இலங்கையின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென அனைத்துலக சமூகம் விரும்புவதாக கூறுகின்ற போதிலும், பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களை சிறீலங்கா மீது கொடுக்காமல் மறுபுறத்தில் ஆயுத உதவிகளையும் நிதி உதவிகளையும் சிறீலங்காவிற்கு அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக கொடுத்து வருவதால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கப்படாமல் நீண்டு செல்வதாகவும், அது யுத்தத்தை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது சமாதானப் பேச்சின் மூலம் இறுதி முடிவை அடைய சர்வதேச சமூகம் கூட தடையாக இருபபதாகவும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டை இந்தியா மீது கூட பலரும் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிறீலங்காவிற்கு உதவும் அனைத்துலக சமூகமும் இந்தியாவும் சிறீலங்கா மீது தற்போது அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளன. எப்படியாவது தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வையுங்கள் என்பதே அந்த அழுத்தமாகும். இதுவரை நாளும் அனைத்துக் கட்சிக்குழுவை கூறி இழுத்தடித்து வந்த மகிந்தரிற்கு தற்போது புது நெருக்கடி ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம். மகிந்தரைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிக்குழு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதே அவரின் திட்டமாக இருந்தது. தமிழரிற்கு சிறு அளவிலேனும் அதிகாரங்களை கொடுக்கும் திட்டம் மகிந்தருக்கு கிடையாது.
உதாரணமாக தமிழர்களிற்கு ஒரு கிராம அமைப்பை கொடுப்பது கூட மகிந்தருக்கு பிடித்தமான விடயமாக இருக்காது. ஆனால், இந்தியாவும் மேற்குலகமும் வேறுவிதமாக சிந்திப்பதால் மகிந்தர் தற்போது உதிரித் தமிழ் கட்சிகள் ஏற்கக்கூடிய தீர்வு ஒன்றையாவது முன்வைக்க வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார்.
மகிந்தரின் தீர்வுத்திட்டத்தில் தமிழரிற்கோ விடுதலைப் புலிகளிற்கோ துளியளவும் நம்பிக்கை கிடையாது. மகிந்தரை ஒரு முழுமையான இனவாதியாகவே தமிழ் இனம் பார்க்கிறது.
மகிந்தரின் அனைத்துக்கட்சிக் குழு என்ற நாடகத்தை சர்வதேசம் நம்பிக் கொண்டிருந்த போதுதான், தமிழீழத் தேசியத்தலைவர் அவரின் மாவீரர் நாள் உரையில் அனைத்துக்கட்சிக் குழுவின் குட்டை உடைத்துவிட்டார். இதனை அடுத்து இரண்டு மாத விடுப்பிலிருந்த இக்குழுவை உடனடியாக கூட்டுமாறு மகிந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதுவும் தென்னிலங்கையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்துக்
கட்சிக் குழுவை கூட்டுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சிறீலங்காவின் அனைத்துக்கட்சி குழு, இறுதித்தீர்வை எட்டிக்கொண்டிருப்பதாக அரச தரப்பு கூறி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் குழுக்கூட்டத்தில் மத்திய அரசாங்கம் தன் வசம் வைத்திருக்க வேண்டிய அதிகாரம் பற்றிய பட்டியலை அங்கீகரித்து அதில் இணக்கப்பாட்டை கண்டுள்ளதாகவும், அதேபோல் பிரதேச ரீதியில் அதிகாரத்தைப் பகிரும் பிரிவிற்கான அதிகாரப் பட்டியல் குறித்த பிரிவிற்கும் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கில் ஆனந்தசங்கரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடைக்கால மாகாண சபையை நிறுவுவது பற்றி அரசு ஆராய்வதாக கொழும்பில் பரபரப்பாக கூறப்படுகிறது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்ட மூலத்தில் உள்ள முழுமையான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார் என்றும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் நாள் சிறீலங்காவின் சுதந்திரதின கொண்டாட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது இதற்கு முன்னர் ஏதாவது ஒரு தீர்வுத்திட்டத்தை வைத்துவிட வேண்டும் என மகிந்தர் தற்போது எதிர்பார்த்துள்ளார்.
சில வேளைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்காவிட்டால் இந்தியா சினமடையலாம் எனவும், இதனால் இந்தியப்பிரதமர் இந்நிகழ்விற்கு வராமல் விடலாம் எனவும் கருதும் மகிந்தர், அதற்கு முன்னர் எப்படியாவது ஒரு அறைகுறைத் தீர்வை வைப்பதில் உறுதியாகிவிட்டார். மகிந்தரின் திட்டப்படி இந்தியாவின் விருப்புக்குரியவரான ஆனந்தசங்கரியை வடமாகாணசபையின் தலைவராக நியமித்தவிட்டு டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முக்கிய பதவி ஒன்றை வழங்கி விடுவதே திட்டமாகும்.
கிழக்கு மாகாணசபையின் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசுடன் சேர்ந்தியங்கக் கூடிய ஒருவரை தலைவராக நியமித்துவிட்டு முஸ்லிம் மற்றும் சிங்களப் பிரமுகர்களுக்கும் கிழக்கு மாகாணசபையில் முக்கிய பொறுப்பை வழங்கலாம் என அரசு கருதுகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்கும் வேலைகள் இடம்பெறுவதாக கூட கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட தொடங்கிவிட்டன.
மகிந்தரிற்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். தங்களால் முன்வைக்கப்படும் அரைகுறைத் திட்டங்களை விடுதலைப் புலிகள் ஏற்கமாட்டார்கள் என்று. எனவே புலிகள் ஏற்க இயலாத திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதும் மகிந்தரிற்கு தெரியும். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தலைவராக இருந்த வரதராஜப்பெருமாள் கூட இதனை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முன்னர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரைகுறைத் தீர்வை திணிப்பதன்மூலம் அதனை நடைமுறைப்படுத்தாமல் செயல் இழக்கச் செய்யலாம், சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தன்னை நியாயப்படுத்தலாம் என மகிந்தர் தற்போது எண்ணத் தொடங்கி உள்ளார்.
மகிந்தரின் திட்டப்படி தீர்வு ஒன்றும் தமிழர்களிற்கு கிடைக்கக் கூடாது என்பதே அவரின் முழுமையான எண்ணமாகும். தற்போதைய நகர்வுகள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கான நகர்வுக்குள் மட்டுமே. மகிந்தரின் நகர்வுகளையும், சர்வதேசத்தின் மயக்க நிலையையும் உன்னிப்பாக அவதானித்து வரும் விடுதலைப் புலிகள், தமிழரின் உரிமைப் போரின் அடுத்த அத்தியாயத்தை, அதாவது இறுதி இலக்கை அடையக் காத்திருக்கிறார்கள். அதற்கான அரசியல் நகர்வுகளையும் இராணுவத் திட்டங்களையும் திறமையாக அவர்கள் நகர்த்துவார்கள் என தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
வே. தவச்செல்வன்
நன்றி "ஈழமுரசு"
Thursday, December 20, 2007
"விடுதலைப் புலிகளை புறம்தள்ளிவிட்டு அரைகுறைத் தீர்வை திணிக்க முயற்சி!"
Posted by tamil at 12:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment