Wednesday, December 5, 2007

சர்வதேச தலையீட்டுக்கான அழைப்பின் பின்னணி நிலை

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழ்பேசும் மக்கள் அப்பட்டமாக பகிரங்கமாக இனஒடுக்கல் செயற்பாட்டுப் போக்கில் கைது செய்யப்படுவதும், ஆடு, மாடு மந்தைகள் போல அடைக்கப்படுவதும் கடுங் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது.
அரசுத் தரப்பின் நியாயப்படுத்தப்பட முடியாத இந்தக் கொடுங்கோன்மைப் போக்குக் குறித்து நாடாளுமன்றத்திலேயே ஜே.வி.பி., ஐ.தே.கட்சி போன்றன பகிரங்கமாகக் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

ஏற்கனவே கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களைப் பலவந்தமாக ஏற்றி வவுனியாவுக்குக் கடத்த முயன்ற நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு வாங்கிக்கட்டி மூக்குடைபட்டிருப்பதை ஜே.வி.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இப்போது, போகின்ற, வருகின்ற தமிழர்களையெல்லாம் எந்தவிதக் காரணமுமின்றி தமிழ் பேசும் மக்களாகப் பிறந்த குற்றத்துக்காக கைது செய்வதும், அவர்களை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்திருப்பதற்கான தடுப்புக் காவல் உத்தரவுகளை விடுப்பதும், சர்வதேச மட்டத்தில் வாங்கிக் கட்டுவதற்கான முன் ஆயத்தங்கள் என்றும் அரசுத் தரப்பை ஜே.வி.பி. எச்சரித்திருக்கின்றது.

இந்தக் கொடூரக் கைதுகள், அதன் பின்னர் மலையக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று அரசில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் விழுந்தடித்து அலரி மாளிகைக்கு ஓடி ஜனாதிபதியை அவசர அவசரமாகச் சந்திப்பது, இந்தச் சந்திப்புகளை அடுத்து கைதானோரில் ஒரு சாராரை விடுவிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டார் என்று செய்திகள் வெளியாவது, மேற்படி கைது செய்யப்பட்டோரில், இந்த அரசியல் தலைவர்களினால் அப்பாவிகள் என உறுதிப்படுத்தப்படுவோரை எந்தவித நெருக்குதலுமின்றி உடன் விடுவிக்க வேண்டும் எனப் பணிப்புரை வழங்கப்படுவது போன்றவை இவ்விவகாரங்களில் ஆழமாகப் புதைந்து கிடக்கும் ஓர் அம்சத்தை வெளிப்படுத்துகின்றன.

"பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்' என்ற பெயரில் பாதுகாப்புத் தரப்பினரால் உத்தியோகபூர்வ ரீதியில், நீதி நெறிமுறையுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நேரடியாக அரசியல் தலைமைத்துவங்களினால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பிரயோகிக்கப்படுகின்றன என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

தாம் விரும்பிய சமயம் அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக அள்ளி, கூண்டோடு அடைக்கவும், தேவைப்படும் சமயங்களில், தேவைப்படும் பிரிவினரை மாத்திரம், தேவையான நடைமுறைகளுக்குக் கீழ் விடுதலை செய்யப் பணிக்கவும் அவசரகாலச் சட்ட விதிகளை நன்கு வசமாக பயன்படுத்துகின்றது அரசுத் தலைமை.

தென்னிலங்கை அரசுத் தலைமை பௌத்த சிங்களப் பேரினவாத சகதியில் மூழ்கி அதிகார மமதை வெறியோடு செயற்படுகின்றது என்றும், சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இன ஒடுக்கல் போக்கில் காரியமாற்றுகின்றது என்றும், சிறுபான்மையினரான தமிழர்கள் நேரடியாக அரசுத் தலைமை மீது குற்றம் சுமத்தும் பின்னணியில்தான், இவ்வாறு அரசியல் கோமாளித்தனங்களுக்காக அதிகாரதுஷ்பிரயோகம் அரங்கேறுகின்றது.
இதனை சர்வதேச சமூகம் கரிசனையோடு கவனத்தில் எடுக்கவேண்டும்.
இதையே அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக்கும் ஐ.நா. சபைக்கும் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கோரிக்கையாக முன்வைத்திருக்கின்றனர்.
யாழ். குடாநாட்டில் திறந்த சிறைக்குள் அவலப்படும் தமிழர்கள்
வன்னியில் அரச படைகளின் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் வீச்சுகளால் அல்லோலகல்லோலப்படும் தமிழர்கள்

கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் தமிழ் இன அழிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள்
தலைநகர் கொழும்பிலும், பிற இடங்களிலும் நீதி, நியாயமின்றி வகை தொகையின்றி காரண காரியமின்றி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படும் அப்பாவித் தமிழர்கள்
இவ்வாறு இலங்கைத் தீவு எங்கும் அந்தரிக்கும் தமிழ் பேசும் மக்களின் அவ(ல) நிலையைக் கவனத்திற் கொண்டு, விரைந்து பதில் நடவடிக்கைகளை எடுங்கள் என்று இந்தியாவையும், ஐ.நாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியிருக்கின்றார்.

இவ்விவகாரங்கள் குறித்து புதுடில்லியில் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இந்திய அரசு இவை குறித்து கொழும்பு அரசுடன் உயர்மட்டத்தில் தொடர்புகொண்டு ஆவன செய்து வருகின்றது எனவும் கொழும்பில் இந்தியத் தூதரக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

வெறுமனே ஆவன செய்யப்படுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக பேரினவாதத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வரைமுறையற்ற அராஜகங்களைக் கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடான இந்தியாவும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும், மேற்கு நாடுகளும் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் அவற்றின் காத்திரமான பங்களிப்பைக் காட்டுவனபோல வெளிப்படையாகத் தோற்றும் விதத்தில் வெளிப்படுத்தப்படவும் வேண்டும்.

Posted on : 2007-12-05

uthayan.com

0 Comments: