Saturday, December 22, 2007

''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?'''

"சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும்.

சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே ஒரு வழியென கூறப்பட்டுள்ளது.

விடுதலைக்காகப் போராடிய கிழக்குத் தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேச ஆதரவோடு, அனுசரணையோடும் புதிய தேசங்களாக விடுதலை பெற்றன. கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும், சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.

புதிய உலக ஒழுங்கின் பிராந்திய நலன் அடிப்படையில், கிழக்குத் தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்களின் விடுதலைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

ஆயினும் தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமான இலங்கையின் நிலை குறித்து, சர்வதேசத்தின் பார்வை மிகவும் வேறுபட்டே காணப்படுகிறது.

சகலவிதத்திலும் அமெரிக்க ஒற்றை வல்லரசிற்கு சமனாக வளர்ந்து வரும் சீனாவின் இருப்பு, ஆசியாவில் முதன்மை பரிமாணத்தை பெற்றுள்ளது.

இங்கு சீனாவைச் சுற்றியே சகல வியூகங்களும் வகுக்கப்படுகின்றன.

சீனாவிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவினையும் இந்தியா மற்றும் மேற்குலகிடமிருந்து நிபந்தனைகளுடன் கூடிய சில வரையறைக்குட்பட்ட ஆதரவினையும் இலங்கை பெறுவதனை அவதானிக்க வேண்டும்.

முத்திசைகளில் பயணிக்கும் சீனா, இந்தியா, மேற்குலகு என்கிற பாதைகளை சரியாகக் கையாண்டு, தனது போரினை இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளது.

அதேவேளை, பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் பாகிஸ்தான் பற்றிய நிலைப்பாட்டில் அரசாங்கம் எடுத்த இரட்டை நிலை முடிவுகளும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தினை நாட்டின் பிறப்புரிமையென அங்கீகரித்த விடயமும், அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் விவகாரத்தில் மேற்கொண்ட இரட்டைப் போக்கும், இந்தியாவுடன் உரசலை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான், சீனா தவிர்ந்த ஏனைய பிராந்திய நலன்பேணும் நாடுகளுடன் இலங்கையின் முரண்நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதெனலாம்.

இத்தகைய இராஜதந்திர உரசல்கள் தொடரும் பொழுது, மாவீரர் தின உரை, மேலும் பல சிக்கல்களை சர்வதேச வல்லரசுகள் மத்தியில் உருவாக்கியுள்ளதென்று கூறலாம்.

இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல், இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்க முடியாதென்கிற அழுத்தமான நிலைப்பாடு தலைகீழாக மாறியுள்ளது.

பொதுவாகவே தோல்வியுற்ற நீண்ட வெளியுறவும் கொள்கை வரலாற்றினை கொண்ட இந்திய அரசியலில், இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

அனுசரணை வகித்த மேற்குலக சமாதானக் காவலர்கள், கொழும்பில் தமது பேச்சுவார்த்தைத் தயாரிப்புக்களை மேற்கொண்டவுடன், டில்லிக்குப் பறந்து சென்று தென்னாசிய தலைமைக் குருவிடம் எல்லாவற்றையும் ஒப்புவித்த பின்பே மேற்கு நோக்கி பறப்பினை மேற்கொள்வார்கள்.

அத்தகைய இராஜதந்திர ஓட்டங்களை, தனக்களிக்கப்பட்ட சர்வதேச கௌரவமாகவும், தன்னை மீறி இப்பிராந்தியத்தில் எந்த முடிவினையும் எவரும் எடுக்க முடியாதென்கிற சுய பெருமிதத்தையும் இந்த கொழும்பு டில்லி மரதன் ஓட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கியிருந்தன.

ஆயினும் தமிழர் தலைமையானது இனப்பிரச்சினையின் முழு வடிவத்தையும், எத்தனையோ தடவைகள் பல கோணங்களில் எடுத்துரைத்தாலும், புரியாதது போல் நடித்த இந்திய அரசு, அரைகுறைத் தீர்வினை தமிழ் மக்கள் மீது திணித்து, ஏமாற்றியதாக விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் தனது உரையில் விசனத்துடன் குறிப்பிடுகிறார்.

அதேபோன்று, ஏனைய சர்வதேச நாடுகளும் எம்மை ஏமாற்றி விட்டதாக தமிழ் மக்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறார்.

சுதந்திரக் கருத்துருவம் தோன்றிய வரலாற்றினை விஞ்ஞான பூர்வமாக விளக்கி, இந்த சுதந்திரத்திற்கான விடுதலைப் புயல், இன்று எம் தேசத்தில் மையம் கொண்டுள்ளதென்பதை சமகால நிகழ்வாகப் பதிவுசெய்கிறார் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர்.

எம்மை ஏமாற்றிய சர்வதேச நாடுகள் குறித்த தமது நிலைப்பாட்டினை, முதற்தடவையாக தமிழர் தேசிய தலைமை முன் வைப்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

அதாவது, தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்க, பிராந்திய நலனில் அக்கறை கொண்டுள்ள எந்த அணியினருடன் இசைவான போக்கினை கைக்கொள்ள வேண்டுமென்கிற முடிவினை வெளிப்படுத்தா விட்டாலும் அதற்கான அத்திவாரத்தை இவ்வுரை அமைத்துள்ளது.

இதுவரை காலமும், இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மூன்று அணிகளும் தமிழர் தலைமையால் எவ்வாறு கையாளப்படப் போகிறதென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதேவேளை சீனா, மேற்குலகு, இந்தியா என்கிற மூன்று அணிகளும் மாவீரர் தின உரைக்குப் பின்னர், தமது திரைமறைவுக் காய் நகர்த்தல்களை வேகமாக முடுக்கி விட்டுள்ளன.

மேற்குலகின் ஒரு பிரிவினரான ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள இந்தியா முயற்சிக்கிறது.

அதிகரித்து வரும் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார முதலீடுகளை, தனது பிராந்திய நலன் தொடர்பான தலையீடுகளுக்குப் பயன்படுத்தும் உத்தியினை பிரயோகிக்க இந்தியா முற்படுகிறது போலுள்ளது.

இவர்கள் இருவரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் நேரடியாக ஈடுபடாத, விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்த நாடுகளே.

இங்கு இந்திய நிலைப்பாடே, விசித்திரமான தன்மைகளைக் கொண்டுள்ளது. புலி எதிர்ப்புத் தீவிரத்தன்மை, சீன பாகிஸ்தான் கூட்டணியின் கால் பதித்தலை தடுக்குமென்கிற கற்பிதமே, இந்திய இராஜதந்திர பொறிமுறையில் மேலோங்கியுள்ளதெனலாம்.

இந்தியாவானது தமிழர் தலைமையோடு உறவினை ஏற்படுத்த விரும்பினாலும், பூதாகரமாக்கப்பட்ட அதிகரித்த புலி எதிர்ப்புணர்வும், மாவீரர் தின உரையும், இலங்கையின் நிலைப்பாட்டுத் தளத்தை நோக்கியே இழுத்துச் சென்றுள்ளது. இதன் அறுவடையை சிங்களத் தேசம் பெற்றுக்கொள்வதே யதார்த்தமாகும்.

ஏனெனில், தென்னாசியப் பிராந்தியத்தின் இருபெரும் வல்லரசுகளான இந்தியா, சீனாவின் நிலையான, நீடித்த ஆதரவினை தக்க வைப்பதற்கான இராஜதந்திரத்தையும், அதற்குகந்த பொறிமுறைகளையும் சிங்கள தேசம் வகுத்து வந்துள்ளது.

அதேவேளை, தனது உள்நாட்டு நெருக்கடிகளையும் வெளியுலகு இராஜதந்திர உறவாடல்களில் உருவான முரண்நிலைகளையும், திசை திருப்புவதற்கோ அல்லது உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கோ, தேசிய இனப்பிரச்சினையை சமாளிப்பு ஆயுதமாக சிங்களத் தேசம் கையாளுகிறது. ஆயினும் இவ்வருடம் மாவீரர் தின உரையானது, இலங்கையின் வெளியுறவு சார்ந்த அணுகுமுறைகளில், புதிய சமன்பாடுகளை தோற்றுவிக்கும் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தப் போகிறது.

அரசின் இவ்வகையான உள்நாட்டு, வெளிநாட்டு இரட்டை அணுகுமுறையின் போக்கில் உரசல்கள் உருவாகும் வாய்ப்பினை, சர்வதேசத்தை நோக்கிய பிரபாகரனின் அறைகூவல் ஏற்படுத்துமெனப் பதற்றமடைவதால், எவரோடு கூட்டுச் சேர்ந்தாவது தமிழ்த் தேசியத் தலைமை மையத்தை அழித்திட வேண்டிய அவசியம் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவ ரீதியிலான அணுகுமுறையில் வன்னியை முற்றுகையிட்டவாறு, தற்காப்பு நிலையிலிருந்து வலிந்து தாக்கும் பரிமாணத்தையும், வான்வெளிக் குண்டு வீச்சியினூடாக விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை அழித்திடும் பிறிதொரு பரிமாணத்தையும் தெளிவாகக் காணலாம்.

பாரிய படை நகர்வுத் தாக்குதலில், சிலாவத்துறையை போலல்லாது, சிங்கள மக்களிற்கும், சர்வதேசத்திற்கும் பரீட்சயமான இடங்களைக் கைப்பற்றினால், கிடைத்தவரை இலாபம் என்கிற மனோநிலையே காணப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு போன்ற ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகச் சோதனைகள் ஏற்படுகையில் "மடு' பிடிக்கும் திட்டங்கள், அவசரமாக முன்னெடுக்கப்படும். வன்னியைச் சூழவுள்ள பாரிய படைநகர்வுப் பிரதேசங்களை எடுத்து நோக்கினால், இவ்வகையான கனரக ஆயுதங்கள், டாங்கிகள், யுத்த உலங்குவானூர்திகள் புடைசூழ தொடுக்கப்படும் தாக்குதல்கள், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் களமுனைகள் போலல்லாது, மணலாற்றிலிருந்து இதுவரை ஏன் மேற்கொள்ளப்படவில்லையென்பதை அவதானித்தல் வேண்டும்.

மணலாற்றிற்கும் மாவீரர் தின உரைக்கும் இறுக்கமான போர்க்களப் பரிமாணமுண்டு. வன்னி வியூகத்தின் கடினமான அதேவேளை கிழக்கை நோக்கிய தலைவாசலும், மணலாறுதான். ஆகவே, இதயபூமியே இறுதிப் போரின் தொடக்கப் புள்ளி என்கிற எடுகோள், இரு தரப்பாலும் நிராகரிக்க முடியாத வகையில் முக்கியத்துவம் பெற்றிருப்பதை போரியல் உத்திகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.

தற்போது மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்டு இரு வாரங்களுக்கு மேலாகி விட்டது. சதுரங்க விளையாட்டில், ஒரு தரப்பினர், ஒழுங்கு விதிகளை மீறி ஆட்டத்தைக் குழப்பினால், விட்ட இடத்திலிருந்து தொடங்குவதா அல்லது பழைய ஆரம்ப நிலைக்கு காய்களை நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பிப்பதாவென மத்தியஸ்தரே தீர்மானிக்க வேண்டும்.

இங்கு மத்தியஸ்தர்கள் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கப்பட்டோர் இழக்கும்போது, புரிந்துணர்வு விதிமுறைகளை மீறுபவரை எதிர்கொள்ளும் தமிழ் தரப்பின் பிறப்புரிமையினை அங்கீகரிப்பதே, மத்தியஸ்தம் வகுப்பவரின் ஒரே தெரிவாக அமைய வேண்டும்.

சமாதானப் பேச்சுவார்த்தைத் தொடரின் இறுதி உரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையூடாக நிகழ்த்தியுள்ளார். ஆகவே, தெற்காசியப் பிராந்தியத்தில் புதிய, யதார்த்தபூர்வமான சமன்பாடுகளை உருவாக்க வேண்டியதன் அவசரத்தை சர்வதேசம் புரிந்து ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களின் நீண்ட அவல வாழ்வில் துரிதகதியில் மாறுதல்கள் ஏற்படலாம்.

சி.இதயச்சசந்திரன்
நன்றி - வீரகேசரி

0 Comments: