம் பின்னுவதில் தப்பேதும் இல்லையே...............!
2007-12-15
uthayan.com

0 Comments: