Thursday, December 20, 2007

மனித உரிமைகள் பேணும் நாடகம் அம்பலமாகிறது

அரசுப் படைகளே மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகையில் அவை குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம், அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது இலங்கை அரசு. மனித உரிமைகளைப் பேணுவதாகக் காட்டும் வகையில் கொழும்பு நடத்தும் நாடகம் இனியும் சர்வதேச சமூகத்திடம் செல்லாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. இது விடயத்தில் அரசின் முகமூடி முகத்திரை சர்வதேச ரீதியில் கிழிந்துவிட்டது என்றே கூறலாம்.

வகைதொகையின்றி ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல் கொடூரங்கள் ஒரு சிறுபான்மை இனத்துக்கு எதிராக அதுவும் பெரும்பான்மை இனத்தவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பேரினவாத ஆட்சியினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கையில், அத்தகைய மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று கூறப்படும் "கதையை' இனியும் நம்புவதற்கு உலகம் தயாராயில்லை என்பதும் கொழும்புக்குத் தெட்டத் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் சீர்கெட்டு வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, சுயாதீனமாக விசாரித்து, பகிரங்கப்படுத்தும் ஆணையுடன் ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் ஒன்று இலங்கையில் திறக்கப்படவேண்டும் என சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருப்பது தெரிந்ததே.

ஆனால், அதற்கு இசைவு தெரிவிக்கக் கொழும்பு மறுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இவ்விடயத்தைக் கையாள முயல்வது இலங்கையின் இறைமையில் தலையிடும் விவகாரமாகி விடும் என்றும், ஆகவே தங்களிடம் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் இந்த வேலையைச் செய்யலாம் என்றும், தேவையானால் தம்மிடம் உள்ள கண்காணிப்பு செயல்முறையை மேம்படுத்துவதற்கான பொறிமுறை தொழில்நுட்ப வசதிகளை சர்வதேசம் தந்துதவலாம் என்றும் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவ்வப்போது விடும் "கயிறு' இனியும் செல்லுபடியாகாது என்பதும் இப்போது திட்டவட்டமாகத் தெளிவாகிவிட்டது.

மனித உரிமைகள் பேணும் விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் உள்ள கட்டமைப்புப் பொறிமுறையை மேம்படுத்துவது குறித்துப் பேசி, விவகாரத்தைச் சமாளிக்க அமைச்சர் முயல, மறுபுறத்தில் அந்தக் கட்டமைப்பின் தரத்தையே சர்வதேச மட்டத்தில் கீழிறக்கும் அறிவித்தலை விடுத்து, உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது இது சம்பந்தமான அனைத்துலக மையம்.
இலங்கைத் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச ரீதியாகத் தரமிறக்கப்பட்டிருப்பதை சர்வதேச ஒருங்கிணைப்புக்குழு பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பு என அரசினால் பீற்றிக் கொள்ளப்படும் இலங்கைத் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரச அரசியல் தலையீடுகள் அதிகரித்துவிட்டன, சுயாதீனத் தன்மை அருகிவிட்டது என்ற காரணங்களையும் இது தொடர்பான சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஆகவே, இந்தத் தேசிய ஆணைக்குழுவை வைத்துக்கொண்டு மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கத் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என அரசுத் தலைமை இனியும் கயிறு விடவே முடியாது.

மனித உரிமைகள் நிலைவரத்தை நேரடியாகப் பிரசன்னமாகி யிருந்து, சுயாதீனமாகக் கண்காணிக்கத் தக்க வகையில் ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை இலங்கையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொழும்பைக் கழுத்தில் விழுந்த கயிறாக இப்போது இறுக்கத் தொடங்கியிருக்கின்றது.

அதற்கு அனுமதித்தால்தான் இனி இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தனது வரவு செலவுத் திட்ட முன் அறிக்கை மூலம் திட்டவட்டமாக நிபந்தனை விதித்துவிட்டது அமெரிக்கக் காங்கிரஸ்.

இதேசமயம், இலங்கையில் இடம்பெற்ற முக்கிய பிரமுகர்கள் படுகொலை உட்பட்ட பிரதான சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும், விசாரித்து உண்மைகளைக் கண்டறிவதற்கும் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும்அதன் செயற்பாடுகளும் வெறும் கண்துடைப்பு ஏற்பாடுகளே என்பதை அந்த விசாரணைகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்களின் குழு மீண்டும் பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகம் அதிக சிரத்தை காட்டி, கவனம் எடுக்க
மறுபுறத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து அலட்டியே கொள்ளாத சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் தனது பேரழிவு தர்பாரைக் கொண்டுநடத்த முயல்கிறது கொழும்பு.

எவ்வளவு காலத்துக்கு இது வெற்றிகரமாகத் தாக்குப்பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

2008-12-20
Uthayan.com

0 Comments: