Thursday, December 20, 2007

ஜெயலலிதா: ஒரு அறிவியற் பிரச்சினை

'ஆத்தை நோவென்றழ குத்தியன் பாலுக்கழுதிச்சிதாம்". ஈழத்தின் கிராமங்களில், வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்கியபடி சிறு உரலில் பாக்கு வெற்றிலையை இடித்து மென்று தின்றபடி எமது முதியவர்கள் மேற்கண்ட பழமொழியை பல சந்தர்ப்பங்களில் அனாயசமாக உச்சரிப்பதை பலர் அவதானித்திருக்கக்கூடும். அனேகமான தருணங்களில் இது அப்படியே உச்சரிக்கப்படுவதில்லை. முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ 'அடி..." என்ற கூடுதல் சொல்லாடலும் சேர்த்தே வெளித்தள்ளப்படும். அப்போது அதன் அர்த்தமும் ஆழமும் பன்மடங்காக அதிகரித்திருக்கும். இதை விரித்து எழுதுவதற்கு நாம் தனியாகத் தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும்.

இப்போது எம்மில் பலர் புலம்பெயர்ந்து வாழ்வதால் 'அரிய" சந்தர்ப்பம் ஒன்றை கைநழுவ விட்டதாகவே படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் ஜெயலலிதா அம்மையாரின் அண்மைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு எமது ஈழத்துப் பல்லுப்போன கிழவிகள் அனாயசமாக எந்தவித பாசாங்குகளுமின்றி மேற்கண்ட பழமொழியை உதிர்த்திருக்கக்கூடும். (விசேட குறிப்பு: முன்னொட்டு வாசகம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்)

அந்தக்கால எமது கிராமத்து முதியவர்கள் படிப்பறிவு இல்லாத, பாசாங்கற்ற வெள்ளந்தியான மக்கள் குழுமத்தினர். உணர்ச்சிகளை எந்த வகையிலும் அடக்குவதில்லை. கோபம் வந்தால் அடித்துவிடுவார்கள் அல்லது திட்டிவிடுவார்கள், இல்லை அழுதாவது அதைத் தீர்த்துவிடுவார்கள். எதையுமே தம்வசம் சேர்த்து வைத்திருப்பவர்கள் அல்ல. ஆகவே அண்மையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 'படுகொலையை" அடுத்து 'தமிழகம்" வடித்த கண்ணீருக்கு ஜெயலலிதா அம்மையார் பண்ணிய அலப்பறைக்கும், அழிச்சாட்டியத்திற்கும், அக்கப்போருக்கும் அவர்களின் எதிர்வினை மேற்கண்டவாறே இருந்திருக்கும். இதை யாராலும் மறுதலித்துப் பேச முடியுமென நான் நினைக்கவில்லை.

ஆனால் நாம் போலியானவர்கள். பாசாங்கானவர்கள். ஏனெனில் ஜெயலலிதா அம்மையாரின் செய்கைக்கு நாமும் அப்படித்தான் எதிர்வினையாற்ற வேண்டும். ஆனால் நாம் அவருக்கான கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக நாகரிகமான, பண்பான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பொறுக்கிக் கோர்வையாக்க வேண்டியிருக்கிறது.

இதில் என்ன விசித்திரமெனில் ஜெயலலிதா அம்மையாரின் அண்மைய நடவடிக்கைகள் நாகரிகம், பண்பு, அறம், மனிதநேயம், மனிதவிழுமியம் என்ற எந்த வட்டத்திற்குள்ளும் பொருந்த மறுப்பவை. எனவே அவருடன் இந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு நாம் பேச முற்படுவது மிகப்பெரிய முரண்தான்.

இருந்தபோதிலும், எம்மிடமிருந்து வெடித்துக் கிளம்பும் தார்மீகக்கோபத்தையும், அறச்சீற்றத்தையும் கொஞ்சம் அடக்கி ஜெயலலிதா அம்மையாருக்கு பண்பான - நாகரிகமான முறையில் (அது என்னவென்று அவருக்குத் தெரியாதபோதும்) சில செய்திகளை சொல்ல உலகத்தமிழினம் கடமைப்பட்டிருக்கிறது.

இன்று உலகம் 'வன்முறை" என்ற அச்சில்தான் சுழல்கின்றதோ என்று அச்சமுறும் வகையில் தனிமனிதன் தொடங்கி நிறுவனங்கள்வரை 'வன்முறை" தொடர்ச்சியாக வெளித்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. போர், அழிவு, துயரம், வன்முறை என்பவை இன்று சதாரண நிகழ்வாகிவிட்டன. இருந்தபோதிலும் ஏதோ ஒரு சுழற்சியின் அடிப்படையில் மனிதவாழ்வு அசைந்து கொண்டேயிருக்கிறது. காரணம் ஒன்றும் பூடகமானதல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் குறைந்தளவிலேனும் கடைப்பிடிக்கும் ஒழுக்கமும், அறமும், சக மனிதநேயமும், புரிய வைக்கமுடியாத சில நம்பிக்கைகளும் (உதாரணம்: கடவுள்) மனிதவாழ்வை ஒரு நாகரிகமான எல்லைக்கோட்டிற்குள் இன்னும் அடைத்து வைத்திருப்பதாகக் கூறலாம்.

ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவனையறிமாமலேயே குடிகொண்டுவிட்ட போலித்தனங்களும், பாசாங்குகளும்கூட நவீன வாழ்வை 'மேலதிக" வன்முறையிலிருந்து காப்பாற்றிவருவதாகக்கூடச் சொல்லலாம். மதங்கள், சடங்குகள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் என்று ஒரு மனித உயிரி தனக்குத்தானே போட்டுக்கொண்ட வேலி கூட மனிதவாழ்வை ஒருவிதமான ஒழுக்கத்துடனும் அறத்துடனும் நகர்த்திச் செல்வதாக நம்பலாம். (ஆனால் இவையெல்லாவற்றையும் வேறு ஒரு கோணத்தில் மறுதலித்துப்பேசலாம் என்பது வேறு கதை. இங்கு எமக்குத் தேவையானது அதுவல்ல..)

இன்று உலகத்தில் உள்ள ஒரு தனிமனித உயிரியின் வாழ்வியற் போக்கை ஒரு வகையில் மேற்குறிப்பிட்ட ஏதோ ஒரு வரைகோட்டிற்குள் அடக்கிவிடலாம்.

ஆனால் ஜெயலலிதா அம்மையார் இந்த வாய்ப்பாடுகள் எதற்குள்ளும் பொருந்தாமல் திமிறிக்கொண்டு நிற்பதாகவே படுகிறது.

02.

அண்மையில் எனது பல்கலைக்கழக ஆய்வின் ஒரு முடிவை நானே சரி பார்க்கும் முயற்சியாக (இருத்தலியல்வாதியும் பெண்ணிய சிந்தனையாளருமான சிமோன் தி பெவோரின் ஒரு கோட்பாட்டின் மீதான மறுவாசிப்பு அது) 'பெண்கள் எல்லோரும் ஏன் அழகாக இருக்கிறார்கள், ஆண்கள் எல்லோரும் அசிங்கமாக இருக்கிறார்கள்" என்ற தலைப்பில் நனைவோடை உத்தியில் அமைந்த ஒரு உருவகக் கதையை எழுதிப்பார்த்தேன்.

முடிவில் பெண்களின் 'அழகு" ஏகத்திற்கும் அதிகரித்திருந்தது. ஆண்கள் மேலும் 'அசிங்க" மடைந்திருந்தார்கள். அழகு என்பது உடல் சம்பந்தபட்ட விடயமல்ல. அது உடல்மொழி சம்பந்தப்பட்டது - மனம் தொடர்பானது. பெண்களின் உளவியலை மையப்படுத்தி பெண்களிற்கும், அதிகாரத்திற்கும், வன்முறைக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் கருத்துருவாக்கம் (வாநளளை) என்னுடையது. இந்தப் பெண்ணிய சொல்லாடலை தொடர்ந்து விளக்கம் செய்வதற்கு தமிழில் போதிய கலைச்சொற்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இயல்பான சாதாரண மொழியில் கூறுவதானால் பெண்களினால் குறிப்பிட்ட எல்லைகளுக்கு மேல் வன்முறையை வெளித்தள்ள முடியாதெனலாம். அதையும் மீறி அவர்கள் வன்முறையாளர்களாக அடையாளம் காணப்படுவார்களாயின் அதன் பின்னணியில் ஆண்களே இருப்பார்கள்.

ஜெயலலிதா அம்மையாரின் பின்னால் எந்த ஆணும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரிலிருந்து கட்டற்றுப்பெருகும் அதிகாரத்தையும் வன்முறையையும் ஒரு சாதாரண மனிதமனத்தால் எதிர்கொள்ளமுடியவில்லை.

ஜெயலலிதா அம்மையாரின் அண்மைய நடவடிக்கைகள் எனது மேற்படி ஆய்வை கலைத்துப்போட்டிருப்பது மட்டுமல்ல, உலகளவில் புழக்கத்திலுள்ள பெண்ணியச் சூத்திரங்களையும் வாய்ப்பாடுகளையும் சேர்த்துக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு விதிவிலக்கை எடுத்துக்கொண்டு ஒரு கோட்பாட்டை - முடிவை நிராகரிக்கமுடியாதபோதிலும் அதை மறுவிசாரணைக்கும், கேள்விக்கும் உட்படுத்தலாம். பல்கலைக்கழக மட்டங்களில் ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு இதன் தெளிவான பொருள் புரியும்.

ஆகவே ஜெயலலிதா அம்மையாரின் அண்மைய 'செய்கைகள்" தமிழர்களுக்கெதிரான பிரச்சினை மட்டுமல்ல - அது உலகாளாவிய ஒரு அறவியற் பிரச்சினையும்கூட. இந்தக் கோணத்திலேயே நாம் அந்த அம்மையாருடன் பேச முற்படுவோம். முன்னும் பின்னுமாக அவரது அதிகார அத்துமீறல்கள் குறித்தும் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்தும் பேசுவதற்காக நிறைய உள்ளபோதும் மேற்படி கருத்தை மட்டுமே கவனத்தில் கொள்வோம்.

ஜெயலலிதா அம்மையாரைப்பற்றி தமிழகத்தில் நீண்டகாலமாக இரு வேறுபாடான கருத்துக்கள் உலாவருகின்றன. ஒன்று அவர் கன்னடர் என்பது அடுத்தது அவர் பார்ப்பனீய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும். இரண்டுமே தமிழுக்கு ஆகாதவை என்பது 'தமிழகத்" தமிழர்களின் வாதம். ஆனால் ஈழத்தமிழர்களோ இதை என்றுமே கணக்கில் எடுத்தது கிடையாது. இதனால் எமக்கும் தமிழகத்திலிருந்து ஈழ விடுதலையை ஆதரிக்கும் சில நேசசக்திகளுக்கும் இடையில் அவ்வப்போது சில 'முறுகல்"களும் தோன்றியிருக்கின்றன.

அவர் ஒரு பாரம்பரிய தமிழ் நடிகை என்பதில் தொடங்கி, ஈழத்தமிழர்களை அளவிற்கதிகமாக நேசித்த எம்ஜிஆரின் கட்சித் தலைவி, முன்னாள் தமிழக முதல்வர் என்பதுவரை நாம் அவரை ஒரு தமிழராகவே பார்த்து வந்தோம். அவர் உண்மையிலேயே தமிழர் இல்லையென்று வைத்துக்கொண்டாலும் அதை ஈழத்தமிழர்களாகிய நாமும் சேர்த்து பறைசாற்றுவது அரசியல் விவேகம் இல்லை என்பதுடன் இந்திய இறையாண்மை மீது கைவைப்பதுமாகும். விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்திற்கு இது தேவையில்லாத விவகாரமும்கூட.

ஆனால் ஜெயலலிதா அம்மையாரின் அண்மைய நடவடிக்கை அவரது பிறப்பு- இனக்குழுமம் - தமிழர் விரோதப்போக்கு தொடர்பாக எமக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியிருப்பது மட்டுமல்ல அதை வெளியாகவே விமர்சிக்கவும் வைத்திருக்கிறது.

03.

மனிதன் உணர்ச்சிமயமானவன். இந்த வரையறைக்குள் சிக்காத மனித உயிரியே உலகில் கிடையாது. அந்த உயிரியின் கல்வி, ஆளுமை, பதவி என்பவற்றையெல்லாம் தாண்டி இந்த வரைகோட்டிற்குள் சிக்கவேண்டித்தான் இருக்கிறது.

திடீரென ஒருவரை நெருப்புத் தீண்டினால் அவர் உடனடியாகவே உடலை அசைத்து அதிலிருந்து விலகிக்கொள்வார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தத் தூண்டல் நடைபெற்று விடும். இதை மருத்துவ விஞ்ஞானத்தின் மூலம் மூளைக்கும் தொடுகைக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி சுலபமாக விளங்கப்படுத்திவிடமுடியும்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் உடலிலே தமிழ் இரத்தம் ஓடும் ஒவ்வொருவனும் துடித்துப்போய் விட்டான். உலகெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் தமது கவலையை வெளிப்படுத்தினார்கள். அதன் வழியே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் தனது கவலையை ஒரு கவிதையினூடாக வெளிப்படுத்தினார். தமிழக காங்கிரஸ்காரர்கள்கூட ஆரம்பத்தில் மௌனமாகக் கவலைப்பட்ட கதை எமக்குத் தெரியும். இப்போது அவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதன் பின்னணியும் எமக்குத் தெரியும். முன்னையது உணர்வு. பின்னையது அரசியல்.

இது உணர்ச்சி சம்பந்தமானது. நெருப்புச் சுட்டவுடன் கையை இழுப்பது போல் செய்தி அறிந்தவுடன் கலைஞரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வு அது. அது தமிழ் உணர்வு. அது சரியா? பிழையா? என்ற வாதம் இரண்டாம் பட்சம்தான்.

ஆனால் ஜெயலலிதா அம்மையாரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வு எத்தகையது? சக மனித நேயம், அறம், பண்பாடு என்பவற்றையெல்லாம் புறந்தள்ளிய அப்பட்டமான தமிழ் விரோதப்போக்கு.

இதை எப்படி நாம் புரிந்து கொள்வது? இப்போதுதான் முதல் முறையாக ஜெயலலிதா அம்மையாரிடன் உடலில் ஓடும் குருதி குறித்து ஈழத்தமிழனத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இதன் சரியான புரிதலுக்கு சிறிது காலத்திற்கு பின்னகர்ந்து உலகளாவிய ஒரு விடயத்தை பார்ப்போம். பிரான்சில் கார் விபத்தில் டயானா மரணமடைந்தபோது கவலைப்படாத மனித உயிரியே இல்லையெனுமளவிற்கு அது உலகத்தையே துக்கத்திலாழ்த்தியது. இந்த விசித்திரமான உணர்வை உலகளாவிய ரீதியில் ஆய்வுக்குட்படுத்திய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் பல முக்கியமான முடிவுகளை தமது ஆய்வினூடாக வெளிப்படுத்தியிருந்தது.

உலகம் வன்முறையில் சுழல்கிறபோதும் இன்னும் சகமனிதர்களுக்கிடையிலேயான மனிதநேயம் மரித்துவிடவில்லை என்றும் இறந்தவர் மீது அவரது குறை நிறைகளையும் தாண்டி அஞ்சலி செலுத்துகிற பண்பு மேலோங்கி வருவதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக டயானா மரணத்திற்கு சிறிதளவிலேனும் கவலைகொள்ளாத மனித மனம் ஒன்று இருந்தால் அது மனித உயிரி என்ற வட்டத்திற்கு வெளியில் வைத்துத்தான் பார்க்கப்படவேண்டும் என்பது போன்ற பல முக்கிய முடிவுகளை அது வெளியிட்டிருந்தது.

தமிழ்ச்செல்வன் அவர்களது மரணத்திற்கான தமிழுலகின் ஒட்டுமொத்த எதிர்வினை ஒரே மாதிரியாக இருக்க ஜெயலலிதா அம்மையாரின் எதிர்வினை மட்டும் பிறழ்ந்து போயிருந்ததை நாம் மேற்படி ஆய்வுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் தவறேதும் இருக்காதென்று நம்புகிறேன்.

அதன் நீண்ட ஆய்வில் அரசகுடும்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, 'பாhப்பராசி" எனப்படும் ஊடகத்தொந்தரவிற்குள்ளான பெண்ணாக, தனது இறுதிக்காலத்தை பொதுத் தொண்டிற்காக (குறிப்பாக உலக கண்ணிவெடிகளிற்கெதிரான) அர்ப்பணித்த பெண்ணாக, மாறாத புன்னகையுள்ள அந்த அழகிய தோற்றத்திற்காக என்று பலவற்றைப் பட்டியலிட்டு அவருக்கான உலகத்தின் 'கண்ணீருக்கான" காரணத்தை ஆராய்ந்துள்ளது.

காலில் ஊனமுற்ற ஒரு போராளியாக, மாறாத புன்னகையுடன் வலம் வந்தவராக, சமாதானத்தின் தூதுவனாக, அரசியற் செயற்பாட்டாளனாக தமிழ்செல்வனின் மரணத்திற்கு உலகம் வடித்த 'கண்ணீருக்கும்" ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காரணங்கள் ஜெயலலிதா அம்மையாரை ஏன் பாதிக்கவில்லை?

மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவேண்டாம், மௌனமாக இருந்திருக்கலாமே? அதுவும் வேண்டாம் மரித்த ஒரு மனிதனின் உயிருக்கு சக மனித நேயத்தின் அடிப்படையில் மதிப்புக் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்தக் காட்டுமிராண்டித்தனம்?

04.

இப்போது நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் பேசிய விடயத்தை மீண்டும் கவனத்தில் பதிப்போம்.

இன்று உலகம் 'வன்முறை" என்ற அச்சில்தான் சுழல்கின்றதோ என்று அச்சமுறும் வகையில் தனிமனிதன் தொடங்கி நிறுவனங்கள்வரை 'வன்முறை" தொடர்ச்சியாக வெளித்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. போர், அழிவு, துயரம், வன்முறை என்பவை இன்று சாதாரண நிகழ்வாகிவிட்டன. இருந்தபோதிலும் ஏதோ ஒரு சுழற்சியின் அடிப்படையில் மனிதவாழ்வு அசைந்துகொண்டேயிருக்கிறது. காரணம் ஒன்றும் பூடகமானதல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் குறைந்தளவிலேனும் கடைப்பிடிக்கும் ஒழுக்கமும், அறமும், சக மனிதநேயமும், புரிய வைக்கமுடியாத சில நம்பிக்கைகளும் (உதாரணம்: கடவுள்) மனித வாழ்வை ஒரு நாகரிகமான எல்லைக்கோட்டிற்குள் இன்னும் அடைத்து வைத்திருப்பதாகக் கூறலாம்.

ஒவ்வொரு தனிமனிதனிடமும் அவனையறிமாமலேயே குடிகொண்டுவிட்ட போலித்தனங்களும், பாசாங்குகளும்கூட நவீன வாழ்வை 'மேலதிக" வன்முறையிலிருந்து காப்பாற்றி வருவதாகக்கூடச் சொல்லலாம். மதங்கள், சடங்குகள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் என்று ஒரு மனித உயிரி தனக்குத்தானே போட்டுக்கொண்ட வேலி கூட மனித வாழ்வை ஒருவிதமான ஒழுக்கத்துடனும் அறத்துடனும் நகர்த்திச் செல்வதாக நம்பலாம். இன்று உலகத்தில் உள்ள ஒரு தனிமனிதஉயிரியின் வாழ்வியற் போக்கை ஏதோ ஒரு வகையில் மேற்குறிப்பிட்ட ஏதோ ஒரு வரைகோட்டிற்குள் அடக்கிவிடலாம்.


நாம் இப்போது ஜெயலலிதா அம்மையாரின் கவனத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்க விரும்புவது மேற்படி தகவலைத்தான். ஏனெனில் இது ஈழத்தமிழர் பிரச்சினையல்ல. வன்முறையிலிருந்து குறைந்தளவிலேனும் தம்மைப் பாதுகாத்து மீதியுள்ள வாழ்வைக்கடக்க முற்படும் ஒட்டுமொத்த மனித இனத்தின் அறவியற் பிரச்சினை இது.

இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவியாக, பொது வாழ்விலுள்ளவராக அவருக்கு நம்பிக்கையில்லாதபோதும், மதிப்பில்லாதபோதும், விருப்பமில்லாதபோதும் சில அறங்களை அவர் கடைப்பிடித்தேயாக வேண்டும். ஏனெனில் இது அரசியல் இல்லை - அறம்.

இன்று உலகில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக உலக அறிவுஜீவிகள் மட்டத்தில் நகைச்சுவையாக (அது உண்மையுங்கூட) பேசப்படுவதுண்டு. ஒருவர் ஆப்கானிஸதானில் இருக்கிறார் மற்றவர் அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால் இவர்கள் குறித்து ஒரு எல்லைக்கு மேல் உலகம் பயப்படுவதில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இருப்பவர் இல்லாத கடவுளுக்குப் பயப்படுகிறார். அமெரிக்காக்காரர் சும்மாவுக்கேனும் அமைதி, சமாதானம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். இவை எமக்குப் போதும். ஏனெனில் மனித வாழ்வின் நாகரிகமான எல்லைக்கோட்டிற்கும், மேலதிக வன்முறையிலிருந்து உலகத்தைக் காக்கவும் இந்தப் 'போலித்தனங்கள்" போதும்.

ஆனால் ஜெயலலிதா அம்மையாரிடம் இவையெதையும் காண முடியாதபோது மனித வாழ்வு குறித்த அச்சம் தமிழ்ச்சூழலில் மேலெழும்புவதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது.

தமிழ்ச்செல்வன் மரணத்தினால் ஈழத்தமிழர்களின் மனத்தில் விழுந்த கீறலுக்கு கலைஞரின் கவிதை ஒரு ஒத்தடமாய் இருந்தது எவ்வளவு நிஜமோ அதேயளவு நிஜம் ஜெயலலிதா அம்மையாரின் செய்கையினால் ஈழத்தமிழர்கள் அடைந்திருக்கும் உளவுறன் பாதிப்பும்.

ஈழத்தமிழனம் ஜெயலலிதா அம்மையாரிற்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. இன்று உங்களுடன் கூட்டு வைத்திருக்கும் வைகோ அவர்கள் என்றும் நாம் மதிக்கும் தலைவர். நாளை உங்களுடன் நாம் மதிக்கும் வேறொரு தலைவர் ராமதாஸ் அவர்கள் கூட்டு வைத்துக்கொள்ளலாம். இதில் என்றுமே நாம் தலையிட மாட்டோம்.

ஏனெனில் தமிழக நலன் சார்ந்த அடிப்படைகளில் மக்கள் நலன் சாhhந்து அது அவரவர் தெரிவும் விருப்பமும். இதில் நாம் தலையிடுவது இந்திய ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும் பங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். எமக்கு அது தேவையுமில்லை. இது எமது வேலையும் இல்லை.

எனவே தற்போது போல் இனிவரும் காலங்களிலாவது, எமது தேசத்தின் வீதிகளில் விழும் பிணங்களை வைத்து 'பிணந்தின்னி" அரசியல் நடத்தாதீர்கள். இது எங்கள் இறையாண்மை மேல் நீங்கள் கைவைப்பதாக நாம் கருத வேண்டியிருக்கும்.

இறுதியாக மிகவும் தயவான - பணிவான வேண்டுகோள். நீங்கள் தோற்றால் உங்களுக்குப் 'பதவி"தான் பறிபோகும். நாங்கள் தோற்றால் நமது 'உயிரே" போய்விடும். 'பதவி"க்கும் 'உயிருக்கும்" இடையிலான வேறுபாட்டை கொஞ்சம் அறவியற் தராசில் வைத்து மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.

எனவே இனியாவது புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

-பரணி கிருஸ்ணரஜனி-

1 Comment:

maduraikkaran said...

திரு.பரணி

தங்களின் ஒப்புமை (தமிழ்செல்வன் - டயானா) மிக பொருத்தம். எஸ்.பி. டியின் செயல்பாடுகள் அனைத்தும் உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பெரும் நம்பிக்கையும் தந்தது. கலைஞர் கவிதை எழுதியதில் பல தமிழர்களின் மன வலி குறைந்தது.
(நானறிந்த அளவிலே) ஈழ பிரசினை என்பது இந்திய அதிகார வர்க்க பார்பனர்களின் கையில் சிக்கி குரங்கு கை பூ மாலையாக மாறியது என்னவோ உண்மை. கலைஞர் இன்னும் பார்பனர்களின் வலையில் சிக்கியிருப்பதுதான் காலத்தின் கட்டாயம்.