Monday, December 10, 2007

மனித உரிமை மீறல்கள் விசாரணையின் இலட்சணம்

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் அனுசரணையுடனான சர்வதேச கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால் நீண்டகாலமாகவே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அது விடயத்தில் கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராயில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கு சர்வதேச ஈடுபாட்டுடனான எந்தவொரு கட்டமைப்பையும் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த அக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகரகத்தின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவது குறித்து அரசாங்கம் அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம் மனித உரிமைகளைப் பேணுவதற்காக செயற்படுகின்ற உள்நாட்டுக் கட்டமைப்புகளை வலுப்படுத்த மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகரகம் துறைசார் உதவிகளை வழங்குவதே விரும்பத்தக்கது என்று பதிலளித்திருந்தது.
அதற்குப் பிறகு சிறிது தணிந்திருந்த அந்த விவகாரம் இப்போது மீண்டும் கிளப்பப்பட்டிருக்கிறது. ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் அதன் ஆறாவது கூட்டத் தொடரை இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், நியூயோர்க்கை, தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் (Human Rights Watch) லண்டனை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையும் (Amnesty International) மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகத்தை இலங்கையில் திறப்பதற்கு அரசாங்கத்தை இணங்கச் செய்யுமாறு கவுன்ஸிலிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன. இது தொடர்பில் லூயிஸ் ஆர்பருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கும் மனித உரிமைகள், அநர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க அரசாங்கத்தின் முன்னைய நிலைப்பாட்டையே மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கு சர்வதேச கட்டமைப்பு எதையுமே அனுமதிக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கெனக் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு செயற்பாடுமே பயனைத் தரவில்லை. இதற்கு ஒரு பிரகாசமான உதாரணமாக 16மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவினால் கடந்த வருடம் நவம்பரில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவைக் கூறமுடியும். அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு ஜனாதிபதியினால் வரவழைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன முன்னணிப் பிரமுகர்கள் குழு இதுவரை வெளியிட்ட சகல அறிக்கைகளிலும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையுமே காணக்கூடியதாக இல்லை என்றும் அதன் செயற்பாடுகளில் ஒளிவு மறைவு அற்ற தன்மையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் ஒருவருட ஆணை முடிவடைந்த பின்னர் கடந்த மாதம் மீண்டும் ஒரு வருட காலத்துக்கு ஆணையை ஜனாதிபதி நீடித்திருந்தார். ஆனால், ஆணைக்குழு உகந்த முறையில் செயற்படுவதற்கு அவசியமான திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தாமதிப்பதால் நம்பகத்தன்மைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி நிசங்க உடலகம விசனம் வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச சுயாதீன முன்னணிப் பிரமுகர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இப்போது ஆணைக்குழுவின் தலைவரே அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்ட ஆரம்பித்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கான உள்நாட்டுச் சட்ட அமைப்புகளின் செயற்பாடுகளை உறுதிப்படுத்த உதவுமாறு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கோருகின்ற அரசாங்கம் உள்நாட்டுக் கட்டமைப்புகளின் செயற்பாட்டு இலட்சணத்தை சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினத்திலாவது ஒருகணம் சிந்தித்துப் பார்க்குமா?
10 - December - 2007
thinakkural.com

0 Comments: