Friday, December 28, 2007

மகிந்தரின் பெருமிதம்

தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார்.

கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முன்னைய அரசுகளால் ஒரு வருடத்துக்கு ஆகக் கூடி யது எண்பது கோடி அமெரிக்க டொலர்களையே நிதி உதவி யாகப் பெற முடிந்தது என்றும், ஆனால் தமது அரசு ஒரு வரு டத்தில் நூற்றியிருபது கோடி அமெரிக்க டொலரை (சுமார் பதின் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை) உதவியாகப் பெற முடிந்திருக்கின்றது என்றும் அவர் பீற்றியிருக்கின்றார்.
வழமையாக இலங்கைக்கு உதவிவரும் ஜப்பானும் மற் றும் மஹிந்தரின் அரசின் புதிய நட்பு அணிகளான சீனாவும், பாகிஸ்தானும், ஈரானும் சேர்ந்து மஹிந்தர் அரசின் போர் வெறிப் போக்கையும் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளையும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியபடி கண்ணை மூடிக்கொண்டு உதவ முன்வந்தமையைத் தமது அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்த பெரு வெற்றிகளா கக் கருதி நீட்டோலை படிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.

இவ்வாறு தமது போர் முனைப்புப் போக்குக்கு உந்துதல் அளிக்கும் வகையில் இந்த நாடுகளில் இருந்து தமது அர சுக்கு பெருவாரியாக உதவி கிடைப்பதை தனது அரசுக்கான சர்வதேச ஆதரவாகவும் அவர் அர்த்தப்படுத்துகிறார். இந்த நிதி உதவியை சான்றாக முன்னிறுத்தி, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்போரை எள்ளி நகையாடவும் அவர் தவறவில்லை.
தமது அரசின் கொடூரப் போர்முனைப்புப் போக்குக்கும், அமைதி முயற்சிகளை சீரழித்து, நிரந்தர சமாதானத்துக்கான வாய்ப்புகளை நிர்மூலமாக்கி, இனச்சிக்கலை மேலும் மோசமாக்கும் எத்தனத்துக்கும், பாரதூரமான மனித உரிமை மீறல் அராஜகத்துக்கும் எதிராக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் ஒன்று திரண்டு வருகின்ற யதார்த்தத்தை மறந்து, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்திருப்ப தாக அவர் அர்த்தம் பண்ணுகின்றார். முன்னைய அரசு களுக்கு இல்லாத சர்வதேச ஒத்துழைப்பும் வரவேற்பும் தமது தற்போதைய அரசுக்குக் கிட்டியிருப்பதாக அவர் புளகாங் கிதம் அடைகிறார்.

ஜப்பான் மற்றும் சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவை இலங்கை அரசின் போரியல் தீவிரத்துக்கு எண்ணெய் வார்க்க முன்வந்திருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் மஹிந்தரின் அரசின் இந்தச் செயற்போக்குக்குஎதிராக மேற் குலகம் முறுகி வருகையில், அதை மூடி மறைத்து, அதன் விபரீத விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல், சர்வதேச மட்டத்தில் தமது அரசு படைத்துள்ள சாதனைகள் ஒப்புயர்வற்றவை என்று அரசுத் தலைவர் தமது அரசுக்குத் தாமே முடி சூடிக்கொள்வது எள்ளளவும் பொருத்தமற்றது.

மேற்குலக நாடுகள் இதுவரை தமிழீழ விடுதலைப் புலி களின் செயற்பாடுகளை "பயங்கரவாதமாக'அர்த்தம் பண்ணி, பல தடைகளை விதித்து, நெருக்குவாரங்களைக் கொடுத்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, புலிகளை இறுக்கி வந்தன என்பதும் உண்மைதான். ஆனால் அந்த இறுக்கமான செயற் போக்கை அவை மஹிந்தரின் அரசுப் பக்கமும் மெல்லத் திருப்பத் தொடங்கிவிட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. இலங்கை ஓர் அங்கீகரிக்கப்பட்ட இறைமையுள்ள சக நாடு என்பதும், மஹிந்தரின் நிர்வாகம் அந்த நாட்டின் சட்டபூர்வ அரசு என்ற அந்தஸ்துடையது என்பதும் இலங்கை தொடர் பான மேற்கு நாடுகளின் செயற்பாடுகள் வெளிப்படையாக அமையாமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் அதைத் தமக்குச் சாதகமாகக் கருதிக்கொண்டு சர்வதேச மட்டத்தில் தமது அரசுக்கு எதிராகத் திரண்டுவரும் அழுத்தமான கருத்தியல் நிலைப்பாட்டை மூடிமறைத்துக்கொண்டு தமது போரியல் போக்குக்கு ஒரு சில நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளை மட்டும் முன்னிறுத்தி இராஜதந்திர சாதனைகளைப் படைத்து விட்டமைபோல அரசுத் தலைவர் மகிழ்வதில் அர்த்தமில்லை.

அவரது அரசின் யுத்த சந்நதம் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அதிருப்தியும், விசனமும், எரிச்சலும் இராஜ தந்திரத் தொடர்பாடல்களில் மென்மையான கண்டனங் களைத் தாண்டி, செயல் வடிவ நடவடிக்கைகளாக மாறும் போதுதான் அவற்றின் ஆழத்தை அரசுத் தலைவர் புரிந்து கொள்வார் போலும்.

அது போன்றதுதான் இராணுவ ரீதியான வெற்றிகளும். ""ஈழப்போர் இப்போது நான்காவது கட்டத்தை எட்டிவிட் டது.'' இவற்றுக்கு மத்தியில் இராணுவ வலுச் சமநிலை என்ற ஊஞ்சல் மாறி, மாறி அசைந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

புலிகளின் பலம் மிக்க யாழ். குடாநாட்டுக் கோட்டையை அவர்களிடமிருந்து கைப்பற்றி, அவர்களை வன்னிக்குத் துரத்தியடித்து, "ஜெயசிக்குறு' படை நடவடிக்கை மூலம் வன்னியையும் கிழக்கு, மேற்காக துண்டுபடுத்தும் பெரும் இராணுவ நகர்வை பெரும்பாலும் பூர்த்தியடையும் அள வுக்கு முன்னெடுத்த நிலையில்தான் ""புலிகளில் தொண் ணூற்று ஆறு வீதமானோரை அழித்துவிட்டோம். எஞ்சிய நான்கு வீதமானோரையும் விரைவில் பூண்டோடு அழிப் போம்!'' எனச் சூளுரைத்தார் அப்போதைய பிரதிப் பாது காப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை. ஆனால் அதன் பின் னர்தான் "ஜெயசிக்குறு' நிர்மூலமாகி, ஆனையிறவு கூட்டுப் படைத்தளம் தகர்ந்து, "அக்னிகோள' எத்தனம் புஸ்வாணமாகி, இராணுவ வலுச்சமநிலை ஊசல் புலிகள் பக்கம் சாய்ந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தமது அரசின தும் படைகளினதும் இராணுவ வெற்றிகள் என மார்தட்டும் சாதனைகள் கூட இத்தகைய ரகத்துக்குள் அமைந்தவைதான். அரசுப் படைகள் இப்போது முழுமையாக விடுவித்த கிழக் கின் வெற்றிகூட, இப்படிப் பல தடவைகள் கைமாறியதும் உண்டு.

எனவே, சர்வதேச ரீதியிலும், களமுனை யுத்தத்திலும் தாம் ஈட்டியுள்ள சாதனைகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பெருமிதம் கொள்ளும் பெறுபேறுகள் அவரது தரப் புக்கு சாசுவதமானவையாக என்பதும் அவரது பக்கத்திலேயே நின்று நிலைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. அதற் குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.
Uthayan,com

0 Comments: