Sunday, December 23, 2007

பெரும் போர் வெடிக்கப் போகிறதா?

நாடு பெரும் போருக்குள் தள்ளப்படப்போகிறது. வடக்கை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் கைப்பற்றிவிடப் போவதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார். கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டுவிடுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அடுத்த மாவீரர் தின உரைக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கமாட்டாரென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இவையெல்லாம் வடக்கு நோக்கி முழு அளவில் பெரும் போருக்கு அரசு தயாராகிவிட்டதையே காட்டுகிறது. நாட்டின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போரில் அரசு இறங்கப்போகிறது. யுத்த பட்ஜெட்டின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதால் வடக்கே பெரும் படையெடுப்புக்கான ஆயத்தங்கள் மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தெற்கில் யாலவிலும் திஸ்ஸமகராமவிலும் வடமேற்கில் அநுராதபுரத்திலும் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகையில் கொழும்பு நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. வடக்கு - கிழக்கில் போர்முனைகளை விட, தற்போது புலிகளின் தாக்குதல்கள் நடைபெறுவதாகக் கருதப்படும் இடங்களிலும் பல்லாயிரக் கணக்கான படையினர் நிறுத்தப்பட்டுள்ளமையானது வடக்கிற்கு வெளியேயும் அரசு பெரும் சமரில் ஈடுபட வேண்டியிருப்பதைக் காட்டுகிறது.

யுத்த பட்ஜெட்டை அரசு பாராளுமன்றில் சமர்ப்பித்த போது அது தோற்கடிக்கப்படும் நிலை உருவானது. ஆனாலும், அடுத்தாண்டு நாட்டில் பெரும் போர் வெடிக்க வேண்டுமென்பதற்காகவும் தற்போதைய நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் மட்டுமே அதனை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்பதாலும் இந்தப் பட்ஜெட்டுக்கு பூரண ஆதரவை வழங்கிய ஜே.வி.பி. அரசைக் காப்பற்றியது.

நாட்டில் யுத்தம் மிக உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பதற்காகவும் சமாதான முயற்சியென்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாதென்பதற்காகவும் இந்த பட்ஜெட் தோற்கடிக்கப்படாமல் ஜே.வி.பி. வெற்றிபெற வைத்ததால் யுத்த பட்ஜெட்டை நிறைவேற்றும் விதத்தில் அரசு பெரும் போருக்குத் தயாராகிவிட்டது. இதற்காக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவுமுள்ளது.

இந்த நிலையில் உளவியல் போரையும் அரசு தொடுத்துள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான புலிகளின் அதிரடித் தாக்குதல் அரசை நிலைகுலையச் செய்தது. எனினும், கிளிநொச்சியில் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், அநுராதபுரம் தோல்வியை மறைக்க அரசுக்கு பெரும்வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பின், அதே மாதத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறு காயமடைந்துள்ளதாக வெளியான செய்திமூலம் மேலும் பலனடைய அரசு முயல்கிறது. மாவீரர் தினத்திற்கு மறுநாள் கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைச் செய்தியொன்று தெரிவித்தது. இத்தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படும் நாளிலிருந்து சுமார் மூன்று வாரங்களின் பின் இந்தச் செய்தி வெளியானது.

எனினும், விமானப்படையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கடந்த திங்கட்கிழமை பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் படைத்தரப்பு இதனை உறுதிப்படுத்தவில்லையெனக் கூறியிருந்தார். ஆனால், கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தையடுத்து அன்று மாலை பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது.

நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை கிளிநொச்சி ஜெயந்திநகரில் இடம்பெற்ற விமானத் தாக்குதலிலேயே பிரபாகரன் காயமடைந்தது உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. முதலில் வந்த பத்திரிகைச் செய்தி, 28 ஆம் திகதி நண்பகலே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறியிருந்தது. எனினும், இரு தினங்களுக்கு முன்னரே, அதாவது பிரபாகரனின் பிறந்த தினத்தன்று நடைபெற்ற தாக்குதலிலேயே அவர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அன்றைய தினம் இந்தத் தாக்குதலில் பிரபாகரன் தங்கியிருந்த பதுங்கு குழி சேதமடைந்தது தங்களுக்குத் தெரியுமென்றும் அதனை உறுதிப்படுத்த முடியாததால் அந்தத் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடவில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது. வன்னியில் நவம்பர் 2 ஆம் திகதி தமிழ்ச்செல்வன் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் கிளிநொச்சியில் விமானப்படையினர் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர்.இதனால், கிளிநொச்சிப் பகுதியில் புலிகளின் தலைவர்கள் எவரும் தங்கியிருந்திருக்க மாட்டார்கள்.

மாவீரர் தின உரை 27 ஆம் திகதி ஒலிபரப்பானது, அன்றைய தினம் மாலை, புலிகளின் தலைவரது உரை ஒலிபரப்பாவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது விமானப் படையினர் கடும் தாக்குதலை நடத்தியிருந்தனர். இத் தாக்குதலில் வானொலி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.

புலிகளின் தலைவரது உரையைத் தடுத்து நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாயிருந்தது. எனினும், அவரது உரையை புலிகளின் குரல் வானொலி உலகெங்கும் ஒலிபரப்பியது. இது படைத்தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் தாக்குதலால் எதுவித பலனுமேற்படவில்லையென்றும் தாங்கள் வெறும் கட்டிடமொன்றையே தாக்கியுள்ளதையும் உணர்ந்து கொண்டனர்.

இதேநேரம், பிரபாகரன் 28 ஆம் திகதி காயமடைந்ததாக முதலில் வந்த பத்திரிகைச் செய்தி கூறியது.ஆனால் பாதுகாப்பு அமைச்சோ, அந்தச் செய்தி வெளியான பின்னர், 26 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலிலேயே அவர் காயமடைந்ததாகக் கூறியது. இதன்மூலம் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து உணர்ந்துகொள்ள முடியும்.

27 ம் திகதி கிளிநொச்சியில் `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதால் மறுநாள் 28 ஆம் திகதி கிளிநொச்சிப் பகுதிக்கு பிரபாகரன் வந்திருக்கும் சாத்தியமில்லையெனக் கருதிய பாதுகாப்பு அமைச்சு, சிலவேளைகளில் மாவீரர் தினத்திற்கு முதல்நாள் தனது உரையை ஆற்ற அவர் கிளிநொச்சிக்கு வந்திருக்கலாமெனக் கருதி அன்றைய தினமே (26 ஆம் திகதி) இத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறியுள்ளது.

பிரபாகரன் விமானப் படையினரின் தாக்குதலுக்கிலக்கானதாகக் கூறப்படுவதை புலிகள் முற்றாக மறுத்துவிட்டனர். வழமைபோல் அரசு வெளியிடும் கதைகளில் இதுவுமொன்றென அவர்கள் கூறியுள்ளனர். அநுராதபுரம் படைத்தளம் மீதான தாக்குதல் படைத்தரப்புக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென்பதைக் காண்பிக்கவும், அதன் பின் தமிழ்ச்செல்வனை விமானத் தாக்குதலில் கொன்ற தாங்கள் தற்போது புலிகளின் தலைவரையும் நன்கு நெருங்கிவிட்டதாகக் காண்பிக்கவும் முயலும் கதையே, விமானத் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்ததாக வெளியான கதையாகும்.

புலிகளதும் தமிழ் மக்களினதும் மனோநிலையை பாதிக்கச் செய்வதும் படையினரதும் சிங்கள மக்களினதும் மனோபலத்தை அதிகரிக்கச் செய்வதும் இதன் நோக்கமாகும். இதன் மூலம், வடக்கே புலிகளின் போரிடும் மனோபலத்தை குறைத்து படையினரின் மனோபலத்தை அதிகரிக்கச் செய்து வடக்கில் உடனடி வெற்றிகளைப் பெற்றுவிடவும் அரசு முயல்கிறது.

மேலும், விமானப்படையினர் முழுப்பலத்துடன் செயற்பட்டு வன்னியில் புலிகளின் தலைவர்களைத் தேடி இலக்கு வைக்கின்றனர் என்பது போலொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்த அரசு முயல்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலையடுத்து, இவ்வாறான தாக்குதல் நடந்திருக்கக்கூடுமென நம்புவோரின் எண்ணிக்கை அதிகமென்பதால் புலிகளினதும் தமிழ் மக்களினதும் மனோபலத்தை குறைக்கும் உளவியல் போரை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான தாக்குதலுக்குப் பின் வன்னியில் விமானத் தாக்குதலின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எதிர்த் தாக்குதலில் `மிக்' விமானத்தின் பின்புறப் பகுதியில் சிறு சேதமேற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியபோது, அந்த விமானங்களை நோக்கியும் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால்,விடுதலைப்புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை (சாம்) பயன்படுத்துகின்றனரா அல்லது விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனரா என அறிவதில் விமானப் படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர். வன்னியில் தற்போது பலத்த மழை பெய்துவருவதால் காலநிலை சீரில்லாத போதும் வன்னியில் விமானத் தாக்குதலின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளது. புலிகள் மீண்டும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றனரோ என்ற அச்சம் விமானப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளின் விமானங்கள் குறித்த அச்சத்தால் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் செக். குடியரசுகளிடமிருந்து இலங்கை அவசர உதவிகளை எதிர்பார்த்துள்ளது. போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள், உயர் தொழில்நுட்ப ராடர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்புக் கருவிகள் மற்றும் போர்த் தளபாடங்களை அரசு இந்த நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

இலங்கைக்கான ஆயுத உதவியுடன் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை அமெரிக்கா தொடர்புபடுத்துவதால் இலங்கைக்கான இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தும் நிலையேற்பட்டுள்ளது. ஆனால், இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கையில் இடம்பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிதளவேனும் கவலைப்படவில்லை. இதனால், தான் இலங்கையில் இடம்பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றவும் இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைக்கவும் மேற்கு நாடுகள் தீவிரம் காட்டியபோது இலங்கைக்குச் சார்பாக இந்தியா குரலெழுப்பியது.

முன்னைய காலங்களை விட தற்போது இந்தியா,இலங்கையுடன் மிக நெருங்கிச் செயற்படுகிறது. இலங்கைக்கு தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோமென முன்னர் கூறிவந்த இந்தியா, இன்று ஏனைய நாடுகளுடன் போட்டி போட்டு இலங்கைக்கு போர்த்தளபாடங்களையும் ஆயுதங்களையும் விற்பனை செய்கிறது. இலங்கை விமானப்படை காலாகாலமாக தமிழ்ப் பகுதிகளை அழித்து வந்தபோது மௌனம் சாதித்து, அதனை ஏற்றுக்கொண்ட இந்தியா இன்று புலிகளின் விமானப் பலத்தை அழிப்பதில் தீவிரம் காட்டுகிறது.

முன்னைய காலங்களில் இலங்கை கடற்படையுடன் கூட்டு ஒத்திகைகளில் ஈடுபட்ட இந்தியா இன்று இலங்கை விமானப்படையுடன் கூட்டு ஒத்திகையில் ஈடுபட முன்வந்துள்ளது. தென் பிராந்தியத்தில் தனது விமானப்படையின் பலத்தை அதிகரித்து வருவதுடன் தமிழகத்தின் தஞ்சாவூரில் பாரிய விமானப்படைத் தளத்தையும் அவசர அவசரமாக உருவாக்க முயல்கிறது.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியா இன்று ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் மிகக் கடுமையாகச் செயற்படத் தலைப்பட்டுள்ளது. வடக்கே பாரிய யுத்தத்திற்கு இலங்கைப் படையினர் தயாராகி வருகையில் இந்தியாவின் உதவிகள் இலங்கை அரசுக்கு பெரும் பலத்தையளித்துள்ளது.வடக்கில் பெரும் போரை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அங்கீகாரமாக இவற்றை இலங்கை கருதுகிறது.

இலங்கையுடன் சேர்ந்து இந்தியா விமான ஒத்திகையில் ஈடுபடுகிறதென்றால் அது வான் புலிகளுக்கெதிராக இலங்கையுடன் சேர்ந்து இந்தியா நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பதையே காட்டுகிறது. பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் இலங்கை மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவை விட இவ்விரு நாடுகளையும் நேசிக்கும் இலங்கை அந்த நாடுகளுக்கு ஆதரவாகவே செயற்படுகிறது.

ஆனால், பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவின் பொது எதிரிகள். அப்படியிருக்கையில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக இந்தியாவுடன் சேர்ந்து கூட்டு விமான ஒத்திகையில் ஈடுபட இலங்கை ஒருபோதும் முன்வராதென்பதால், வான் புலிகளுக்கெதிராக இந்தியா செயற்பட முன்வந்திருப்பதாலேயே இந்தியாவுடன் இணைந்து விமான ஒத்திகையில் ஈடுபட இலங்கை முன்வந்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையினர் இலங்கை விமானப் படையின் நடவடிக்கையுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வன்னியில் இடம்பெறும் விமானத் தாக்குதல்களை நேரடியாக வழிநடத்துவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பிந்திய அதிஉயர் தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளையும் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிவருகின்றது.

சீனாவும் இதேபோன்ற உதவிகளைச் செய்கிறது. செக் குடியரசு விமானப் படைக்கும் தரைப்படைக்கும் மிகப்பெரும் உதவிகளை வழங்கிவருகிறது. இலங்கை அரசின் யுத்த பட்ஜெட் இந்த ஆயுதக் கொள்வனவுகளுக்கு காணாது. இதனால், குறைநிரப்புப் பிரேரணைகள் மூலம் அரசு மேலும் மேலும் நிதியைப் பெற்று யுத்தத்திற்கு செலவிடவுள்ளது.

இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடுகின்றன. 90 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கை எந்த நாட்டிலிருந்தாவது ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்தியா நூறு மில்லியன் டொலரை இலகு கடனாக வழங்கியுள்ளது.

இவ்வாறு வடபகுதிப் போருக்கு பல நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்குகின்றன. எந்தவொரு நாட்டினதும் எவ்வித உதவிகளுமின்றி, பல நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆயுதங்களுடன் வரும் படையினருக்கெதிராக புலிகள் போரிட வேண்டியுள்ளது. எனினும், இந்தப் போர் இன்று வடக்குடன் மட்டுப்படுத்தப்படவில்லை. தலைநகர் உட்பட தெற்கு முழுவதிலும் பரந்துபட்டு நிற்கிறது.

வடக்கில் தற்போது கடும்மழை பெய்து வருவதால் படையினர் புதிதாகப் பாரிய நகர்வெதனையும் ஆரம்பிக்கவில்லை. மழை காலம் முடிவடையும் வரை சற்று பொறுத்திருக்கின்றனர். மழை ஓய்ந்ததும் வடக்கே பாரிய படை நகர்வுகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனைப் புலிகளும் நன்கறிவர். வடக்குப் போருக்காக அரசு தென்பகுதியின் பாதுகாப்பை பெரிதும் பலப்படுத்தி வருகின்றது.

வடபகுதி எல்லையில் பெருமளவு போர்த்தளபாடங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான படையினர் தயாராகி வருகின்றனர். படைத்தளபதிகள் அடுத்த பெரும்போருக்கான தயாரிப்பு வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். அரசு பச்சைக் கொடி காட்டியதும் பெரும் போர் வெடிக்கப்போகிறது

23.12.2007
-விதுரன்-

0 Comments: