"பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி.
ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்படி இயற்கை நீதி மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்தக் கைதுகளை நோக்கினால் "தமிழர்கள், அவர்கள் அப்பாவிகள் என்பது நிரூபிக்கப்படும்வரை பயங்கரவாதிகளாகக் கருதப்படவேண்டியவர்கள்' என்ற புதிய நீதிச் சித்தாந்தத்தில், "அறநெறித் தத்துவத்தில்' தென்னிலங்கைச் சிங்கள அரசு செயற்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
தமிழர்கள் என்பதற்காக ஆட்கள் கைதுசெய்யப்படுவதும்
இவ்வாறு கைது செய்யப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்படுவதும்
இந்தப் "புதிய சட்டமுறைமை' நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
தென்னிலங்கை அரசுத் தலைமையின் புதிய கண்டுபிடிப்புச் சித்தாந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி காரணம் ஏதுமின்றி அள்ளப்படும் தமிழர்கள், தடுப்பு முகாம்களில் அனுபவிக்கும் சித்திரவதைகள், தொல்லைகள், தொந்தரவுகள், கஷ்டங்கள் சொல்லுந்தரமன்று.
கண்மூடித் தனமாகத் தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் இத்தகைய கைதுகள், தடுத்து வைப்புகள், தொந்தரவுகள் போன்ற மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டிருக்கும் சர்வதேச ஆலோசனை ஒன்றையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
கடந்த ஒக்டோபரில், சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி மன்பிரட் நெவாக் இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கையில் விவகாரங்களை அவதானித்த பின்னர், இவ்வாறு தடுப்பு முகாம்களில் பொதுமக்கள் படும் கஷ்டங்களை நீக்கி, அவர்களின் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்த அவர் ஓர் ஆலோசனை தெரிவித்தார்.
"நாட்டில் உள்ள எந்தத் தடுப்பு முகாமுக்கும், எந்நேரத்திலும், முன்னறிவித்தலின்றி, தவறாது சென்று, அங்குள்ள தடுப்புக்காவல் கைதிகளைச் சந்தித்துப் பேசி, சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி, உண்மை நிலைவரத்தைக் கண்டறிந்து வெளியிடுவதற்கு சட்ட அதிகாரத்துடன் கூடிய சுயாதீனமான செயல்வலுவுள்ள ஒரு தடுப்புப் பொறிமுறை (அமைப்பு) அவசியம். அத்தகைய ஏற்பாடு இல்லாத நிலைமையே குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. என்று ஐ.நா. பிரதிநிதி வெளியிட்ட கருத்தையே இப்போது சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அதேசமயம், இந்நாட்டில் நிலவும் மனித உரிமைகள் நிலைப்பாட்டைக் கண்காணிக்கும் ஆணையோடும், எல்லா இடங்களிலும் மோற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கான அதிகாரத்தோடும் கூடிய ஐ.நா. தூதரக அலுவலகமொன்று கள நிலைமையைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்படவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.
சிறுபான்மையின மக்களின் கௌரவம், உரிமைகள் ஆகியவற்றை துச்சமாக மதித்துச் செயற்படும் ஓர் அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராகக் காத்திரமான நடவடிக்கைகளை இத்தகைய அமைப்புகளை செயற்பட அனுமதிப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது.
தொடர்ந்து சிறுபான்மையினரான தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அராஜகம் புரிந்து, ஆக்கிரமித்து வரும் கொழும்பு அரசு தனது அத்துமீறல்களை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தக்கூடிய இத்தகைய ஏற்பாடுகளுக்குத் தானாக இணங்கமாட்டாது என்பது திண்ணம். நாட்டின் இறைமை என்ற புளித்துப்போன காரணத்தைக் காட்டி இத்தகைய கோரிக்கைகளை அது நிராகரித்து வருகிறது. இனியும் நிராகரிக்கும் என்பதும் நிச்சயம்.
மனித உரிமைகளைப் பற்றி அதிகம் அடிக்கடி பீற்றிக் கொள்ளும் சர்வதேசம், அதிலும் குறிப்பாக மேற்குலகம், இந்தக் கோரிக்கைக்கும், அதை நிராகரிக்கும் இலங்கை அரசின் போக்குக்கும் என்ன பதில் கூறப்போகின்றது?
2007-12-06
uthayan.com
Thursday, December 6, 2007
அப்பாவிகள் என நிரூபிக்கப்படும்வரை தமிழர்கள் இங்கு பயங்கரவாதிகளே!
Posted by tamil at 6:45 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Hi,
Now we can able to type in tamil and search in web, this is customzied Google search.
Once you start typing it appears in Tamil.
Search in தமிழ் http://www.yanthram.com/ta/
Thanks,
Yanthram.
Post a Comment