Wednesday, December 19, 2007

விவேகமான இராசதந்திரம்

நேர்மையான, நீதியான இராசதந்திரம் என்பது முயல் கொம்பு போன்றது. அதாவது அப்படியொன்றும் கிடையாது என்று பொருள். மரத்தூளிலிருந்து இரும்புக் கம்பி தயாரிக்க முடியுமானால் நேர்மையான, நீதியான இராசதந்திரத்தையும் நடத்த முடியும் என்று அனுபவசாலிகள் கூறுகிறார்கள். இருப்பினும் விவேகமான இராசதந்திரத்தையும் அப்படிச் சொல்லமுடியுமா? விவேகமான இராசதந்திரம் நடைமுறைச் சாத்தியம் உடையது. விவேகமான இராசதந்திரத்தை முன்னெடுக்கும் நாடுகள் குறைந்தளவு பின்னடைவுகளுடன் கூடுதல் இலாபங்களைப் பெறுகின்றன. விவேகமான இராசதந்திரம் Prudent Diplomacy என்று வகைப்படுத்தப்படுகிறது. இதற்கு நெடிய அரசியல் பாரம்பரியம் உண்டு. நடைமுறைச் சாத்தியமானவற்றைச் செய்யும் கலை என்று இராசதந்திரம் குறிப்பிடப் படுகிறது. The Art Of The Possible என்று இதை ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

விவேகமான இராசதந்திரம் யதார்த்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. உலகம் எப்படி இப்போது இருக்கிறதோ அதற்கு அமைவாக விவேகமான இராசதந்திரம் முன்னெடுக்கப்படுகிறது. மாறாக இப்படி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இராசதந்திரம் ஒருபோதும் விவேகமான இராசதந்திரமாகாது. விவேகமான இராசதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நகர்வுகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறது. இதனால் இவ்வாறான கருத்தைக் கொண்டவர்களும், நகர்வுகளை மேற்கொள்பவர்களும் யதார்த்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.

அனைத்துலக மட்ட அரசியலில் யதார்த்த அணிச்சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் பிதாமகர்களாகச் சீனாவின் சன்சூ, இந்தியாவின் கௌடில்யர், கிரேக்கத்தின் தூசிடிடேஸ் ஆகியோர் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்குலகின் இராசதந்திர மற்றும் இராணுவச் சிந்தனையில் தூசிடிடேஸ் (Thucydides) மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்துகிறார். இவர் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சர்வதேச அரசியலை முன்னெடுப்பதற்கான ஆதாரச் சிந்தனை இந்த மூவருடைய எழுத்துக்களில் உள்ளன. மேற்குலகின் முக்கிய இராணுவக் கல்லூரிகள், அரசறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் தூசிடிடேசின் நூல் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய நூலை முதன் முதலாக ஆங்கில மொழிக்கு மாற்றிய தொமாஸ் ஹொப்ஸ் (Thomas Hobbes 1588-1679) அந்த நூலை மனித குலத்தின் நிரந்தரமான சொத்து என்று வர்ணித்துள்ளார். (An Everlasting Possession).


தூசிடிடேசுக்கு கிரேக்க வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவர், ஒப்பற்றவர் என்ற சிறப்பு உண்டு. அவரொரு தோல்வி கண்ட இராணுவத்தளபதி. ஸ்பார்ற்ராவுக்கும் (Sparta) ஏதன்சுக்கும் (Athens) இடையிலான கி.மு. 424 ஆம் ஆண்டுப் போரில் அவர் ஏதன்சின் முக்கிய நகரொன்றை இழந்துவிட்டார். அவர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதன் பயனாய் அவர் நாடு கடத்தப்பட்டார். இருபது வருடங்களுக்குப் பின் அவர் பிறந்த நாடு திரும்பினார். அதன் பின் மிகக் குறுகிய காலத்தில் இறந்துவிட்டார்.

அதே ஸ்பார்ற்ராவுக்கும் ஏதன்சுக்கும் இடையில் கி.மு.431-404 காலப்பகுதியில் நடந்த போர் பெலோபோனீசியன் போர் (Peloponnesian War) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு தோல்வி கண்ட தளபதியின் நிலைப்பாட்டில் இருந்து இப்போரை ஆய்வு செய்து தூசிடிடேஸ் தனது அழியாப் புகழ்பெற்ற நூலை எழுதினார். அந்த நூலை முடிக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவர் அந்த நூலுக்கு ஒரு தலைப்புப் பெயரும் இடவில்லை. போரே கதியென்று வாழ்ந்த ஏதன்ஸ் இந்தப் போரோடு வீழ்ச்சி கண்டது. அவர் பக்கச் சார்பின்றி தோல்விக்கான காரணங்கள், போருக்கு உந்துதலாக இருந்த காரணிகள், மக்கள் மனநிலை மற்றும் பங்களிப்புப் போன்றவற்றை விஞ்ஞான பூர்வமாக அணுகித் தனது ஆய்வின் முடிவாக இந்த நூலை ஆக்கினார். அவர் போர்ப் பங்களிப்பில் இருந்து விலக்கப்பட்ட காரணத்தால் ஸ்பார்ற்ரா, ஏதன்ஸ் ஆகிய இரு பகுதியையும் ஒரே தராசில் வைத்துச் சீர்தூக்கி ஆராய்ந்தார் என்று அவர் எழுதிய நூல் விமர்சிக்கப்படுகிறது.

அவர் பெலோபோனீசியன் போர் பற்றிய ஆய்வு நூலை எழுதினார் என்பது உண்மையானாலும் அதில் கூறப்பட்ட ஆய்வு முடிவுகள் இன்றும் பெறுமதி உள்ளவையாக இருக்கின்றன. நாகரிகமான நடத்தை, மீதமான போக்கு, எதிரியின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய கவனிப்பு, போர் நடைமுறையில் இருக்கும் ஒன்றிணையும் மற்றும் பிரிந்து செல்லும் நட்புச் சக்திகளின் பின்னணிக் காரணிகள் எனப் பல விடயங்கள் இதில் அலசப்படுகின்றன. எதிர்பார்ப்புக்கள் மீது நம்பிக்கை வேண்டாம், உள்ளத்தின் அடிப்படையில் நகர்வை மேற்கொள் - இதுதான் அவருடைய முக்கிய செய்தி. மிகவும் வேறுபட்ட வியாக்கியானங்களுக்கு அவருடைய எழுத்து இடம் கொடுக்கிறது. அவர் மனிதகுலம் தழுவிய நிலைப்பாட்டை எடுத்தார். பொதுவுடமைவாதிகள் தொடக்கம் ஏகாதிபத்தியவாதிகள் வரையிலானோர் அவரைத் தம்மோடு இணைத்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இன்றைய சர்வதேச அரசியல் மாற்றங்கள், போர் முன்னெடுப்புக்கள், சமாதான நடவடிக்கைகள் ஆகிய அனைத்திற்கும் சன்சூ, கௌடில்யர், தூசிடிடேஸ் ஆகிய மூவரின் எழுத்துக்களில் விளக்கங்கள் காணப்படுகின்றன. மூவரும் தத்தம் நாட்டின் தேவைகளுக்காகவும் வரலாற்று ஆய்வுரையாகவும் எழுதியவை காலம் கடந்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த எழுத்துக்களின் ஆசிரியர்கள் தமது நாட்டின் அடிப்படைக் குணாம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் அயல் நாடுகளை அவதானித்தல், தேவைப்பட்டால் அங்கு குழப்பங்களை ஏற்படுத்துதல், தொற்று நோய்களைப் பரப்புதல் போன்றவை பற்றிப் பேசுகிறது. இந்தக் கௌடில்யப் பாரம்பரியம் இந்திய ஆட்சியாளர்களால் இன்றும் பயிலப்படுவதை எம்மால் உணரமுடியும்.

சன்சூவின் எழுத்தில் மோதலைத் தவிர்க்கும் உபாயங்கள் பற்றிக் கூறப்படுகிறது. சில பாதைகளால் போகாதே, குறிப்பிட்ட சில எதிரியின் கோட்டைகளைத் தாக்காதே போன்ற பரிந்துரைகள் சீன மொழியில் பிங்பா (Ping Fa) என்ற தலைப்பில் அவர் எழுதிய போர்க்கலை நூலில் உள்ளன. போர் புரியாமலே எதிரியைத் தன்வசமாக்கும் உபாயமும் அதில் கூறப்பட்டுள்ளது. தாக்காமலே தாய்வானைக் கையகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இதன் அடிப்படையில் சீனாவுக்கு இருப்பதால் தாய்வான் மீது தாக்குதல் நடக்காது என்று சில ஆய்வாளர்கள் கூறுவர்.

மூவரும் வேவுப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நண்பன் எதிரி என்று வித்தியாசம் பாராட்டாமல் தகவல் சேகரிப்பு நடத்தப்பட வேண்டும். இந்தக் கோட்பாட்டை இஸ்ரேல் இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறது. வேவின் ஒரு அங்கமாகத் தரையமைவு பற்றிய தரவுகள் முக்கியமாகக் கூறப்படுகின்றன. தரையமைவு என்பது தனது நாட்டினதும் எதிரி நாட்டினதும் கூட்டாக அமையும். அதாவது என்னுடையது, அவனுடையது என்று வித்தியாசம் பாராமல் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தரையமைவுத் தரவுகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன என்பது இவர்களுடைய கோட்பாடு. சன்சூவின் நூல் போர்க்கலை எனப்பட்டாலும் அதில் இராசதந்திர ரீதியாகப் போரைத் தவிர்க்கும் உபாயங்களுக்கும் இடமளிக்கப்படுகி;றது.

தற்கால மேற்குலக அரசறிவியல் விஞ்ஞானிகள் விவேகமான இராசதந்திரத்தின் தந்தை என்ற அந்தஸ்தை தூசிடிடேசுக்கு வழங்கியுள்ளனர். ஐரோப்பிய சிந்தனையில் அவருக்கு உறுதியான இடம் இருக்கிறது. நிகழ்வுகளை உள்விழுந்து நோக்கும் அவருடைய திறமையும், கூர்மையான தூர நோக்கும், யதார்த்தமும் மேற்குலக இராசதந்திரிகளுக்கு விருப்பும், வரவேற்பும் உள்ளவையாகின்றன. மேற்குலகச் சிந்தனையின் உள்ளீடாகத் திகழும் மாக்கியாவெல்லி, ஹொப்ஸ், குளோஸ்விற்ஸ், ஹான்ஸ் மோர்கென்தோ போன்றோர் தூசிடிடேஸ் வழிவந்தவர்களாகவும் அவருடைய எழுத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுவர்.

சர்வதேச அரசியலில் யதார்த்தக் கோட்பாடு றியால்பொலிற்றிக் (Realpolitik) என்றும் அழைக்கப்படுகிறது. நாடுகளுக்கிடையிலான உறவுகள் பற்றிய கோட்பாடுகளில் யதார்த்தக் கோட்பாடு முதலிடம் வகிக்கிறது. இந்தக் கோட்பாட்டின் தோற்றம் தூசிடிடேசின் பெலோபோனீசியன் போர் பற்றிய நூலிலும் அவரை அடியொற்றிய எழுதிய மாக்கிய வெல்லி, ஹொப்ஸ் ஆகியோரின் நூல்களிலும் காணப்படுகிறது. யதார்த்தக் கோட்பாட்டுவாதிகள் சர்வதேச அரசியல் பற்றி மூன்று முக்கிய நிலைப்பாடுகளை எடுக்கின்றனர்.

சர்வதேச உறவுகளை வழிநடத்துவதற்கென நாடுகளின் தனித்தனி அரசமைப்பை மிஞ்சிய மேலாதிக்க அமைப்பொன்றும் இல்லை. பெரிய வலுவான நாடுகள் தமது நலனுக்குப் பொருத்தமானவற்றைச் செய்வார்கள். சிறிய அல்லது வலுக்குறைந்த நாடுகள் தமது கொள்கை உருவாக்கத்தில் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக நாட்டு அரசமைப்புக்கள் தான் உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை ஏற்றுக்கொண்டு செயற்படும் நாடுகள் அனைத்தும் நாடுகளின் உடைவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்கின்றன. மூன்றாவதாகத் தேசிய நலன் என்பது வலுவின் இன்னுமோர் சொல் வடிவமாகும். தேசிய நலன் என்பது வலு (Power) உயர்ச்சிக்குச் சர்வதேச உறவுகள் ஊடாகச் செயற்படுகிறது. நாடுகள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் தமது வலுவின் அளவை விருத்தி செய்கின்றன. யதார்த்தக் கோட்பாடு Realism அல்லது Realistic School Of என்று அழைக்கப்படுகிறது.
-அன்பரசு-
நன்றி: வெள்ளிநாதம் (14.12.07)

0 Comments: