Wednesday, December 26, 2007

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் தாயகத்தில் செல்லாதா?

""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமின்றி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்.'' என்பது நீதித்துறையின் உயர் வாசகமாகும்.
ஆனால், இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை இத்தீவின் சிறுபான்மையினரான தமிழருக்கு அதன் நியாயமான அரவணைப்பு எட்டாக்கனியோ என்ற அங்கலாய்ப்புத்தான் அம்மக்களுக்கு உள்ளது.

பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரச் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதத்தில் இறுக்கமான இரும்புச்சட்டப் பெட்டகம் போல அமைந்திருக்கின்றது இலங்கை அரசமைப்பும் அதன் சட்டங்களும்.
தமிழர் தரப்பின் இசைவின்றி இணக்கமின்றி பெரும்பான்மைச் சிங்களவர்களின் தன்னிச்சை முடிவாக உருவாக்கப்பட்ட இந்த அரசமைப்பு தமிழ் இனத்தின் மீது அதன் தலைவிதியாகப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிதும் நெகிழ்த்தவோ, விலத்தவோ, அரக்கவோ இடமளியாமல் நட்ட நெடுமரம் போல இறுகிக் கிடக்கும் இந்த அரசமைப்பு சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை.
1972 இற்கு முந்திய அரசமைப்பில் சிறுபான்மையினரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகள், 1972 இலும் பின்னர் 1978 இலும் தனித்துவமாக சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழர் தரப்பின் சம்மதம் இன்றியே ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகளினால் இல்லாதொழிக்கப்பட, இலங்கைத் தீவில் தமிழர்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சட்ட உத்தரவாத அங்கீகாரம் பறிக்கப்பட்டது.
சிறுபான்மையினரின் சிறப்புரிமைகளைப் பறித்து, அவர்களை மூன்றாந்தரப் பிரஜைகளாக்கி, அடக்கி, ஒடுக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் யாக்கப்பட்டு வருகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்கின் அடக்குமுறைக் கரங்கள் சட்ட நீதித்துறை வரை விரிந்தன. தமிழர் தாயகத்தின் புவியியல் நிலப்பரப்பைத் துண்டாடும் ஏற்பாடுகளை நீதிமன்றங்கள் மூலம் செயற்படுத்தும் அளவுக்கு இலங்கைத் தீவின் சட்ட ஏற்பாடுகளும், ஒழுங்கு முறைகளும் இறுக்கமடைவதற்கு அரசமைப்புச் சட்டமும் அதை ஒட்டிய சட்ட முறைமைகளும் வழிகோலின.


இலங்கைத் தீவு முழுவதற்குமாக இலங்கையின் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகள், வடக்கு கிழக்குத் தமிழர் தாயக விவகாரத்தில் மட்டும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் புறக்கணிக்கப்பட்டன.
இலங்கையின் மிக உயர்ந்த அதிகாரமும், நியாயாதிக்கமும் கொண்ட நீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆயமாகும். அந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளும், உத்தரவுகளும் மறு கேள்விக்கு இடமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது இத்தீவின் சட்ட ஒழுங்கு முறையாகும்.
ஆனால் தமிழர் தாயகத்தைப் பொறுத்தமட்டில் மட்டும் இத்தகைய தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது ஓரவஞ்சனையாக ஒதுக்கப்படுகின்றன என்பதே உண்மை நிலைவரமாகும்.
அதற்கு உதாரணமாக உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிங்களவர் ஒருவர் கொழும்பு சோதனைத் தடை முகாம் ஒன்றில் வைத்து சட்டத்துக்கு முரணான வகையில் தாம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுவது மிகத் தவறு எனத் தெரிவித்தது.

இவ்வாறு வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும்படியும் உயர்நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இறுக்கமான தீர்ப்பை உணர்ந்துகொண்ட அரசுத் தலைமை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கொழும்பு வட்டகைக்குள் உள்ள சோதனைச் சாவடிகளை அவசர அவசரமாக அகற்றியது.

ஆனால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு நிலைமை மாறவில்லை. ஒரு வகையில் முன்னர் இருந்ததை விட மோசமாக போக்குவரத்துக்கு நெருக்கடியான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டன. புதிது புதிதாக வீதிகளுக்குக் குறுக்காக சோதனைச் சாவடிகள் எழுந்தன.
தலைநகர் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிற இடங்களிலும் வீதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட தடை நிலைகள் உயர்நீதிமன்றத் தீர்ப்புக் காரணமாக மறைய, மறுபுறத்தில் தமிழர் தாயகத்தில் அவை புதிது புதிதாக எழுந்தன.

இது விடயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு சரிவரக் கைக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டிய கருத்துருவாக்கிகள் இதுகுறித்து கவலையுற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்கினராஜாவும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும் இந்நிலைமை குறித்து படை மற்றும் பொலிஸ் தரப்பு அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்திருக்கின்றனர்.

அவர்களது உத்தரவுகள் செல்லுபடியாகுமா? கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள் தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா? அதற்கான வாய்ப்புகள் எவை? போன்றவற்றுக்கு விடைகாண நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கின்றது.

"சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவது மாத்திரமல்ல, அது நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்' என்ற தத்துவத்துக்கு அமைய கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது வெளிப்படையாகக் காட்டப்படவும் வேண்டும். செய்யுமா அரசு?

Uthayan.com

0 Comments: