எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ம் திகதி சிறீலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மூன்றாம் நிலை வாசிப்பிற்கு விடப்படும் போது அது தோற்கடிக்கப்படும் என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கூறி வருகிறது. இரண்டாம் தடைவையாக இவ்வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதற்கு முன்பும் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாறே எதிர்வு கூறியது.
ஆனாலும் பதினாறு மேலதிக வாக்குகளில் அது வெற்றிபெற்று விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவிய உறுப்பினர்கள் மற்றும், ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் கொங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ், நு.ஆ, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் தப்பியது. இதில் முக்கியமான, சிறுபான்மை சமூகங்களைப் பிரதிபலிக்கும் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, முஸ்லிம் கொங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிராக இல்லாவிடினும், வாக்களிப்பில் கலந்து கொள்ளா
மல் விட்டிருந்தாலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கும்.
இந்நிலையில், மூன்றாம் நிலை வாக்கெடுப்பின் போது தாம் தோல்வியைத் தழுவ வேண்டி வருமோ என தற்போது மகிந்த அரசாங்கம் அச்சத்திலுள்ளது. அவ்வாறு தோல்வியடைந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டி வரும். எனவே, அவ்வாறு செய்வதற்குப்பதிலாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது என்பதும் மகிந்தவின் தெரிவாகவுள்ளது. அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிடம் மகிந்த தொடர்புகைளை மேற்கொண்டும் வருகிறார்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த யோசனையை மகிந்த ரணிலிடம் நேரடியாகவே தெரிவித்த போது, இதற்கு தாம் சம்மதிக்கப்போவதில்லை என மகிந்தவின் முகத்திலடித்தாற்போல் ரணில் மறுத்துரைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பியினர் தங்கள் நகர்வுகளை மிகவும் தந்திரோபாயமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை சற்று விரிவாக நாம் பார்க்கலாம். ஜே.வி.பியின் ஆதரவுடனேயே மகிந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. இதனைப்பயன்படுத்தி மகிந்த அரசாங்கத்தை ஜே.வி.பியினர் மிரட்டிக்கொண்டிருந்தது.
அவ்வேளையில் மகிந்த ராஜபக்ச மிகச்சாதுரியமாக ஜே.வி.பியினரைக் கழற்றிவிட்டார். அதற்காக அவர் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிரணியில் இருந்தவர்களை விலைகொடுத்து தன்பக்கம் இழுத்துக்கொண்டார். ஜே.வி.பியின் ஆதரவின்றி தம்மால் ஆட்சியை நடத்திச்செல்ல முடியும் என்பதை அவர் செயலில் காண்பித்தார். இவ்விடயத்தில் தமக்கு ஏற்பட்ட பின்னடைவைக்கூட ஜே.வி.பி சாதகமாகப்பயன்படுத்த திட்டம் தீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி உடைக்கப்படுவதை ஜே.வி.பி விரும்புகிறது.
காலங்காலமாக சிறீலங்காவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் பாரம்பரியத்தை மாற்றி தாம் இரண்டாம் இடத்திற்கு வரவேண்டும் என்பதில் ஜே.வி.பி குறியாகவுள்ளது. இதனால் தமது ஆதரவிற்குப்பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி மகிந்தவினால் உள்வாங்கப்படுவதை ஜே.வி.பி விரும்புகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் மகிந்த பக்கம் தாவிச்செல்ல, தற்போது அக்கட்சியில் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களே மிஞ்சியுள்ளனர்.
ஜே.வி.பி.யில் 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்தவிடம் தாவிச்செல்லலாம் என்கிற ஊகங்கள் வெளியாகின்ற நிலையில், ஜே.வி.பி தனது இலக்கு எட்டப்படலாம் என்று நம்புகின்றது.
மகிந்த அரசாங்கத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், தாம் சிறீலங்காவில் இரண்டாவது அரசியல் கட்சியாக வரவேண்டும் என்கிற திட்டத்தினைக் கொண்டுள்ள ஜே.வி.பி, மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதை சிறிதும் விரும்பவில்லை. மகிந்த அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமானால் தற்போதிருக்கும் 37 உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கமாட்டார்கள் என்பதும் ஜே.வி.பி இற்கு புரியும். ஜே.வி.பி ஆதரவளிக்காவிட்டால் தாம் நாடாளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் ஒரு தேர்தலை நடத்தவேண்டிவரும் என மகிந்த ஜே.வி.பியை மிரட்டியமையினையும் இங்கு நினைவு கொள்ளலாம்.
இதனால் மகிந்த அரசு கவிழ்க்கப்படுவதையும் மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுவதையும் ஜே.வி.பி விரும்பாது. வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் நிலை வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களித்திருந்த போதும், வாக்கெடுப்பிற்கு முன்பாக அதனைத் தெளிவாக ஜே.வி.பி அறிவிக்கவில்லை. தாம் இறுதிக் கட்டத்திலேயே முடிவெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தது. முன்னரே அறிவித்திருந்தால் மகிந்த அரசோடு விருப்பம், விருப்பமின்மைக்கப்பால் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்காமலிருந்தாலும், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டிருந்திருக்கும்.
இதிலே ஒரு தந்திரோபாயத்தை ஜே.வி.பி. மேற்கொண்டிருக்கின்றது.
தாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும் சிறு எண்ணிக்கையினால் மகிந்த அரசாங்கம் தப்பும் என்பது ஜே.வி.பிற்குத் தெரியும். நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றாவிட்டால் தாம் வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று முன்னரே தெரிவித்ததன் படி நடந்திருப்பதாகக் காட்டவும், இனி வரும் காலங்களிலும் தமது கோரிக்கைகளில் உறுதியாகவே நிற்கப்போவதாக காட்டுவதற்காகவுமே ஜே.வி.பி கூறியபடியே எதிர்த்து வாக்களித்தது.
தங்கள் தந்திரோபாயம் குறித்து பின்னர் ஜே.வி.பி உறுப்பினர்களே கருத்து வெளியிட்டிருந்தனர். தாங்கள் முன்கூட்டியே தங்கள் முடிவினைத் தெரிவித்திருந்தால், அரசோடு பதவிக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கட்சிகள் வாக்களிக்காமல் விட்டிருக்கும், மகிந்த அரசாங்கம் கவிழ்ந்திருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். ஒரு வகையில் இறுதித்தருணத்தில் தங்காளாலேயே அரசு தப்பியது என்பதாகவே ஜே.வி.பியின் அக்கருத்துக்கள் அமைந்துள்ளன.
இதெல்லாம் நடந்து முடிய, டிசெம்பர் 14ம் திகதி என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சமும், பதற்றமும் மகிந்த தரப்பிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி மீண்டும் அந்த நான்கு கோரிக்கைகளையும் முன்வைத்து மிரட்டும்.
8 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் கொங்கிரசும், 6 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் கொங்கிரசும் தற்போது தத்தமது கட்சிகளுக்கள் மந்திராலோசனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவியவர்கள் திரும்பவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து யோசிப்பதாகவெல்லாம் தகவல்கள் வெளிவருகின்றன. அதேநேரம் மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மகிந்தவினால் அதிக விலைக்கு வாங்கப்படலாம் எனவும் சில தகவல்கள் கசிகின்றன.
எவ்வகையிலும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் கடந்த தடவை நடைபெற்றதைப்போல தமிழ் தேசியக்
கூட்டமைப்பு மட்டுமல்லாமல், ஏனைய கட்சியினரும் ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்படலாம் என்கிற நிலையும் உள்ளது. வரவு - செலவுத் திட்டம் இறுதித்தருணத்தில் தோற்கடிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டால் ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டிலும் மாற்றம் எற்படலாம். ஆக, டிசெம்பர் 14 குறித்த அச்சம், குழப்பங்கள் என கொழும்பு அரசியல் சூடுபிடித்துள்ளது. எனினும், இதில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தமிழ் மக்களின் பிரச்சினையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.
தாயகப் பிரதேசங்களில் சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைளில் எவ்விதத்தளர்வினையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக எதிர்வரும் நாட்களில் அதாவது, டிசெம்பர் 14ற்கு முன்பாக வடக்கில் பாரிய படை நடவடிக்கை
களை மேற்கொண்டு வெற்றிச் செய்திகளை சிங்களவர்களுக்கு வழங்கி தனது அரசியல் சிக்கல்களை போரின் வெற்றிகளூடாக நிமிர்த்தும் முயற்சியிலேயே மகிந்தவும் அவரது சகோதரர்களும் கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்பதுதான் உண்மை.
- வேனில்-
pathivu.com
Sunday, December 9, 2007
"டிசெம்பர் 14இல் மகிந்த அரசு தோற்கடிக்கப்படுமா?"
Posted by tamil at 6:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment